பழம்பொருட்களுக்கு புதுவடிவம் கொடுக்கும் தயாரிப்பாளர்!



கலெக்டர்ஸ்

‘தேனாண்டாள்  ஃபிலிம்ஸ்’ நிறுவனர் இயக்குநர் இராம நாராயணனின் மருமகள்... தயாரிப்பாளர் முரளி ராமசாமியின் மனைவி... ‘கமலா’ தியேட்டர் நிறுவனர் வி.என்.சிதம்பரம் அவர்களின் பேத்தி... ‘மெர்சல்’ உட்பட பல வெற்றிகரமான படங்களின் தயாரிப்பாளர்... என்றெல்லாம் ஹேமா ருக்மணி குறித்து அடுக்கலாம். இதனுடன் கூடவே இன்னொரு வைரத்தையும் இவரது மகுடத்தில் பொருத்த வேண்டும்! அதுதான் பழங்காலப் பொருட்கள் சேகரிப்பு!  

‘‘நாங்க செட்டிநாட்டு குடும்பம். மதுரைல அம்மா வீடு ரொம்பவே பழமையான பெரிய வீடு. கிட்டத்தட்ட 100 அறைகள் இருக்கும்! அழகழகான ஓவியங்கள், டைல்ஸ்னு வீடு அலங்கரிக்கப்பட்டிருக்கும். எல்லா ஓவியங்களுமே இயற்கை சாயங்களால வரையப்பட்டவை. அப்ப நான் சின்னப் பொண்ணு. அங்கங்க வீட்ல டைல்ஸ் பொறிக்கப்பட்டிருக்கும். இதை பிரனேக்கன் டைல்ஸ்னு சொல்வாங்க. ரோஜா, மயில் பெயின்டிங்ஸ் செய்திருப்பாங்க. அந்த வேலைப்பாடு ரொம்ப பிடிக்கும். மணிக்கணக்குல பார்த்துகிட்டே இருப்பேன்.

கல்யாணமான பிறகு சென்னை வந்தேன். மாமனார் வீடும் பழமையானதுதான். அந்த பழமை மாறாம பாதுகாத்துட்டு வர்றாங்க; வர்றோம். திருமணமானதும் நானும் அவரும் தனியா வசிச்சோம். மாமியார் காலமாகி மாமனார் உடல்நலம் பாதிக்கப்பட இங்க வந்தோம்...’’ என சுருக்கமாக தன் ஃப்ளாஷ்பேக்கை சொல்லும் ஹேமா, அடுக்குமாடிக் குடியிருப்பிலும் சின்னச் சின்னதாக ஏராளமான பழம்பொருட்களைச் சேகரித்திருக்கிறார்.

‘‘ஃப்ளாட்ஸ் எப்படியிருக்கும்னு எல்லாருக்கும் தெரியும். இருக்கிற இடத்துலதான் பொருட்களை நாம அலங்கரிக்க முடியும். அதனாலயே சின்னச் சின்ன பொருட்களா வாங்குவேன். அப்படி வாங்கின முதல் பொருள் பிரனேக்கன் டைல்! ஒரு பழைய சாமான் கடைக்குப் போனப்ப அந்த டைல் கண்ல பட்டது. ரோஸ்வுட் ஃபிரேம் போடப்பட்டிருந்த அந்த டைலோட விலை ரூ.80. உடனே வாங்கினேன்.

இதுல ஆரம்பிச்சதுதான் இந்த பழம் பொருள் சேகரிப்புப் பயணம்! அப்புறம் எங்க ஷூட்டிங் போனாலும் அங்க இருக்கிற பழைய பொருட்கள் கடைக்கு போவேன். பிடிச்சதை வாங்குவேன். மாமனார் வீடு பழமையானது. அதை இடிச்சுட்டு கட்ட விருப்பமில்ல. வேறென்ன செய்யலாம்னு யோசிச்சேன்.
‘என்ன வேணா செய். ஆனா, இந்த மாடிப்படி அப்பா பயன்படுத்தினது. அதை மட்டும் மாத்த வேண்டாம்’னு கணவர் சொன்னார். அதுபோக இந்த வீட்ல மறக்க முடியாத பல நினைவுகள் ஒவ்வொரு பகுதிலயும் இருக்கு.

ஸோ, சின்னச் சின்ன மாற்றங்கள் செஞ்சேன். அப்பதான் மாமனாரும் பழம்பொருட்கள் சேகரிப்பவர்னு தெரிஞ்சுது! கல்யாணமாகி இங்க வந்தப்ப அவரோட சேகரிப்புகள் கண்ல படலை. வீட்டை மாத்தி அமைக்கிறப்பதான் அதைப் பார்த்தேன். பிரமிச்சேன்! ஒரு பொக்கிஷ அறைக்குள்ள நுழையற உணர்வை மாமனார் ரூம்ல நுழையறப்ப அனுபவிச்சேன். வித்தியாசமான பொம்மைகள், பெயின்டிங்ஸை எல்லாம் பேப்பர்ல சுருட்டி வைச்சிருந்தார். அதைப் பிரிச்சுப் பார்த்து கண்டுபிடிச்சதுதான் செஸ்போர்ட் காய்ன்ஸ்!

