தண்டனை கடுமையானால் குற்றங்கள் குறையும்!



‘‘படத்தோட பெயர், ‘அடங்க மறு’. இன்னிக்கு அமைதி, சமாதானம்னு அதிகம் பேசறாங்க. ஆனால், பெரும்பாலான சமயங்களில் அது தேவையா இருக்க மாட்டேங்கிது. 30 தடவை சொல்லி கேட்காதவன், ஒரு தடவை அடிச்சு சொன்னா கேட்கிறான். பிரதர் ஜெயம் ரவி ஸ்ட்ராங்கா, அதிரடியான படத்திற்கு காத்திட்டு இருந்தார். ஃபேமிலி, காதல்னுதான் அதிகம் செய்திருக்கார். இதில் அவருக்கு அதிரடியான போலீஸ் வேடம். சும்மா புரட்டி எடுத்திருக்கார்...’’சுவாரஸ்யமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல். இயக்குநர் சரணின் சீடர்.


இன்னுமொரு போலீஸ் கதையா... எப்படி வித்தியாசப்படுது..?

இன்னிக்கு ரெகுலரா எல்லா இடத்திலயும் க்ரைம் நடக்குது. அதை கட்டுப்படுத்தவும், மீண்டும் நிகழாமல் தடுக்கவும் சட்டங்களும் இருக்கு. ஆனால், இங்கே சட்டத்திருத்தங்கள் இல்லை. ‘டேக் இட் ஃபார் கிராண்டட்’ ஆக இங்கே எதையும் எடுத்துக்கொள்கிறார்கள். பணம் இருந்தால் ஒரு சட்டம், பணம் இல்லாவிட்டால் இன்னொரு சட்டம்னு இங்கே எப்பொழுதும் இருக்கு. அதை அறிஞ்சு, தெரிஞ்சு படிச்சிட்டுதான் ஹீரோ போலீஸுக்குள்ளே வர்றாரு. போலீஸ்க்குள்ளேயும் கெட்டவங்க இருக்காங்கன்னு தெரியும்.

ஆனால் நல்லவனா உள்ளே நுழைஞ்சவனையும் வளரவிடாம தடுக்கறாங்க. இதை மீறி ஹீரோ எப்படி ஜெயிக்கிறார் என்பதுதான் கதை. இங்கே சட்டத்தில் இருக்குற ஓட்டைகளுக்கு கணக்கு வழக்கே இல்லை. பல சட்டங்களை நம்மைச் சுத்தியிருக்கிற ஆசிய நாடுகள் திருத்தி எழுதிடுச்சு. ஆனா, நம்ம நாட்டுல அந்த வேலை நடக்கவேயில்லை. குறிப்பாக சிறுவர்கள் குற்றப்பிரிவு அப்படியேதான் இருக்கு. 18 வயசுக்குக் கீழே குற்றம் செய்தால் மூன்று ஆண்டுகள் வரைக்கும் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் வைத்துவிட்டு விடுதலை செய்து விடுகிறார்கள்.

அவர்கள் ஒரு கொலை செய்தால் கூட இதே அளவு தண்டனைதான். இங்கே திட்டமிட்டு கொலை செய்ய இந்தச் சிறுவர்களைப் பயன்படுத்துகிறார்கள். பத்திரிகையைக் கூர்ந்து பார்த்தால் இதெல்லாம் கண்ணில் படும். சமீபத்தில் நடந்த காஞ்சிபுரம் கதிரவன் கொலை வழக்கில் பிடிபட்டவர்கள் அத்தனை பேரும் அந்த வயதுதான். தண்டனையை முடித்துக்கொண்டு அவர்கள் வெளியே வந்துவிட்டார்கள்.

இப்ப யாரோ ஒருத்தர் இன்னொரு ஆளைக் கொல்லணும்னு நினைச்சா கவலையே இல்லை. கைவசம் நிறைய பணம் இருக்கணும். அவ்வளவுதான். இரண்டு வருஷம்தானே, நான் உன் குடும்பத்தைப் பார்த்துக்கிறேன்னு சொல்லிடுறாங்க. அவனும் கொலை செய்துட்டு நிம்மதியாகப் போய் ஜெயில்ல உட்கார்ந்திட்டு வந்திடுறான். இங்கே குற்றங்களுக்கு ஏற்ற தண்டனை கிடைக்கிற வரை, தீர்ப்புகளைத் திருத்தி எழுதாதவரை இப்படித்தான் நடக்கும். இது சம்பந்தமாகவும் நிறைய டீல் பண்ணியிருக்கோம்.

