சமையல்



‘‘எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டீங்களா?” “ஆச்சு!” “தட்டு, கரண்டி, வாணலி, கத்தி, பருப்பு, காய்கறி, எண்ணெய், முந்திரி...” “ம். எல்லாம்  பேக்ல இருக்கு. அது சரி...  அந்த ரெசிபி எப்படி  செய்யறதுன்னு இன்னொரு தடவை சொல்லிக் கொடேன், ப்ளீஸ்!” “என்னங்க... நேத்து ராத்திரியிலிருந்து பத்து தடவை சொல்லிக் கொடுத்துட்டேன். கிச்சன்ல ஆறு தடவை பண்ணிக் காட்டினேனே!” ‘‘ப்ளீஸ்... ப்ளீஸ்... இன்னொரு  தடவை முதல்லே இருந்து சொல்லிடேன்! என் ஸ்வீட் மனைவி அல்லவா நீ!”

“இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை. ம்... கவனமா கேளுங்க...!” ‘‘ரொம்ப தாங்க்ஸ் ஜானு. டி.வி.லே பாரு, ஜமாய்ச்சிடறேன் இன்னிக்கு. எல்லா பெருமையும் உனக்கேதான் ஜானு!” ‘‘நேயர்களே! இன்றைக்கு நட்சத்திர சமையல் பகுதியிலே கலக்கிய ‘சமையல் சாம்ராட்’ ஷ்யாம் அவர்களிடம் உங்கள் சார்பாக ஒரு கேள்வி... ‘உங்களுக்கு இந்தக் கலை எப்படி கைவந்தது? அதற்காக யாருக்கு நன்றி சொல்வீர்கள்?’’ “இதெல்லாம் பிறவியிலேயே வந்தது!” - கூசாமல் சொன்னான் ஷ்யாம்.                                                                         
- சாரதா நாகராஜ்