முதல்ல இந்த ரோமானிய சிப்பாய் பொம்மை என்னனு தெரியல. என் பொண்ணுதான் பார்த்துட்டு ‘ஹை... செஸ் காயின்ஸ்’னு சொன்னா! உடனே அதுக்கு ஏத்த மர செஸ் போர்டை வாங்கி வரவேற்பறைல வைச்சேன். பழசை அப்படியே பயன்படுத்தறது ஒரு ரகம்னா அதை மாத்தி அமைப்பது இன்னொரு ரகம். நான் ரெண்டாவது!’’ என்று சிரிக்கும் ஹேமா, பூக்கூடையை இந்தோனேஷிய பிரம்மா சிலையின் மாடமாக மாற்றி அமைத்துள்ளார். ‘‘இந்த வீட்ல இருக்கிற பெரும்பாலான பொருட்களோட வயசு குறைஞ்சது 100. ஏன்... அதுக்கு மேலயும் இருக்கும். சரபோஜி மகாராஜா பெயின்டிங்கும் மாமாவோட பொக்கிஷ அறைல கண்டெடுத்ததுதான். தஞ்சாவூர் கலைனு இப்ப நாம சொல்றோமே... அதை அறிமுகப்படுத்தினது சரபோஜி மகாராஜாதான்.

அழகான ஃப்ரேம் போட்டு அவரை மாட்டினேன்! கீழ இருக்கிற விஷ்ணு தலை, பாண்டிச்சேரி பழைய கடைல வாங்கினது. காரைக்குடில ஒரு வீட்ல பயன்படுத்தாத பொருட்களை வித்தாங்க. அதுல கிடைச்சதுதான் 24 தஞ்சாவூர் பெயின்டிங்ஸ். கண்ணாடில நேரடியா வரைஞ்சது. ரொம்ப கஷ்டமான வேலை. இப்ப எங்க டைனிங், வரவேற்பறைகளை இது அலங்கரிக்குது...’’ என்றவருக்கு ஷாப்பிங்கில் ஆர்வமில்லை. இருப்பதை அழகுபடுத்தி வைக்கவே கிடைக்கும் நேரங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

‘‘வேடிக்கையா இருக்கு. பழைய சாமான் கடைகளுக்கு போறேன். மத்தவங்க விற்கிற பொருட்களைத் தேடிப் பார்த்து வாங்கறேன். ஆனா, வீட்டை மாத்தி அமைக்கிறப்ப இங்க இருந்த பழங்காலப் பொருட்களை விற்க மனசு வரலை! எல்லாத்தையும் எப்படி மாத்தி அமைக்கலாம்னு மண்டையைக் குடைஞ்சேன். அப்ப முழு ஆதரவு கொடுத்தவர் எங்க ஆர்க்கிடெக்ட் ஷண்முகராஜன்.

வீட்ல இருந்த ஜன்னல் சட்டத்தை அழகான கலைப்பொருளா மாத்திக் கொடுத்தார். மாடிப்படிகள்ல இருந்த சட்டம்தான் அது. குதிரை பொம்மை, மணியை அதுல மாட்டினேன். டைனிங் அறைல இருந்த சட்டத்துல கண்ணாடியை மாட்டினேன். பொதுவா கண்ணாடிகள் வீட்டை பெருசா காண்பிக்கும். மாடிப்படில இருக்கிற மிகப்பெரிய கண்ணாடி கூட வீட்ல கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷம்தான். எடுக்கிறப்ப பாதி உடைஞ்சுடுச்சு. அந்த இடத்தை அதே மாதிரி செஞ்சு இப்ப மாட்டியிருக்கோம்.

டைனிங் அறைல ரெண்டு குதிரைகள் உண்டு. அதுல ஒண்ணோட கால் உடைஞ்சுடுச்சு. அதனால மத்ததோட வாலை நீக்கி இரண்டையும் இணைச்சுட்டேன்! கூடவே வீட்ல இருந்த தஞ்சாவூர் தட்டை ஒரு சட்டத்துல வைச்சு குதிரையை இன்னும் அழகாக்கினேன். இப்படி பார்த்துப் பார்த்து அலங்கரிக்கத்தான் நேரம் சரியா இருக்கு...’’ என்று சொல்லும் ஹேமா, தாய்வீட்டு சீதனமாக நிறைய பழம்பொருட்களைக் கொண்டு வந்திருக்கிறார். ‘‘எங்க குடும்பத்துல சீதனமா வெள்ளி, பித்தளை, மரச்சாமான்கள் அவரவர் வசதிக்குத் தகுந்த மாதிரி கொடுப்பாங்க. ஆக, மாமனார் சேகரிச்ச பொக்கிஷங்களும் நான் கொண்டு வந்ததுமா இப்ப எங்க வீட்டை அலங்கரிக்குது!