ரவிக்கு இப்ப ஒரு நல்ல இடம் இருக்கு...

அந்த இடம் அவரே நல்லா கட்டமைச்சது. இதில் அவருக்கு சீரியஸான கேரக்டர். நடிப்பில், மிடுக்கில் ஒரு மீட்டர் கூட ஏற மாட்டார், இறங்க மாட்டார். வழக்கமாய் ‘ஏய்’னு அதட்டிக்கிட்டு இருக்கிற கேரக்டர் இல்லை. ரொம்ப கடமையாக இந்தப் பொறுப்பை ஏத்துக்கிட்டு நடிச்சிருக்கார். பொதுவா இங்கே இருக்கிற போலீஸ் கதைகள் எல்லாமே ஏதோ ஒண்ணோட சாயலாகவே இருக்கு.

அப்படி ஒரு மாதிரியும் இல்லாமல் புதுசா ஒரு விஷயம் செய்யணும்னு செய்ததுதான் ‘அடங்க மறு’. இதையே ரவியும் விரும்பினார். எல்லோருக்கும் ஒரு காலகட்டம் இருக்கும். உருண்டு புரண்டு எழுந்தால்தான் ஒரு இடத்திற்கே வந்து சேர முடியும். இங்க பல பிராண்ட் குத்துவாங்க. அதையெல்லாம் தாண்டித்தான் வரணும். அப்படி ஒரு இடத்தில்தான் இப்ப ரவி சார் அருமையாக வந்து நிற்கிறார்.

ராஷி கண்ணா எப்படி?

அவங்களுக்கு செமையான ரோல். சில படங்களில் வருகிற மாதிரி லூசு பொண்ணு கேரக்டர் இல்லை. பிறந்தநாளுக்கு காதலன்  வர முடியலைன்னா கோவிச்சுக்கிட்டு ‘ஏன் வரலை’னு கழுத்தைப் பிடிக்கிற ஆளு இல்லை. அவர் வேலை அப்படின்னு நினைச்சுகிட்டு இருக்கிற பொண்ணு. ஒரு இன்டலிஜென்ட் பெண்ணாக அவர் கேரக்டரை பண்ணியிருக்கேன்.

பாடல்கள் எப்படி வந்திருக்கு..?

இன்னிக்கு மாஸ்டர் சாம் சி.எஸ்.தான். ஒரு தடவை அவரைப் பார்க்கப் போனப்ப ஒரு மொக்கை மாமியார் - மருமகள் சீனை மானிட்டரில் பார்த்து பின்னணி அமைச்சுட்டிருந்தார். பிறகு பார்த்தா அப்படியே பிஜிஎம்ல அந்தக் காட்சியை எங்கயோ கொண்டு போயிட்டார்! சதா சோதனைகளில் ஈடுபட்டு, நல்ல திட்டமா இருக்கிற மனிதர். எனக்கு அருமையான பாடல்களைக் கொடுத்திருக்கார்.

யுகபாரதி அண்ணன் எழுதின ‘நியாயம் பிறக்கும் வரை சட்டம் உறங்கக்கூடாது’னு ஒரு பாட்டு இருக்கு பாருங்க, அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். நம்ம எடிட்டர் ரூபன், ரொம்பவும் வேண்டப்படுகிறவர். வேற எடிட்டர்களை வைச்சு படம் செய்றவங்ககூட இவர்கிட்டே வந்து டிரைலர் பண்ணிக் கொடுங்கன்னு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறார்கள். ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘மாயா’ படங்களில் வித்தை காட்டிய சத்தியன் சூரியன்தான் கேமராமேன். பி.சி.ஸ்ரீராமின சீடர். இப்ப மம்மூட்டி தெலுங்கில் நடிக்கிற ‘யாத்ரா’ படத்தை இவரை நம்பித்தான் ஒளிப்பதிவுக்கு கொடுத்திருக்காங்க. மிக இளைஞர்.

‘அடங்க மறு’, திருமாவளவன் அடிக்கடி உச்சரிக்கும் வாசகம்...

எனக்கு அவர் மீது பெரும் மதிப்பு உண்டு. நல்ல வரிகள் எங்கே இருந்தாலும் நான் அதை ரசிப்பேன். ஒரு நேர்மையான போலீஸ் ஆபீஸர் பற்றின கதைக்கு ‘அடங்க மறு’ ரொம்பவும் பொருத்தமாக இருந்ததால அதையே வைச்சிருக்கோம்.                                      

- நா.கதிர்வேலன்