மாறிமாறிப் பாயும் மன்மதன்அம்பு...



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

            ஆக்ஷன் ஆகட்டும், காமெடி ஆகட்டும்... எல்லை வைத்துக்கொள்ளாமல் உச்சத்துக்குப் போய்விடுவதுதான் ஹாலிவுட் படங்களின் தன்மை. அதற்கு பட்ஜெட்டும், கலாசார விட்டுக்கொடுத்தல்களும் உதவி செய்வது உற்று கவனிக்கப்பட வேண்டிய விஷயம். காமெடிப்படங்களில் புகழ்பெற்ற ஆடம் சான்ட்லருடன் ஜெனிபர் அனிஸ்டன் கைகோர்த்து, டென்னிஸ் டுகன் இயக்கத்தில் நடித்திருக்கும் ‘ஜஸ்ட் கோ வித் இட்’ அப்படியொரு ரொமான்டிக் காமெடிப் படம்தான்.

கதையைக் கேட்டால் நம்மூர் கலாசாரக் காவலர்களுக்குத் தலை சுற்றும். ஆடம் சான்ட்லர் இளமை கடந்த ஒரு நடுத்தர வயது பிளாஸ்டிக் சர்ஜன். இளமையில் கல்யாணமாகி விவாகரத்தும் ஆன கதையை, எதேச்சையாக சந்தித்து மனத்தைப் பறிகொடுக்கும் ஆசிரியையிடம் மறைத்து, ‘‘ஹி... ஹி... இதான் எனக்கு முதல் அனுபவம்...’’ என்று வழிந்து ஒன்றுபடுகிறார். ஆனால் ஃபிளாஷ்பேக் மேட்டர் காதலிக்குத் தெரிந்து முதல் மனைவியைச் சந்திக்கவேண்டும் என்று சொல்ல, அவசரம் அவசரமாக தன் உதவியாளர் ஜெனிபர் அனிஸ்டனை சரிக்கட்டி, அவருக்குக் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்து, தன் விவாகரத்தான மனைவி என்று அறிமுகப்படுத்தி விடுகிறார்.

அனிஸ்டனும் கணவனைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தனிமையில் இருப்பவர் என்பதால் அந்தக்குழந்தைகள் சான்ட்லருக்குப் பிறந்தவை என்றே காதலி நம்ப, குழந்தைகளையும் சரிக்கட்டி தன் குழந்தைகள் போலவே நடிக்க வைக்க வேண்டியிருக்கிறது சான்ட்லருக்கு.

இப்படியே ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய், அதை மறைக்க மற்றொரு பொய் என்று போய் விவாகரத்தான உண்மையான மனைவியும், அவளது காதலன் மற்றும் சான்ட்லரின் சகோதரன் ஒருவரும் கதைக்குள் வர, அவருக்கும் சான்ட்லரின் தற்போதைய காதலிக்கும் நெருக்கம் உண்டாக, மாஜி மனைவியும் சான்ட்லரின் மேலான தன் காதலைச் சொல்ல, யாரோடு யார் சேரப்போகிறார்கள் என்ற சஸ்பென்ஸ் ஏற... ஆகக் கடைசியில் தனக்காக உதவி செய்து சிக்கலுக்குள்ளான உதவியாளர் அனிஸ்டனுடன் சான்ட்லர் இணைவதுடன் கதை முடிகிறது. இப்படி மாறி மாறி மன்மதன் அம்பு பாயும் கதையை சிரிக்கச் சிரிக்க சொல்லியிருக்கிறார் டென்னிஸ் டுகன். சான்ட்லரின் மாஜி மனைவியாக எண்பது, தொண்ணூறுகளில் இளைஞர்களின் மனம் கவர்ந்த நிக்கோல் கிட்மன் நடித்திருக்கிறார்.

தனியாக தலைப்புத் தேடாமல் தமிழிலும் வரவிருக்கும் இந்தப் படக்கதை ஏற்கனவே 69ல் வெளியான ‘கேக்டஸ் ஃப்ளவரை’த் தழுவி எடுக்கப்பட்டது. அதற்கும் முன் பிராட்வே ஸ்டேஜில் நாடகமாகவும் நடிக்கப்பட்டது. ஆக, இந்தக் காதல் குழப்படிக்கதையின் பாதிப்புகளை இடையில் நம்மூர்ப்படங்களிலும் நிறையவே பார்த்திருக்கிறோம். ‘ஜஸ்ட் கோ வித் இட்’ இங்கே ஏப்ரல் எட்டாம் தேதி வெளியாகிறது என்றாலும் அமெரிக்காவில் பிப்ரவரி பதினொன்றில் வெளியாகிவிட்டது. அன்றைக்குதான் படத்தின் நாயகி ஜெனிபர் அனிஸ்டனின் பிறந்த நாளாம். இதைவிடச் சிறந்த பிறந்த நாள் பரிசு ஏது..?
 ஜி