ரத்த மகுடம்



பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 23

உதயதாரகை பலமாக முழங்கியதால் சுரணை வந்து விழித்துக்கொண்ட கரிகாலன் கண்களுக்கு தொலைவில் இருந்த பாலாற்றின் கலப் பிரவாகம் மிக ரம்மியமாகக் காட்சியளித்தது. அதன் நீர் மட்டத்தைக் காலைக் கதிரவனின் இளம் கதிர்கள் தழுவிச் சென்றதால் பிரவாகத்தில் வட்டமிட்டு நின்ற நீர்ச்சுழல்களில் ஒளி ஊடுருவி பளபளத்ததுடன் கரையோரச் சிற்றலைகளும் பல கண்ணாடிகள் போல் ஜொலித்துக் கொண்டிருந்தன. பிரவாகம் பலமாக இருந்ததால் செக்கச் செவேல் என்றிருந்த அந்தத் தங்க நிற நீரில் குளித்து, இடுப்பளவு நீரில் நின்ற அந்தணர்கள் இருகரங்களிலும் நீரை உயர ஏந்தி மந்திரங்களை ஓதி அர்க்கியம் விட்டுக் கொண்டிருந்தனர்.

இன்னும் சிலர் நீரோட்டத்தை முடித்துக்கொண்டு வெண்கலச் செம்புகளை நன்றாகத் துலக்கி பாலாற்று நதியின் புனித நீரை மொண்டுகொண்டு வேதமோதிக்கொண்டே இல்லம் நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். பொழுது விடிந்து விட்டதால் தங்கள் தொழிலை நடத்த விரைந்த மீனவர்கள் தங்கள் படகுகளை ஆற்றுக்குக் குறுக்கே செலுத்திக் கொண்டே வலைகளை விசிறி மீன்களைத் தேடலாயினர். உழவர்களும் தோள்களில் கலப்பையுடன் சாரி சாரியாக ஆற்றின் கரையோரமாகச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களைவிட வேலையில் அதிக ஊக்கத்தைக் காட்டுவன போல் ஜோடிக் காளைகள் பல கழுத்துகளில் இருந்த வெண்கல மணிகள் இன்னொலிகள் எழுப்ப,

உழவர்களுக்கு முன்னால் ஒன்றோடு ஒன்று இடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தன. இடையே நின்று ஒன்றையொன்று முட்டத் தொடங்கிய ஓரிரு காளைகளை உழவர்கள் அடிக்கடி விலக்கி ஓட்டினர். பாலாற்று நதியில் குளித்துவிட்டு கரை மீது நடந்து சென்ற காரிகையரின் இன்ப மேனிகளிலும் அவர்கள் கழுத்திலிருந்த ஆபரணங்களிலும் கதிரவனின் கதிர்கள் பாய்ந்து பிரமை தட்டும் மெருகை அளித்து அவர்களை ஏதோ தேவகன்னிகள் போலத் துலங்கச் செய்தன. ஆதவன் எழுந்து விட்டதால் உயிர்களும் எழுந்து விட்டன.

அவன் கிரணங்கள் தாக்கத் தாக்க உயிர்களின் நடமாட்டமும் வேகம் பெற்றது. பஞ்ச பூதங்களிலும் உயிர் கலந்திருப்பதாகத்தான் சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால், நித்தம் உயிர்களைத் தட்டி எழுப்பும் பணியை மாத்திரம் தீப்பிழம்பான கதிரவனே ஏற்று உலகை ஆட்டும் மர்மம் என்ன? ஆதவன் மறைந்ததும் உயிர்கள் படுப்பானேன்? காற்றுக்கும் நீருக்கும் ஆகாசத்துக்கும் இல்லாத இந்த மாபெரும் சக்தியை அவன் மட்டும் அடைவானேன்? பாலாற்று நதியின் இன்பத் தோற்றமும் உயிர்களின் அசைவும் கரிகாலன் மனத்திலே இந்த மாதிரி பலப்பல எண்ணங்களை எழுப்பவே, முந்தைய இரவு, தான் தலையில் அடிபட்டு விழுந்ததைப்பற்றியோ,

சத்திரத்தில் இருக்கும் சிவகாமியின் நிலை என்ன ஆயிற்று என்றோ சிந்திக்காமல் பாலாற்று நதிதீரத்தையே நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு மெல்ல அருகேயிருந்த இடங்களில் அவன் கண்களை ஓட்டவே, அவன் நினைப்பு உயிர் தத்துவங்களை எண்ணுவதிலிருந்து சற்று விலகி அரசியல் விவகாரங்களிலும் வட்டமிடலாயிற்று. தான் இருந்த இடத்துக்கு வெகு அருகே தெரிந்த இடைச் சுவரையும் அதை அடுத்து நின்ற நீண்ட தாழ்வாரத்தையும் நோக்கிய கரிகாலன், தான் இருக்குமிடம் பல்லவ மன்னரின் மாளிகை என்பதை உணர்ந்தான்.

