கலாஷ்நிகோவ்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                   காமராஜர் காலனி நான்காவது தெருவில் இருக்கிறது எங்கள் வீடு. பரபரப்பு, கசகசப்பு என நெருக்கடிகள் ஏதுமில்லாத அருமையான குடியிருப்பு. பக்கத்து தென்னந்தோப்பில் இருந்து கிளம்பி வரும் ஜிலுஜிலு காற்று ஆளை மயக்கும். சூழல் மாசு இல்லாத எங்கள் ஏரியாவில் கடந்த சில மாதமாகத்தான் திடீர் ‘நாய்ஸ்’ பொல்யூஷன்!

எதிர்வீட்டுக்கு குடிவந்தார் சுந்தரபாண்டியன். ரிட்டையர்ட் மிலிட்டரி ஆசாமி. மேஜர் சுந்தரபாண்டியன் என்றுதான் மிலிட்டரியில் அவரைக் கூப்பிடுவார்களாம். உதட்டுக்கு மேலே தொடங்கி, புருவம் வரை மலைச்சாலை போல வளைந்து நிமிர்ந்து செல்லும் மீசையைப் பார்த்தால், குழந்தைகள் குலைநடுங்கிப் போவார்கள். குழந்தைகளை அவரது மீசை மிரட்டியது என்றால்... என் போன்ற பெரியாட்களை பாடாய்ப்படுத்தியது கலாஷ்நிகோவ்; அவரது வளர்ப்பு நாய்.

‘‘என்ன சார்... வெளிநாட்டு நடிகர் பேர் மாதிரி கலாஷ்நிகோவ்னு நாய்க்குட்டிக்கு பேர் வெச்சிருக்கீங்க?’’  மூன்றாம் வீட்டு பரசுராமன் ஒருநாள் கேட்டு விட்டார்.

அவ்வளவுதான்... ஆரம்பித்து விட்டார் மிலிட்டரி. ‘‘என்ன சார்... வெளிநாட்டு நடிகர் பேருன்னு கேட்டு வெச்சிட்டீங்க? கலாஷ்நிகோவ் யாருன்னு தெரியலையா உங்களுக்கு? ஏ.கே.47 துப்பாக்கியைக் கண்டுபுடிச்சவர் சார். இந்தக் கையைப் பாருங்க! இந்தக் கையால ஏ.கே.47 துப்பாக்கியை தூக்கிட்டு எத்தனை தடவை நம்ம எல்லையில சாகசம் பண்ணியிருக்கேன் தெரியுமா? எத்தனை எதிரிகளை சல்லடை ஆக்கியிருக்கேன் தெரியுமா? ரிட்டையர்ட் ஆயிட்டேன். இன்னமும் ஏ.கே.47 தூக்க ஆசைப்பட முடியுமா? அதான். என்னோட செல்ல நாய்க்குட்டிக்கு கலாஷ்நிகோவ்னு அவர் பேரையே வெச்சிட்டேன்!’’

போருக்குத் தயாராகும் வீரர்களுக்கு உரையாற்றுவது போல, உணர்வுபூர்வமாக மேஜர் சுந்தரபாண்டியன் சொல்லி முடிக்க... அதற்குப்பிறகு ஆத்திர அவசரத்துக்குக்கூட அவர் வீட்டைக் கடந்து செல்ல பரசுராமன் அச்சப்பட்டார்.

ஆரம்பத்தில் கலாஷ்நிகோவை எங்கள் தெரு கொஞ்சம் ஆச்சரியமாகவே பார்த்தது. அதன் தாய், தந்தையோ, மூதாதையரோ வெளிநாட்டுக்காரராக இருந்திருக்கவேண்டும். கோபுரம் போல காதுகள் இரண்டும் தூக்கிக்கொண்டு நிற்கும். சிறிய தூசி பறக்கும் சத்தம் கேட்டால் கூட அலர்ட்டாகி விடும். நெருப்புத்துண்டுகளாக கண்கள் ஜிவுஜிவுக்க, ஒரு ‘லுக்’ விடும். கொஞ்சம் கோபப்பட்டு, வாயை வைத்து ஒரு பிடுங்கு பிடுங்கினால்... தொலைந்தது. காட்டெருமை தாக்கினால்கூட அப்படி ஒரு காயம் ஏற்படாது!

