குயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி!



‘‘இன்றைய நடப்பை முன்னிருத்துகிற படம்தான் ‘பாரிஸ் பாரிஸ்’. இந்தியில் கங்கனா ரணாவத்துக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த ‘குயின்’ படத்தின் தமிழ் வடிவம்தான் இது. எதிர்பார்த்ததுக்கு மேலான படமாக வந்திருக்கு. உங்களோடு பேசுகிற இந்தத் தருணத்தில் நீங்கள் இதை உணரக்கூடும்...’’ யதார்த்தமாகப் பேசுகிறார் இயக்குநர் ரமேஷ் அரவிந்த். அனுபவத்தின் நிழலில் அமர்ந்து சிநேகம் ததும்பும் கண்களோடு சாந்தமாக உட்கார்ந்து பேசுகிறார்.

இந்தியில் எக்கச்சக்க ஹிட்டடித்த படம்...இங்கே ஆண், பெண் இருபாலரா இருக்கோம். ஆனால், அவ்வளவு வேறுபாடுகள். உடம்பிலிருந்து மனசு வரைக்கும் ஆயிரத்தெட்டு வித்தியாசம். பெண் மனசோட ஆழம் எவருக்கும் புரிஞ்சதில்லை. ஆண், பெண் இரண்டு தரப்பு பிரச்னைகளும் அவ்வளவு இருக்கு.

முன்னாடி காதல் மகோன்னதமாக இருந்தது. உருகி, உருகிக் காதலிப்பாங்க. இப்போ காதலைவிட பிரேக்-அப் அவ்வளவு சுலபமாகப் போச்சு. இதில் காதல், பிரேக்-அப் தாண்டி, ஆண் - பெண் நடுவில் ஒரு ஹானஸ்ட் நட்பு சாத்தியம்னு சொல்றோம். ஓர் ஆண் அருமையான நண்பராகி பெண்ணுக்கு உதவ முடியும்னு சொல்ற படம்.

எல்லாத்துக்கும் மேலே நீங்கள் உங்களை நம்பணும். உங்களை நம்பிட்டா, உலகமே எதிர்த்தால்கூட ஒண்ணுமே இல்லைன்னு சொல்றோம். பெண்ணுரிமை, புதுமைப்பெண் அதெல்லாம் விடுங்க, இன்றைய பெண்களின் நடப்பு மனது எப்படியிருக்குன்னு சொல்றதும் ‘பாரிஸ் பாரிஸ்’.

தலைப்பிலேயே ஒரு டுவிஸ்ட் இருக்கு. ஒரு பாரிஸ் காதலின் மாநகரம். இன்னொரு பாரிஸுக்கு அர்த்தத்தை படம் பார்க்கிறவரை பொறுத்திருங்க.
படம் எப்படி வந்திருக்கு..?

‘குயின்’ படத்தை ஒரு ஆடியன்ஸா பார்த்தபோது ரொம்பவே ரசித்தேன். நானே ‘கேளடி கண்மணி’, ‘வசந்தகாலப் பறவை’னு ரொமாண்டிக் படமெல்லாம் செய்திருக்கேன். அது ஒரு யுகம். காதலுக்காகவே காத்திருந்த காலம். ‘காதலுக்கு தினம் ஏது. தினமும்’னு ஒரு கவிதைகூட உண்டு. மனுஷனோட சந்தோஷம், துயரம் இரண்டுமே உறவுகள்தான். அது உணர்வுபூர்வமானது.

அன்பு, காதல் எல்லாத்தையும் செஸ் விளையாட்டு மாதிரி ஆக்கிட்டா, காய் நகர்த்தல்லயே நம்ம காலம் முடிஞ்சிடும். உறவுகளை உணர்வோம். அது எப்படின்னு சொல்கிற படமாகவும் ‘பாரிஸ் பாரிஸ்’ இருக்கும். இப்பெல்லாம் ‘உனக்கும், எனக்கும் சரியா வர்லை...’னு கை குலுக்கிட்டு ஈஸியாகப் போயிடுறாங்க. இதுதான் படத்தின் அடித்தளம்.

நாளைக்கு திருமணம். இன்னிக்கு அந்தப் பையன், சரியில்லை, விலகிடலாமேன்னு சொல்றான். அந்த இடத்தில் ஆரம்பித்து அந்தப்பொண்ணு என்ன பண்ணும் என்பதுதான் படம்.இப்படி ஒருத்தன் சொல்லிட்டா ஒண்ணு, அந்தப் பொண்ணு மூலையில் உட்கார்ந்திட்டு அழுதுகிட்டே இருக்கலாம் அல்லது ‘இது லைஃப், பாதைகள் இல்லையென்று கவலை வேண்டாம், நீ நடந்தால் அது பாதை’னு போகலாம்.

