காதலர் தின அனுபவங்கள்!



காதலும், காதலிக்கப்படுவதும் எப்போதுமே சுவாரசியமானவை. திரை பிரபலங்கள் மட்டும் அதில் விதிவிலக்கா என்ன! காதலை நமக்கு நினைவூட்டுகிறவர்களே அவர்கள்தானே! காதலில் விழுந்தவர்கள்... காதல் திருமணம் புரிந்தவர்கள்... படங்களில் ஹீரோக்களின் காதலுக்கு உதவியவர்கள் என பிரபலங்கள் சிலரிடம் பிப்ரவரி 14 தொடர்பான அனுபவங்களைக் கேட்டோம். வெட்கம் மின்ன முதலில் புன்னகைக்கிறார் பார்வதி நாயர். காரணம், கேள்வி அப்படி! ‘உங்களுக்கு யாராவது லவ் ப்ரபோஸ் பண்ணியிருக்காங்களா?’‘‘ஸ்கூல், காலேஜ் படிக்கறப்ப நிறைய பேர் வேலன்டைன்ஸ் டே அன்னிக்கு ப்ரபோஸ் பண்ணியிருக்காங்க.

ஆனா, அதுல ஒரு பையன் வெரி வெரி ஸ்பெஷல். அப்ப நான் ஃபைனல் இயர். அப்ப, ‘ஒரு பையன் உன்னை விரும்புறான். காதலர் தினத்தப்ப ஸ்பெஷல் கிஃப்ட் கொடுக்க விரும்பறான்’னு ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. ‘யாரையும் லவ் பண்ற ஐடியா இல்ல’னு ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டேன். பிப்ரவரி 14 அன்னிக்கு என் ஃப்ரெண்ட் வீட்டுல ஒரு ஃபங்ஷன். அதுக்கு போயிருந்தேன். அவங்க வீட்டு காலிங் பெல்லை அழுத்தலாம்னு பக்கத்துல போனா... கதவு திறந்தே இருந்தது. மெதுவா திறந்தேன். உள்ள கிட்டத்தட்ட ஆயிரம் ஹார்ட்டின் டிசைன் பலூன்ஸ்!

அறையே ரொமான்டிக்கா மிதந்தது. பார்க்க அவ்வளவு அழகு! அந்த பலூன் குவியல்ல மெல்ல நடந்து போனேன். அடுத்த அறைல இன்னும் கிரியேட்டிவ். ரூம் முழுக்க மெழுகுவர்த்தி வெளிச்சம். யாரோ லவ் ப்ரபோஸ் பண்றாங்கனு புரிஞ்சு போச்சு. அப்புறம் என் ஃப்ரென்ட்ஸை கூப்பிட்டு விசாரிச்சா, ‘அந்தப் பையன்தான் இதெல்லாம் அரேஞ்ஜ் பண்ணினான். நீதான் கிஃப்ட் ஒண்ணுமே வேணாம்னு சொல்லிட்டியே... உன்னை எப்படியாவது இம்ப்ரஸ் பண்ணணும்னு இதெல்லாம் ரெடி பண்ணியிருக்கான். இப்பவாவது உன் லவ்வை சொல்லு’னு அன்பா மிரட்டினாங்க.

அந்தப் பையனைத் தேடினேன். அவன் அங்க இல்லை. அவன்கிட்ட நான் என்ன சொல்ல விரும்பினேன் என்பது ரகசியம். ஆனா, அது என் வாழ்க்கைல ஸ்பெஷல் மொ மெண்ட்...’’ கன்னங்கள் சிவக்க பார்வதி நாயர் தலைகுனிந்தார். ஆனால், இப்படி தலைகுனியாமல் நிமிர்ந்து நின்று ‘‘சின்ன வயசுலயே லவ் பண்ணிட்டேன்...’’ என அறிவிக்கிறார் ‘பண்டிகை’ பட இயக்குநரான ஃபெரோஸ். ‘‘என் வாழ்க்கைல ஒரேயொரு லவ்தான். எங்க கதை உலகத்துக்கே தெரியும். ஒரு பிப்ரவரில, ஒரு பர்த்டே ஃபங்ஷன்லதான் விஜியை (விஜயலட்சுமி) சந்திச்சேன். மீட் பண்ணின உடனே வேலன்டைன்ஸ் டே வந்தது. ஆனா, அப்ப கொண்டாடிட முடியாதில்லையா...

