டோராவின் பயணங்கள் தொடர்கின்றன



கடற்கரையில்
குளிர்ந்த காபி விற்கும்
கடை வாசலில் நின்றுகொண்டிருந்தாள்
பரட்டைத் தலையுடைய சிறுமி
மெல்லிய காமத்தின் ஆவி பறக்க
அந்த காபிக் கடைக்குள் நுழைந்து
குளிர்ந்த காபியின் சுவையுடன்
வெளியேறும் ஜோடிகள் யாரும்
அவளைக் கவனிக்கவே இல்லை

அந்த சிறுமியின் பெயர்
டோராவாக இருக்க வேண்டும் என்று
எனக்கு ஏன் தோன்றியது?
 
பிச்சையெடுக்கும் சிறுமிகள்
கருணைக்காக
எதையாவது வைத்திருப்பார்கள்
ஒரு உடைந்த கரத்தையோ
உலர்ந்த கண்களையோ
இறைஞ்சும் குரலையோ
தூங்கி வழியும் ஒரு குழந்தையையோ...
அந்தச் சிறுமி
தோளில் ஒரு தூளியை
போட்டுக்கொண்டிருந்தாள்
குழந்தை என்றுதான் முதலில் நினைத்தேன்
இல்லை
அது ஒரு குட்டிக்குரங்கு
இளகிய தலையுடன்
மலங்க மலங்க
தலையை உருட்டிப் பார்க்கிறது
அந்தக் குரங்கின் பெயர்
‘புஜ்ஜி’யாக இருக்க வேண்டும் என்று
எனக்கு ஏன் தோன்றியது?
 
டோராவும் புஜ்ஜியும்
இன்றைய பயணத்தை
எங்கிருந்து தொடங்கினார்கள்
என்று தெரியவில்லை
அவர்கள் நகரத்தின்
இருண்ட மூலைகளை அறிவார்கள்
நகரத்தின் உலர்ந்த கருணையை
மனிதர்களின் ரகசியக் குற்றங்களை
மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறார்கள்
மனிதர்களின் ரகசிய ஆசைகளின்
சாட்சியங்களாக இருந்திருக்கிறார்கள்

கார்ட்டூன் டோரா ஒவ்வொரு நாளும்
ஒரு புதிய விஷயத்தை அறிமுகப்படுத்துபவள்
கடற்கரை டோராவிற்கு
அவளது வாழ்க்கை
ஒவ்வொரு நாளும்
ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை
அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது
 
கார்ட்டூன் டோரா போலவே
கடற்கரை டோரா
பார்வையாளர்களிடம்
நுட்பமான கேள்விகளைக் கேட்பாள்
அது எப்போதும் பசியைப் பற்றியது
கருணையைப் பற்றியது
டோரா சற்றே இடைவெளி விட்டு
பார்வையாளர்களின்
பதிலுக்குக் காத்திருக்கிறாள்
 
கார்ட்டூன் டோரா
எல்லோரையும் கடந்து சென்றுவிடுகிறாள்
கடற்கரை டோரா
கண்களையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்  
 
புஜ்ஜி இப்போதெல்லாம்
டோராவின் துயரமான
வாழ்க்கையைப் புரிந்துகொள்கிறது
டீ, பன் சாப்பிட பழகிக்கொண்டது
குப்பைகளில் கிடைக்கும்
பாதி அழுகிய பழங்கள் பற்றி
அதற்கு புகார் எதுவும் இல்லை
 
கடற்கரை டோராவுக்கும்
பயணங்களில் நண்பர்கள்  உண்டு
அவர்களும் அதே கடற்கரையில்
அதே குரலில் பிச்சை எடுப்பவர்கள்
பூ விற்பவர்கள்
குழந்தைகள் புத்தகங்களை
வாங்கச் சொல்லி கெஞ்சுபவர்கள்
விளக்குகள் ஒளிரும் பேனாக்களும்
டோரா ஸ்டிக்கர்களும் ஏந்தி
கடற்கரையில் திரிபவர்கள்
அவர்களுக்குப் பெயர்கள்
அலனா, எம்மா, நையா, காதே, பாப்லோ
என்பதாக இருக்கலாம்
அவர்கள்  காலை சினிமா காட்சிகளுக்கு
சேர்ந்து போனார்கள்
தள்ளுவண்டிக்காரனிடம்
ஐந்து ரூபாய் கொடுத்து
மீன் குழம்பு சோறு வாங்கிச் சாப்பிட்டார்கள்
 
டோராவின் காசைத் திருடும்
குள்ள நரியொன்று
அவள் வீட்டிலேயே இருந்தது
அன்பின் தந்திரங்களால்
அவளைப் பிணைத்திருந்தது
அவள் அதனை எதிர்த்துப் பேசினாள்
அது அவளுக்கு மட்டுமே கேட்டது
 
டோராவின் பயணங்களில் பலமுறை
அவள் ஒரு பாலத்தைக்
கடக்க வேண்டி இருந்தது
கடற்கரை டோரா அதைக் கடப்பதில்லை
பாலத்தின் நிழலில் அமர்ந்து
அதன் தூண்களில் சாய்ந்து
தன் நண்பர்களுடன்
பகல் வேளைகளில் தூங்கிப்போகிறாள்
அவளது கனவில் குகை மனிதன்
போடும் புதிர்களைக் கேட்டு
நேரமாகிவிட்டதென திடுக்கிட்டு
எழுந்து கொள்கிறாள்
பாலத்தின் அடியில் வசிப்பவள் டோரா
பாலத்தை கடப்பதென்றால்தானே
புதிர்களுக்கு பதில்கள் தேவை
எப்போதும் கடக்க இயலாதவை
கடற்கரை டோராவின் பாலங்கள்
 
டோராவின் முதுகில் இருந்த
நீலப்பையில் சில்லறைகள் இருந்தன
யாரோ பாதி உண்டு தந்த
தின்பண்டங்கள் இருந்தன
தெருவில் கண்டெடுத்த
பிளாஸ்டிக் வளையல்கள் இருந்தன
அழுக்குத் துணிகள் இருந்தன
தண்ணீர் பாட்டில் இருந்தது
ஆனால் வரைபடம் மட்டும்
அதில் இருந்ததே இல்லை
 
கடற்கரை டோராவின் பயணங்களில்
அவள் மழைக்காடுகளையோ
பாலைவனங்களையோ
தேடிச்செல்வதில்லை
அவள் தன் விதியின் ரகசியங்களைத் தேடி
நல்ல துணிகளைத் தேடி
மறைவான கழிவறைகளைத் தேடி
தூங்குவதற்கு பாதுகாப்பான இடங்களைத்
தேடிச் செல்கிறாள்
 
கார்ட்டூன் டோரா இப்போது
வளர்ந்து இளம்பெண்ணாகிவிட்டாள்
அவள் கையில் வரைபடத்திற்கு பதில்
ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறாள்
 
கடற்கரை டோரா
இளம் பெண்ணாகும்போது
என்ன நடக்கும் என்று தெரிந்ததுதான்
புஜ்ஜி வளர்ந்துவிடும்
டோரா அதையே திருமணம் செய்தாலும்
செய்துகொண்டுவிடுவாள்

-மனுஷ்யபுத்திரன்
ஓவியங்கள்: மனோகர்