திருடனை விரட்டி பிடித்த 16 வயது சிறுவன்



யெஸ். தலைப்பில் இருப்பதுதான் இன்று டாக் ஆஃப் த டவுன்!

அண்ணாநகர் சிந்தாமணி பகுதியில் க்ளினிக் நடத்தி வருகிறார் டாக்டர் அமுதா. திடீரென்று உள்ளே நுழைந்த ஒருவர், தன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், உடனே அவருக்கு சிகிச்சை வழங்க வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறார். உடனே அவரது மனைவியை அழைத்து வரும்படி பணித்திருக்கிறார் டாக்டர். சென்ற ஆசாமி சில நிமிடங்களில் திரும்பி வந்து டாக்டரிடம் இருந்த 8 சவரன் நகையை கத்தி முனையில் பறித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார்.

பதறிய டாக்டர் கத்திக் கூப்பாடு போட... சாலையில் சென்றவர்கள் திகைத்து நிற்க... ஏசி மெக்கானிக் பணியை முடித்துவிட்டு அந்த வழியே வந்த சூர்யா மட்டும் துணிந்து திருடனை விரட்டிப் பிடித்திருக்கிறார். இந்த துணிச்சலான செயல் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனைக் கவர்ந்தது. உடனே வாகனத்தை அனுப்பி சூர்யாவை வரவழைத்துப் பாராட்டினார். அத்துடன் மீடியாக்களிடமும் அவரை அறிமுகப்படுத்தி ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தார்.

இப்போது அண்ணாநகர் ஏ4 காவல் நிலையம் சூர்யாவை தத்து எடுத்துள்ளது. தலை தட்டும் கூரைக் கொட்டகையில் பாட்டியுடன் வசித்து வரும் சூர்யாவின் முகத்திலிருந்து இன்னமும் மழலை விலகவில்லை. ‘‘‘திருடன் திருடன்’னு டாக்டர் கத்தினதுமே அவனைத் துரத்த ஆரம்பிச்சேன். கருங்கல்லை எடுத்து அவன் பின்னங்காலுல குறி பார்த்து வீசினேன். இடறி விழுந்தான். அந்த இடத்துல செங்கல் இருந்துச்சு. அதை எடுத்து வீசினான்.  விலகி தப்பிச்சு அவன் மேல பாஞ்சேன். முகத்துல ஓங்கிக் குத்தினேன். ரத்தம் கொட்டிச்சு. ஜனங்க வேடிக்கைதான் பார்த்தாங்க. உதவிக்கு யாரும் வரலை. குண்டா வேற இருந்தான். அப்பவும் ‘நகையைத் திருடிட்டு வந்திருக்கான்’னு கூச்சல் போட்டேன். அப்படியும் யாரும் பக்கத்துல வரலை. செல்லுல போட்டோதான் எடுத்தாங்க. ஒருவழியா திருடன் மயக்கமானான்.

அதுக்குள்ள அண்ணா நகர் குற்றப்பிரிவு காவலர்கள் வந்துட்டாங்க...’’ தனியாளாகப் போராடி திருடனைப் பிடித்த சூர்யாவைத் தன் செலவில் படிக்க வைக்க காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விரும்புகிறார்.  ‘‘படிக்க இஷ்டமில்லை சார். வேலை செஞ்சு பெரிய ஆளா வருவேன். ஏசி மெக்கானிக் கடை வைச்சுத்தாங்கனு சொல்லியிருக்கேன்...’’ சிரிக்கிறார் சூர்யா.  

‘‘9வதுக்கு மேல இவன் படிக்கலை. சின்ன வயசுதான். படிச்சா நல்லா வருவான். மாட்டேன்னு அடம் பிடிக்கறான். போலீஸ்காரங்க படிக்க வைக்கறேன்னு சொல்றாங்க. கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கய்யா...’’ பேரன் மீதான அக்கறை பாட்டி முனியம்மாவின் குரலில் வழிகிறது.  
இதற்கு தீர்வு காண முன்வந்திருக்கிறார் டாக்டர் அமுதா. ‘‘படிப்பு மேல சூர்யாவுக்கு பயம் இருக்கு. கவுன்சிலிங் வழியா அதை சரிப்படுத்திடலாம்...’’ என உறுதி அளிக்கிறார். காவல்துறையும் ஏசி மெக்கானிக்காக சூர்யாவை மாற்றாமல் படிக்க வைத்து ஏ.சி ஆக்கவே விரும்புகிறது. நல்லதே நடக்கும் என நம்புவோம்.                  

- திலீபன் புகழ்
படங்கள் : சதீஷ்