பெளர்ணமி புன்னகை



திருமணம் முடித்த அடுத்த நாள் பெரிய கோயிலுக்குப் போனபோது புஷ்பா கேட்டாள். “ஏங்க நான் இதையெல்லாம் மறைச்சதுனால உங்களுக்கு கோவம் வரலியா..?” “அதுவா... அம்மா அப்பாவுக்கு உன்னை பிடிச்சிப் போன அந்த நிமிஷமே எனக்கு நீதான்னு முடிவாயிட்டுது... அப்புறம், நான் ஒரு ரிப்போர்ட்டர். எல்லாத்தையும் அலசி ஆராயறவன். உன்னை கிட்ட பார்க்க விடாம தடுத்ததுக்கெல்லாம் உள்நோக்கம் இருக்குங்கறதை என்னால கண்டுபிடிக்க முடியல. அங்க நான் சறுக்கிட்டேன். ஆனாலும். உங்க குடும்பத்தோட புத்திசாலித்தனத்த ரசிச்சேன்... முழுக்கை சட்டை மாமாதான் எல்லாத்துக்கும் மாஸ்டர் பிளான் போட்டுத்தந்தாரா?’’

“இல்லங்க. அத்தானுக்கும் அப்பாவுக்கும் அவ்வளவு விவரம் பத்தாது. எல்லாம் அம்மா பிளான். அவங்களுக்கு உங்கள, உங்க ஃபேமிலிய ரொம்ப பிடிச்சிடுச்சி. கல்யாணத்துக்கு எந்த தடையும் வந்துடக்கூடாதுன்னுதான் அதமாதிரி பண்ணினாங்க...’’“சரி அத விடு. இன்னும் ஏதாவது மறைச்சி இருக்கீங்களா..?” “பெருசா ஏதும் இல்லங்க. பி.ஏ. இன்னும் முடிக்கல... நாலு அரியர்ஸ் வச்சிருக்கேன்..!” என்னை அதிர வைத்தாள். காலம் பழமையைத் தின்று ஏப்பம் விட்டுவிட்டது. எல்லா நிகழ்வுகளிலும் நவீனம் என்கிற புலிப்பாய்ச்சல் இருக்கிறது. அது உறவுகளை, நெருக்கத்தை, அருகாமையை நசுக்கிக்கொண்டே வருகிறது.

சிறிய சிறிய தப்பிதங்கள் ரசனையானவை. மனதுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு அவ்வப்போது திறந்து பார்த்து ரசிக்கக்கூடியவை. அப்படியானவைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம் இன்றைய காலகட்டத்தில் யாருக்கும் இல்லை. காத்திருத்தல் என்கிற வார்த்தை காணாமல் போய்விட்டது. அதில் உள்ள சுகம் மறந்துபோய் விட்டது. புஷ்பா எனக்கெழுதிய கடிதங்களும் நான் அவளுக்கு எழுதிய கடிதங்களும் இன்றும் பத்திரமாய் இருக்கின்றன. எப்போதாவது போரடிக்கும் தருணங்களில்  சிறிய உரசல்கள் ஏற்படும்போது அவற்றை எடுத்து படிக்கும்போது, திரும்ப ஒரு காதல் மனசுக்குள் மலரும்.

“நண்பா... நாளைக்கு எம் பொண்ண பார்க்கறதுக்கு மாப்பிள்ளை வீட்டுலயிருந்து வர்றாங்க. விஜயா மால் டைனிங் ஹால்ல நாலு டேபிள் புக் பண்ணி இருக்கேன். நீயும் வந்து மாப்பிள்ளை எப்படி இருக்கான்னு சொல்லு...’’விஜயா மாலில் கிட்டத்தட்ட இருபது பேர் அந்த நிகழ்வில் இருந்தோம். மாப்பிள்ளையோடு, நண்பர்கள் கூட்டம் வந்தது. முதல் சந்திப்பை முன்னிறுத்தி கேக் வெட்டினார்கள். ஆரவாரித்தார்கள். எல்லாரும் செல்ஃபி எடுத்து அதே சூட்டோடு ஃபேஸ்புக்கில் போட்டார்கள். இருதரப்பும் பேசிச் சிரித்து மகிழ்ந்து பனிரெண்டாயிரம் ரூபாய் பில் கொடுத்து...நான்காவது நாள், “என்னப்பா... கல்யாணம் எப்ப..?’’

