அக்கறை!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

    அக்கறை!

குலதெய்வத்துக்காக
நேர்ந்துவிட்ட ஆட்டை
அடிக்காமல் கொள்ளாமல்
சாமியாகவே
பொத்திப் பொத்தி
பராமரித்தோம்,
பலியிடும் வரை!
 பெ.பாண்டியன்,
காரைக்குடி.

மதிப்பு

உயிருக்கு இப்போது
மதிப்பே இல்லை...
கறிக்கோழி
கிலோ 150 ரூபாய்.
உயிர்க்கோழி
கிலோ 100 ரூபாயாம்!
 கு.வைரச்சந்திரன், திருச்சி.

நீதி தேவதை

எல்லா குற்றங்களையும்
மன்னிக்கும்
ஒரே நீதிமன்றம்,
அம்மாவின் இதயம்!
 எஸ்.ஜெயகாந்தன்,
புன்செய் புளியம்பட்டி.

காத்திருப்பு

நிலையாக இல்லாத
மனிதர்களுக்கு மத்தியில்
ஒரு நிலையில் நின்று
நாள் தவறாமல்,
இரவு பகல் பாராமல்
கூர்க்காவைப் போல்
அதன் ‘கிரீச்’ மொழியில்
பேசிக்கொண்டு
எந்நேரமும் காத்திருக்கின்றன
ஒவ்வொரு வீட்டு வாசலிலும்
கதவுகள்...
 ச.புகழேந்தி,
அய்யாறு.

பேச்சு!

ஒரு வார்த்தைகூட
பேசாமல்
உலகத்து பேச்சையெல்லாம்
வீட்டுக்குள்
விசிறிவிட்டுப் போகிறான்
பேப்பர் பையன்.
 கமருதீன்,
தஞ்சாவூர்.

உறவு

வாரம் இரண்டு முறை
வந்து போய்க்கொண்டிருந்தார்
சித்தப்பா...
அவரது
இரண்டு சக்கர வாகனத்தை
இரவல் கேட்காதவரை!
 வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி.

களைப்பு

குழந்தையோடு விளையாடி
களைத்துப் போயின
பொம்மைகள்!
 பி.என்.ஜெய்சங்கர்,
திருவாரூர்.