தல புராணம்



மெட்ராஸின்  குடிநீர் கதை!  

இன்றைய ெசன்னையின் குடிநீர் தேவையை செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் என நான்கு ஏரிகள் பூர்த்தி செய்கின்றன. தவிர, வெயில் காலங்களில் வீராணமும், கிருஷ்ணா நீரும் கைகொடுக்கின்றன. ஆனால், முந்நூறு வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்கள் இங்கே வந்தபோது மெட்ராஸின் குடிநீர் நிலைமை எப்படி இருந்தது தெரியுமா?

இதைப்பற்றி கிழக்கிந்தியக் கம்பெனி வணிகரான அலெக்சாண்டர் ஹாமில்டன், 1718ம் வருடம் எழுதிய குறிப்பின் மூலம் அறிவோம். அதை, ‘The Madras Tercentenary Commemoration Volume’ நூலில் விவரித்துள்ளார் தொல்லியல் ஆய்வாளர் வி.டி.கிருஷ்ணசுவாமி.

‘‘புனித ஜார்ஜ் கோட்டை அல்லது சென்னப்பட்டிணம் வசதி குறைவான சமதளத்தில் அமைந்திருப்பதை வேறெங்கும் நான் கண்டதில்லை...’’ என்கிறார் ஹாமில்டன்.மேலும் அவர், ‘‘புனித ஜார்ஜ் கோட்டையின் பின்புறம் ஓடும் உவர்நீர் ஆறு, நன்னீருக்குத் தடையாக உள்ளது. இதனால், கோட்டையைச் சுற்றி ஒரு மைல் தொலைவில் குடிநீர் என்பதேயில்லை!’’ என்கிறார். இதிலிருந்து ஓர் உண்மையை உணர முடியும்.

அது, நாம் நினைப்பது போல சென்னையின் குடிநீர் பிரச்னை இன்று நேற்றையதல்ல. அதற்கும் நூற்றாண்டு கால வரலாறு இருக்கிறது!
எப்படி ஆங்கிலேயர்கள் வணிகத்துக்கு லாயக்கற்ற இந்நகரைத் தேர்ந்தெடுத்து முன்னேற்றினார்களோ அதுபோலவே நன்னீர் இல்லாத இந்நகரைச் சீர்படுத்தி நகருக்குள் குடிநீர் கொண்டு வந்தனர்.அதற்குமுன் குடிநீர் தேவையை உள்ளூர் மக்கள் எப்படி பூர்த்தி செய்தனர்?

ஒவ்வொரு வீட்டிலும் கிணறுகள் இருந்தன. தவிர ஏரிகள், குளங்களில் இருந்தும் தண்ணீர் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இப்படி திறந்தவெளி குடிநீரால் பல நேரங்களில், குறிப்பாக பஞ்ச காலங்களில் காலரா உள்ளிட்ட ெதாற்று நோய்களுக்கு ஆட்பட்டு மக்கள் மடிந்தனர்.

ஆங்கிலேயர்களும் இங்கே குடியேறி நூற்றாண்டு காலம் வரை பாதுகாப்பான குடிநீர் பற்றி சிந்திக்கவே இல்லை. அவர்களும் இந்தக் காலங்களில் பெத்தநாயக்கன்பேட்டையின் வடக்குப் பக்கமாக இருந்த கிணறுகளில் குடிநீரை நிரப்பி மாட்டு வண்டிகளில் வெள்ளையர் நகருக்குக் கொண்டு வந்தனர்.

செயின்ட் தாமஸ் மலையிலிருந்தும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. ஆனால், இங்கிருந்து எடுத்து வரப்பட்ட குடிநீரைவிட பெத்தநாயக்கன்பேட்டையில் கிடைத்த தண்ணீர் சுத்தமாக இருந்தது. இதனால், கோட்டைவாசிகள் பெத்தநாயக்கன்பேட்டை குடிநீரையே பெரிதும் விரும்பினர்.

ஒரு குடம் குடிநீரின் விலை இரண்டு துட்டுகள். இவை பத்து செப்புக் காசுகளுக்குச் சமமானது. இந்தக் குடிநீர், கோட்டையிலிருந்த மரப் பீப்பாய்களிலும், தண்ணீர் தொட்டிகளிலும் சேமிக்கப்பட்டது.இத்துடன் கப்பல்களின் வழியாகவும் பீப்பாய்களில் குடிநீர் நிரப்பி கொண்டு வரப்பட்டது. இவையெல்லாம் மெட்ராஸில் வசித்த ஆங்கிலேயர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தன.

