சினிமாக்காரங்க இனி 100 வருஷங்களுக்கு அரசியல் பக்கமே தலை காட்டக்கூடாது..!ஜி.நாகராஜன் முதல் அரசியல் வரை மனம் திறக்கிறார் பி.சி.ஸ்ரீராம்

கற்பகம் அவென்யூ நீண்டு விரிந்திருந்தது. சீராக, துப்புரவாக, அப்பொழுதுதான் யாரோ பெருக்கி விட்டுப் போயிருந்த மாதிரியான சாலை. பி.சி.ஸ்ரீராமின் அலுவலகத்துக்குள் நுழைந்தால் அவர் செய்த படங்கள் அழகிய வரிசையில் கண்களைத் திருடிக் கொள்கின்றன. ‘‘கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் கட்டாய ஓய்வு மாதிரி ரெஸ்ட். கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு வீட்டில் சில வேலைகள் பார்த்தேன். அவங்களுக்கும் வீட்டுத் தலைவனாக அக்கறையாக கொஞ்ச காலமாவது இருக்கணும் இல்லையா. அதுதான்.

கூடவே இந்த ஜி.நாகராஜனின் முழுத் தொகுப்பு. கேள்விப்பட்டும் இவரை தவற விட்டிருக்கேன். எப்படின்னே தெரியலை. வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களும் ஆதி அந்தமா அவருக்குத் தெரியுது. உள்ளே புகுந்து புகுந்து குடைஞ்சு பார்க்கிறார். இந்த நடையும், நமக்கு உள்ளுக்குள் நடக்கிற மன சுத்திகரிப்பும் ஆச்சரியமா இருக்கு. எழுதியெழுதி திறமை, நுட்பம் எல்லாம் கைவந்துட்டு உதறிட்டு அவர் வேற இடத்திற்குப் போனதுதான் ஆச்சரியம். அவரை கொண்டாடியிருக்கணும். இந்த ஓய்வு எனக்கு காட்டியது ஜி.நாகராஜனைத்தான்...’’ என்கிறார் அகல விழி காட்டி பி.சி.‘பேட் மேன்’, ‘ப்ரானா’னு இப்ப மட்டுமல்ல, எப்பவும் உயிரோட்டமான படங்கள் உங்ககிட்ட இருக்கு...

ஒளிக்கு ஏது மொழி! எனக்கு எல்லாமே ஒண்ணுதான். மனசுக்குப் பிடிச்சிருந்தா எந்தப் பக்கமும் போய் வேலை பார்ப்பேன். கோவையில் இருக்கிற ஒரு தொழிலதிபர். அவர் பெண்கள் படும் பாடு குறித்து சிந்தித்துப் பார்த்து செய்த நாப்கின்கள், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள்னு... எனக்கு ரொம்ப பிடிச்ச மனிதர் சம்பந்தப்பட்ட கதை. இதைச் செய்யக்கூட அக்‌ஷய்குமார்தான் இங்கே வர வேண்டியிருக்கு.

அவர் என் நட்பு வட்டத்தில் இருக்கிறவர். ‘இந்தப் படத்தை நீங்க பண்ணித் தந்தால் சந்தோஷப்படுவேன்...’னு ஸ்கிரிப்ட் கொடுத்தார். ஆர்ப்பாட்டம் அமர்க்களம் இல்லாத உணர்வுபூர்வமான ஸ்கிரிப்ட். ரொம்ப நாளைக்கப்புறம் மனசுக்குப் பிடிச்ச மனுஷனைப் பார்த்தால் காரணமில்லாம அழுகை வர்ற மாதிரி, அர்த்தபூர்வமான இடங்களும், என்னோட கேமராவும் அபூர்வமா சந்திச்சுக்கிட்ட இடங்கள் நிறைய. அது ஒரு பரவசம்.

