பங்குச் சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                                      சிவப்புப் புள்ளிகளோடு தடுமாறிக் கொண்டிருந்த இந்திய பங்குச் சந்தை, கடந்த வாரத்தில் பச்சைக்கு மாறி பளிச்சிடத் தொடங்கியிருக்கிறது. இயற்கைப் பேரழிவு, உலகச் சந்தைகளின் போக்கு என்றெல்லாம் சிவப்புக்கு பல காரணங்கள் சொன்னவர்கள், பச்சைக்கு மாறியதற்குச் சொன்ன ஒரே காரணம் ஒற்றை மனிதர்... பங்குச் சந்தைகளின் பிதாமகன், உலக முதலீட்டாளர்களின் நாயகன் வாரன் பஃபெட்!

கடந்த வாரம் இந்தியாவுக்கு விசிட் அடித்த வாரன் பஃபெட், 'இந்தியா முதலீட்டாளர்களின் சொர்க்கம்’ என்று சொல்லிவிட்டுப் போக, முதலீட்டை அள்ளிக்கொண்டு ஓடிய அந்நிய முதலீட்டாளர்கள் எல்லாரும் திரும்ப வந்துவிட்டார்கள். சந்தையும் கிடுகிடுவென்று உயரத் தொடங்கிவிட்டது.

ஒரு மனிதரின் வார்த்தைக்கு இவ்வளவு மரியாதை இருக்குமா..? இருக்கும்... அந்த மனிதர் வாரன் பஃபெட்டாக இருந்தால்! அவர் தன்னுடைய முதலீட்டாளர்களுக்கு எழுதிய கடிதங்கள் எல்லாம் பைபிள் போல படிக்கப்படுகின்றன. நாமும் அவரைப் போல சிறந்த முதலீட்டாளராக இருக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் ஆசையிலும்தான் இத்தனை வாரங்களாக பங்குச் சந்தை பற்றிய கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.

வாரன் பஃபெட் பற்றிச் சொல்வதாக இருந்தால் நிறைய சொல்லிக் கொண்டே செல்லலாம். அவர் மிகச் சிறிய வயதிலேயே பங்கு வணிகத்தில் ஈடுபட்டார் என்பதோ, வர்த்தகத்தில் உள்ள ஏற்ற இறக்கங்களைக் கணித்து முதலீட்டு முடிவுகளை எடுத்தார் என்பதோ இப்போதைக்குச் சொல்ல வேண்டிய விஷயமல்ல. அவர் என்ன மாதிரியான முதலீட்டு அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறார் என்பதுதான் முக்கியமான விஷயம்.

அவரைப் பார்த்து மற்ற முதலீட்டாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அந்த மூன்று விஷயங்களை மனதில் இருத்திக் கொண்டாலே போதும், நல்ல முதலீட்டாளராக நம்மால் செயல்பட முடியும். அவருடைய இத்தனை ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையாக இருக்கும் விஷயங்கள் இந்த மூன்றும்தான்.

தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!

வாரன் பஃபெட் தன்னிடம் வரும் முதலீட்டாளர்களுக்குச் சொல்லும் அறிவுரை இதுதான். ‘தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்... தெரியாத சூழ்நிலையில் எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்யாதீர்கள்’ என்பதுதான் அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். அதற்கு மிக அழகான ஓர் உதாரணமும் சொல்வார்கள்.

கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்யச் சொல்லி வாரன் பஃபெட்டிடம் அவருடைய அலுவலக ஊழியர்கள் சொன்னபோது, ‘எனக்கு கம்ப்யூட்டர் தெரியாதே’ என்றாராம். அதன்பிறகு தன்னுடைய அலுவலகத்துக்கு ஒரு கம்ப்யூட்டரை வாங்கி அதைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டு, அதன் சிறப்புகளையும் அதன் செயல்பாட்டு வேகத்தையும் கணித்து, அதன்பிறகு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் முதலீடு செய்ய முடிவெடுத்தாராம்.

