ரத்த மகுடம் 26



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘நேற்றிலிருந்து உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்... வாருங்கள்...’’ என்று அந்த பாலகன் அழைத்தபிறகும் கரிகாலன் அசையாது சிலையாக நின்றான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது.
கரிகாலனின் பார்வை அந்த பாலகனுக்குப் பின்னால் இருந்த சுவரில் வரையப்பட்டிருந்த சிவகாமியின் சித்திரத்திலேயே நிலைபெற்றிருந்தது. உற்றுப் பார்த்தபிறகுதான் அந்த ஓவியம் சுவரில் வரையப்படவில்லை என்பதும், சுவரில் அடுக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகளின் மேல் அது தீட்டப்பட்டிருக்கிறது என்பதும் புரிந்தது.

சுவடிகளை வரிசையாக சுவரை ஒட்டி சுவர் போலவே அடுக்கிவிட்டு பிறகு அவற்றின் மேல் சித்திரத்தை வரைந்திருக்கிறார்கள். ஆக, சுவடிகள் எடுக்கப்பட எடுக்கப்பட ஓவியம் கலையும்!மூன்றடி நடந்தபிறகும் தன்னை கரிகாலன் பின்தொடரவில்லை என்பதை உணர்ந்த அந்த பாலகன் புருவங்கள் சுருங்க நின்று திரும்பினான்.

விழியை அகற்றாமல் கரிகாலனின் பார்வை வேறு எங்கோ இருப்பதைக் கண்டு அத்திசையை நோக்கியவனின் முகத்தில் புன்னகை அரும்பியது. ‘‘சுவடிகளைப் பார்க்கிறீர்களா..?’’ என்று கேட்டான்.கரிகாலன் பதிலேதும் சொல்லவில்லை.பாலகன் மீண்டும் அவன் அருகில் வந்தான். ‘‘அவை மனு ஸ்மிருதிகள்...’’கரிகாலனிடம் இப்போதும் அசைவில்லை.  

பாலகன் அவனைத் தொட்டு நடப்புக்கு அழைத்து வந்தான். ‘‘உங்களைத்தான்...’’‘‘என்ன..?’’
‘‘அவை மனு ஸ்மிருதிகள் என்றேன்...’’ பாலகனின் பார்வை அடுக்கப்பட்டிருந்த சுவடிகளின் மீதே பதிந்திருந்தது. ‘‘வணிகராக இருப்பதால் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதனால்தான் வியப்புடன் பார்க்கிறீர்கள்...’’தனது நிஜ ஸ்வரூபத்தை இன்னமும் பாலகன் அறியவில்லை என்பதும், வணிகனாகவே தன்னை நினைக்கிறான் என்பதும் கரிகாலனுக்குப் புரிந்தது. அப்படியானால் ‘உங்களை எதிர்பார்த்துதான் காத்திருக்கிறோம்’ என்று ஏன் அவன் கூற வேண்டும்..? எனில் ஏதோ ஒரு வணிகனை நேற்று முதல் எதிர்பார்த்து யாரோ காத்திருக்கிறார்கள். அந்த ஏதோ ஒரு வணிகன் யார்... அவனுக்காகக் காத்திருப்பவர் யார்..?

விடைகளை அறிய ‘‘ஆம், வியப்பாகத்தான் இருக்கிறது...’’ என்றபடி அந்த பாலகனிடம் பேச்சுக் கொடுத்தான் கரிகாலன்.
‘‘முதன் முதலில் பார்க்கும் எல்லோருக்குமே வியப்புதான் ஏற்படும்...’’ பாலகன் புன்னகைத்தான்.
‘‘இவை மனு ஸ்மிருதிகள் என்றாய்...’’‘‘ஆம்...’’
‘‘ஸ்மிருதிகள் என்பது பன்மை அல்லவா..? அது எப்படி சாத்தியம்..?’’
‘‘ஏன் சாத்தியமில்லை வணிகரே..?!’’

‘‘மனு ஒருவர்தானே..? அவர் எழுதியது ஒன்று அல்லது இரண்டு சுவடிகள்தானே இருக்கும்..? இங்கோ நூற்றுக்கணக்கில் அடுக்கப்பட்டிருக்கிறதே...’’ பாலகனின் முகத்தைப் பார்த்தபடி இக்கேள்வியை கரிகாலன் எழுப்பினான்.பாலகனின் முகத்தில் எந்த சலனமும் ஏற்படவில்லை. அதே மாறா புன்னகையுடன் கரிகாலனின் நயனங்களை நேருக்கு நேர் சந்தித்தான். ‘‘உங்களைப் போன்றவர்கள் அப்படித்தான் நினைப்பார்கள்...’’
‘‘அப்படியா..? உண்மை வேறா..?’’