அத்துடன் பூமி மட்டம் மிகவும் கீழே இருந்ததாலும் வெகு தூரம் வரை தனது கண்ணோட்டம் செல்வது சாத்தியமாயிருந்ததாலும், அரண்மனையின் மேல் உப்பரிகை அறையொன்றில் தான் இருப்பதையும் உணர்ந்தான். இல்லாவிட்டால் எதிரேயிருந்த அந்தப் பெரிய சாளரத்தின் மூலம், தான் கண்ட அத்தனை காட்சி களையும் காண்பது சாத்தியமல்ல என்று புரிந்துகொண்டவன், தான் படுத்திருந்த இடத்தில் சற்றே புரண்டான். படுக்கை மெத்தென்றிருந்தது. சாளரத்தின் மரச் சட்டத்தின் மட்டத்தை ஒட்டி படுக்கை கிடந்ததால், உயர்ந்த ஒரு மஞ்சத்தின் மீது, தான் படுத்திருப்பது கரிகாலனுக்குத் தெரிந்தது.

முந்தைய இரவில் தன்னை மண்டையில் அடித்தவன் யாராக இருந்தாலும் தனக்குப் படுக்கும் வசதியை மட்டும் நன்றாகச் செய்திருந்ததை அறிந்த கரிகாலன், ‘மண்டையில் அடிப்பானேன்? பின்னர் மலர்ப் படுக்கையில் கிடத்துவானேன்?’ என்று எண்ணித் தனக்குள்ளேயே லேசாக நகைத்துக் கொண்டான். பிறகு மெல்லத் தலையில் அடிபட்ட இடத்தைத் தடவிப் பார்த்து, காயம் ஏதும் ஏற்படவில்லை என்பதையும், அடித்தவன் மயக்கம் வரும் தினுசில் இடம் பார்த்து அடித்திருக்கிறானே தவிர, தன்னைக் கொல்லும் நோக்கம் அவனுக்கு இல்லை என்பதையும் ஊகித்துக் கொண்டான்.

அடிபட்ட இடத்தில் லேசாக எழும்பியிருந்தது. அவ்வளவுதான். அவனுடைய சுருண்ட, இருண்ட மயிர்களும் அதை மறைத்து நின்றதால், எழும்பி இருந்த இடமும் வெளியில் தெரியவில்லை. மெல்ல சமாளித்துக் கொண்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்த கரிகாலன், அந்த அறையை சுற்றும்முற்றும் நோக்கினான். அறைச் சுவர்களில் இருந்த சித்திரவேலைப்பாடுகளும், ஆங்காங்கு போடப்பட்டிருந்த மஞ்சங்களும் அந்த அறை மன்னருக்காகவோ அல்லது அவரைச் சேர்ந்த உறவினர்களுக்காகவோ ஏற்பட்டிருக்க வேண்டு மென்பதை நிரூபித்தன.

மஞ்சங்களின் கைகளின் முகப்புகளில் இருந்த சிங்கத் தலைகளையும், மஞ்சங்களின் பிற்பகுதியில் உடல் சாயும் இடங்களுக்கு மேலே செதுக்கப்பட்டிருந்த சாளுக்கிய நாட்டு ராஜ முத்திரைகளையும் கவனித்த கரிகாலன், இது மன்னர் தங்கும் அறையாகத்தான் இருக்குமென்று தீர்மானித்தான். தன்னை மண்டையில் அடித்தவன் மன்னர் அறையில் தன்னைக் கிடத்த வேண்டிய அவசியம் என்ன என்று யோசித்துப் பார்த்தான். விடையேதும் கிடைக்கவில்லை. பல்லவ சாம்ராஜ்யத்தை கத்தியின்றி ரத்தமின்றி கைப்பற்றிய கையோடு மன்னர் மாளிகையை சாளுக்கிய வாசம் வீசும்படி செய்திருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.