1746ம் வருடம் மெட்ராஸை முற்றுகையிட்ட பிரஞ்சுப்படை முதல் வேலையாக  கோட்டைக்கு வரும் குடிநீர் விநியோகத்தைத் தடை செய்தது.
மூன்று வருடங்களுக்குப்பின் மெட்ராஸ் ஆங்கிலேயர் வசம் வந்ததும் உடனடியாக கால் என்கிற எஞ்சினியர் மேற்பார்வையில் தண்ணீர் சேமிப்புக்கான நடவடிக்கைகளுக்கு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

கோட்டையிலிருந்த ஆயிரத்து ஐநூறு ஐரோப்பியர்களுக்கும், மூவாயிரம் சிப்பாய்களுக்கும், ஆயிரம் உள்ளூர்வாசிகளுக்கும் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு அரை கேலன் (இரண்டரை லிட்டர் குடிநீர்) வீதம் ஆறு மாதத்திற்கு சேமிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், சில வருடங்களில் ஆங்கிலேயரின் தலைமை இங்கே உறுதியானதால் இத்திட்டத்திற்கு அவசியமில்லாமல் போனது.    

என்றாலும் குடிநீர் பிரச்னை வழக்கம்போல் விஸ்வரூபம் எடுத்தபடியே இருந்தது. இதற்கு முடிவுகட்ட கேப்டன் பேக்கர் என்பவர் ‘ஏழு கிணறுகள் - தண்ணீர் பணிகள்’ என்ற ஒரு திட்டத்தைத் தயாரித்து கம்பெனியிடம் அளித்தார்.

இதைப் பற்றி சென்னை குடிநீர் வாரிய ஓய்வுபெற்ற செயற்பொறியாளரான மீனாட்சி சுந்தரம் துல்லியமாகச் சொல்கிறார். இவர், மெட்ராஸ் குடிநீர் திட்டம் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வருபவர்.

‘‘அரசின் உதவியுடன் இந்தப் பணி 1772ம் வருடம் முடிக்கப்பட்டது. முதலில் பத்து கிணறுகள் தோண்டப்பட்டன. அதில், மூன்று கிணறுகளில் போதுமான தண்ணீர் வரத்து இல்லை.

இதனால் இந்தத் திட்டம், ‘ஏழு கிணறுகள் அரசு தண்ணீர் பணிகள்’ என்றானது. இதைச் சுற்றி அமைந்த  பகுதிதான் இன்று ஏழு கிணறு என்றழைக்கப்படுகிறது. இதை உருவாக்கிய கேப்டன் பேக்கர் பெயரில் இன்றும் பிராட்வேயில் ஒரு தெரு உள்ளது.ஆரம்பத்தில் கோட்டைக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய இத்திட்டம் தயாரிக்கப்பட்டது. பின்னர், இராணுவத்திற்கும், நகரவாசிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

ஏழு கிணறுகளில் இருந்து பிக்கோட்டா எனப்பட்ட ஏற்றம் மூலம் தண்ணீர் இறைக்கப்பட்டு தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே வடிகட்டப்பட்டு பின்னர் வேறு இரண்டு தொட்டிகளில் சேமிக்கப் பட்டது. அன்று ஏழு கிணறுகளிலிருந்து, நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கேலன்கள் - அதாவது சுமார் ஆறரை லட்சம் லிட்டர் குடிநீர் - இரும்பு பைப்களின் மூலம் விநியோகிக்கப்பட்டது. இதற்கு அன்று மொத்தம் 42 ஆயிரத்து 500 பவுண்டுகள் செலவானது...’’ என்கிறார்.

இந்த ஏழு கிணறுகளும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீர் தந்து கொண்டிருந்தன. இதற்கிடையே மெட்ராஸின் மக்கள் தொகை உயர்வினால் தண்ணீர் தேவையும் அதிகரித்தது.இந்நிலையில் 1818ம் வருடம் மெட்ராஸின் ஆட்சியராக இருந்த கர்னல் எல்லிஸ் தண்ணீர் பஞ்சம் தீர 27 கிணறுகள் தோண்டினார். இதை ஒரு கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.

