தலைப்பை கேட்டதும் ரஜினி காலத்தில் நடந்த விபத்துகளைச் சொல்லி பயமுறுத்தினாங்க...



காளி சீக்ரெட்ஸ்

‘‘எனக்கு சினிமா ஒரு சந்தோஷம். இனிமே இது கமர்ஷியல், ஆர்ட் ஃபிலிம்னு நாம சொல்றதுக்கு வேலையே இல்லை. எல்லாத்தையும் ரசிகர்களே தீர்மானிக்கிறாங்க. இப்படித்தான் படம் பண்ணணும்னு முன்னாடி சில அம்சங்கள் இருந்தது. இப்ப சகலமும் வேற மாதிரி மாறி நிக்குது. படம் புதுசா தெரிந்தால், யாராக இருந்தாலும் ஆதரவு கொடுக்கிறாங்க. வித்தியாசமா செய்ய நினைக்கிறவங்களுக்கு இதுதான் அருமையான நேரம்.

இந்த சமயத்தில் ‘காளி’ வர்றது பெரிய ப்ளஸ்! அடுத்தடுத்து கொடுத்த வெற்றிகளில் தமிழ் சினிமாவின் செல்லப் பிள்ளையாகி இருக்கிறார் விஜய் ஆன்டனி. அவர் ரொம்பவும் இன்வால்வ் ஆகி நடிச்ச படம் இது. இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என அவரின் ஒத்துழைப்புதான் இந்த சினிமா உருவாக்கத்தில் முன்னணியில் இருந்த விஷயம்...’’ படம் முடித்த திருப்தியில் பேசுகிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. ‘‘ஈவினிங் பார்த்திடலாம்...’’ எனச் சொன்ன மாதிரியே சந்திப்பு. தொடங்கிய பேச்சில் ‘காளி’யின் சித்திரம் விரிந்தது.

கொஞ்சம் இடைவேளைக்குப் பிறகு ‘காளி’யின் ஆரம்பம் எப்படி நடந்தது?
எஸ். இதற்கான ஆரம்ப ஆயத்தம் ரெண்டு வருஷங்களா நடந்துக்கிட்டே இருக்கு. விஜய் ஆன்டனி கதை கேட்கிறார்னு கேள்விப்பட்டதும், அவர்கிட்டே பேசினேன். எப்பவும் புரடியூசரை நாடித்தான் டைரக்டர் போவாங்க. ஆனா, அவரே வீட்டுக்கு வந்து கதை கேட்கிற அளவுக்கு எளிமை. கேட்டார். சொல்லிக்கிட்டு இருந்தபோதே கதைக்குள் அவர் புகுந்து விட்டதை சுலபமாக உணர முடிஞ்சது. அவர் எடுத்துக் கொள்கிற கேரக்டர்களில் வித்தியாசம் எதிர்பார்க்கிறவர். ஒரு படம் வெற்றி பெற்றால், அதே மாதிரி படம் செய்யணும்ங்கிற தடத்தை பின்பற்றுவதில்லை.

திரைக்கதையில் வித்தியாசம் காட்டுகிற பல படங்களை ஏற்றுக் கொள்வதில் சில புரடியூசர்ஸ் தயக்கம் காட்டுவாங்க. ஆனால், கேட்டவுடனே தயாரித்து, நடிக்க அவர் முன் வந்தது எனக்கு ரொம்ப நல்ல விஷயமாகப்பட்டது. இப்படித்தான் ‘காளி’ தொடங்கியது. கதையின் பல அம்சங்களை அவர் புரிந்துகொள்கிற விதமும், அதை திரையில் கொண்டு வந்து கொடுக்கிற அக்கறையும் ரொம்பவும் அலாதியானது. இன்னும் சொன்னால் ‘காளி’யின் மெருகேற்றலில் அவருடைய பங்கும் இருக்கு. இது கிராமம் சார்ந்த சப்ஜெக்ட். நான் கிராமங்களில் அதிகம் வாழ்ந்து பழகியவளில்லை. அவர் கொடுத்த சில விஷயங்கள் படத்தின் ஆழத்திற்கு உதவியாக இருந்தது.

