இதெல்லாம் காதலா?



சம்பவம் எண் 1:

சென்னை திருவான்மியூர் கடற்கரையில் புதுமணத் தம்பதியினர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்து வந்த இரண்டு முரடர்கள் கணவனை இரும்புக் கம்பியால் தாக்கினர். மனைவியையும் தாக்கி விட்டு, அவர் அணிந்திருந்த 12 சவரன் தாலிச்செயினை பறித்துக் கொண்டு தப்பினர். கணவன் - மனைவி இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீஸார், சம்பவம் குறித்து புலன் விசாரணை செய்யத் தொடங்கினர்.

சம்பவம் எண் 2:


சென்னையில் பொறியாளராகப் பணிபுரியும் ஒருவர் தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளை சினிமாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். முன்புறம் இருந்த சீட்டில் ஒரு ஜோடியினர் ஒருவர் தலையோடு மற்றவர் தலையை இணைத்து உரசிக் கொண்டிருந்ததால், குழந்தைகளுக்கு படம் மறைத்திருக்கிறது. பொறியாளர் தட்டிக் கேட்க, முன்சீட்டில் தலை உரசிக் கொண்டிருந்தவர் அவரிடம் ஏடாகூடமாகப் பேச, தியேட்டரிலேயே அடிதடி நடந்திருக்கிறது. காவல்துறையினர் இருவரையுமே கைது செய்து, காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

சம்பவம் எண் 1ன் விசாரணையில் வெளிவந்தவை :

சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமிராக்களை போலீஸார் ஆய்வு செய்திருக்கிறார்கள். அதையடுத்து வழிப்பறிக் கொள்ளைச் சம்பவத்தில் போலீசாருக்கு ஏதோ நெருடியிருக்கிறது. தாக்கப்பட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்த மனைவியிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர். பதட்டத்தில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லியிருக்கிறார். அவருடைய தொலைபேசியை வாங்கி ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவருக்கு அவர் அடிக்கடி போன் செய்து பேசியது தெரியவந்திருக்கிறது. அந்த மர்ம நபர், அவருடைய முன்னாள் காதலன் என்பது தெரிந்திருக்கிறது.

வேறொருவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவனைக் கொலை செய்துவிட்டு காதலனைக் கைப்பிடிக்க திட்டமிட்டிருக்கிறார். அந்தத் திட்டத்தின் அடிப்படையிலேயே திருவான்மியூர் கடற்கரைக் கொள்ளைச் சம்பவ நாடகம் நடந்திருக்கிறது. வழிப்பறி மாதிரி செட்டப் செய்து கணவரைக் கொல்லுவதே அவரது ஐடியா. எனினும் ‘சம்பவம் செய்வதில்’ போதிய முன் அனுபவம் இல்லாத காதலர், சுத்தியல் கொண்டு அவரது கணவரை சரியாகத் தாக்காததால் உயிர் பிழைத்து விட்டார். கணவரைக் கொல்லத் திட்டமிட்ட மனைவியையும், அவருடைய காதலரையும் கைது செய்து மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் எண் 2ன் விசாரணையில் வெளிவந்தவை:

தியேட்டரில் அடிதடியில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் விசாரித்தபோது கிடைத்த தகவல்களில் வடிவேலுவின் ‘மருதமலை’ போலீஸ் ஸ்டேஷன் விசாரணை காட்சிக்கு இணையான குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, குழந்தைகளுக்கு தலை மறைக்கிறது என்று முன்சீட்டு ஜோடியிடம் பொறியாளர் சொன்னார் இல்லையா? தலை உரசி கொஞ்சிக்கொண்டிருந்த அந்த ஜோடியில் இருந்த பெண் இவரது மனைவியேதான். தன்னுடைய மனைவி வேறொருவருடன் ஜோடியாக சினிமா தியேட்டருக்கு வந்ததை அறிந்த கணவர் கடுமையாக அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