ஒரு வருஷம் வெயிட் பண்ணினோம். போன வருஷம் பிப்ரவரி 14க்கு செம சர்ப்ரைஸ் காத்திருந்தது. சின்னச் சின்ன கிஃப்ட்கள் கொடுத்து விஜியை நான் இம்ப்ரஸ் பண்ணினாலும், அவங்க என் மேல வச்சிருக்கும் லவ் ஜாஸ்தி. காதலர் தினத்துக்கு கேம்ஸ், போட்டிகள் வைச்சு, அழகான ஆப்பிள் மேக் புக் கிஃப்ட் பண்ணினாங்க. இப்ப அந்த லேப்டாப்லதான் ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணிட்டிருக்கேன். பதிலுக்கு நானும் அவங்க பர்த் டேவுக்கு ஒரு மினி கூப்பர் கிஃப்ட் பண்ணியிருக்கேன். இந்த வேலன்டைன்ஸ் டேயில் எக்ஸ்ட்ரா சந்தோஷம் கிடைச்சிருக்கு. எங்க வீட்டு குட்டி இளவரசன் வந்திருக்கார். அவரை வீட்டுல விட்டுட்டு வெளிய எங்காவது கிளம்பலாம்னு நினைச்சிருக்கேன்...’’ என்கிறார் ஃபெரோஸ்.

சூரியின் ‘வேதனை’ வேறு வகையானது. ஏனெனில் அடுத்தவர் காதலுக்கு உதவப் போய் தர்ம அடி வாங்கிய அனுபவம் இவருக்கு உண்டு! ‘‘என் ஃப்ரெண்ட் ஒருத்தன் மகா கஞ்சன். ஒரு பைக் வாங்கியிருந்தான். அந்த டைம்ல அதெல்லாம் பெரிய விஷயம். ஒருநாள் ரொம்ப பிரியமா என்னை ஏத்திட்டு மதுரை ஒத்தக்கட ஏரியாவுக்கு வந்து டீ வாங்கிக் கொடுத்தான். அப்புறம் வண்டி ஒரு சந்துக்குள்ள போச்சு. முனைல ஒரு வீட்டுக்கு வெளிய ஒரு அம்மா அடி பைப்ல தண்ணி அடிச்சுட்டு இருந்தாங்க. நண்பன் வண்டிய நிப்பாட்டி என்கிட்ட ஒரு லட்டர கொடுத்து அந்த அம்மாகிட்ட கொடுக்கச் சொன்னான். எதுக்காக டீ வாங்கிக் கொடுத்து கூட்டிட்டு வந்தான்னு புரிஞ்சு போச்சு. என்ன செய்யறதுனு தெரியலை.

அடி பைப்ல தண்ணி அடிச்சுட்டு இருந்த அம்மாவும் எங்களை உத்துப் பாத்துட்டு இருந்துச்சு. அப்ப அந்த வீட்டுக்குள்ள இருந்து தாவணி போட்ட பொண்ணு வந்து குடத்தை தூக்கிட்டு வீட்டுக்குள்ள போச்சு. என்னடா... இவன் லட்டர அம்மாகிட்ட தரச் சொல்றானே... அப்ப ஏற்கெனவே அந்தம்மாவுக்கு விஷயம் தெரியும் போலனு நெனச்சிட்டு கடிதாசிய சிரிச்ச முகமா அந்தம்மாகிட்ட கொடுத்தேன். அவ்வளவுதான்ணே... படக்குனு அந்த அம்மா என் கைய இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு கத்த ஆரம்பிச்சிட்டாங்க. கூடவே மறுகையால குடத்தை எடுத்து பின்னி எடுக்கறாங்க. வலில கத்தறேன்...

