#Metoo



பணியிட பாலியல் வன்முறைக்கு எதிராக வெகுண்டெழும் பெண்கள் இயக்கம்

சமூக வலைத்தளங்களில் உலகம் முழுதும் இன்று அதிரடித்துக்கொண்டிருக்கும் வைரல் ஹேஷ்டேக், #metoo. பணியிடங்களில் தங்களுக்கு  நிகழும் பாலியல் வன்முறையை பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த ஹேஷ்டேக் இட்டு டுவிட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் பகிர்ந்து வருகிறார்கள். சினிமா, அரசியல், பத்திரிகை, டி.வி, விளையாட்டு, கல்லூரி, பல்கலைக்கழகம், இசை, மாடலிங் துறை என ஒவ்வொரு துறையில் வேலை செய்யும் பெண்களும் வரிசையாக இந்தக் குற்றச்சாட்டுகளைப் பகிர்ந்துவருகிறார்கள். இன்றைய தேதிக்கு மிகப் பெரிய மக்கள் இயக்கம், அதுவும் பெண்களால் முன்னெடுக்கப்படுவது என்றால் அது ’மீ டூ’தான்.  

அமெரிக்காவில் தொடங்கிய இந்த புயல் மெல்ல ஆசிய நாடுகளில் பரவி இப்போது இந்தியாவுக்குள்ளும், குறிப்பாக தமிழ்நாட்டுக்குள்ளும் நுழைந்துள்ளது. பாலியல் சுரண்டல்களின் தலைமையிடமான சினிமாவில்தான் தமிழகத்தில் இது இப்போதைக்கு மையம்கொண்டுள்ளது. சந்தியா மேனன் என்ற ஒரு பெண் பத்திரிகையாளர், பாடலாசிரியர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு பெண் எழுதிய பதிவை ரீ டுவீட் செய்தார். சற்று நேரத்திலேயே பின்னணிப் பாடகி சின்மயி அதை ரீடுவீட் செய்தார். இவை கோடம்பாக்கத்தில் உடனே பரபரப்பைக் கிளப்பிவிட்டன.

ஏற்கெனவே ஸ்ரீரெட்டி என்ற நடிகை பிரபல நடிகர்கள் தன்னை பாலியல் ரீதியாகச் சுரண்டினர் என்று சொல்லியிருக்கும் நிலையில் இந்தச் செய்தி மேலும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. இந்த ஹேஷ்டேக் மூலம் இன்னும் என்னென்ன பூகம்பங்கள் எல்லாம் கிளம்புமோ என்று கோலிவுட் கதிகலங்கிப் போயுள்ளது. இந்திப் படவுலகில் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மேல் பாலியல் குற்றம்சாட்டியுள்ளார். பெண் இயக்குநர் விந்தா நந்தா இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு டிவி ஷோவில் பணியாற்றியபோது நடிகர் அலோக் நாத் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் ரஜத் கபூரும் இத்தகைய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். மாநிலங்களுக்கான வெளியுறவுத் துறை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது ஆறு பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கிறார்கள். பல்வேறு பத்திரிகைகளைச் சேர்ந்த ப்ரியா ரமணி, சுபர்ணா சர்மா, சுமா ரஹா, ப்ரேர்ணா சிங் பிந்தரா, சுதாபா பால், கெளலத் என்ற பெண் பத்திரிகையாளர்கள் அமைச்சர் எப்படி வேறு வேறு தருணங்களில் தங்களிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டார் என்று பகிரங்கமாக எழுதியுள்ளார்கள்.

இந்த வகையில் இந்திய அளவில் இந்த ‘மீ டூ’ பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான முதல் அரசியல்வாதி அக்பர்தான். சோனம் கபூர், ஸ்வரபாஸ்கர், கங்கனா ரணாவத் உட்பட பல்வேறு பாலிவுட் செலிபிரிட்டிகளும் இந்த ‘மீ டூ’ இயக்கத்துக்கு ஆதரவாகக் குதித்துள்ள நிலையில் ஐஸ்வர்யா ராயும் இந்த கோதாவில் இறங்கியுள்ளார். ‘நான் முன்பே இதுகுறித்து பேசியுள்ளேன். இப்போதும் இது குறித்து பேசத் தயாராகவே உள்ளேன். எதிர்காலத்திலும் பேசுவேன். இது உண்மையில் சரியான சந்தர்ப்பம். பெண்கள் தங்களின் குரலை உயர்த்தவும்,

தங்கள் தன்னம்பிக்கையை வலுவாக்கவும், தங்களுக்கான நீதியைக் கண்டடையவும் நாம் அவசியம் உதவவேண்டும்’ என்று இந்த இயக்கத்துக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார் இந்த முன்னாள் உலக அழகி. சினிமா, அரசியலைப் போலவே பத்திரிகைத்துறையிலும் இப்படியான பாலியல் குற்றச்சாட்டுகள் சிலர் மீது கிளம்பியுள்ளன. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வின் மூத்த எடிட்டர் கெளதம் அதிகாரி இதற்கு உதாரணம். இந்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்கிறார்கள் ஆண்கள் சிலர். அவர்களின் வாதம் இதுதான்:

ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தங்கள் முன்னேற்றத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும் இதுபோன்ற சுரண்டல்களை, அத்துமீறல்களை அனுமதித்துவிட்டு பிற்பாடு சாவகாசமாக இப்படியான குற்றச்சாட்டுகளைச் சொல்கின்றனர். எனவே, இப்படியான குற்றங்களில் குற்றம்சாட்டப்பட்டவரைப் போலவே குற்றவாளிகளுக்கும் பங்குண்டு... உண்மையில், இதுவும் ஒருவகை பரஸ்பர செயல்பாடுதான். இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் தெரிவிக்கும் பெண்கள் பெரும்பாலும் வலுவான, பெரிய குடும்பப் பின்னணி உள்ளவர்கள். சிலர் இதை அப்போதே அம்பலப்படுத்தியிருக்க முடியும் என்ற நிலையில் அப்போது சொல்லாமல் இப்போது பொங்குவது ஏன்...

தங்களுக்கு வேண்டாத ஆண்கள் மீது பொய்யாக பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தி அவர்களது கிரெடிபிலிட்டியை கேள்விக்கு உள்ளாக்கும் வேலையை சில பெண்கள் செய்யவே மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்... என்று கேட்கிறார்கள் ஆண்கள் சிலர். பெண்கள் எப்போதும் எல்லா நிலையிலும் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். பல தருணங்களில் அவர்களால் அதைச் சொல்ல முடிவதில்லை. அவர்கள் எவ்வளவு மேட்டுக்குடியில் பிறந்தவர்கள் என்றாலும் இதற்கு வாய்ப்பு இல்லை.

பணியை இழந்துவிடுவோமோ, நிலைமை மேலும் சிக்கலாகிவிடுமோ, தன்னுடைய கவுரவத்துக்கு இழுக்கு ஏற்படுமோ, எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என்பதைப் போன்ற அச்சம் உட்பட பல காரணங்கள் உள்ளன. அன்றே சொல்லவில்லை என்பதையும், அவள் சகித்துக்கொண்டாள் என்பதையும் கொண்டு அவள்மீதே பழியைத் திருப்புவது அந்த அத்துமீறல்காரர்கள் செய்வதைவிடவும் பெரிய அநீதி என்றும் பதிலுக்கு பொங்குகிறார்கள் பெண்ணியர்கள்.

பாலியல் தொல்லை கொடுப்பது தவறான விஷயம் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவரவர் கண்ணியத்தை அவரவர் காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிடில் பொதுவெளியில் பெயர் நாறுவதை யாருமே தடுக்க முடியாது. இந்தக் காலம் அப்படி. எல்லோருக்குமே இங்கு குரல்கள் உண்டு. அது ஒலிப்பதற்கான வெளியும் உருவாகிவிட்டது. எனவே, மன்மதராசாக்கள் கொஞ்சம் மனசாட்சியுடன் நடந்துகொள்வதே அவர்களுக்கு நல்லது.

எப்படி தொடங்கியது #Metoo?

இந்த ‘மீ டூ’ இயக்கம் இன்று தொடங்கியது அல்ல. 2006ம் ஆண்டிலேயே அமெரிக்காவில் தொடங்கிவிட்டது. அமெரிக்காவின் சமூகச் செயல்பாட்டாளரும் பெண்ணியருமான தரனா பர்க் ஒரு பதினான்கு வயதுச் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்முறையைப் பற்றி பதிவு செய்தார். அதன் இறுதியில் அந்தப் பெண் குழந்தைக்கு பதில் சொல்ல வார்த்தைகளற்று ‘Me too” என்று சொன்னவர், ‘அப்படித்தான் அந்தச் சொல்லை ஓர் இயக்கமாக எடுத்துச் செல்ல முடிவெடுத்தேன்’ என்கிறார்.

கடந்த ஆண்டு ‘பாய்சன் ஐவி’ புகழ் ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ இதை சமூக வலைத்தளங்களில் புகழ் பெறச் செய்தார். அதே ஆண்டு ஹாலிவுட் படத் தயாரிப்பாளார் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை பல ஹாலிவுட் செலிபிரிட்டிகள் வரிசையாக வெளியிட்டார்கள். ஜெனிபர் லாரன்ஸ், உமா தர்மன், க்வைனீத் பால்ட்ரோ, அஸ்லி ஜூட் உட்பட பல பிரபலங்கள் இந்த ‘மீ டூ’ இயக்கத்தில் இறங்கி அமெரிக்காவையே கலங்கடிக்க, ஹாலிவுட்டைத் தொடர்ந்து அமெரிக்க அரசியல், விளையாட்டு, பலகலைக் கழகங்களிலும் நுழைந்தன இந்த ‘மீ டூ’ பகிர்வுகள். இன்று நாள்தோறும் நூறு, ஆயிரம், லட்சம் என உலகளவில் பல்கிப் பெருகிக்கொண்டேயிருக்கின்றன.

- இளங்கோ கிருஷ்ணன்