ஆரம்ப ஆச்சரியம் நாளடைவில் இம்சையாக மாறியது. அவர் தனது நாய்க்கு ஏ.கே.47 என்ன... பீரங்கி என்றுகூட பெயர் வைத்துக் கொள்ளட்டும். அதுவல்ல பிரச்னை! ‘லொள்... லொள்...’ என்று குரைத்து அது ஊரைக் கூட்டியதைத்தான் கொஞ்சம்கூடத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதுவும், இரவு நேரங்களில் ஜேம்ஸ்பாண்ட் லெவலுக்கு தன்னைப் பாவித்துக்கொண்டு ‘சவுண்டு’ கொடுத்து இம்சித்தது. ஏழெட்டு தெரு தள்ளி ஒரு கொசு பறக்கும் சத்தம் கேட்டால் கூட உஷாராகி, ‘லொள்’ளத் தொடங்கிவிடும்.

வாள் வாள் என்று கத்திக் களேபரம் செய்தால் எப்படித்தான் நிம்மதியாகத் தூங்குவது? என் போலவே, அருகாமை வீடுகளில் வசிப்பவர்களும் கலாஷ்நிகோவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பொறுத்துப் பொறுத்து வெறுத்துப் போய், ஒரு நாள் நாங்கள் நாலைந்து பேர் சேர்ந்து சென்று மிலிட்டரியைச் சந்தித்தோம்.

‘‘வாங்க... வாங்க... டேய் கலாஷ்நிகோவ்! இவங்கல்லாம் நம்ம ஃபிரெண்ட்ஸ்தான். நீ உள்ள போ...’’ என்றவாறே எங்களை உட்கார வைத்தார். ‘‘சொல்லுங்க... எல்லாம் சேர்ந்து வந்திருக்கீங்க. என்ன விஷயம்?’’ & நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தபடியே கேட்டார்.

பரசுராமன்தான் ஆரம்பித்தார்... ‘‘நம்ம நாய்க்குட்டி... அதான் கலாஷ்நிகோவ் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுதுனு நாங்கள்லாம் ஃபீல் பண்றோம் சார்!’’

‘‘கலாஷ்நிகோவால உங்களுக்கு என்ன தொந்தரவு? அவன் யாரையும் கடிச்சதுகூட இல்லையே? நம்ம தெருவுக்கே அவன் காவல்காரனா இல்ல இருக்கான். எனக்கு நீங்க சொல்றது புரியலை. இதோ... எதிர்த்த வீட்டு பாண்டி சார் இருக்காரு. அவர்கிட்டயே கேட்டுரலாம்... என்ன பாண்டி சார்? இந்தப் பயல் ஏதாவது தொந்தரவு கொடுக்கிறானா?’’ - உள்ளுக்குள் விழிகளை உருட்டியவாறே நின்றிருந்த கலாஷ்நிகோவைச் சுட்டிக் காட்டியபடியே என்னிடம் கேட்டார் மிலிட்டரி.

அவராகவே கேட்டபிறகு எப்படி சும்மா இருப்பது? தயக்கமாக ஆரம்பித்தேன்... ‘‘அதில்லை மேஜர் சார். நைட் நேரங்கள்ல ரொம்பவும் குரைக்குது. அதுவும் டிஜிட்டல் ஸ்டீரியோ எஃபெக்ட் மெகா சவுண்டுல குரைக்கிறதால, எங்க தூக்கமெல்லாம் கெடுது. சின்னக்குழந்தைங்க படிப்பு கெடுது. இந்தப் பக்கமா நடக்கவும் பயப்படுதுங்க. நீங்க இதை நல்ல கென்னல்ல விட்டுரலாமே?’’

எதிரே மிலிட்டரி அமைதியாக இருந்தார்.

அவரது அமைதியால் தைரியம் பெற்ற ஆறாம் வீட்டு ரத்தினவேலன் வாய் பிரித்தார்... ‘‘பிரதர் பாண்டி சொல்றது ரொம்ப சரி சார். உருவத்தைப் பார்த்தாலே கிடுகிடுக்குது பல்லு. இரவெல்லாம் இம்சிக்குது கலாஷ்நிகோவோட லொள்ளு. கூடிய சீக்கிரம் இதை கென்னலில் கொண்டு போய்த் தள்ளு...’’ & ரத்தினவேலன் அடிப்படையில் புலவர் என்பதால், எதுகை மோனையாகப் பிரித்தெடுத்து விட்டார்.