‘‘ஆம் வணிகரே! மனு என்னும் வேர்ச் சொல்லில் இருந்துதான் மனுஷ்யன், மனிதன் போன்ற சொற்கள் உருவாகின...’’
‘‘ம்...’’‘‘உண்மையில் மனு என்பது ஒரு பதவி!’’
‘‘பதவியா..?’’

‘‘ஆம் வணிகரே... அரசர் பதவி போல் மனு என்பதும் ஒரு பதவி. பிரம்மனின் ஒரு பகலான கல்பத்தில் பதினான்கு மனுக்கள் ஆட்சிபுரிவதாக பெரியவர்கள் எழுதிய குறிப்புகளில் காணப்படுகின்றன.

ஒரு மனுவின் ஆட்சிக் காலம் மனுவந்தரம் எனப்படும். இப்போது நடைபெறுகின்ற சுவேத வராக கற்பத்தில் சுவயம்பு, சுவாரோசிஷம், உத்தமம், தாமசம், ரைவதம், சாக்சூசம், வைவசுவதம், சாவர்ணி, தக்ச சாவர்ணி, பிரம்ம சாவர்ணி, தர்ம சாவர்ணி, ருத்திர சாவர்ணி, ரௌசிய தேவ சாவர்ணி, இந்திர சாவர்ணி... என பதினான்கு மனுக்கள் இருப்பதாக ஐதீகம்!’’

‘‘ஓஹோ...’’ வெகு கவனத்துடன் தன் வியப்பை கரிகாலன் வெளிப்படுத்தினான். தனக்கு இவை எல்லாம் முன்பே தெரியும் என்பதை எந்தக் காரணம் கொண்டும் அந்த பாலகன் ஊகித்துவிடக் கூடாது என்பதில் அக்கறை செலுத்தினான். ‘‘அத்தனை மனுக்களும் எழுதிய ஸ்மிருதிகள் இங்கு இருப்பதால்தான் பன்மையில் குறிப்பிடுகிறாயா..?’’

‘‘ஆம்...’’ சொல்லும்போதே பாலகனின் முகத்தில் பெருமிதம் தாண்டவமாடியது. எதுவும் தெரியாதவர்கள் ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கும்போது அதை விளக்க முற்படுபவர்களின் முகத்தில் பரவசம் தோன்றுமே... அப்படியொரு உணர்ச்சி அந்த பாலகனின் முகம் முழுக்க நிரம்பி வழிந்தது. கண்களில் கனவு விரிய, அடுக்கப்பட்டிருந்த சுவடிகளைப் பார்த்தபடியே விளக்க முற்பட்டான்.

‘‘இவை எல்லாம் தட்சசீல கடிகையில் இருந்து பிரதி எடுக்கப்பட்டு இங்கு வந்து சேர்ந்தவை! இப்போது பரத கண்டத்திலேயே ஒருசில கடிகைகளில்தான் முழு மனு ஸ்மிருதிகளின் சுவடிகளும் இருக்கின்றன. அதில் காஞ்சி கடிகை முதன்மையானது...’’
‘‘அப்படியா..?’’

‘‘ஆம் வணிகரே... இவை எல்லாம் பொக்கிஷங்கள். அதனால்தான் இவற்றைப் பயில கடல் கடந்தும் பல தேசத்தைச் சேர்ந்தவர்கள் காஞ்சிக்கு வருகை தருகிறார்கள். மாணவர்களாக இங்கு தங்கி கல்வி பயில்கிறார்கள்!’’‘‘அப்படியானால் நீயும் ஒரு தேசத்தின் இளவரசன்தான் என்று சொல்...’’

வெட்கத்துடன் அந்த பாலகன் தலைகுனிந்தான். ‘‘கடிகையில் கற்பவர்கள் அனைவருமே மாணாக்கர்கள்தான். இளவரசன், சாமான்யன் எனப் பாகுபாடு இங்கில்லை...’’

‘‘அதாவது எந்த தேசத்து இளவரசன் என்பதை என்னிடம் சொல்ல மாட்டாய்... நீங்களும் அது குறித்து கேட்காதீர்கள் என்கிறாய்... அப்படித்தானே..?’’
பாலகன் புன்னகைத்தான்.‘‘சரி... இதற்காவது பதில் சொல்... மனிதர்கள் எல்லோரும் சமம்தானே..? அப்படியிருக்க அவர்களுக்குள் பாகுபாட்டை வரையறுக்கும் மனு ஸ்மிருதிகள் போன்றவை தேவையா..? நாளை நாட்டை ஆளப் போகும் நீ இதுபோன்ற ஸ்மிருதிகளைப் படித்தால் உன் தேச மக்களுக்குள் பிளவைத்தானே உண்டாக்குவாய்..?’’