கதறுகிறேன். கூட்டம் கூடிடுச்சு. லெட்டர் தரச் சொன்ன படுபாவி முறுக்கிட்டு போயிட்டான். தர்ம அடி. அப்ப ஒரு பெருசு ‘கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கற பொம்பளைக்கு லவ் லட்டர் கொடுத்தா, உலகம் உருப்படுமா?’னு காறித் துப்பிட்டு போனாரு. அப்பத்தான்ணே எனக்கு தெரிஞ்சுது. லட்டர் கொடுத்தது பொண்ணுக்கு இல்ல... அம்மாவுக்குனு! இப்படி ஒரு நண்பன்கிட்ட நான் சிக்கிட்டதால, நிஜ வாழ்க்கைல யாரோட காதலையும் சேர்த்து வைக்கற அனுபவம் அமையலண்ணே... அந்த கடனைத்தான் ஒவ்வொரு படத்துலயும் ஹீரோ, ஹீரோயினைச் சேர்த்து வச்சு பைசல் பண்ணிட்டு இருக்கேன்!’’

சூரிக்கு நேர்ந்த அனுபவங்கள் ‘பொன்மாலைப் பொழுது’ ஹீரோவான ஆதவ் கண்ணதாசனுக்கு ஏற்படவில்லை. மாறாக, வருகின்ற காதலர் தினம், தனக்கு ரொம்பவே ஸ்பெஷல் என்கிறார். ‘‘எங்க மேரேஜ், லவ் ப்ளஸ் அரேஞ்ஜ்டு. 2015 டிசம்பர்ல சென்னைல வெள்ளம் வந்தப்ப வினோதினியின் நட்பு கிடைச்சது. ஃப்ரெண்ட்ஸானோம். 2016 டிசம்பர்ல எங்க ரெண்டு பேர் மனசுலயும் பட்டர்ஃபிளை பறந்தது. ஒரு விஷயத்துல உறுதியா இருந்தோம். எங்க வீட்ல சம்மதிச்சா, மேரேஜ். இல்லைனா ஃப்ரெண்ட்ஸா இருப்போம்னு. குட் லக். ரெண்டு பேர் வீட்லயும் க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாங்க. 2017 டிசம்பர்ல எங்க மேரேஜ் நல்லபடியா நடந்தது. வினோதினி கிட்ட நிறைய விஷயங்கள் பிடிக்கும்.

திருமணத்துக்குப் பிறகு இது எங்க முதல் வேலன்டைன்ஸ் டே. மறக்க முடியாதபடி செலிபிரேட் செய்யணும்னு முடிவு செய்திருக்கோம்...’’ புது மாப்பிள்ளையாக புன்னகைக்கிறார் ஆதவ். சிங்கம்புலி வேறு ரகம். நிஜ வாழ்க்கையில் காதல் ஜோடியைச் சேர்த்து வைத்த அனுபவம் இவருக்கு நிறையவே உண்டு. அதில் ஒன்றை மட்டும் பகிர்ந்து கொண்டார். ‘‘அப்ப பெரியகுளத்துல பனிரெண்டாவது படிச்சிட்டிருந்தேன். எங்க வீட்டுக்கு பக்கத்து தெருவுலதான் ஓ.பன்னீர்செல்வம் சாரோட டீக்கடை இருந்தது. காலைல எழுந்திரிச்சதும் அங்கதான் டீ குடிப்பேன். மறவர்சாவடி தெரு வழியாத்தான் டீக் கடைக்கு போக வேண்டியிருக்கும்.

தினமும் அந்த வழியா போறப்ப பச்சை கலர் மாடி வீட்டு ஜன்னல் வழியா ஒரு புள்ள பார்த்து சிரிக்கும். டீக்கடைக்குப் போனா, ‘இளைய நிலா... பொழிகிறது...’னு லவ் மூடு ஸாங் ஓடும். கொஞ்சம் எனர்ஜியை ஏத்திட்டு வீட்டுக்கு திரும்பிப் போறப்ப அதே ஜன்னல் தரிசனம். அப்புறமென்ன! ஆட்டோமெடிக்கா உடம்புக்குள்ள கெமிஸ்ட்ரி கிரியேட் ஆகிடுச்சு. அந்த புள்ளைய பார்க்கறதுக்காகவே சைக்கிள எடுத்துக்கிட்டு டீ குடிக்க போவேன். ஒருநாள் என் நண்பன் முத்துராஜ், என்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு வந்தான். ‘தினமும் ஒரு புள்ள என்னை பார்த்து சிரிக்குது’னு லவ் ஃபீலிங்ஸோடு சொன்னான். யாருடா அந்த புள்ளனு விசாரிச்சேன். என்னை பார்த்து சிரிக்கற அதே பார்ட்டினு தெரிஞ்சதும் ஷாக் ஆகி,