“இல்ல நண்பா. ரெண்டு பேருக்கும் டேஸ்ட் டிஃபர் ஆகுதாம். அவன் யூஸ் பண்ற பர்ஃப்யூம் என் பொண்ணுக்கு பிடிக்கல. மாத்துங்கன்னு சொல்லி இருக்கா. முடியாதுன்னுட்டானாம். பர்ஃப்யூம் விஷயத்துலயே விட்டுக் கொடுக்காதவன் சரிப்பட்டு வரமாட்டான்னு சொல்லிட்டா. இன்னும் ரெண்டு மூணு சாய்ஸ் பார்க்கலாம்னு டாட்டர்  நெனக்கிறா... நாளைக்கு ஈரோட்டுலேந்து ஒரு பையன் வரான்.. அதே இடத்துலதான்… நீ வர்றீயா..?’’ “இல்லப்பா எனக்கு வேலை இருக்கு...’’ என்றேன் அவசரமாய். இது சமீபத்தில் நடந்த சம்பவம். பேச்சுவார்த்தை சமுகமாக முடிந்தது போலத் தெரிந்தது.

அனைவரின் முகத்திலும் திருப்தி. இப்போது அந்தப் பெண்ணும் பையனும் தூணுக்குப் பின் போனார்கள். பெண்ணின் அப்பா இரண்டு வெள்ளை கவர்களை பேக்கிலிருந்து எடுத்து மாப்பிள்ளையின் அப்பாவிடம் கொடுத்தார். அவர் கண்ணாடி அணிந்து படித்தார். தலையாட்டினார். நிச்சயதார்த்த டிராஃப்ட் போலிருக்கிறது. பெண்ணும் மாப்பிள்ளையும் பரஸ்பரம் பிடித்துப்போய், நிறைந்த பெளர்ணமியாக இருப்பதால் நிச்சயம் செய்து கொள்கிறார்களோ...அந்தப் பெண்ணும் பையனும் திரும்பி வர... அனைவரும் கூட்டமாக மூலஸ்தானம் நோக்கி நகர்ந்தார்கள். என் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்தது போல எனக்கொரு சந்தோஷ உணர்வு.

புஷ்பாவிடம் இன்று பார்த்த இந்த நிகழ்வைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவளை பெண் பார்க்க வந்தது... தனிமை சந்திப்புக்காக கோயில் வந்தது...  அவள் சொன்ன பொய்கள்.. எல்லாவற்றையும் நினைவு கூர்ந்து கலாட்டா செய்யவேண்டும் என்று நினைத்தபடி நகர்ந்தேன். வெளியே பெரும் கூட்டம் அன்னதானம் வாங்குவதற்கு காத்திருந்தது. “சார்... பிரசாதம் வாங்கிட்டுப் போங்க...’’ ஒருவர் உரிமையோடு அழைக்க க்யூவில் நின்று பிரசாதம் வாங்கினேன். வாழை இலையில் வைத்து சாம்பார் சாதம்... பிரிஞ்ச் சாதம்... தயிர் சாதம்... ஊறுகாய்... சிப்ஸ் என பிரமாண்டமாக இருந்தது.