ம்ம்ம்... உலகம், சினிமா எல்லாம் எவ்வளவோ மாறிப் போச்சு... ஆசை, மனசு அதேதானே! இப்ப ‘ப்ரானா’னு ஒரு படம். நித்யா மேனன் ஒரே ஒரு கேரக்டராக படம் முழுக்க தனிச்சு நடிக்கிறாங்க. பெண்களுக்கான பாதுகாப்பு, அவங்க நிலைன்னு அடுத்தடுத்து போகுது படம். 90% வரைக்கும் ஒரே லொக்கேஷன். ரசூல் பூக்குட்டிதான் எனக்கு இந்த ஸ்கிரிப்டை அறிமுகப்படுத்தினார். எனக்கு யாரும் போகாத ஊருக்குப் போகப் பிடிக்கும்.

நீங்க எப்பவும் குழந்தைகளுக்கான சினிமாவில் ஆர்வம் காட்டுவீங்க...
அட, அப்படி ஒண்ணு நடக்கிற மாதிரியே இருந்தது. ‘பசங்க’ படத்திற்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் ஒரு படம் செய்ய நினைச்சு என்கிட்டே வந்தார். இரண்டு கதைகள் சொன்னதில் ஆழமும், அர்த்தமும், குழந்தைகளுக்கான இடமும் இருந்தது. பள்ளிக்கூடத்து வாத்தியார்கள் கதைகூட அவர் சொன்னதில் இருந்தது. அதை அவர் பிறகாவது எடுத்துச் செய்யணும். இந்த மாதிரி விஷயங்கள் வர்றதுக்குப் பல சந்தர்ப்பங்கள் கூடி வரணும். அதுக்கு காத்திருக்கணும். அந்த நேரம் அழகானது.

தமிழ் சினிமா எப்படியிருக்கு..?
நல்லா இருக்கு. அதுக்காக இவ்வளவு படங்கள் வரணுமா..? எல்லோருக்கும் சினிமாவில் ஆர்வமும், நல்ல ரசனையும் வந்துருச்சுன்னு சொல்ல முடியுமா? ‘ரெண்டு படம் இதுவரைக்கும் செய்திருக்கேன் சார்...’னு சொல்லிட்டு ஒருத்தர் வந்தார். எனக்கே அந்தப் படங்களைப் பார்த்த மாதிரி, கேள்விப்பட்டது மாதிரியே தெரியலை. ஒரு டைப்பில் படங்கள் வந்தால், எல்லோரும் அதையே விதவிதமா அடிச்சுத் துவைக்கிறாங்க. நல்ல படம், கெட்ட படம்னு சொல்ல வரலை... போன வருஷம் மட்டும் 300 படங்கள் வந்திருக்கு. அதற்கான உழைப்பு, நஷ்டம், பிரச்னைகள்னு எண்ணிப் பாருங்க புரியும்.

எங்கே பார்த்தாலும் பி.சி. ஸ்கூல்தான்...
அவங்களை நான் அஸிஸ்டெண்ட்னு கூட சொல்ல மாட்டேன். என் கூட பயணிக்கிறவங்க. அவங்க கையைப் பிடிச்சிட்டு திரிகிறதில்லை. அவங்க அப்படி நினைச்சிக்கிறாங்க. அவங்கவங்க புத்தி கொள்முதல்தான் எல்லாமே. நானே கத்துக்கிட்டு இருக்கிறதுதான் உண்மை. டிஜிட்டல் டெக்னாலஜியில் இதுதான் சத்தியமான உண்மை. தினம் புதுசு புதுசா கத்துக்க வேண்டியிருக்கு. முன்னாடி கேமராவில் இவ்வளவுதான்னு இருக்கும். ஆசுவாசப்படுத்திக்கலாம். இப்ப பாருங்க, காஷ்மீரிலிருந்து ஒருத்தர் என் குழுவில் இணைஞ்சிருக்கார். அவர் என்னைத் தேடிக்கிட்டு வந்திருக்கார். கூட இருந்து பாத்துக்கன்னு சொல்லியிருக்கேன். இப்ப பாருங்க நானே அவங்களோட போட்டியில்தானே இருக்கேன்.