நாங்கள் பேசுவதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தவர், சில வினாடி அமைதிக்குப் பிறகு என் பக்கம் திரும்பி கூர்மையாகப் பார்த்தார். ‘‘ஒரு தலை, ரெண்டு கை, காலு, நீட்டி முழக்கிப் பேசறதுக்கு வாய்... இதெல்லாம் இருந்தா மட்டுமே மனுஷன்னு அர்த்தமில்லை பாண்டி சார். விசாலமான மனசு வேணும். அந்த மனசுல இரக்கம், கருணை வேணும் சார். வாயில்லாத ஒரு ஜீவன் லேசா கத்துறது; தாங்கலைங்கறீங்களே... உங்க வீட்ல குழந்தை அழுதாலும் இப்படித்தான் வெளில விரட்டச் சொல்லுவீங்களா சார்?’’

புலவர் ரத்தினவேலன் பக்கம் திரும்பினார் மிலிட்டரி. ‘‘பல்லு, லொள்ளுனு அடுக்குமொழி போட்டா அறிவுஜீவித்தனமா பேசிட்டோம்னு பெருமைப்பட்டுக்கிறதா சார்? ஒரு நாய்க்குட்டி குரைக்குதுனு, கூடி குத்தம் சொல்ல வந்திருக்கீங்களே... மனிதநேயம்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு? கவிதை பாடறேன்கிற பேர்ல மேடையேறி கூச்சல் போட்டு கழுத்தறுக்கறிங்களே... உங்களைப் பிடிச்சி எந்தக் கென்னல்ல அடைக்கிறது ரத்தினவேலன் சார்?’’

மிலிட்டரி போட்ட போடில், இனி சில நாட்களுக்காவது ரத்தினவேலன் கவிதை எழுதமாட்டார் என்பதை இறுகிப்போன அவரது முகபாவம் காட்டியது.

அந்தச் சம்பவத்துக்குப் பின் மேஜர் சுந்தரபாண்டியனுக்கும் எங்களுக்கும் பேச்சு அடியோடு துண்டித்துப் போனது. தினமும் காலை மாலைகளில் கலாஷ் நிகோவை அழைத்துக்கொண்டு வாக்கிங் செல்வார் மிலிட்டரி. எதிரே இடிப்பது போல நாங்கள் நடந்தாலும் கொஞ்சமும் கண்டுகொள்ள மாட்டார்.

நாட்களாகவும் வாரங்களாகவும் மாதங்களாகவும் காலம் கடந்தது. கலாஷ்நிகோவின் ‘லொள்’ இம்சை எங்களுக்கு பழகிப் போயிருந்தது. மேஜருடனான தொடர்பு மட்டும் முற்றிலுமாக அறுந்து போய்விட்டது. ‘‘மேசரய்யா சீக்கிரம் வீடு மாறப் போறாகளாம்’’ என்று, அவர் வீட்டில் வேலை பார்க்கும் முனீஸ்வரி மூலம் தெருவுக்குள் திடீரென செய்தி பரவியது.

‘‘அவர் பையனுக்கு மெட்ராசுக்கு மாத்தலாகிடுச்சாம். அதான் குடும்பத்தோட அங்க போவப் போறாராம். இன்னும் ரெண்டு நாள்ல வீட்டைக் காலி பண்ணிடுவாராம்...’’

அடுத்த நாள் காலை கதவு திறந்து நாளிதழ்களை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தபோது, எதிர்வீட்டுக் கதவில் பெரிய பூட்டு தொங்குவது தெரிந்தது. வீட்டை காலி செய்துவிட்டு, மிலிட்டரி மெட்ராஸ் போய் விட்டார் போலிருக்கிறது என்று நினைத்தபடியே திரும்பியபோது, மிகப் பழக்கமான அந்தக் குரல் கணீரெனக் காதுகளில் வந்து விழுந்தது.

‘‘லொள்... லொள்...’’

சட்டெனத் திரும்பி அவர் வீட்டைப் பார்க்க... பூட்டு தொங்கிய கதவை கால்களால் பிறாண்டியபடியே அங்குமிங்குமாக பரபரப்பாக அலைபாய்ந்து கொண்டிருந்தது கலாஷ்நிகோவ். மிலிட்டரி காலி செய்து போய்விட்டார் என்றால், இது மட்டும் எப்படி இங்கே..?

சிறிதுநேரத்தில் மிலிட்டரி வீட்டு முன் பரசுராமன், புலவர் ரத்தினவேலன் உள்பட தெருவாசிகள் திரண்டனர். நேற்று வரை சிங்கக்குட்டியாக சிலிர்த்துத் திரிந்த கலாஷ்நிகோவை இன்று பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அதன் நெருப்புக் கண்களில் இப்போது ஒளி குறைந்திருந்தது. மனதெல்லாம் தவிப்பாக பூட்டிய வீட்டைப் பார்ப்பதும், முகர்வதும், கால் கொண்டு பிறாண்டுவதுமாக பரபரத்தது.