அறையின் ஒரு மூலையில் தொங்கிக் கொண்டிருந்த திரைச்சீலையில் நெய்யப்பட்டிருந்த சித்திரமொன்றும், திரைச்சீலை ஆடியதால் அசைந்து அசைந்து அவன் குழப்பத்தைக் கண்டு நகையாடியது. ஏனெனில் அந்தச் சித்திரத்தில் இருந்த பெண் சிவகாமியைப் போலவே இருந்தாள்! அவளைக் குறித்து கதம்ப இளவரசன், நாக நாட்டு அதிபதியும் பல்லவ மன்னரின் ஒன்றுவிட்ட சகோதரருமான ஹிரண்ய வர்மர், சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர் ஆகியோர் சொன்ன விஷயங்கள் எல்லாம் அவனுக்குள் உயிர்பெற்று எழுந்தன.

அவள் உருவம் எப்படி இங்கு சித்திரமாகி இருக்கிறது..? அவளுக்கும் சாளுக்கியர்களுக்கும் என்ன தொடர்பு..? அவள் எப்படி பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மரின் பெண்ணானாள்? அவள் செய்திருக்கும் சபதம்தான் என்ன..? கரிகாலன் மெல்ல பஞ்சணையிலிருந்து கீழே இறங்கி அறையில் தீவிர யோசனையுடன் நீண்ட நேரம் உலாவினான். இத்தனைக்கும் வணிகர் வேடமிட்டிருந்த தன்னை அப்படியே வேடம் கலைக்காமல் விட்டிருக்கிறார்கள். ஏன்..? ஒருவேளை, தான் யாரென்று அறியவில்லையா... அல்லது அறிந்தும் அமைதியாக இருக்கிறார்களா..?   

ஏதேதோ யோசித்துப் பார்த்து விடையேதும் கிடைக்காததால் உலாவுவதை நிறுத்திக்கொண்டு தன் கச்சையை சோதித்துப் பார்த்தான். புலவர் தண்டி எழுதி காபாலிகனிடம் கொடுத்தனுப்பியிருந்த ஓலை அப்படியே இருந்தது! மிதமிஞ்சிய வியப்பால் கரிகாலன் பிரமித்தான். அதை அதிர்ச்சி என்றும் சொல்லலாம். ஏனெனில், தன்னை சிறிதும் சோதனை செய்யவே இல்லையென்பதையும் உணர்ந்தவன், தன்னைக் கொணர்ந்தவன் நோக்கந்தான் என்ன? என்று சிந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில் அறைக் கதவு திறந்து காவலாளி ஒருவன் உள்ளே நுழைந்து கரிகாலனை பயபக்தியுடன் வணங்கி நின்றான்.

‘‘யாரப்பா நீ..?’’ கரிகாலன் விசாரித்தான்.‘‘தங்கள் அடிமை...’’ என்றான் காவலாளி.‘‘காவலில் வைக்கப்படுகிறவர்களுக்கு அடிமைகள் இருப்பதுண்டா..?’’‘‘உண்டு! யார் காவலில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது அது! பதவிக்குத் தகுந்த மரியாதை!’’‘‘அப்படியென்ன மரியாதை எனக்கு..?’’ ‘‘தெரியாது எசமான். உங்களை மரியாதையுடன் நடத்துமாறு உத்தரவு...’’‘‘உத்தரவிட்டது யார்..?’’காவலாளி அமைதியாக நின்றான்.‘‘சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபரா..?’’காவலாளி எதுவும் சொல்லவில்லை. மாறாக, ‘‘நீங்கள் பல் துலக்கி குளித்து முடித்ததும் அழைத்து வர உத்தரவிட்டிருக்கிறார்கள்...’’ என்றான்.

‘‘அதுதான் உத்தரவிட்டது யார் என்று கேட்கிறேன்...’’ சற்று கோபத்துடன் கேட்டான் கரிகாலன்.‘‘எனக்குத் தெரியாது எசமான். மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக அரண்மனைத் தலைமைக் காவலாளி சொன்னார். நீங்கள் குளிப்பதற்கு எல்லாம் தயார் செய்துவிட்டேன்... வேறு ஆடை தயாராக இருக்கிறது. வாருங்கள்...’’இதற்கு மேல் பேசிப் பயனில்லை என்பதைப் புரிந்துகொண்ட கரிகாலன், அவனைத் தொடர்ந்து சென்றான். ஒரு மன்னர் குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் அவனுக்கு செய்யப்பட்டிருந்தன! ஆழந்த யோசனையுடன் நீராடினான்.