‘நீயே சைட் அடிச்சுக்கோ’னு விட்டுக் கொடுத்துட்டேன். திடீர்னு ஒருநாள் அவன் அந்த புள்ளைக்கு ‘ஐ லவ் யூ’னு எழுதி லவ் லட்டர் கொடுத்துட்டான். அவங்க லவ் ஒர்க் அவுட் ஆகிடுச்சு. மறுநாளே, ‘எனக்கொரு கவிதை எழுதித்தாடா சிங்கம்புலி’னு கேட்டான்.‘அலைகள் ஓய்வதில்லை’ல ராதாகிட்ட கார்த்திக் சொல்ற கவிதையை எழுதிக் கொடுத்தேன். பாட்டனி நோட்டுல செம்பருத்திப் பூ ஒட்டி, பாகங்களை குறிச்சிருந்த பக்கத்துல அவன் அந்தக் கவிதையை எழுதிக் கொடுத்திருக்கான். அதுல அந்தப் புள்ள அசந்து போய், ‘சிங்கம்புலி டைரக்டர் ஆகப் போறானாமே... நீங்க வைரமுத்து மாதிரி பாட்டு எழுதப் போனா என்ன?’னு உசுப்பேத்தியிருக்கு! அப்புறம் வேறென்ன நடக்கும்? அந்தப் பொண்ணு வேற ஊருக்கு மாறிப் போயிடுச்சு.

நண்பனும் மதுரைக்கு காலேஜ் படிக்க போயிட்டான். இப்ப வரைக்கும் அவனுக்கு நான் எழுதிக் கொடுத்ததெல்லாம் வைரமுத்து கவிதைதான்னு அவனுக்கே தெரியாது!’’ குசும்பு கொப்பளிக்க சிங்கம்புலி சிரிக்கிறார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமனுக்கு இதுமாதிரியான சங்கடங்கள் ஏதுமில்லை. தன் 2வது திருமண நாளை பாரீஸில் ஜாம் ஜாம் என கொண்டாடியிருக்கிறார். ‘‘ஒவ்வொரு நாளுமே எங்களுக்கு ஸ்பெஷல்தான். மணநாள்னா சொல்லணுமா? ரெண்டு வாரம் பிரேக் கிடைச்சது. ஃப்ரான்ஸ் போக முடிவு செய்தோம். சரியா திருமண நாளும் அதை ஒட்டியே வர... கொண்டாடித் தீர்த்துட்டோம். வேலன்டைன்ஸ் டேக்கு இன்னொரு ஸ்பெஷல் வைச்சிருக்கோம். அது சஸ்பென்ஸ். இப்போதைக்கு வெளில சொல்ல வேண்டாம்னு என் ஒய்ஃப் நிஷா ஆர்டர் போட்டிருக்காங்க...’’ என ஃபுல்ஸ்டாப் வைக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.கிட்டத்தட்ட இதே மகிழ்ச்சியில்தான் திளைக்கிறார் ஆரி.

ஏனெனில் அவரது பிறந்தநாளும் பிப்ரவரியில்தான் வருகிறது!‘‘என் லைஃப்ல நதியா வந்த பிறகு, பிப்ரவரி ரொம்பவே பொக்கிஷமா மாறிடுச்சு. போன வேலன்டைன்ஸ் டே அப்ப நதியாவுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்தேன். அவங்க உறவினர்கள், நண்பர்களை எல்லாம் நதியாவைப் பத்தி பேச வைச்சு வீடியோவா ஷூட் பண்ணி அழகான ஒரு படமா மாத்தினேன். பிப்ரவரி 14 அன்னிக்கு தியேட்டர்ல அவங்களை படம் பார்க்க கூட்டிட்டு போனேன். ஸ்க்ரீன்ல எங்க படம் ஓட ஆரம்பிச்சது. அவ்வளவுதான். நதியா நெகிழ்ந்துட்டாங்க. இந்த வருஷம் எங்க காதலுக்கு அடையாளமா ரியா அன்காரிகா பிறந்திருக்கா. எங்க குட்டி இளவரசியின் பர்த் டேவும் பிப்ரவரிதான்!’’ கண்களால் வெட்கப்படுகிறார் ஆரி.            

- மை.பாரதிராஜா