‘‘அப்படியல்ல வணிகரே... இவை எல்லாம் அந்தந்த காலகட்டத்து சமூக நிலையை வரையறுப்பவை. இவற்றை அப்படியே ஏற்க வேண்டும் என்றில்லை...’’‘‘பிறகு ஏன் கற்கிறாய்..?’’
‘‘இருப்பதை அறிந்தால்தானே இல்லாததை நடைமுறைப்படுத்த முடியும்!’’
‘‘சபாஷ்... உன்னைப் போன்ற மன்னன் கிடைக்க உன் தேச மக்கள் புண்ணியம் செய்திருக்கிறார்கள்...’’
பதில் சொல்லாமல் அந்த பாலகன் தன் தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.

அவனைப் பார்த்தபடியே கரிகாலன் தூண்டிலை வீசினான். ‘‘இங்கு அடுக்கப்பட்டிருக்கும் சுவடிகள் அனைத்துமே ஸ்மிருதிகளா..?’’
‘‘இல்லை வணிகரே!’’ சட்டென பாலகன் தன் தலையை உயர்த்தினான். ‘‘வலப்பக்கம் இருப்பவைதான் ஸ்மிருதிகள்...’’
‘‘அப்படியானால் இடப்பக்கம் இருப்பவை..?’’

‘‘தர்ம சூத்திரங்கள்! இதை தர்ம சாஸ்திரங்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு. மூலச் சட்டங்கள் பலவும் அவற்றின் உரைகள், விளக்கங்கள், வியாக்கியானங்களுடன் எழுதப்பட்டிருக்கின்றன. வரி விதித்தல், சொத்துக்கள், குடும்பங்கள், தனி நபர் பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றிய சட்ட திட்டங்களும் தர்ம சூத்திரத்தில் உண்டு...’’

‘‘கவுடில்யரின் அர்த்த சாஸ்திரமா..?’’ கரிகாலனின் கண்கள் கூர்மையடைந்தன.
‘‘அப்படி பொதுப்படுத்த முடியாது வணிகரே!’’
‘‘புரியவில்லை...’’‘‘உதாரணமாக சட்டத்துறை ஸ்மிருதிகளை நாரதர், பிரஹஸ்பதி, காட்யாயனா என மூவர் எழுதியிருக்கிறார்கள்!’’
‘‘ம்...’’

‘‘இதில் யாக்ஞவல்கியர், நாரதர், பிரஹஸ்பதி ஆகியோர் மனுவைத் தழுவி எழுதியிருக்கிறார்கள்!’’
‘‘இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவை எல்லாம் இதில் அடங்குமா..?’’
‘‘வணிகரே! தர்ம சூத்திரங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள்... ஆகிய அனைத்தும் மத அடிப்படையில், பிராமணீய சம்பிரதாயத்தில் உருவானவை. கவுடில்யரின் அர்த்த சாஸ்திரம் இதிலிருந்து வேறுபட்டது...’’

‘‘எந்த வகையில்..?’’
‘‘அது மதச் சார்பைக் குறைத்து உலகியலுடன் ஒட்டியது. எனவேதான் இதிலிருந்து ஏராளமான இலக்கியங்கள் கிளைவிட்டுள்ளன...’’
‘‘அப்படியா..?’’ கரிகாலன் தன் வியப்பை வெளிப்படுத்தினான்.‘‘ஆம் வணிகரே! 15 அதிகாரங்களும் 180 இயல்களும் அடங்கிய அர்த்த சாஸ்திர நூல் பொருளியல், சமுதாய இயல், அரசியல்... என எல்லா வகையான துறைகளையும் உள்ளடக்கியது.

என்றாலும் பெரும்பாலான பகுதிகள் அரசாங்க நிர்வாகத்தைக் குறித்தே விளக்குகிறது. அது ஆட்சியின் ஏழு பிரிவுகளைக் கூறுகிறது. அரசருக்குரிய பயிற்சிகள், கடமைகள், அவரிடம் காணப்படும் குறைபாடுகள், அமாத்யர் - மந்திரிகள் ஆகிய அலுவலர்களை நியமிக்கும் முறைகள், அவர்களுடைய கடமைகள், சொத்துச் சட்டங்கள், குற்ற இயல் சட்டங்கள், வணிகர் குழு... இவற்றை எல்லாம் அர்த்த சாஸ்திரம் தெரிவிக்கிறது...’’