அதுவும் தன்னுடைய குழந்தைகளின் கண் முன்பாகவே தனக்கு ஏற்பட்ட அவமானத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியாததாலேயே வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார். இன்னொருவரின் மனைவியோடு சினிமாவுக்கு வந்த மன்மதரோ, சம்பந்தப்பட்ட கணவரிடம் கையும் களவுமாக பிடிபட்டு சட்டை உலுக்கப்பட்டதுமே செய்வதறியாமல் திகைத்து நின்றிருக்கிறார். தான், அழைத்து வந்த பெண்ணுக்கு எதிரில் தன்னுடைய ஹீரோயிஸத்தைக் காட்ட அவரும் எதிர்த் தாக்குதல் நடத்தியிருக்கிறார். எல்லா விஷயங்களையும் கேட்டறிந்து திடுக்கிட்டுப் போன போலீசார், கணவர் மற்றும் மனைவி, மனைவியோடு சினிமாவுக்கு வந்தவர் என்று மூவருக்குமே அறிவுரை சொல்லி, கைது செய்யப்பட்டவர்களை சொந்த ஜாமீனில் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

இரண்டு சம்பவங்களுக்கும் காரணம்?

திருமணம் தாண்டிய உறவுதான். இன்றைய நவீன வாழ்வில் திருமணம் தாண்டிய உறவு சகஜம் என்கிற மனோபாவம், இளைய தலைமுறையினரிடம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தப்பும் தவறுமாக மொழிபெயர்க்கப்பட்டு இங்கே ஊடகங்களின் வாயிலாக பரப்பப்படும் மேற்கத்திய சிந்தனைகளும், கலாசாரமும் இதற்கு முக்கியமான காரணம். ஒரு தம்பதியினர் சேர்ந்து வாழ்வதோ அல்லது கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் பிரிந்துவிடுவதோ அவர்கள் இருவருக்குமான அந்தரங்கம் தொடர்பான பிரச்னை. இதில் மூன்றாவது மனிதர் எவரும் தலையிடுவது நியாயமில்லை.

ஆனால், கணவன், மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னை அவர்கள் இருவரையும் தாண்டி குழந்தைகளை, குடும்பத்தை, உறவுகளை, நட்புகளை, சமூகத்தை பாதிக்கிறது எனும்போது அதில் மற்றவர்களின் கருத்து, சட்டத்தின் தலையீடு ஆகியவை இன்றியமையாததாகிறது. முதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பெண், கல்லூரிப் பருவத்திலேயே ஒருவரைக் காதலித்திருக்கிறார். ஆனால், ‘பெற்றோர் வற்புறுத்தினார்கள் என்கிற காரணத்தால் வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டேன், மீண்டும் காதலருடன் வாழ்வதற்காக கணவரைக் கொல்ல திட்டமிட்டேன்’ என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இரண்டாவது சம்பவத்தில், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு தன்னுடன் பணிபுரிபவர் மீது காதல் வந்திருக்கிறது. இதன் விளைவாகவே தியேட்டரில் கணவர் மற்றும் குழந்தைகள் முன்பாக அசிங்கப்பட்டிருக்கிறார். குடும்பம், சமூகம் போன்ற அமைப்புகள் சில வரையறைகள் கொண்டவை. ஆண் - பெண் சமத்துவத்துக்கு ஏற்பில்லாத வரையறைகளும் அவற்றில் உண்டுதான். சமூக சீர்திருத்தவாதிகள் பலரின் போராட்டங்களால் அந்த சமத்துவமற்ற வரையறைகளின் விதிகள் பலவும் கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளில் தகர்ந்திருக்கின்றன. கல்வி, வேலை என்று சுதந்திரக் காற்றை பெண்கள் சுவாசிக்க ஆரம்பித்திருக்கும் காலம் இது. ஓரிருவர் செய்யக்கூடிய தவறுகளால் பழைய பஞ்சாங்கமே மேல் என்கிற எண்ணம் சமூகத்துக்கு ஏற்பட்டுவிடக் கூடாது.

- யுவகிருஷ்ணா