தண்ணீர்க் குடம் தூக்கிப்போன முனீஸ்வரியை நிறுத்திய ரத்தினவேலன் விசாரித்தார். ‘‘என்ன முனீஸ்வரி... மிலிட்டரிக்காரரை காணோம். நாய்க்குட்டி மாத்திரம் வீட்டையே சுத்திச் சுத்தி வட்டவளையம் போட்டுக்கிட்டிருக்கு. என்ன விஷயம்?’’

‘‘அட மேசர் நேத்து ராவுலயே வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிட்டாரு சார். இந்த நாக்குட்டிக்கு கொஞ்ச நாளாவே மேலுக்கு சரியில்லையாம். ஏதோ ஈரலு கெட்டுப் போச்சாம். ரொம்ப நாளு புழைக்காதாம். அப்புறம் போற எடத்துக்கு அதையும் கட்டி இழுக்க முடியுமா? அதான் தெருவில விட்டுட்டு மேசரய்யா போயிட்டாக...’’

முனீஸ்வரி முடிப்பதற்குள் எங்கள் கண்கள் தன்னிச்சையாக கலாஷ்நிகோவ் பக்கம் திரும்பின. காலையும் மாலையும் கம்பீரமாக வாக்கிங் கூட்டிச்சென்ற எஜமானனைக் காணாமல் அது பரிதவித்துக் கொண்டிருந்தது. தெருக்களில் திரிந்து பழகியிராத அதன் கண்களில் இனம் புரியாத கேள்விக்குறி அப்பட்டமாகத் தெரிந்தது. ஊரைக் காலி செய்து விட்டுப்போன விஷயம் புரியாமல், எஜமானன் இன்னும் வீட்டுக்குள் இருப்பதாக நினைத்து கதவைச் சுரண்டிக் கொண்டிருந்தது.

‘‘அடப்பாவமே... கொஞ்சம் பாலைக் காய்ச்சி ஒரு தட்டுல ஊத்திக்கொண்டு வாப்பா...’’  என் வீட்டுப்பக்கம் திரும்பி குரல் கொடுத்தேன்.

‘‘என்ன பாண்டி சார், பார்க்கவே பரிதாபமா இருக்கு. நேத்துவரைக்கும் புலிக்குட்டி மாதிரியில்ல திரிஞ்சிச்சி. கொஞ்சம் பொறுங்க... சாதத்தில குழம்பை ஊத்தி புரட்டி எடுத்து வர்றேன்...’’ ரத்தினவேலன் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, அவரது வீட்டுக்கு ஓடினார்.

வீட்டில் இருந்து வந்த பால் தட்டை கலாஷ்நிகோவ் முன் வைத்தேன். நேற்றிரவில் இருந்து பச்சைத்தண்ணீர்கூட குடித்திருக்காதோ என்னவோ... பாலைப் பார்த்ததும் முகமெல்லாம் பிரகாசமாகி பாய்ந்து வந்தது. வாலை மடக்கி, பின்னங்கால்களுக்குள் இடுக்கிக்கொண்டு, பால் தட்டு அருகே குனிந்து ஆவலாக வாயைக் கொண்டு சென்ற கலாஷ்நிகோவ் என்ன நினைத்ததோ... பாலை நக்காமல், சில வினாடிகள் தாமதித்து நிமிர்ந்தது. எதிரே நின்ற எங்களை ஆழமாகப் பார்த்தது.

அதன் பார்வையில் முன்பிருந்த கம்பீரம் இல்லை. பிறகு பால் தட்டை ஒரு முறை பார்த்தது. தினமும் பால் வைத்த எஜமானன் நினைப்பு அதற்கு வந்திருக்கவேண்டும். தளர்வாகப் பின்னோக்கிச் சென்ற கலாஷ்நிகோவ், மேஜரின் வீட்டுவாசலைப் பார்த்தபடியே மவுனமாகப் படுத்து விட்டது.

வெறித்த பார்வையுடன் கூடிய அதன் கண்களைப் பார்த்தபோது... மனிதநேயம், இரக்கம், கருணை, விசால மனசு என்றெல்லாம் முன்பொரு நாள் எங்களிடம் பேசிய மேஜர் சுந்தரபாண்டியனின் ஆவேச முகம் அனாவசியமாக ஞாபகத்தில் வந்து சென்றது.              
    திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்