அந்தப் பொண்ணு, என்ன செய்தால் சரியாக இருக்கும்னு சொல்லியிருக்கோம். பரமேஸ்வரி என்கிற மதுரைப்பொண்ணு விருதுநகரிலிருந்து கிளம்புகிறாள். பாரிஸ், ஏதென்ஸ்னு ஆரம்பிச்சு உலகத்தையே சுத்திப்பார்க்கப் போகிறாள். அவள் இதுக்கு முன்னாடி விருதுநகரை விட்டுக் கூட தாண்டினதில்லை. அப்படியொரு பெரிய பயணமும் இதில் கலந்திருக்கு.

காஜலுக்கு இது முக்கியமான படமில்லையா?

அவங்களுக்கு இந்தப்படம் பெரிய வளர்ச்சி. பாரதிராஜா, பாலசந்தர் படத்தில் ஒரு பொண்ணுக்கு நல்ல ரோல் இருக்குமில்லையா, அப்படியிருக்கும். ‘அவள் ஒரு தொடர்கதை’ சுஜாதா மாதிரி, ‘சந்திரமுகி’ ஜோதிகா மாதிரி நிலைச்சு நிற்கிற ரோல். இயக்குநரா என்ன எதிர்பார்த்தேனோ அதைக் கொடுத்தாங்க. 150 படத்திற்கு மேல் ஹீரோவாக நடிச்சிட்டேன். படங்கள் டைரக்ட் பண்ணியிருக்கேன். ஆனால், பாலுமகேந்திரா, பாலசந்தர் சார் படங்களில் நடிச்சதெல்லாம் அனுபவம். அது மாதிரி காஜலும் எங்கிட்ட ஒரு ஸ்டூடண்ட் மாதிரி இருந்தாங்க.

கங்கனா இந்தப்படத்திற்கு நேஷனல் அவார்டு வாங்கிட்டாங்க. அதற்கு ஈடு கொடுக்கணும் என்ற ஆசையோடும் அவங்களை ரதிபலிச்சிடக்கூடாதுங்கிற எண்ணத்திலும் அருமையாக நடிச்சாங்க. ரீமேக்னா அந்தக் கதையை மட்டும்தான் ரீமேக் பண்ணணும். அதை அப்படியே எடுக்கிறது இல்லைன்னு நான் நம்புவேன்.

தமிழச்சி தங்கப்பாண்டியன்தான் ஸ்கிரிப்ட் ரைட்டர். இதை ஒரு பெண்ணால் இன்னும் நல்லபடியாக எழுத முடியும்னும் நினைச்சேன். அவங்க பார்வையில் வரும்போது இன்னும் சில பரிமாணம் கிடைக்கலாம்னு நம்பியது சரியாக வந்திருக்கு. பாடல்களை பார்வதியும், விவேகாவும், மோகன்ராஜனும் எழுதியிருக்காங்க.

அமித் திரிவேதி மியூசிக் செய்திருக்கார்போல...இந்தப்படத்தின் நாலு வெர்ஷனுக்கும் அமித் திரிவேதிதான் மியூசிக். இந்திய அளவில் வேண்டப்படுகிற மியூசிக் டைரக்டர். அமீர்கான் படத்திற்கும் அவர்தான். ‘குயின்’ படத்தை கன்னடம் - தமிழில் நான் இயக்குகிறேன். தெலுங்கு, மலையாளத்திற்கு வேறு இருவர்.

கன்னடம், தமிழ் என இரண்டுக்கும் தனித்தனி ஹீரோயின்கள். இருவரும் அற்புதமாக உணர்வுகளை படத்தில் கொண்டு வருவதற்கு வழிவிட்டேன். ஒருத்தர் மாதிரி இன்னொருத்தரை செய்ய வைக்காமல், அவர்களின் சுயத்திற்கு அனுமதித்தேன். பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி, ரஷ்யன்... நடிகர்களையும் கையாண்ட அனுபவம் சந்தோஷமாக இருந்தது.

இந்தியாவின் முக்கியமான பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். ஒவ்வொரு மொழியிலும், ஒரே சூழலில் வெவ்வேறு பாடகர்கள் பாடக்கேட்பது பேரனுபவம். எட்டு பாடல்களுமே கோலாகலமாக இருக்கும். பிரமாண்டமான வகையில் எல்லா மொழிகளிலும் மனுகுமரன் தயாரிக்கிறார். வலுவான கதையும், உணர்ச்சியும்தான் ‘பாரிஸ் பாரிஸ்’க்கான பலம்.

நா.கதிர்வேலன்