உண்மையாக நடந்ததை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட கதை...



நுணுக்கமும், மனிதாபிமானமும், சமூகத்தின் மீதான அக்கறையும், மிகையில்லாத நடிப்பும் கொண்டு வரும் ஒரு சில திரைப்படைப்பாளிகளில் வெற்றிமாறனுக்கு நிச்சயம் ஓர் இடமிருக்கிறது. ‘வடசென்னை’ திரையைத்தொடும் இவ்வேளையில் அமைதியாக இறுதிக்கட்டப் பணியில் இருக்கிறார். ஜென் நிலையில் சிறிதளவே சிரிக்கிறார்.

ரொம்பவும் எதிர்பார்ப்பில் இருக்குது ‘வடசென்னை’!

நிச்சயமாக அனுபவமாக இருக்கும்னு நம்புறேன். அந்த வாழ்க்கையை அருகில் போய் பார்த்த மாதிரி இருக்கும்னு எனக்குத் தோணுது. அந்த மனிதர்களை கேமராவை வைத்து அவர்கள் பார்க்காத போது எடுத்த மாதிரி முயற்சி செய்திருக்கிறோம். தமிழ் மக்கள் பார்த்து விட்டுத்தான் சொல்ல வேண்டும். இது வடசென்னை மக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டதுதான். வரலாற்றுப் பின்னணியில் இருக்கிற கதை. அன்பும், கோபமும், எளிமையும், உண்மையுமா வாழுற மக்களின வாழ்க்கையைப் பேசுற படம். வடசென்னையைப்பத்தி நாம் வச்சிருக்கிறது நல்ல அபிப்ராயமில்லை.

ஆனால், அன்பால வாழ்ந்திட்டு இருக்கிற உலகம் அது. அவங்ககிட்டே இருக்கிற காதல், வலி, ஆக்ரோஷம், துரோகம், அன்பு, வெற்றி எல்லாம் வேற மாதிரி. அந்த வாழ்க்கையைக் கொஞ்சமும் நகாசு பண்ணாமல், ஏத்தி வச்சு சொல்லாமல், அசலா வந்திருக்கிறதா நினைக்கிறேன். சொல்லியே ஆகணும்ங்கிற உண்மையும் இதில் இருக்கு. அவர்கள்தான் சென்னையின் பூர்வீக குடிகள். மிகவும் நட்புணர்வோடு சாதி மதமற்று வாழ்கிறார்கள். உறவு முறைகளோடு பழகுகிறார்கள். 85ல் ஆரம்பிச்சு 2003ல் முடியுது முதல் பாகம். தனுஷின் டீன்ஏஜ் பருவத்திலிருந்து மிடில் ஏஜ் வரை நடக்கிற பயணம்.

அதோட சேர்ந்து கதை மாந்தர்கள் பயணிக்கிற மாதிரி இருக்கும். ஒரு பெரிய நிலப்பரப்புக்குள்ளே போய் கதை சொல்லும்போது குறிப்பிட்ட நேரத்திலும் கதை சொல்லி முடிக்கணும். ஒரு சில விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். படத்தின் இயல்பு எனக்கு எழுத்திலேயே அமைஞ்சுடுது. நல்ல நடிகர்கள் இருந்ததால் படத்தில் அதை அப்படியே கொண்டு வர்றதுல  சிக்கல் இல்லை. அதை மீறி ஒரு படி மேலே போகணும்னுதான் ஆர்வமா இருக்கு. அப்படி நடந்ததான்னு மக்கள் பார்த்திட்டுச் சொல்லணும்.

உங்களின் பெரும் கவனம் ‘வடசென்னை’யில் இருக்கு...

ஆமாம். யாரையும் புண்படுத்திடக்கூடாது. பொதுமைப்படுத்தி வைக்கவும் கூடாது. ஸ்டீரியோடைப்பாகவும் அமைந்துவிடக்கூடாது. அப்படித்தான் முயற்சி செய்து இதை எடுத்திருக்கேன். ஆனால், அதையும் மீறி சில விஷயங்கள் நடக்கும். அது எப்போதும் நடக்கிறதுதான். இதை நூறு சதவீதமான பதிவுன்னு சொல்லிட முடியாது. பேலன்ஸ் ஆக இருக்கிற பதிவு. எல்லாத்தையும் பத்தி பேசியிருக்கோம். சமூகம், வாழ்க்கை இயல்புகள், மனநுட்பங்கள் சார்ந்து அந்த மக்களின் மனசைக் காட்ட முயற்சி பண்ணியிருக்கேன்.

