திரேசம்மா - தார்சி எஸ்.பெர்னாண்டோ



“ஏல சம்முகம். அந்த சுப்பி அரைக்கிற பயல ஒடனே வரச் சொல்லுல. பின்பக்க சுவருக்கெல்லாம் வெள்ள அடிக்கணும்!” பெரியம்மா லுயிசாவின் ஆணைக்குரல் உரத்து ஒலிக்கிறது. “ஆத்தா ஒடனே வரச்சொல்றேன்...” என்று பவ்வியமாக பதிலளித்துவிட்டு இடுப்பில் துண்டை மேலும் இறுக்கிக் கட்டிக்கொண்டு ஓடுகிறான் சலவைத் தொழிலாளியின் மகன் சம்முகம்! மண்வாசம் கிராமம் அந்த தென்பகுதியில் மிகவும் பிரசித்தம். பலரும் அயல்நாட்டில் பணியில் இருந்து சம்பாதித்து அனுப்பும் பணத்தால் அங்கிருந்த பல குடும்பங்களுமே லட்சாதிபதி குடும்பங்கள்தான்.

சுற்றிலும் கிறித்தவர்களைக் கொண்டிருந்த அந்தக் கிராமத்தில் அமைந்திருந்த மாபெரும் கோயில்களே அவ்வூர் மக்களின் செல்வச்செழிப்புக்கு மட்டு மின்றி, மனத்தாராளம் மற்றும் கலையுணர்வுக்கும் சாட்சி கூறுபவையாக இருந்தன. என்றாலும் இவ்வனைத்தையும் குலைக்கும் வகையில் சாதி வெறியும், தீண்டாமையும் அந்த கிராம மக்கள் அனைவரது மனதிலும் நிறைந்திருந்தது மட்டுமே பெருங்குறையாகப் போனது.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஊருக்குள் நுழைகையில், தங்கள் செருப்புகளை தேரியில் புதைத்து விட்டு துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டுதான் வரவேண்டும் என்பது ஊர்க்கட்டு. வேலைக்காக வீட்டுக்குள் வருபவர்களுக்காக திட்டி வாசலும், அவர்கள் உணவு அருந்த ‘பெரை’ எனப்படும் இடமும் எல்லா வீடுகளிலும் இருக்கும். அவர்களுக்கு வயிறார உணவு அளிக்கப்பட்ட போதிலும் அவர்கள் விளிக்கப்படும் விதமும், நடத்தப்படும் வகையும் வேதனைக்குரியது.

ஊர்க்கட்டை யாரும் மீறக்கூடாது. குழந்தைகள் கூட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தாரிடம் குறித்த முறையில்தான் பழக வேண்டும், பேச வேண்டும். பெரியாத்தா லூயிசாவின் ­மகள்தான் தெரசம்மா. 40 வயதான இவர் 5 குழந்தைகளின் தாய். தன் தாய் வீட்டுக்கு எதிரிலேயே இவருடைய வீடு. கணவர் இலங்கையில் பெரும் வியாபாரி என்பதால் செல்வத்துக்கு குறைவில்லை. ஊரே சாதி வெறியில் ஊறிப்போயிருந்த போதும், இறை வழியில் ஏனைய மக்களையும் பணிவுடனும், மனித நேயத்துடனும் நடத்த வேண்டும் என்னும் அரிய பண்பைப் பெற்றிருந்த பெருமனத்துக்காரர் இவர்.

என்றபோதிலும், ஊர் சட்டங்களும், தன் தாய் முதல் ஏனைய சுற்றங்களின் கண்டிப்பும்  இவரை பல விதத்தில் கட்டுப்படுத்தின. அப்படியிருந்தும் தன் வீட்டுக்கு வரும் பிற சமுதாய மக்களை மனிதர்களாக நடத்தி, அவர்களின் சுக, துக்கங்களில் பிறர் அறியாமல் தன் பங்களிப்பை ஆற்றி வந்தவர். அதனாலேயே திரேசம்மா என்னும் பெயர் அந்த சுற்றுப்பட்டு கிராமங்கள் அனைத்திலும் பிரசித்தம். அத்தகைய சமுதாய மக்களின் தேவையறிந்து, பிறர் அறியா வகையில் எல்லா உதவிகளையும் வழங்கி ஒரு பெரும் பாதுகாவலராக அவர்களுக்கு வாழ்ந்து வந்தவர்.

