எழுதறப்ப சென்ஸாரை நினைக்கக் கூடாது!



இல்லத்தரசிகளின் மனங்களைக் கொள்ளை கொண்ட மெகா தொடர்களான ‘திருமதி செல்வம்’, ‘நாயகி’ ஆகியவற்றின் இணை திரைக்கதை ஆசிரியர்... ‘பாசமலர்’, ‘இளவரசி’, ‘தியாகம்’, ‘லட்சுமி’, ‘சிவசக்தி’, ‘கேளடி கண்மணி’ ஆகிய சீரியல்களின் ஸ்கிரிப்ட் ரைட்டர் என அசத்துகிறார் அமல்ராஜ். ‘‘பீட்டர்செல்வகுமார் சார்கிட்ட நான் சேர்ந்த புதுசுல டைட்டில் கார்டுல ‘திரைக்கதை பயிற்சி’னு என் பெயரை போட்டிருப்பாங்க. ரெண்டு வருஷங்களுக்குப் பிறகு அது ‘திரைக்கதை உதவி’னு ஆச்சு. அப்புறம் சில வருஷ அனுபவங்களுக்குப் பிறகு ‘திரைக்கதை ஒத்துழைப்பு’, ‘திரைக்கதை ஒருங்கிணைப்பு’னு புரொமோஷன் கொடுத்தார்.

அவர்கிட்ட இருந்து ‘இணை திரைக்கதை’னு பெயர் வாங்கறதுக்குள்ள ஒன்பது வருஷங்கள் ஓடிடுச்சு! ‘நடக்காத விஷயத்தை லாஜிக்கோட எழுதணும்’னு பீட்டர் செல்வகுமார் சார் சொல்வார். அதேமாதிரி ‘பேப்பரையும் பேனாவையும் எடுக்கிறப்ப சென்ஸாரைப் பத்தி யோசிக்காத... மொத்த ஸ்கிரிப்ட்டையும் எழுதி முடிச்சுட்டு அப்புறம் சென்ஸாருக்குத் தகுந்த மாதிரி எழுது’னு கட்டளையிட்டார். இப்ப வரை அதைத்தான் கடைப்பிடிக்கறேன்.‘சினிமாவை உண்மையா நேசிக்கறவங்களை அது எப்பவும் கைவிடாது’ என்பது அவர் தாரக மந்திரம்.

அது உண்மைனு இப்ப உணர்றேன்...’’ என குரு வணக்கத்துடன் பேச ஆரம்பிக்கும் அமல்ராஜ், சினிமாவில் ரகுவரன் போல் வில்லனாக வேண்டும் என்றுதான் சென்னைக்கு வந்திருக்கிறார். ‘‘இந்தத் துறைல நான் இருக்கக் காரணம் எங்கப்பாவோட கனவு. சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் சிவகிரி. அப்பா இலட்சுமணசாமி என்கிற சிவமணி. ஸ்கூல் வாத்தியார். அம்மா வாசுகியும் ஸ்கூல் டீச்சர். வீட்ல நான் மூத்த பையன். எனக்கு சித்ரானு ஒரே தங்கை. அப்பா ஆசிரியராகறதுக்கு முன்னாடி ஊர்ல சமூக நாடகங்கள் நிறைய இயக்கியிருக்கார்.

அவர் டைரக்ட் பண்ற டிராமாக்கள்ல கண்டிப்பா ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சி இருக்கும். அதுல எனக்கு சின்ன வயசு ஹீரோ ரோல் கொடுப்பார். கே.பாக்யராஜ் சார் மாதிரி வரணும்னு அப்பா ஆசைப்பட்டார். ‘மௌனகீதங்கள்’ பட கதை விவாதக் குழுவுல கூட இருந்தார். அப்புறம் குடும்ப சூழ்நிலை காரணமா ஆசிரியர் ஆனார். ஆனாலும் நல்ல நாடகங்களை இயக்கிட்டிருந்தார். அதுல எல்லாம் நானும் நடிப்பேன். கைதட்டல்கள் கிடைக்கும். இதெல்லாமே என் சினிமா ஆசைக்கு உரமா அமைஞ்சது. என் நண்பர் சிவகுமார், சிவகிரி பஸ்ஸ்டாண்ட் பக்கம் ‘கோகுலம் மியூசிக்கல்’னு கடை வச்சிருந்தார்.