எப்படியிருக்கும் ‘காளி’?
சின்ன வகையிலான படம்னு ‘காளி’யை உடனே சொல்லிட முடியாது. டிராமா, ஆக்‌ஷன், அதிகமா ரொமான்ஸ், அருமையான சஸ்பென்ஸ் கொண்ட கதையை எந்த வகைன்னு தெளிவாச் சொல்றது? விஜய் ஆன்டனியின் டிராவல் இருக்கு. டாக்டரா இருந்து வெளிநாட்டிலிருந்து திரும்பியவர், ஒரு பயணம் மேற்கொள்கிறார். அதில் அவர் சந்திக்கிற மனிதர்கள், பெண்கள், வாழ்க்கை அனுபவங்கள் இருக்கு. விஜய் எப்பவும் ரொமான்ஸ்னா கூச்சப்படுவார். இதில் அந்த கூச்சத்தைப் போக்கியிருக்கோம். இதுவரை இல்லாத வகையில் டான்ஸ் ஆடியிருக்கார்.

ஆக்‌ஷனின் சில கட்டங்கள் உண்மையில் ஆபத்து நிறைந்தவை. அதை எளிதாகக் கடந்து செய்திருக்கிறார்.‘காளி’ங்கிற தலைப்பை விஜய்தான் தேர்வு செய்தார். சிலர் அந்த தலைப்பை கேள்விப்பட்டதும், ரஜினி காலத்தில் நடந்த சில விபத்துகளைச் சொல்லி பயமுறுத்தினாங்க. அதையெல்லாம் கேட்டு மெல்ல சிரித்துக்கொண்டே நகர்ந்து இதுதான் தலைப்புன்னு சொன்னார். இதிலும் சில ஆக்‌ஷன் சீன்ஸ் வரும்போது, காதில் போட்டு வைத்த செய்திகளால், நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் கொஞ்சம் பயம் இருந்தது. ஆனால், நல்ல வேளையாக ஷூட்டிங் இனிதே முடிந்தது.

நான்கு பெண்கள் நடிக்கிறாங்க...
அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அமிர்தா என நான்கு பெண்கள். என் படத்தில் எப்பவும் பெண்களுக்கு நாகரீகமான இடம் இருக்கும். இதிலும் அது குறைவில்லாமல் நடந்திருக்கு. கேரியரில் பெரிய இடத்துக்குப் போக வேண்டிய எல்லா தகுதிகளும் இந்த பொண்ணுங்ககிட்டே இருக்கு. அஞ்சலி, சுனைனா ஏற்கனவே தங்களை நிரூபிச்சவங்க. மத்தவங்க அதற்கான பாதையில் இருக்காங்க. வெற்றி பெறணும் என்ற ஆசைகள் போக, சுவாரஸ்யமான சினிமா தரணும்கிறதுதான் என்னுடைய ரொம்பப் பெரிய ஆசையாக இருக்கு. நல்ல படம் பார்க்கணும்னு ஜனங்க விருப்பப்படும்போது, நானும் அதையே தரணும்னு ரிஸ்க் எடுக்கிறதில் ஆச்சர்யம் இல்லை.


பாடல்கள் நல்லா வந்திருக்கு...

விஜய் ஆன்டனியின் மாயம் இதிலும் நடந்திருக்கு. ‘அரும்பே...’ பாட்டை இணையத்தில் பார்த்தவர்களின் எண்ணிக்கை நாளும் பொழுதும் கூடிக்கிட்டே போகுது. டுவிட்டரில் அனிருத் கூட பாட்டைக் கேட்டுட்டு என்னை ‘லக்கி’னு குறிப்பிட்டிருந்தார். இது மாதிரியான நல்ல இடங்கள் படம் பண்ணும்போது நடந்திருக்கு. ஒவ்வொரு பாடலும் பெஸ்ட்டா வரணும் என நினைத்ததில் விஜய்யின் பங்கு ரொம்பவும் பெரிசு. ரிச்சர்ட் எம்.நாதன்தான் கேமரா. நான் இனி எடுக்கப்போகிற எல்லா படத்திற்கும் அவரே கேமராமேனாக இருந்தால் நல்லாயிருக்கும். இப்ப நான் இந்தப் படத்தில் போட்டிருக்கிற உழைப்பு, விஜய் சாரின் அக்கறை, எங்கள் டீமின் ஈடுபாடு, கடின உழைப்பு எல்லாம் படம் ரிலீஸான பிறகு எல்லோருக்கும் புரியும்னு நம்புகிறேன்.

- நா.கதிர்வேலன்