படியேறி வந்து விட்ட யாரும் பசியோடு திரும்பக் கூடாது என்பது திரேசம்மாவின் தாரக மந்திரம். ஏனையோர் போலன்றி அம்மக்களுக்கு தானே பரிமாறுவதும், அவர்கள் வழியாக உதவி தேடும் ஏனையோருக்கும் தேவையான பணவசதியைரகசியமாக செய்து கொடுப்பதும் இவருக்கு வாடிக்கை. பல சமயங்களில் இவருடைய இந்த ஊர்க்கட்டு மீறிய செயல்கள் பற்றிய சலசலப்புகள் எழுந்திருக்கின்றன. என்றாலும் தன் செயல்களிலிருந்து இவர் பின்வாங்கியதில்லை.

தாய்க்கும் மகளுக்கும் இது பற்றி பலத்த கருத்து வேறுபாடுகள். “அவர்களும் நம்மைப்போல் மனிதர்கள்தானே? அவர்களை ஏன் நாம் பாகுபடுத்திப் பார்க்கவேண்டும்? நாம் செய்யும் உதவியை முக மலர்ச்சியுடன் செய்தால் என்ன குறை வந்துவிடும்?”திரேசம்மாவின் வாதங்கள், சாதி வெறியில் ஊறிப்போயிருந்த ஊர்க்காரர்களின் செவியில் ஏறாமல் போனது வேதனையே! அந்த மக்களும் கல்வியறிவு பெற வேண்டும் என்பதற்காக அவர்களது குழந்தைகளின் படிப்புச் செலவை திரேசம்மா ஏற்றிருக்கிறார்.

பக்கத்து ஊரான குலசைபுரத்திலிருந்து எண்ணெய், தேங்காய் புண்ணாக்கு கொண்டு வரும் பெண்ணானாலும், துணி வெளுத்து எடுத்து வரும் சம்முகம் என்றாலும், அனைவரும் தங்கள் குறைகள், துயரங்களைக் கொட்டித் தீர்த்து, நல்ல பயன் பெற்றுச் செல்லும் திருத்தலமாகவே திரேசம்மாவின் வீடு அமைந்திருந்தது. அது சரியான கோடை காலம். மதிய வெயில் மண்டையைப் பிளக்கின்ற வேளையில் “வடை, மெது வடை, ஆமை வடை...”  என்று சிற்றுண்டி விற்றுக்கொண்டு வரும் பாலகன் ஒருவனின் குரல் கேட்கிறது. ஏழையான அவளின் தூரத்து உறவினர் ஒருவரின் குழந்தை அது.

தன் மகன் ஜானை அழைத்தாள் திரேசம்மா. “அந்த வடை விற்கிற தம்பியை கூப்பிடுப்பா... பாவம் புள்ள வெயில்ல வாடி வருது!”தலையில் வடை பாத்திரத்துடன் வரும் அக்குழந்தையை அன்புடன் அணைத்து அமர வைத்து, உண்ண வேறு பலகாரம் தந்து பின்னர் அந்த வடைகள் அனைத்தையுமே வாங்கிக் கொண்டாள். “வெயிலில அலையாதப்பா. பணத்தை அம்மாவிடம் பத்திரமாகக் கொடுத்து விடு!” எதிர் வீட்டில் வசிக்கிறார் பெரியப்பா. பெரியம்மா இறந்த பிறகு அவருடைய கால்கள் இரண்டிலும் இருக்கின்ற நீர்வடியும் கரப்பான் புண்களைக் கழுவித்  துடைத்து மருந்திட்டு கட்டிவிடும் சேவையும் திரேசம்மாவின் தினப்படி செயல்களில் ஒன்றாகிப் போனது.

அப்படிப்பட்ட திரேசம்மா கடந்த ஒரு வாரமாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கிறார். வைத்தியர் நாடி பிடித்துப் பார்த்து இதயக்கோளாறு என கை விரித்து விட்ட நிலையில் அவர் நிலைமை கவலைக்கிடமானது. அவர் படுக்கையில் விழுந்ததிலிருந்து வேலை வெட்டிக்குப் போகாமல் அந்த சமுதாய மக்கள் கூட்டம் கூட்டமாக தேரியிலேயே துயரத்துடன் நிறைந்திருந்தார்கள்.