பெரு வணிகருக்குரிய ஆடைகள் அவன் உடல் வாகுக்கு ஏற்ற வகையில் காத்திருந்தன! ஓலையை எடுத்து புதிய உடையில் பத்திரப்படுத்திவிட்டு வெளியே வந்தான். காலை உணவு தகுந்த மரியாதையுடன் அளிக்கப்பட்டது. காவலாளியிடம் பேச்சுக் கொடுக்காமல் உணவை அவன் அருந்தி முடிக்கவும், பாதம் வரை தொங்கும் நீண்ட கத்தியுடன் வீரன் ஒருவன் நுழையவும் சரியாக இருந்தது.‘‘தாங்கள் புறப்படச் சித்தமா..?’’ மரியாதையுடன் அந்த வீரன் கேட்டான். ‘‘எங்கு..?’’ கரிகாலன் அவனை இடைமறித்தான்.‘‘என்னைத் தொடர்ந்து வாருங்கள்...’’ வணங்கியபடி வீரன் பதிலளித்தான்.

மேற்கொண்டு அவனிடம் பேச்சுக் கொடுக்காமல் அவனைப் பின்தொடர்ந்தான். அரண்மனையின் உப்பரிகைத் தாழ்வாரங்களின் வழியாகவும் வளைந்து வளைந்து கீழே இறங்கிய படிகளின் வழியாகவும் கரிகாலனை அழைத்துச் சென்ற வீரன், அரண்மனைக்கு முன்புறமிருந்த பசும்புற்றரையைக் கடந்து எதிரேயிருந்த பிரம்மாண்டமான மற்றொரு மாளிகையை நோக்கி நடந்தான். அந்த மாளிகையின் மூன்று வாயில்களிலும் காவல் பலமாக இருந்தது. ராஜ உடைகளை அணிந்த பலர் வாகனங்களில் வந்திறங்கி மாளிகைக்குள் போய்க்கொண்டும் வந்துகொண்டுமிருந்தார்கள். சாதாரண குடிமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க வாசலில் குவிந்து கிடந்தார்கள்.

அனைவரையும் கடந்து எவ்வித தடங்கலும் இன்றி கரிகாலனை அழைத்துச் சென்ற அந்த வீரன், மாளிகையின் முன் மண்டபத்தில் பேட்டிக்குக் காத்திருந்த பல பிரபுக்களை லட்சியம் செய்யாமல் தன்னை உள்ளே அழைத்துச் சென்றதைக் கவனித்த கரிகாலன், பலத்த சிந்தனைவசப்பட்டான். மாளிகையில் முதல் உப்பரிகையில் காத்திருந்த பட்டாடை அணிந்த ஒரு மனிதரிடம் கரிகாலனை ஒப்படைத்துவிட்டு அந்த வீரன் வந்த வழியே திரும்பிச் சென்றான். பட்டாடை அணிந்த மனிதரைக் கண்டதுமே அவர் அரண்மனை ஸ்தானிகர் என்பது கரிகாலனுக்குப் புரிந்தது. அவர் மரியாதையுடன் பெருவணிகன் தோற்றத்தில் இருந்த கரிகாலனை அழைத்துக் கொண்டு உட்புறம் சென்றார்.

அறை மிக நீளமாக இருந்தது. கரிகாலனுக்கு பழக்கப்பட்ட அறை. பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரை அடிக்கடி அவன் சந்தித்துப் பேசிய அறை! எனவே, சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரைத்தான் சந்திக்கப் போகிறோம் என்பது அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. எனவே, என்ன பேசவேண்டும்... அவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்... என்பதை எல்லாம் யோசித்து முடிவு செய்திருந்தான். ஆனால், சாளுக்கிய மன்னர் முன்னால் அவன் நின்றதும் யோசித்ததெல்லாம் மறந்துபோயிற்று. அப்படி மறக்கும்படியான கேள்வியைத்தான் அவனிடம் அவர்கேட்டார்!‘‘சிவகாமியின் இடுப்பில் இருந்த சின்ன மச்சத்தை அந்த வனத்தில் கண்டாயா கரிகாலா?’’

(தொடரும்)  
 
- கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்