பிரிக்கப்படாத ஞானம்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
 
                                 ரு ஊரிலே சிறந்த அறிவாளி ஒருத்தர் இருந்தார். மனிதநேயம் மிக்கவர் அவர்.பிரமாண்டமான வீட்டின் முன்புற வராந்தாவில் போடப்பட்டிருக்கும் ஊஞ்சலில் பெரும்பாலும் அமர்ந்திருப்பார். அந்தச் சமயத்தில் அவரிடம் ஊரார் பேச வருவார்கள். ஊஞ்சலிலேயே ஒரு டேப் ரிகார்டரையும் வைத்திருந்தார். வந்தவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘‘இதோ வந்துடறேன்’’ என்று சொன்னபடி அடிக்கடி எழுந்து உள்ளே போய் விடுவார். ஆனால் திரும்பி வருவது பெரும்பாலும் சந்தேகம்.

உள் அறையில் போய் என்ன செய்வார் என்பது ஊராருக்கு புரியவில்லை. ஏதாவது எழுதுவார், படிப்பார், பூஜை செய்வார் என்பதாக அவர்கள் யூகித்துக் கொண்டார்கள். (பூஜையில் மட்டமான ஊதுவத்திதான் கொளுத்துவார் போலிருக்கிறது... சகிக்க முடியாத வாசம் வீசும்!) அதற்காக வந்தவர் ஊஞ்சலில் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. பிரமுகர் இப்படி எழுந்துசெல்வதால், தாம் அவமரியாதைக்கு ஆளானதாக நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால், அவரது சுபாவமே இதுதான்! அதற்காக அவர் திரும்பி வரும்வரை, அவரைப் பார்க்க வந்தவர் ஊஞ்சலில் காத்திருக்கவேண்டிய அவசியமும் இல்லை. தான் பேச விரும்பியதையெல்லாம் அங்கே உள்ள டேப் ரிகார்டரில் பதிவு செய்துவிட்டுச் சென்றுவிடலாம்.

அந்த அறிஞரின் நெருங்கிய சினேகிதர் ஒருவர் வெளியூரிலிருந்து ஒருநாள் வந்திருந்தார். அவருக்கு இந்தப் பழக்கம் மிகவும் விசித்திரமாகப் பட்டது. ‘‘என்னப்பா சிவமூர்த்தி, எப்படி நீ இத்தனை பேச்சையும் கேட்டுக் கொள்வாய். உனக்கு எப்போது நேரம் வாய்க்கிறது? நிறைய டேப்புகள் இருக்கின்றனவே. தினம் தினம் புதுசாக சேர்கிறதே’’ என்று கேட்டார்.

அறிஞர் சிரித்தார். ‘‘எனது ஆசான் எனக்குச் சொல்லிக் கொடுத்த முறையைத்தான் நான் அனுசரிக்கிறேன்’’ என்றார்.

‘‘என்ன முறை?’’

‘‘ஆசான் சொன்னார்... ‘யாரையும் அதிக நேரம் பேச விடாதே. அப்படியே அவர்கள் பேசுபவராக இருந்தால், அவ்விடத்தைவிட்டு நீ அகன்றுவிடு. ஏனென்றால் பிறத்தியார் பேசும் வார்த்தைகளும் அவற்றிலுள்ள கருத்துகளும் உனது தூய மனத்தை எந்தவிதத்திலாவது, எந்த நேரத்திலாவது பாதிக்கும். ஆகவே அவற்றை நீ உன் மூளையில் பதிவு செய்து கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது’ என்றார். என்னை மதித்துப் பேச வருபவர்களின் மனம் புண்படக்கூடாது என்பதால் நான் அவர்களை டேப்பில் பேசச் சொல்லிவிடுகிறேன். பதிவான டேப்புகளை வாரத்தில் ஒரு நாள்...’’

‘‘சாவகாசமாக கேட்பீர்களாக்கும்?’’

‘‘ம்ஹூம். நெருப்பில் போட்டு விடுவேன். அவர்களுடைய பேச்சும் பிரச்னைகளும் என் தூய்மையைப் பாதிக்காமல் இருப்பதற்கு இதுவே எனக்குத் தெரிந்த வழி. ஒரு பிரபல ஹாலிவுட் நடிகர் மூலம் இந்த டெக்னிக்கை அறிந்தேன். இந்த வீட்டில் ஏதோ பொசுங்குவதுபோல வாடை வருவதற்கும் இதுதான் காரணம்.’’

‘‘அவர்களுடைய நம்பிக்கைக்கு நீங்கள் துரோகம் இழைக்கிறீர்களே...’’

‘‘நான் நானாக இருந்தால்தானே அவர்கள் என்னை மதிப்பார்கள். நான் குறிப்பிடும் பிரபல ஹாலிவுட் நடிகருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அத்தனை ரசிகர்களும் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். தினமும் அவருக்கு ஆயிரக்கணக்கில் தபால் வரும். அவர் வீட்டு எதிரில் ஒரு பெரிய குப்பைத் தொட்டி இருந்தது. அதை வாரத்துக்கு ஒரு முறை நகரசுத்தி தொழிலாளர்கள் சுத்தம் செய்வார்கள். அந்தத் தொழிலாளிகள் ஆச்சரியப்படுவார்கள். குப்பையிலுள்ள அவ்வளவு கடிதங்களும் பிரிக்கப்படாமலேயே உள்ள கடிதங்கள். தனக்கு வரும் ரசிகர் கடிதங்களில் ஒன்றைக்கூட பிரித்துப் படிக்கும் வழக்கம் அந்த நடிகரிடம் கிடையாது!’’

‘‘மிகவும் கர்வம் பிடித்தவன் போலிருக்கிறது அந்த நடிகன்...’’

‘‘ஒரேயடியாக அப்படிக் குற்றம் சாட்டி விடாதே. அந்த நடிகன் யோகிக்கு உரிய மனநிலையில் இருக்க விரும்புகிறான் என்று அவனைப் பாராட்டலாம்.... துன்பத்தில் துடியாத மனத்தினனாய், இன்பத்தில் ஆசை எழாதவனாய், விருப்பம், பயம், கோபம் இல்லாதவனாக இருப்பவனே சமபுத்தி படைத்தவன் என்கிறது கீதை.

துக்கேஷு அனுத்விக்னமனா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:
வீதராக பயக்ரோத: ஸ்திததீர் முனி: உச்யதே.

ரசிகர்களின் கடிதத்தைப் பிரித்தால் அது நிச்சயம் மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ, பயத்தையோ, ஆசையையோ, கோபத்தையோதான் தரும். பிரித்துப் படித்துவிட்டு மனதை சலனப்படுத்திக் கொள்வதைவிட, பிரிக்காமலேயே இருந்துவிடுவது மேல் என்று அந்த நடிகர் நினைத்திருக்கவேண்டும்.’’

‘‘ஓஹோ... இதற்கு இப்படி ஒரு விளக்கம் இருக்கிறதா! சரி... சரி... இனிமேல் நீ எனக்குக் கடிதம் எழுதினால் நான் பிரித்துப் படிக்கமாட்டேன்’’ என்றார் அந்த நண்பர்.

‘‘போன் செய்துவிடுகிறேன்’’ என்று சிரித்தார் அறிஞர்.