1832ம் வருடம் மெட்ராஸின் நில அமைப்பு அளக்கப்பட்டது. அப்போது நிலப்பரப்பில் 12 அடி ஆழத்தில் ஆற்று மணலும், களிமண்ணும் இருப்பது தெரிந்தது. இந்த 12 அடிக்குக் கீழே மேலும் பதினைந்து அடிக்கு தடிமனான களிமண் பரப்புகளும், அதற்கு அடியில் பாறைகளும் தென்பட்டன. இதனால், நிலத்தடி நீர் கிடைப்பது கேள்விக்குறியானது.

தொடர்ந்து குடிநீர் பற்றி ஆராயப்பட்டது. ஓ’கானல் என்கிற எஞ்சினியர் ஆய்வு செய்யப் பணிக்கப்பட்டார். ‘‘இவர்தான் முதன்முதலாக பாதுகாப்பான குடிநீரை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி 1851ம் வருடம் ஆய்வு செய்தவர். அப்போது செங்குன்றம், சோழவரம் ஏரிகளும் இருந்தன. இவரின் சீடரே எஞ்சினியர் ஃப்ரேசர். 1860களில் ஃபரேசரிடம் செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளை விரிவுபடுத்தி மெட்ராஸ் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

இவர், ‘மெட்ராஸிலிருந்து 20 மைல் தொலைவிலுள்ள தாமரைப்பாக்கம் அருகே கொசஸ்தலை ஆற்று நீரை சோழவரம் ஏரிக்கும் அங்கிருந்து செங்குன்றம் ஏரிக்கும் திருப்பலாம். பின்னர், செங்குன்றத்திலிருந்து கீழ்ப்பாக்கத்திற்கு திறந்த கால்வாய்கள் வழியாக தண்ணீரை கொண்டு வரலாம்’ என்றார்.

இதுவே ஃப்ரேசர் திட்டம் எனப்பட்டது. 1866ம் வருடம் இத்திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளிக்க, ஆறு வருடங்களில் முடிக்கப்பட்டது...’’ என்கிறார் மீனாட்சிசுந்தரம்.திறந்தவெளி கால்வாய் மூலம் நீர் கீழ்ப்பாக்கம் வந்தடைந்ததும் இங்கே விசை சறுக்குப் பாதை (Masonry Shaft) மூலம் இறைக்கப்பட்டு குழாய்கள் வழியாக மற்ற இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இது ‘மெட்ராஸ் நகராட்சி குடிநீர்ப் பணிகள்’ எனப்பட்டது.

இந்தத் தண்ணீர் விநியோகத் திட்டத்தை 1872ம் வருடம் அன்றைய கவர்னர் லார்டு நேப்பியர் திறந்து வைத்தார். பின்னர், செங்குன்றம் ஏரியின் ஆழ்ந்த பகுதியில் 1881ம் வருடம் ஜோன்ஸ் டவர் அமைக்கப்பட்டது. இங்கிருந்து அதிகப்படியான தண்ணீர் கீழ்ப்பாக்கம் வந்து சேர்ந்தது.  

அதன்பிறகு, ‘‘கீழ்ப்பாக்கத்தில் இருந்த ‘கன்ட்ரோல் வால்வு’ மூலம் நீர் விநியோகிக்கப்பட்டது. புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீரானது இரண்டு பிரிவாக 36 அங்குல குழாய்கள் வழியாக சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, புரசைவாக்கம் முதலிய இடங்களுக்கும்; 27 அங்குல குழாய்கள் வழியாக ஜார்ஜ்டவுனுக்கும் அனுப்பப்பட்டது. இந்தக் குழாய்களின் மொத்த நீளம் 30 மைல்களாகும்...’’ என ‘மதராசபட்டிணம்’ நூலில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் நரசய்யா.

இப்படியாக கீழ்ப்பாக்கத்தில் இருந்து குடிநீர் விநியோகம் ஜோராக நடந்தது. ஆனால், சில பிரச்னைகளும் எழுந்தன. முதலில், திறந்தவெளி கால்வாய் மூலம் வந்ததால் நீர் அசுத்தமாகி பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்பட்டன. அடுத்து, ஆவியாதலால் நீர் இழப்பும் அதிகமானது.இந்தக் குறைபாடுகளைக் களைய 1907ம் வருடம் ஜேம்ஸ் வெல்பி மேட்லி என்கிற எஞ்சினியர் லண்டனிலிருந்து அழைத்து வரப்பட்டார். இவரை ஜோன்ஸ் என்கிற எஞ்சினியர் அழைத்து வந்தார். அப்போது குடிநீர் துறை மாநகராட்சியின் வசம் இருந்தது.