“திரேசம்மா... என்னப் பெத்த தாயே! போயிட்டியேம்மா... இனி எங்களுக்கு யாரும்மா அடைக்கலம்...” சலவையாளர் மகன் சம்முகம் துயரத்துடன் அலறிக் கொண்டே ஓடி வரும் சப்தம் கேட்டு ஊராரும், தேரியில் காத்திருந்த மக்களும் பரபரப்புடன் அவர் வீட்டின் முன் கூடிவிட்டார்கள். கூட்ட நெரிசலில் ஊர்க்கட்டுப்பாடுகள் சற்றே தளர்ந்துபோனது. தங்களை இதுவரை தாயாய் இருந்து போற்றி வளர்த்து இன்று தெய்வமாகி விட்ட திரேசம்மாவின் உடலை கண்ணீர் மல்க பார்த்து விட்டு விலக முடியாமல் அங்கேயே நின்றனர்.

திரேசம்மாவின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. மண்வாசம் கிராமம் சுற்றுப்பட்டு கிராம மக்களின் எண்ணற்ற தலைகளால் நிரம்பி வழிந்தது. கோயிலில் இறைவழிபாடுகள் முடிந்த பின்னர் அவர் உடல் நல்லடக்கம் செய்ய கல்லறைக்கு எடுத்து வரப்பட்டது. கண்ணீரும் கம்பலையுமாக ஊர் மக்களையும் மீறிய அந்த பிற்பட்ட சமுதாய மக்களின் கூட்டம், நெஞ்சிலடித்து “திரேசம்மா! திரேசம்மா!” என கதறி அழுதது.

குருவானவரின் மந்திரிப்புக்குப் பின் திரேசம்மாவின் சடலம் வெட்டியிருந்த குழியில் இறக்கப்பட்டது. முதலில் பூக்களை குழியில் தெளிக்கிறார் குருவானவர். பின்னர் மண்வெட்டியில் எடுத்த மண்ணை, அவர் குழியில் போடப் போகையில், அம்மக்களில் ஒருவன் குரல் கொடுத்தான். “சாமி நில்லுங்க... எங்க  திரேசம்மா தாய் மேல மண்ணைப் போடாதீங்க... கொஞ்சம் பொறுங்க...” குரல் கொடுத்தவனைத் தொடர்ந்து சிலர் பெரும் மூட்டைகளைச் சுமந்து வந்தனர்.

“எங்களையும் மனுஷங்களா மதிச்ச எங்க தாய் மேல மண்ணைப் போட வேண்டாம் சாமி. பதிலா நவதானியங்களை போடலாம்...’’ ஊர்த்தலைவர் உட்பட அனைவர் கண்களும் கலங்கின. சாதி வெறியும் அவர்களுக்குள்ளிருந்து உதிர்ந்தன. மறுநாளே ஊரில் சமபந்தி போஜனம் நடத்தப்பட்டது. தன் வாழ்நாள் முழுக்க எந்த நல்லிணக்கம் வரவேண்டும் என்பதற்காக திரேசம்மா பாடுபட்டாரோ... அது அவர் இறந்தபின் அந்த ஊரில் மலர்ந்தது.

உலகின் வயதான மனிதர்!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மசாஸோ நொனாகா, உலகின் வயதான மனிதராக கின்னஸ் சாதனையில் இடம்பிடித்திருக்கிறார். 1905ம் ஆண்டு பிறந்த நொனாகாவின் வயது 112 ஆண்டுகள் 259 நாட்கள். ‘‘நொனாகா எங்களுக்கு வாழ்வின் மதிப்பு குறித்து கற்றுக் கொடுத்திருக்கிறார்...’’ என்கிறார் கின்னஸ் ரெக்கார்ட் நூலின் எடிட்டரான கிரைக் கிளெண்டாய்.

புகழ்!

காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்ற நீச்சல் வீரர்களை பிபிசி செய்தியாளர் மைக் பசேல் சீரியசாக பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார். லைவ் பேட்டியில் திடீரென கால் ஸ்லிப்பாக, அப்படியே நீச்சல்குளத்தில் விழுந்துவிட்டார். விளைவு, பேட்டி கொடுத்தவர்களை விட பேட்டி எடுத்தவர் ஃபேமஸாகி விட்டார்!

எச்சரிக்கை!

பிரேசிலில் நடந்த இசைத்திருவிழாவில் உற்சாகமாக ஆண்களும், பெண்களுமாகக்கலந்துகொண்டனர். அப்போது ஒரு பெண் ஜாலி செல்ஃபீ எடுக்க,
அவரது கையிலிருந்த பழரசத்தில் இளைஞர் ஒருவர் ஏதோ கலப்பது தெரிய வந்தது. இப்போது இணையத்தில் இப்படம் எச்சரிக்கை கேப்ஷனுடன் வைரலாகி வருகிறது.