இன்னொரு நண்பர் ஆறுமுகம். நாங்க மூணு பேரும் சேர்ந்து ‘கோகுலம் நண்பர்கள் நாடகக் குழு’னு ஒரு டீம் அமைச்சு ஊர் ஊரா டிராமா போட்டோம். அரச்சனூர்ல நடந்த ஒரு நாடகத்துல என் நடிப்பைப் பார்த்துட்டு மக்கள் ‘சிறந்த வில்லன் நடிகர்’னு பாராட்டினாங்க. போதாதா? நடிகர் ரகுவரன் மாதிரி ஆகணும்னு ஆசை வந்து சென்னைக்கு கிளம்பத் தயாரானேன். ஆனா, தங்கச்சி கல்யாணம் நம்மால தடைப்பட்டுடக் கூடாதுனு அவளுக்கு திருமணம் ஆகற வரை காத்திருந்து அப்புறம் சென்னைக்கு வந்தேன்.

புறப்படறப்ப, ‘வாழ்ந்தால் சினிமாலதான்டா. இல்லைனா வங்கக்கடல்தான்டா’னு நண்பர்கள்கிட்ட வீர வசனம் பேசினது இப்பவும் நினைவுல இருக்கு!’’ வாய்விட்டுச் சிரித்த அமல்ராஜ், சின்னத்திரையில் என்ட்ரி ஆனது தனிக்கதை. ‘‘சென்னை எம்ஜிஆர் நகர்ல பத்துக்கு பத்து சைஸ் ரூம்ல தங்கியிருந்தேன். சோத்துக்குக் கூட வழியில்லாம கஷ்டப்பட்ட நாட்கள் அது. நடிக்க வாய்ப்பு தேடிப் போனா, ‘போட்டோல போன் நம்பர் எழுதிக் கொடுத்துட்டு போங்க’னு சொல்லிடுவாங்க. மொபைல் போன் வராத காலம். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க குறைஞ்சது பத்து ரூபாயாவது வேணும்.

லேண்ட்லைன் போனும் இல்ல... பத்து ரூபாய்க்கும் வழியில்ல. என்ன செய்ய..? எங்க ஊர்க்காரர் மூர்த்தி, இங்க எஸ்.டி.டி. பூத் வைச்சிருந்தார். அவருக்கு உதவியா இருப்பேன். அதனால தன் கடை நம்பரை கொடுக்கச் சொன்னார். அப்படி கொடுத்தும் ஒரு வாய்ப்பும் வரலை. மெல்ல மெல்ல சினிமா உலகம் புரிய ஆரம்பிச்சது. மனம் தளர்ந்து போறப்ப எல்லாம் ஊர்ல இருந்து தங்கச்சி போன் செஞ்சு ஆறுதல் சொல்வா. அந்த நேரத்துல அப்பாவின் நண்பர் சித்து என்னை ‘சக்தி’ சீரியல் இயக்குநர் ஜெகன் சார்கிட்ட உதவியாளரா சேர்த்துவிட்டார். அங்கதான் நண்பர் வே.கி.அமிர்தராஜ் நட்பு கிடைச்சது.

அவர் என்னை பீட்டர் செல்வகுமார் சார்கிட்ட சேர்த்துவிட்டார். ‘சொந்தம்’, ‘குலவிளக்கு’, ‘வாழ்க்கை’, ‘வாழ்ந்து காட்டுகிறேன்’, ‘ஆசை’, ‘சொர்க்கம்’னு வரிசையா அவர் கூட ஒர்க் பண்ணினேன். பீட்டர் சாரோட மறைவுக்குப் பிறகு ‘சொர்க்கம்’ சீரியலுக்கு தனி ரைட்டரா எழுதற வாய்ப்பு கிடைச்சது. ஆனா, அதுக்கான பக்குவம் என்கிட்ட இல்லைனு எனக்கே தோணினதால அந்த வாய்ப்பை தவற விட்டேன். ஆனாலும் கோ-ரைட்டரா அதுல ஒர்க் பண்ணினேன். இந்த நேரத்துலதான் எனக்குத் திருமணமாச்சு.