அதுதான் சரியான அணுகுமுறை. ஒரு நிறுவனத்தின் தன்மை மட்டுமல்லாமல், அது சார்ந்திருக்கும் துறை பற்றியும், அதன் எதிர்காலம் பற்றியும் சரியாகத் தெரிந்து கொண்டு அதன்பிறகு முதலீட்டு முடிவை எடுக்கவேண்டும். அதுதான் சரியானதாக இருக்கும்.

நாம் பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்!

வாரன் பஃபெட் தன்னுடைய வணிகத்தைத் தொடங்கியபோது அவருடைய வயது ஒற்றை இலக்கத்தில்தான் இருந்தது. எல்லா சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர் மட்டும் ஓடிப்போய் கோகோ கோலா வாங்கி வந்து விளையாட்டு வீரர்களிடையே விற்று லாபம் பார்த்தார். அதுதான் அவர் அடுத்ததாகச் சொல்லும் பாடம்.

‘‘எனக்கு தாகம் எடுத்தபோது கோக் குடிக்கலாம் என்று நினைத்தேன். அப்போது, ‘இதேபோல்தானே எல்லோருக்கும் தோன்றும்’ என்ற எண்ணம் வந்தது. அந்த நேரத்தில்தான் எனக்குள் இருந்த வணிகன் விழித்துக் கொண்டான். என்னுடைய முதல் வணிகத்தையும் அதில் கிடைத்த லாபத்தையும் இன்றைக்கும் மறக்கமாட்டேன்’’ என்று சொல்லும் பஃபெட், அதையேதான் தன்னுடைய முதலீட்டு மந்திரமாகவும் சொல்கிறார்.

‘‘நான் தினமும் பயன்படுத்தும் பேஸ்ட், ஷேவிங் கிரீம், சோப் போன்ற பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களிலும், அடிப்படையான உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களிலும்தான் முதலீடு செய்வேன். ஏனென்றால், என்னைப் போலவே அதைப் பயன்படுத்தும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதற்கு பின்னடைவு கிடையாது’’ என்பது அவருடைய வாதம். அது சரியான வாதம்தான்!

எல்லோரும் சந்தையை விட்டு வெளியேறும்போது உள்ளே நுழையுங்கள்!

இந்த முடிவை எடுப்பதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும். ஆனால், நல்ல பல ரத்தினங்களையும் முத்துக்களையும் அள்ளிக் கொடுக்கும் புதையலாக இருப்பது இந்த முடிவுதான். முதலீட்டாளர்கள் எப்போது வெளியேறுவார்கள்? சந்தையில் சரிவு ஏற்படும்போது பதற்றமாகி விற்கும் முடிவை எடுப்பார்கள். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் தைரியமாக வாங்கும் முடிவை எடுக்க வேண்டும். அப்படி வாங்கும்போது மிகக் குறைவான விலையில் தரமான பங்குகளை வாங்கமுடியும்.

நிறுவனங்களின் அடிப்படையான குணங்களை வைத்து முதலீட்டு முடிவை எடுக்கும்போது, சந்தையின் சரிவைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அந்த நிறுவனத்தின் தன்மைக்கு ஏற்ப முதலீட்டு முடிவை எடுக்கலாம். சந்தை சரியாகும்போது நாம் வாங்கிய நிறுவனத்தின் விலை எட்டாத உயரத்தில் நிற்கும். நாம் எடுத்த முடிவு எத்தனை புத்திசாலித்தனமானது என்பது அப்போது புரியும்.

இந்த மூன்று மந்திரங்களையும் இடைவிடாமல் பின்பற்றுங்கள்... முதலீட்டில் நல்ல லாபம் ஈட்டுங்கள். இதுவரையில் நான் சொன்ன கருத்துகளை எல்லாம் ஆலோசனைகளாக எடுத்துக் கொண்டு, உங்களுடைய பொறுப்புகளை நன்கு அறிந்த முதலீட்டு ஆலோசகர்களின் உதவியோடு முடிவுகளை எடுங்கள்.
பங்குச் சந்தையில் வெல்ல என்னுடைய
வாழ்த்துகள்!
சி.முருகேஷ்பாபு