சாம்பார் சாதம் அப்படி ஒரு டேஸ்ட். “பிரசாதம் ரொம்ப டேஸ்ட்டுங்க. அருமையா இருக்கு...’’பரிச்சயமான கோயில் ஊழியரிடம் சொன்னேன். “இன்னைக்கு கோவில் தரப்புலேந்து கொடுக்கல... அந்த ஐயா டொனேஷன்...’’ என்றபடி, வெளியேறிக் கொண்டிருந்த பையனின் அப்பாவை நோக்கிக் கை காட்டினார்.“நல்ல மருமக கிடைச்சிட்டாங்கற சந்தோஷம் போல இருக்கு. எல்லாருக்கும் செம ட்ரீட் கொடுத்துட்டாரே...’’அவர் என்னைப் பார்த்தார். சற்று நிதானித்துக் கேட்டார். “சார்.. அவங்கல்லாம் எதுக்கு வந்திருந்தாங்கன்னு நெனக்கிறீங்க..?’’“பொண்ணு மாப்பிள பார்த்து சம்பந்தம் முடிச்சி கைகடுதாசி எழுதிட்டு போறாங்க...’’

சிரித்தார். “சார், தப்பா புரிஞ்சிகிட்டிங்க. இது வேற விவகாரம். அந்தப் பொண்ணும் பையனும் நாலு வருஷமா பழகுறாங்க. ஃபேஸ்புக்ல ஃப்ரெண்டாகி பேசிப் பார்த்து பழகி இருக்காங்க. அந்தப் பையன் பெங்களூர்ல வேலை பார்க்கிறான். இங்க அடிக்கடி வர்றது, பெண்ணோட வெளிய சுத்தறதுன்னு ரெண்டு பேரும் ஜாலியா இருந்திருக்காங்க. ரெண்டு பேர் வீட்டுக்கும் இப்பதான் இவங்க லவ் மேட்டர் தெரியும். ரெண்டு வீட்டுலயுமே காதலுக்கு செம எதிர்ப்பு. அத இவங்க எதிர்பார்க்கல. பொண்ணோட அப்பா வழக்கமா கோயிலுக்கு வர்ற வருதான். காதல ஒப்புக்கவே மாட்டேன்னு கண்டிப்பா சொல்லிட்டாரு.

பையன் வீட்டுலேயும் அப்படித்தான். நாலு வருஷ பழக்கத்துல ரெண்டு பேருக்குமே அலுப்பு வந்திட்டுது போல... பிரிஞ்சிடலாம்னு முடிவு பண்ணிட்டாங்க. பேரண்ட்ஸ்கிட்ட வேற இடத்துல அலையன்ஸ் பார்க்கச் சொல்லிட்டாங்க. இப்ப ரெண்டு பேருக்குமே நல்ல இடம் செட் ஆகியிருக்கு. பொண்ணு தரப்பு ரொம்பவே உஷார். இதுவரைக்கும் அவங்க எடுத்துகிட்ட போட்டோ,ஃபேஸ்புக் கமெண்ட்ஸ் இன்ஸ்டா கிராம்ல போட்ட போட்டோ எல்லாத்தையும் அழிக்கணும்... எந்த சூழ்நிலையிலேயும் கல்யாணம் முடியற வரைக்கும் ஒருத்தரப்பத்தி ஒருத்தர் எங்கேயும் போட்டுக் கொடுத்துக்க மாட்டோம்…

அதோட ஒருத்தர் வாழ்க்கையில இன்னொருத்தர் குறுக்கிட மாட்டோம்னு கோயில்ல வச்சு சத்தியம் பண்ணித் தரணும்னு பேசி அதமாதிரியே பண்ணிக் கிட்டாங்க! அதோட எல்லாத்தையும் பக்காவா எழுதி அதுல ரெண்டுபேர் பேரண்ட்ஸும் சாட்சிகளோட கையெழுத்து போட்டு ஆளுக்கொரு காப்பி எடுத்திட்டு போறாங்க. சுருக்கமா இது நீங்க நினைக்கிற மாதிரி பெட்ரோத்தல் இல்ல. பிரேக் அப்..!’’நான் திகைத்து நின்றேன். ஊழியர் நகர்ந்துவிட, அவர் சொல்லிவிட்டுப் போனதின் தாக்கம் மனசு முழுக்க எதிரொலித்தது. அந்தச் சூழ்நிலையைக் கிரகித்துக்கொள்ள எனக்கு அவகாசம் தேவைப்பட்டது.