மாநகராட்சியின் குடிநீர் எஞ்சினியரான இவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். ஜேம்ஸ் என்பதே இவரின் பெயர்! மேட்லி மற்றும் ெவல்பி என்பது அவரின் தாய், தந்தையரின் ஊர் பெயர்கள். ஆனால், மேட்லி என்ற பெயராலயே அறியப்பட்டார். இவர் நினைவாகவே தி.நகர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள சாலைக்கு ‘மேட்லி ரோடு’ எனப் பெயர் வந்தது.

இந்நேரம், ஜோன்ஸுக்கு உதவியாக பணிபுரிந்த இந்தியர் ஹர்முஸ்ஜி நெளரோஜி, மேட்லியின் உதவியாளராக ஆக்கப்பட்டார். இந்த நெளரோஜி மேற்கத்திய பாணியில் இல்லாமல் உள்ளூருக்குத் தகுந்தபடி குடிநீர் பணிகள் ெசயல்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

தவிர, இன்னும் சில உத்திகளை முன்வைத்தார். குறிப்பாக, அடுத்த முப்பது வருடத்திற்கான மக்கள் தொகையை கணக்கில் கொண்டு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், குழாய்கள் மூலம் நீர் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இதை மேட்லியும் ஒப்புக் கொண்டார். இதனாேலயே ‘மெட்ராஸ் குழாய் குடிநீர் விநியோக’த் திட்டத்தின் தந்தை என ஹர்முஸ்ஜி நெளரோஜி அழைக்கப்படுகிறார்!தொடர்ந்து, 1911ம் வருடம் மெட்ராஸ் நகர குடிதண்ணீர் விநியோகத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

‘‘இந்தத் திட்டத்தின்படி மூடுகால்வாய்கள் அமைக்கப்பட்டன. அடுத்து, கீழ்ப்பாக்கத்தில் சுத்திகரிப்பு நிலையமும் நீர்த்தொட்டிகளும் ஏற்படுத்தப்பட்டன. மேலும் மணல் வடிகட்டிகள் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டும் குளோரின் கிருமிநாசினி சேர்க்கப் பட்டும் குழாய் வழியாக குடிநீர் வழங்கப்பட்டது.

இப்படியாக, ‘கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்’ உருவானது. இதை 1914ம் வருடம் அன்றைய கவர்னர் லார்டு பென்ட்லாண்ட் திறந்து வைத்தார். கடந்த 2014ம் வருடம் நூற்றாண்டு கண்டது இந்த நிலையம்...’’ என்கிறார் மீனாட்சி சுந்தரம்.ஆனால், இத்திட்டம் போட்ட போது மெட்ராஸின் மக்கள் தொகை வெறும் நான்கரை லட்சம்தான்! அடுத்த பதினைந்து வருடங்களில்-அதாவது 1928ம் வருடத்திற்குள் 21 லட்சமானது.

இதனால், செங்குன்றத்தைத் தவிர வேறு இடத்திலும் புதிய நீர் ஆதாரத்திற்கான இடத்தைத் தேடினர். 1936ம் ஆண்டில் பூண்டியை தேர்ந்தெடுத்தனர். இதற்கு முக்கிய பங்கு வகித்தவர் தீரர் சத்தியமூர்த்தி. அதனாேலயே இந்த நீர்த்தேக்கம் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.
ஆனால், இரண்டாம் உலகப் போரால் சுணக்கம் ஏற்பட, 1944ல் இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு நீர்த்தேவை மேலும் அதிகரித்தது.

1978ம் வருடம் மாநகராட்சியிடம் இருந்த குடிநீர்த் துறை தனிவாரியமாக மாறியது. பின்னர், 1983ம் வருடம் செம்பரம்பாக்கம் ஏரி நீர்த்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதே காலகட்டத்தில் கிருஷ்ணா குடிநீர்த் திட்டமும் இருபது வருடங்களில் மக்களுக்கு முழுப் பயனளிக்கத் தொடங்கப்பட்டது.

ஆனால், இன்றுவரை கிருஷ்ணா குடிநீர் திட்டம் முழுமையான நீர் வளங்களை அளிக்கவில்லை. பெருகி வரும் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட நகரமயமாக்கலால் இன்றுவரை சென்னை பெருநகருக்கு குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது!                 

பேராச்சி கண்ணன்

ராஜா