அதுல முக்கியமானதுனு சொன்னா எங்கம்மா விளையாடின சொப்பு சாமான்! அவங்களுக்குப் பிறகு நான் விளையாடினேன்! அதை இப்ப ஷோ பீஸா மாத்தி இருக்கேன். நான் நடந்த நடை வண்டியும் இருக்கு. எங்க வீட்ல கணக்கு எழுத ஒரு மேஜை உண்டு. அதை இப்ப என் மானேஜர் பயன்படுத்தறார். பரண்ல அரிசி அளக்கற படிகள்ல செடிகளை வளர்க்கறேன். அவ்வளவு ஏன், பால்காரர் பாலை அளக்கறது கூட பூந்தொட்டியா மாறிடுச்சு!

நான் வாசிச்ச வீணை, என் பாட்டி படிச்ச மேஜை, எஸ்.வி.சேகர் சார் பரிசளிச்ச சுக்ரீவன் பொம்மை, யார் காசி போனாலும் மறக்காம வாங்கி வர்ற அன்னபூரணி சிலைகள், கை அமைப்புல இருக்கிற நோட்பேட் ஹோல்டர், பழங்கால போன், ஸ்பாட் லைட், அந்தக்கால குண்டு பல்புகள்... இப்படி சொல்லிட்டே போகலாம். மாமாவின் அறையை அலங்கரிச்ச ஆஷ்ட்ரே கூட இப்ப கேண்டில் ஸ்டாண்டா மாறிடுச்சுனா பாருங்க!’’விழிகள் விரிய பட்டியலிடும் ஹேமாவின் வீட்டு வாசலில் உள்ள மகாராஜா பிள்ளையாருக்கு பின்னால் கூட ஒரு கதை இருக்கிறது.  

‘‘இவர் எங்க மாமாவின் (மாமனாரின்) ஆபீஸ் அறைல இருந்தார். உடனே ஒரு மாடம் வாங்கி வாசல்ல பிள்ளையாரை வைச்சுட்டேன். இதே மாதிரி வாசல் கதவுக்கும் ஒரு சிறப்பு இருக்கு. இந்தக் கதவு இரண்டா இருந்தது. அதை ஒட்டி ஒரே கதவா அமைச்சேன். இதுக்கும் ஆர்க்கிடெக்டுக்குதான் நன்றி சொல்லணும். ராமாயணக் கதை சொல்லும் பெட்டியை அத்தை (மாமியார்) செய்யச் சொல்லி வைச்சிருந்தாங்க. அதுல நான்கு பக்கமும் ராமாயணக் கதை இருக்கும். லெதர்ல இயற்கை சாயத்தால சித்தரிக்கப்பட்டது. லைட் போட்டு அலங்கரிச்சது மட்டுமே என் வேலை.

இந்த வீட்டுல இருக்கிற ஒவ்வொரு தளமும் வித்தியாசமானது. தரைத்தளம் பழமையைச் சித்தரிக்கும். முதல் தளம் எங்க தனிப்பட்ட இடம். எனக்கு புத்தா பிடிக்கும். அதனால புத்தர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறைய இருக்கும். பாட்டி பயன்படுத்தின மரபீரோல என் புடவைகளை வைச்சிருக்கேன். தாத்தா பயன்படுத்தின சாயற நாற்காலில உட்கார்ந்தா இதமா இருக்கும்.

ரத்தினக் கம்பளத்துக்கு வயசு 100. கைலயே பின்னினது. இதுல இருக்கிற நிறங்கள் எல்லாமே ரத்தினங்களைக் குறிக்குது. அதனாலதான் ரத்தினக் கம்பளம்னு சொல்றாங்க. அம்மா வீட்ல சுருட்டி வைச்சிருந்ததை வரவேற்பறைல விரிச்சு வைச்சிருக்கேன்!’’ என்ற ஹேமா, அவரவர் வீட்டு அமைப்பைப் பொறுத்துதான் பொருட்களை வாங்க வேண்டும் என்கிறார்.‘‘என் வீடும் பழமையானது. நானும் பழமை விரும்பி.

அதனால வீட்டையும் பழமையா மாத்தி இருக்கேன். இங்க இருக்கறது எல்லாமே பித்தளை சாமான்கள்தான். அப்படியே வைச்சா கருத்துடும். இதுக்குனு இருக்கற பாலீஷை வாங்கித் தேய்ச்சா நாலு வருஷம் வரைக்கும் டாலடிக்கும். கடைசியா ஒண்ணு. வீட்டை அலங்கரிப்பது தனிக்கலை. ஈடுபாட்டோடு செஞ்சா சின்ன இடமா இருந்தாலும் அது சொர்க்கமா தெரியும்; மாறிடும்!’’ என்கிறார் ஹேமா ருக்மணி. 


- ப்ரியா
ஆ.வின்சென்ட் பால்