இளமை ஏரியா



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

           சென்னையின் சாலைகளில் வாகனம் ஓட்டுகிற அத்தனை பேருமே சாகசக்காரர்கள்தான். எங்கே மேடு இருக்கும், எங்கே பள்ளம் இருக்கும் என்பது தினசரி சஸ்பென்ஸ்! இந்த இம்சையையும் டிராபிக் ஜாமையும் சபிக்கிறவர்கள், சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்பைப் பற்றிக் கேள்விப்பட்டால் குளிர்ந்து போவார்கள்.

23 மாணவர்கள் இணைந்து கண்டுபிடித்துள்ள ‘ஆல் டெரைன்’ வாகனம், காடு, மலை, மேடு, சகதி என எங்கேயும் ஓடுமாம். வாகனத்தில் எழும்பும் அதிர்வுகளை மின்சக்தியாக மாற்றிக்கொள்ளும் தொழில்நுட்பம், புகையை சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத வண்ணம் மாற்றுகிற வித்தை, எல்லாவற்றையும் விட... எந்தத் தடத்திலும் ஓடக்கூடிய வசதி என பெருமைகளை அடுக்குகிறது இதை உருவாக்கிய ‘தி மோஸ்ட் வான்டட்’ குழு.

‘‘இந்தியாவுல மட்டுமே 198 காலேஜ்... முதல் ரவுண்டுல செலக்ட் ஆனது 79 காலேஜ்... அதுல தென்னிந்தியாலேர்ந்து 25 காலேஜ்... தமிழ்நாட்லேர்ந்து 13... அந்த பதிமூணுல நாங்கதான் வின்னர்ஸ்... ஆங்ங்!’’ & கழுத்தையும் இடுப்பையும் ஆட்டி, ‘ரமணா’ ஸ்டைல் புள்ளிவிவரம் தருகிறார் ஃபெலிக்ஸ் உதயராஜ்.

‘‘இவன்தாங்க எங்க டீமோட தல... தறுதல! சபதம் முடியற வரை கூந்தலை முடியாதவங்களைக் கேள்விப்பட்டிருப்பீங்க... புராஜெக்ட் முடியற வரைக்கும், இவன் போட்ட டிரஸ்ஸை மாத்தவே இல்லையே... அவ்ளோ உழைக்கிறாராம்! ஆனா, உண்மைல ஒரு நட்டு, போல்ட்டை கூட கழட்டி மாட்டாத மகராசன் அவன்...’’ & டீம் கேப்டன் ஃபெலிக்ஸை வறுத்து வாயில் போட்டுக் கொண்டவர் ராகேஷ்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineவிக்னேஷின் இலக்கும் தலைவரைக் காய்ச்சி எடுப்பதிலேயே இருந்தது.‘‘செகண்ட் ரவுண்டு போட்டிக்காக டெல்லி போயிட்டிருந்தோம்... அங்க எங்க புராஜெக்ட் பத்திப் படிக்கணும். ‘டேய்... நான் நாலு வரியாவது மைக்ல பேசறேன்டா’னு கேட்டான் .ஃபெலிக்ஸ். பயபுள்ள பொழச்சுப் போவட்டும்னு கொடுத்தோம். ‘திஸ் வெஹிகிள் இஸ்...’னு மனப்பாடம் பண்ணிட்டே இருந்தான். டிரெயின் ஒவ்வொரு ஸ்டேஷன்ல நிக்கிறப்பவும், ‘முட்டே போன்டா... சம்சா... சம்சா... சம்சா...’னு கூவிக்கூவி விப்பாங்க.

மனப்பாடம் பண்றதை விட்டுட்டு நம்மாளு புத்தி, அதுக்குப் போயிடும். போட்டி நடக்கிற அன்னிக்கு, ஸ்டேஜ்ல ஏறிப் பேசப் போறான்... ‘திஸ் வெஹகிள் இஸ்’னு ஆரம்பிச்சவன், திடீர்னு ‘முட்டே போன்டா, சம்சா’ன்னானே பார்க்கணும்!’’

எவ்வளவு கலாய்த்தாலும், டென்ஷனே ஆகாத ஃபெலிக்ஸ் திருவாய் மலர்ந்தார்.

