COFFEE TABLE



சமந்தா மழை

புதுவருடம் பிறந்ததில் இருந்து சமந்தா காட்டில் அடைமழை. ‘ரங்கஸ்தலம்’, ‘மகாநடி’, ‘இரும்புத்திரை’ என்று வரிசையாக அவர் நடித்த படங்கள்  எல்லாமே சூப்பர் ஹிட். இப்போது தியாகராஜா குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸி’ன் டப்பிங் வேலையில் இருக்கிறார். ‘‘அட்டகாசமான இந்த ஐந்து  மாதங்கள், அடுத்து வரும் நாட்களுக்கான உற்சாகத்தைக் கொடுத்துள்ளது...’’ என்று நெகிழ்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் சமந்தா உருக,  லைக்ஸ்கள் அடைமழையாகப் பொழிகின்றன.

இளையவருடன் பிரியங்கா

பிரியங்கா சோப்ரா தன்னைவிட பத்து வயது இளையவரான பாடகர் நிக் ஜோனஸைக் காதலிக்கிறார் என்பதுதான் பாலிவுட், ஹாலிவுட்டில் ஹாட்  டாக். ஆனால், எதுவும் நடக்காத மாதிரி தன் நண்பரின் குழந்தையுடன் நீச்சல் குளத்துக்கு அருகில் ஜாலியாக போஸ் கொடுத்து ரசிகர்களை  ஆசுவாசப்படுத்தியிருக்கிறார் பிரியங்கா. அத்துடன் அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரியங்கா தட்டிவிட, ஹார்ட்டின்கள்  குவிகின்றன.

சுவாச கேட்ஜெட்

நாலாப்பக்கமும் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் சூழலில், நம் சுவாசத்தின் அளவையும், நுரையீரல் செயல்பாட்டையும் கணித்து ஆரோக்கியத்துடன்  வாழ ‘ப்ரீத் வித் பி’ என்கிற நிறுவனம் சுவாசத்தை அளவிடும் கேட்ஜெட்டை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பேனா வடிவில் இருக்கும் இதை  சட்டைப்பையில் வைத்துக்கொள்ளலாம். ப்ளூடூத் மூலமாக ஸ்மார்ட் போனுடன் இணைத்துவிட்டால் சுவாசத்தைப் போல இந்த கேட்ஜெட்  இடைவிடாமல் இயங்கிக்கொண்டே இருக்கும். நாம் விடும் மூச்சுக்காற்று சீராக இல்லையென்றால் அடுத்த வினாடியே எச்சரிக்கும். இதன் விலை  ரூ.8000.

ரியல் ஹீரோ

சீனாவின் பரபரப்பான ஆறு வழிச் சாலை அது. 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க அரை மணி நேரத்துக்கும் மேலாக  காத்துக் கிடக்கிறார். சிக்னல் விழுந்தவுடன் மெதுவாக நடந்து சாலையைக் கடப்பதற்குள் அடுத்த சிக்னல் விழ, முதியவர் பதறிப்போய் அப்படியே  பாதியில் நின்றுவிட்டார்.

அந்த வழியாக வந்த டிராபிக் போலீஸ் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் முதியவரைத் தன் தோளில் தூக்கிச் சென்று சாலையைக் கடக்க  உதவினார். இந்த அற்புதமான நிகழ்வு நடந்து முடியும் வரை வாகனங்கள் எதுவும் கிளம்பாமல் அமைதி காத்திருக்கின்றன! அந்த டிராபிக் போலீஸ் ஒரே நாளில் சீனாவின் ஹீரோவாகிவிட்டார்.

பிளாஸ்டிக் விபரீதம்

பிளாஸ்டிக் பொருட்களை 2019ம் ஆண்டு முதல் பயன்படுத்த தடை விதிக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் தடை எந்த அளவுக்கு  சாத்தியமாகும் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, பிளாஸ்டிக் பொருட்களின் ஆபத்துகளை சூழலியலாளர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.  உதாரணமாக, ‘‘2050க்குள் கடலில் இருக்கும் மீன்களின் அளவைவிட, அங்கே பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாக இருக்கும்...’’ என்று எச்சரிக்கிறார்கள்.

‘‘கடந்த 70 வருடங்களில் உற்பத்தியான பிளாஸ்டிக் பொருட்களில் சுமார் 79 சதவீதம் நம் நிலங்களிலும், பூமியின் மற்ற பரப்பிலும்  கொட்டிக்கிடக்கின்றன...’’ என்கிறது ஓர் ஆய்வு. ‘‘பிளாஸ்டிக் பொருட்களை ஒருமுறை உற்பத்தி செய்துவிட்டால் அதை அழிப்பது கடினம். அதனால்  அதன் உற்பத்தியை உலகம் முழுவதும் நிறுத்த வேண்டும்...’’ என்கிறார்கள் நிபுணர்கள்.

குங்குமம் டீம்