உங்க உதவியாளர் செழியன் இயக்குநராக தேசிய விருது வாங்கியிருக்கார்...
நல்லது. செழியன்கிட்டே ஒரு தனித்தன்மை எப்பவும் இருக்கும். சினிமாவை எப்படிப் பண்ணணும்னு படிச்சும் பழகியும் தெரிஞ்சிருக்கார். அதோடு ஒளிப்பதிவு + இலக்கியம் தெரிஞ்சவர். அவர்கிட்டே எப்போதும் ஒருவித நுணுக்கமும், ஆழமும் இருக்கும். அவர் எப்போதும் உண்மைத்தன்மைக்கு பக்கத்தில் இருப்பார். எதிலும் காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டார். அது ஓர் அலாதியான குணம்.

இங்கே எல்லா விஷயங்களிலும் மனித உணர்வுக்கான மரியாதை குறைய ஆரம்பிச்சிருக்கு...
ஒரு மனுஷனா, ஒரு கலைஞனா என் ஏக்கம் என்னன்னா, எப்பவும் மனுஷத்தன்மை போயிடக்கூடாது; ரசனை கெட்டுடக் கூடாது. இப்ப பாருங்க, ஆஷிபாவுக்கு நடந்தது... மனசே வெறுத்துப் போயி துண்டு துண்டா ஆகிப்போச்சு. திம்முனு ஒரு சோகம் வந்து ஒட்டிக்குது. யாரையும் நம்ப முடியலை. நம்பிக்கை இல்லாம யாரையும் சந்தேகிக்கறது எவ்வளவு கொடுமை. செல்போனை பார்த்துக்கிட்டு முகம் பார்த்து பேச மறந்திட்டோம். போனுக்குள்ளே பலப் பல விஷயங்கள் விஷம் மாதிரி மேல மேல ஏறிட்டே இருக்கு. நமக்குள்ளே புகுந்துகிட்டே இருக்கு.

இந்தத் தலைமுறை அழிந்துவிட்டதோன்னு பயம் வருது. அழிஞ்சிடக்கூடாதுனு மனசு வேண்டுது. உட்கார்ந்த இடத்துல கல்வி, இலக்கியம், விளையாட்டுனு அத்தனையையும் விஞ்ஞானம் கொண்டு வர்றது இன்றைய இளைய தலைமுறைக்கு வரம். ஆனால், அதை இளைய தலைமுறை பயன்படுத்திக் கொள்கிறதா? இது வரமா? சாபமா? தெரியலை. இதையெல்லாம் நினைச்சு கையாலகாத இயலாமையில், தனிமையில் இருக்கேன். இது இம்சை, ரணம்... காயம் பட்டால் பொறுக்கலாம். இது காயமா?

கமல், ரஜினினு அரசியலுக்கு வந்துட்டாங்க...
என்னைப் பொறுத்தவரை சினிமாக்காரங்க 100 வருஷங்களுக்கு அரசியல் பக்கமே தலை காட்டக்கூடாது; வரக்கூடாது. இத்தனை நாள் இருந்து படுத்தியது போதும். பண்ணினதும் போதும். அரசைக் கையாள நல்ல மனசுள்ளவங்க, புரிஞ்சவங்க, அருமை தெரிஞ்சவங்க வந்தால் போதும். கொஞ்ச காலம் மக்கள் தெளிவு மங்கிப்போய்த்தான் இருந்தாங்க. இனி மக்களுக்கு தெளிவு வந்திடும். சினிமாக்காரங்க அவங்க வேலையை பார்த்திட்டு போகட்டும். இதுவரை மக்களை அவங்க வைச்சு செஞ்சது போதும். ஆமாம், சினிமாக்காரங்க இனி மேலும் அரசியலுக்கு வரக்கூடாது. அதுதான் நல்லது.

- நா.கதிர்வேலன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்