‘‘நானாவது பரவால்லங்க... நிரஞ்சன் பண்ணினதை சொல்லியே ஆகணும்... டெல்லில வண்டியை டெஸ்ட்டிங் பண்ண எல்லாரும் தயாராயிட்டிருந்தோம்... சார் முதவாட்டி டெல்லி வந்திருக்காரு. டெல்லில பானிபூரியைத் தவிர அவருக்கு வேற எதுவும் தெரியாது. கடை கடையா ஏறி, ஒவ்வொரு கடைலயும் பிளேட் பிளேட்டா பானி பூரியை வாங்கி டேஸ்ட் பார்த்துட்டு, கடைசில வயித்துல கடமுட சத்தத்தோட வந்து சேர்ந்தான், டெஸ்ட்டிங்கை, டேஸ்ட்டிங்னு புரிஞ்சுக்கிட்ட அறிவுக்கொழுந்து...’’ & கேப்டனின் வாரலில், டர்ர்ர் ஆனார் நிரஞ்சன்.
‘‘எங்கடா நம்ம கோ&டிரைவரை காணோம்...’’ & அனைவரும் தேடியது ஆர்.கார்த்திக்கை. ‘ஆஜர்’ என கை தூக்கியவரை அப்படியே அள்ளி நம் முன் போட்டது கூட்டம்.

‘‘வண்டி முழுக்க ரெடியானதும், காலேஜுக்கு வெளிய ஒரு ட்ரிப் போலாம்னு கிளம்பினோம். எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் போல, டிரைவர் சீட்ல கார்த்திக் ஏறி உட்கார்ந்துட்டான். பின்னாடி நாங்கல்லாம் டூ வீலர்ல ஃபாலோ பண்ண... ரோட்ல போற வர்றவங்கள எல்லாம் கூப்பிட்டு, ‘‘ரேஸ் வண்டி நல்லாருக்கா... ரேஸ் வண்டி நல்லாருக்கா...’னு கேட்டுக்கிட்டே வந்தான். நடந்து போறவங்கல்லாம் சென்னை எல்லையையே தாண்டிட்டாங்க. எங்க வண்டி ஆமை மாதிரி நகருது. சார் அவ்ளோ ஸ்பீட்!’’ & விக்னேஷ் வம்பிழுக்க...

‘‘அந்தக் கண்றாவிக் காட்சியை நாங்களும் பார்த்தோம்ல... ‘வின்னர்’ படத்துல ‘கைப்புள்ள’ வடிவேலுவை ட்ரைசைக்கிள்ல உக்கார வச்சு, நாலு பேர் தள்ளுவாங்களே... அந்த சீன் மாதிரியே இருந்துச்சு...’’ & மவுனம் கலைத்து, மானத்தை வாங்கியது கேர்ள்ஸ் கேங். கிடைத்த வாய்ப்பை விடாமல் அரவிந்த் பக்கம் பார்வையைத் திருப்பியது.

‘‘இவன் இந்த வண்டியை ஒருநாள்கூட ஓட்டி நாங்க பார்த்ததில்லை. ஆனா, காலேஜ்ல ஏதாவது ஃபங்ஷன், ஸ்போர்ட்ஸ்... மத்த காலேஜ் பொண்ணுங்க வராங்கனு தெரிஞ்சா, அன்னிக்கு மட்டும் வண்டில ஏறி இங்கிட்டும் அங்கிட்டும் ஓட்டி போஸ் கொடுப்பான். பிரதருக்கு எஃப்&1 ரேஸ்ல போற அஜீத்னு நினைப்பு... அப்படித்தான் அன்னிக்கு சீன் போட்டு, காலேஜ் வாசல் வேப்பமரத்துல மோதி செம பல்பு வாங்கினான்ல!’’

‘‘யக்கா... அடங்கு...’’ என அவர்களை ஆஃப் செய்தார் குருசங்கர்.

‘‘இந்த புராஜெக்ட்ல பொண்ணுங்களே இல்லைங்கிறதுல பல பேருக்கு வருத்தம். பொதுவா நாங்க காலேஜுக்குள்ள எந்தப் பொண்ணையும் பார்க்க மாட்டோம். பொண்ணுங்களைப் பத்திப் பேச மாட்டோம். பொண்ணுங்க பேசறதைக் கேட்க மாட்டோம்ல...’’ என்ற சதீஷ்குமாரை இடைமறித்துப் பாய்ந்தார் மைத்ரேயி.

‘‘அடப்பாவி... நீ என்னதான் சொல்ல வர்றே?’’

‘‘இது காந்தி சொன்ன தத்துவம் இல்லமா... வாழ்க்கைல கெட்டதை மட்டுமில்லை... சில வேளைகள்ல நல்லதையும் பார்க்காம, பேசாம, காது கொடுத்துக் கேட்காம இருக்க வேண்டியிருக்குனு சொல்ல வந்தேன்... ஒருவேளை புராஜெக்ட்ல பொண்ணுங்களும் இருந்திருந்தா, இன்னும் சீக்கிரம் பிக்கப் ஆயிருக்கும்ல!’’

‘‘ஆமாமா... செமத்தியா பிக்கப் ஆயிருக்கும்... ஆனா வண்டியில்லை...’’ - பெண்கள் போட்ட கூச்சலில், கியர் போடாமலே வேகமெடுத்தது வண்டி!
 ஆர்.வைதேகி
படங்கள்: புதூர் சரவணன்