மனைவி வனிதா, எங்க பக்கத்து ஊர்க்காரர். ‘சொர்க்கம்’ சீரியல் முடிஞ்சதும் ‘வேதம் புதிது’ கண்ணன், தேவிபாலானு நிறைய ரைட்டர்களின் கதை விவாதக் குழுவுல கலந்துகிட்டேன்...’’ என்ற அமல்ராஜ், மனைவி வந்த நேரமே தனக்கு நல்ல நேரம் என்கிறார். ‘‘என் முன்னேற்றத்துல எப்பவும் அக்கறை காண்பிப்பவர் நண்பர் வே.கி.அமிர்தராஜ். 20 வருஷ நட்பு எங்களுக்குள்ள. ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, ‘நம்ம குமரனுக்கு விகடன்ல கதை ஓகே ஆகியிருக்கு. ‘திருமதி செல்வம்’ சீரியல் பண்றார். அதோட ஸ்கிரிப்ட்டை நாம ரெண்டு பேரும் சேர்ந்து எழுதுவோம்’னு சொல்லி என்னையும் இணைச்சுகிட்டார்.

அந்தத் தொடர்ல எங்களுக்கு நல்ல பெயர் கிடைச்சது. எங்க வாழ்க்கையோட திருப்பு முனைனே சொல்லலாம். கலைஞர் ஐயா கையால ‘சிறந்த திரைக்கதையாசிரியர்’ விருதும் வாங்கினேன். இந்த சந்தோஷத்தைப் பார்க்க அப்பா இல்லையேனு அப்பவும் சரி இப்பவும் சரி வருத்தப்படறேன். திருமணத்துக்கு அப்புறம் முதல்ல நான் எழுதின சீரியல் ‘லட்சுமி’. அடுத்து ‘பாசமலர்’, அப்புறம் ‘திருமதி செல்வம்’. தொடர்ந்து ‘இளவரசி’, ‘தியாகம்’, ‘சிவசக்தி’, ‘கேளடி கண்மணி’னு தனியா எழுதவும் வாய்ப்புகள் வந்தது; வருது.

ஒரு சின்ன இடைவெளிக்கு அப்புறம் இப்ப மறுபடியும் அமிர்தராஜ் சாரோட சேர்ந்து ‘நாயகி’க்கு ஸ்கிரிப்ட் எழுதிட்டிருக்கேன். இடையிடைல சின்ன ரோல்கள்லயும் நடிக்கிறேன்! ஸ்கிரிப்ட் எழுதறப்ப மனைவிகிட்ட கருத்து கேட்பேன். அவங்க சரியா விமர்சனம் பண்ணுவாங்க. ஊரில் எங்க ‘கோகுலம் நண்பர்கள் குழு’ இப்பவும் நாடகங்கள் நடத்திட்டிருக்காங்க. அதுக்கான ஸ்கிரிப்ட்டை இப்பவும் நான்தான் எழுதறேன்!’’ பூரிக்கும் அமல்ராஜ், கன்னடத்திலும் மூன்று சீரியல்கள் எழுதியிருக்கிறார். அமல்ராஜ் - வனிதா தம்பதியினர் தமிழ்ப்பற்றுமிக்கவர்கள். எனவே, மகளுக்கு பூங்குழலி என்றும், மகனுக்கு கவிநயன் என்றும் அழகு தமிழில் பெயர் வைத்திருக்கிறார்கள்!

- மை.பாரதிராஜா
படங்கள் ஆ.வின்சென்ட் பால்