அட்மிஷன் அட்வைஸ்



இது ஸ்கூல் அட்மிஷன் சீசன். எப்படி அட்மிஷன் வாங்குவது?

ரிங் டோன்

அட்மிஷன் தொல்லைகளில் இருந்து தப்பிக்க சம்பந்தப்பட்ட பள்ளியின் ‘பிரின்ஸி’ என்கிற பிரின்ஸிபால் மற்றவர்கள் கண்ணில் படாமல் இருப்பதற்காக தலைமறைவாக இருப்பார்கள்; முக்காடிட்டு வாக்கிங் செல்வார்கள். மற்ற சமயங்களில் ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுகிற பிரின்ஸி, கோடையிலும் ஹெல்மெட் அணிவார். எந்த வேஷத்தில் முகத்தை மறைத்தாலும் இவர்களை எளிதாக அடையாளம் காண ஒரு வழி இருக்கிறது! செல்போனில் அந்த ஸ்கூலுக்குரிய பெல் ஓசையை ரிங்டோனாக  வைத்துக்கொள்ளலாம். மாறுவேடம் அணிந்து பிரின்ஸி செல்லும் இடத்தை உளவுத்துறை மூலம் அறிந்து அதே ஸ்பாட்டுக்கு சென்று பெல் ரிங்டோன் வழியே அவரைப் பிடிக்க முயற்சிக்கலாம். அட்மிஷன் தரும்படி காலில் விழுந்து கெஞ்சலாம்!

இமயமலை விசிட்

எல்கேஜி அட்மிஷன் வாங்குவது இமாலய சாதனைதான். எனவே இந்த டெக்னிக்! அட்மிஷன் தொல்லையிலிருந்து தப்பிக்க சில பிரின்ஸிகள் சாமியார் வேடத்தில் இமயமலைக்குச் சென்று அங்குள்ள குகையில் வாடகைக்கு சில நாட்கள் தங்கலாம். இதை கருத்தில் கொண்டு இமயமலைக்கு நீங்களும் சென்று குகை குகையாக ஏறி இறங்கி சம்பந்தப்பட்ட பிரின்ஸியைத் தேடலாம்! ‘குகை ரிஜிஸ்டர்’ அங்கிருக்காது! எனவே குகைக்குள் இருக்கும் பிரின்ஸியை எப்படி அடையாளம் காண்பது?

சிம்பிள். தான், கற்பிக்கும் பாடப் பகுதியை யாராவது தப்பாகச் சொன்னால் எந்த ஆசிரியருக்கும் கோபம் வரும். ஒன்று, காதைத் திருகி தவறைத் திருத்துவார் அல்லது தன் செவியை மூடிக்கொள்வார். உதாரணமாக, பிரின்ஸி கணக்கு பாடம் எடுப்பவராக இருந்தால் நான்காம் வாய்ப்பாட்டை ஒவ்வொரு குகை வாசலிலும் தப்புத் தப்பாக உரக்கச் சொல்லுங்கள். சாமியார் வேடத்தில் இருக்கும் பிரின்ஸியின் ரியாக்‌ஷனை வைத்து நாம் தேடி வந்தவர் அவர்தானா என்பதை அறியலாம்!

நர்சரிக்கு நர்சரி!

ஒருவேளை நீங்கள் சந்திக்க விரும்பும் பிரின்ஸிக்கு தோட்டக்கலையின் மீது ஒட்டுதல் இருந்தால் ஒட்டு ரோஜா, ஒட்டு மாமரம் போன்ற ஒட்டுச் செடிகளை தோட்டக்காரன் வேடத்தில் எடுத்துச் சென்று அவருக்கு பரிசளியுங்கள். ம்ஹும். அட்மிஷனுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு! ஒட்டுச் செடிகள் வளர, வளர உங்கள் உறவும் வளரும்! ஒட்டு ரோஜாச் செடியில் பூத்த முதல் ரோஜாவை அவரிடம் மண்டியிட்டுக் கொடுத்து சரியாக அட்மிஷன் சமயத்தில் அட்மிஷன் வரம் கேட்கலாம்!

பணிப்பெண் நியமனம்

உங்கள் வீட்டில் ஏற்கனவே ஒரு பணிப்பெண் இருந்தாலும், பிரின்ஸி வீட்டு பணிப்பெண்ணுக்கும் ஒரு வேலை கொடுங்கள். முதல் ஃபில்டர் காபி, அன்லிமிட்டட் வைஃபை மற்றும் டிவி வசதி, சேர்ந்த இரண்டாவது நாளே சம்பள அட்வான்ஸ், முதல் வாரமே சம்பள உயர்வு... என அதிரடி சலுகைகளில் இவரைக் குளிப்பாட்டுங்கள். சம்பந்தப்பட்ட பணிப்பெண் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தும்போது அட்மிஷன் சிபாரிசை முன்வையுங்கள். ‘தக்க தருணத்தில் பிரின்ஸியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக’ உறுதிமொழி அளிப்பார்! ஆனால், நீங்கள் அளிக்கும் திடீர் சலுகைகளை உங்கள் பெயரைச் சொல்லி பிரின்ஸி வீட்டிலும் அந்தப் பெண் டிமாண்ட் செய்தால் போச்சு. ஏழு தலைமுறைக்கு அந்த ஸ்கூல் கேட் பக்கம் கூட நீங்கள் தலை வைத்துப் படுக்க முடியாது!     
           

- எஸ்.ராமன்