‘‘அடடே... இது மட்டும்தானா..?’’
‘‘இன்னும் இருக்கிறது! ஓர் அதிகாரம் முழுவதும் குடியரசுகளைப் பற்றிச் சொல்கிறது. மூல அரசுகளுக்கிடையே நிலவும் உறவுகளை விவரிப்பதுடன் இராணுவ அமைப்பைப் பற்றியும் கூறுகிறது. போரில் வெற்றி பெறுவதற்கான உபாயங்களையும், பிடித்துக் கொண்ட பகுதி களில் வாழும் மக்களிடையே செல்வாக்கு பெறக் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் சொல்கிறது...’’
‘‘இதையெல்லாம் சாளுக்கிய மன்னர் படித்திருப்பார் இல்லையா..?’’

‘‘அவர் மட்டுமல்ல... இந்த பரத தேசத்திலிருக்கும் அனைத்து
ராஜ்ஜிய மன்னர்களும் கசடற இவற்றைக் கற்றிருப்பார்கள். எதற்காகக் கேட்கிறீர்கள் வணிகரே..!’’

‘‘தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன் தம்பி... மேலே சொல்...’’‘‘இப்படி சகலத்தைக் குறித்தும் அர்த்த சாஸ்திரம் விளக்கினாலும் அதன் முக்கியப் பகுதி அரசருக்கு உயர் பிறப்பு கற்பிப்பதையும், ஏராளமான சமூக பொருளாதாரக் கடமைகளை அரசருக்கு ஒதுக்கி வைத்திருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது...’’
‘‘ஆக, இவை அனைத்தும்தான் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தச் சுவடிகளின் இடப்பக்கத்தில் இருக்கிறதா..?’’

‘‘ஆம் இல்லை என இரண்டு விதமாகவும் சொல்லலாம்...’’ கண்களைச் சிமிட்டினான் பாலகன்.
‘‘என்னப்பா இப்படிச் சொல்லிவிட்டாய்...’’‘‘அலுத்துக் கொள்ளாதீர்கள் வணிகரே... தர்ம சாஸ்திரங்கள் இடப்பகுதியில் அடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த தர்ம சூத்திரங்களில் அர்த்த சாஸ்திரமும் அடங்கும்...’’‘‘அப்படியானால்..?’’

‘‘பெயர் உணர்த்துவது போலவே அர்த்த சாஸ்திரம் செல்வத்தைப் பற்றி மட்டுமின்றி தண்ட நீதி என்ற அரசியல் சாஸ்திரம் பற்றியும் விவரிக்கிறது வணிகரே! ஐந்து வகையான கொள்கைகளும் பதின்மூன்று தனிப்பட்ட ஆசிரியர்களையும் கவுடில்யர் இந்த நூலில் மேற்கோள் காட்டுகிறார்...’’
‘‘பதின்மூன்று ஆசிரியர்களா தம்பி..?’’

‘‘ஆம் வணிகரே! தனக்கு முன் வாழ்ந்த பதின்மூன்று ஆசிரியர்கள் எழுதிய நூல்களை அர்த்த சாஸ்திரத்தில் கவுடில்யர் சுட்டிக் காட்டுகிறார்... இந்த பதின்மூன்று ஆசிரியர்களில் சிலர் மகாபாரதம் சாந்தி பர்வத்திலும் மேற்கோள் காட்டப்படுகிறார்கள். கிடைப்பதற்கரிய அந்த பதின்மூன்று ஆசிரியர்களின் நூல்களும் நம் கடிகையில் இருக்கின்றன... இடப்பக்கத்தில் அவையும் அடுக்கப்பட்டிருக்கின்றன!’’

‘‘ஆச்சர்யமாக இருக்கிறது! காஞ்சி கடிகையை ஏன் அனைவரும் புகழ்கிறார்கள் என்பது இப்போது புரிகிறது...’’ சொன்ன கரிகாலன் மீன் சிக்கிவிட்டது என்ற நம்பிக்கையுடன் வீசிய தூண்டிலை  இழுத்தான். ‘‘தம்பி...’’‘‘சொல்லுங்கள் வணிகரே...’’‘‘எதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த சுவடிகளின் மேல் ஒரு பெண்ணின் உருவ ஓவியம் ஒன்றை தீட்டியிருக்கிறார்கள்..?’’ என்றபடி அந்த பாலகனின் கண்களை உற்றுப் பார்த்தான்.

கரிகாலன் சற்றும் எதிர்பாராத பதிலை அந்த பாலகன் சொன்னான்... ‘‘ஓவியமா... அதுவும் பெண்ணின் உருவமா... என்ன வணிகரே சொல்கிறீர்கள்! அப்படி எந்த சித்திரமும் இங்கு காணப்படவில்லையே!’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்