அவர்களின் வாழ்வியல் சார்ந்த பண்பாடு, அரசியல், கொண்டாட்டம், மற்றவர்கள் அவர்களைப் பயன்படுத்திக் கொண்ட காலங்கள்கூட வரும். படத்தின் பெரும்பகுதி சிறைக்குள்ளே நடக்குது. அதற்காக சென்ட்ரல் ஜெயிலை பெரிய செட் போட்டு எடுத்திருக்கோம். ஜெயில் வாழ்க்கையும் ஆழமா பதிவாகியிருக்கு. குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த சில மனிதர்களைப் பற்றிய பதிவாகவும் இருக்கும். உண்மையாக நடந்ததை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட கதை. எந்தத் தனிநபரையும், குறிப்பிட்ட குழு பற்றிய எந்தப்பதிவும் இதில் கிடையாது. அதில் தெளிவாக இருந்திருக்கேன்.

தயாரிப்பாளராகவும், நடிகராகவும் தனுஷ் எப்படியிருந்தார்?

எப்பவும்போல அவருடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கார். அவர் இதில் தீவிரமாக இறங்கிச் செய்ய நிறைய ஸ்கோப் இருந்தது. 120 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. தனுஷ் தவிர வேறொரு தயாரிப்பாளர் இதை எடுத்திருக்கவே முடியாது. அதைச் சொல்லியே ஆகணும். அவர் கதையைப் புரிந்துகொண்டதும், என்னைப் புரிந்துகொண்ட விதமும் அப்படி. கதை மேலே நம்பிக்கை இல்லேன்னா, இத்தனை காலம் காத்திருந்து பண்ண மாட்டார். என்மேல் நம்பிக்கை இல்லேன்னா இந்தக் கதையையே பண்ணியிருக்க மாட்டார்.

தனுஷ் தவிரவும் பெரிய நடிகர்கள் இருக்கிற படம். அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, பவன், சென்ட்ராயன்னு பெரிய செட். இதில் கொஞ்சம் பேர் ‘பொல்லாதவனி’ல் வேலை பார்த்து ரீயூனியன் ஆகியிருக்கோம். அமீருக்கு ரொம்ப முக்கியமான ரோல். சமுத்திரக்கனியின் கேரக்டரும் அதற்கு குறைந்ததல்ல. நடித்தவர்களில் பாதிப்பேருக்கு மேலே இயக்குநர்கள். எல்லோருக்கும் என்ன நடந்துகொண்டு இருக்குன்னு தெரியும்.

எல்லோருக்கும் கதையில் அவர்கள் பங்கு குறித்து முழுதும் தெரியும் என்பதால் எந்தப் புகாரும் இல்லை. சந்தோஷமாக வேலை பார்த்தோம். எல்லோருக்குமான இடங்கள் படத்தில் இருக்கின்றன. கிஷோர் இரண்டு சீன்களிலும், கனி இரண்டு காட்சிகளிலும், டேனியல் இரண்டு காட்சிகளிலும், பவன் ஒரு காட்சியிலும் நடிப்பின் உச்சத்தைத் தொட் டிருப்பார்கள். டேனியல் இதுவரை செய்யாத ஏரியாவும் இதிலிருக்கு. யார் சிறப்பா பண்ணியிருக்காங்கன்னு அறுதியிட்டுச் சொல்லமுடியாது. படத்தின் தன்மை அப்படி.

நடிகைகளின் பங்கு..?

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தில் பிரமாதப் படுத்தியிருக்கிறார். அதே மாதிரி ஆண்ட்ரியாவின் பங்கும் முக்கியமானது. ஆர்ட் டைரக்டர் ஜாக்கி ஒரு பெரிய கடற்கரை கிராமத்தை அப்படியே வடிவமைத்துக்கொடுத்தார். அதேமாதிரி ஜெயில். அவருக்குப் பெரிய பெயர் கிடைக்கும். அவர் போட்ட செட்டை பார்க்கும் எவரும் உண்மையென்றே நம்பி விடுவார்கள். நடிகர்களாக கதையின் உண்மைத்தன்மைக்குப் பக்கத்தில் இருக்கிறவங்களை மட்டும் இந்தப்படத்திற்காக விரும்பினேன். அதுவும் நடந்திருக்கிறது.

இதில் என்னோடு சந்தோஷ் நாராயணன் இணைந்தார். அவருடைய பாடல்கள், பின்னணி இசை ஒரு பெரிய இடத்தில் வந்திருக்கு. அவருடைய பாடல்களுக்கு நியாயம் செய்யணும்ங்கிற கவலை கூட வந்தது. வேல்ராஜ்தான் கேமரா. நான் நினைப்பதை அவர்  எடுத்துக்கொடுக்கிறவர். வடசென்னை அவர் கண் வண்ணத்தில் வந்து அப்படியே உங்க முன்னாடி நிக்கும். உங்களை ஒரு நல்ல சினிமாவிற்கு அழைப்பதாகவே உணர்கிறேன்.

- நா.கதிர்வேலன்