கையிலிருந்த பிரசாதத்தைப் பார்த்தேன். அலைபேசி ஒலித்தது. வீட்டி லிருந்து புஷ்பா. எடுத்தேன். “ஏங்க.. சாப்பிட வரலையா..?’’“சிவன் கோயில் பிரசாதம் கொடுத்தாங்கம்மா. இப்பதான் சாப்பிட ஆரம்பிச்சேன்...’’“பரவால்ல, அத அப்படியே வீட்டுக்கு கொண்டு வந்திடுங்க... சேர்ந்து சாப்பிடலாம். பொரியல் வறுவல் கூட்டு எல்லாம் பணணிருக்கேன். பாயாசம் வச்சிருக்கேன்...’’“என்ன விசேஷம்..?”ம்… அதுவா... நீங்க என்னை பொண்ணு பார்க்க வந்து இன்னையோட முப்பது வருஷம் முடியுது!

கல்யாண நாளை விட இந்த நாள்தான் எனக்கு ரொம்ப பிடிச்ச நாள். வருஷா வருஷம் நான் மட்டும் மனசுக்குள்ள செலிபிரேட் பண்ணிக்கிட்டு கோயிலுக்குப் போயிட்டு வருவேன். முப்பது வருஷமாச்சா... உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கணும்னு தோணுச்சி… அதுக்காகத்தான் பாயாசம் வச்சிருக்கேன்!’’கடந்த சில நிமிட நிகழ்வுகளை எல்லாம் மனதிலிருந்து அழித்துவிட்டு, புஷ்பாவின் பௌர்ணமி புன்னகையை மனதிற்குள் மலர வைத்தபடி வீடு நோக்கிப் புறப்பட்டேன்.  

* கதவைத் தடுத்த விண்கல்!

அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்தவர் கதவுத்தடுப்பாக பயன்படுத்தி வந்த கல், அரிய விண்கல்; இதுவரை பெறப்பட்ட கற்களிலேயே பெரியது (10 கி.கி) என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 1988ம் ஆண்டிலிருந்து மிச்சிகன் மனிதர், கதவுக்கு முட்டுக் கொடுத்து வந்த விண்கல்லின் இன்றைய மதிப்பு 1 லட்சம் டாலர்கள் (ரூ.73,86,000). ஸ்மித்சோனியன் அருங்காட்சியகம் இக்கல்லை விலைக்கு வாங்க முயற்சித்து வருகிறது.

* தங்கத்தில் சிக்கன்!

அமெரிக்காவில் நியூயார்க்கிலுள்ள பாப்பேயெஸ் உணவகம் அண்மையில் தனது 3 ஆயிரமாவது கிளையை கிராண்ட் தெருவில் தொடங்கியது. அதன் ஸ்பெஷலாக 24 காரட் சொக்கத்தங்க சிக்கனைப் பரிமாறி வாடிக்கையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.

* லங்கூர் டிரைவர்!

கர்நாடக பஸ்ஸில் லங்கூர் இன குரங்கு ஒன்று டிரைவராக வேலை செய்த வீடியோ இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லங்கூர் குரங்கு பஸ்ஸின் ஸ்டீரிங்கில் அமர்ந்திருக்க டிரைவர் அதன் தலையைத் தடவிக் கொடுத்து ஓட்டச்சொல்லும் திக் திக் வீடியோ வெளியாக... விதிமுறைகளை மீறிய டிரைவர் கர்நாடக அரசு போக்குவரத்துத்துறையால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

- திருவாரூர் பாபு