ரத்த மகுடம்-40பிரமாண்டமான சரித்திரத் தொடர்

கரிகாலனும் காபாலிகனும் ஒருசேர அதிர்ந்தார்கள்.இருளுக்குப் பழக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரது கண்களும் சந்தித்து உறவாடின.சிவகாமி அதை லட்சியம் செய்யவில்லை. ‘‘தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஆபத்தின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும்.
இந்நேரம் மாளிகையில் நீங்கள் இல்லாததை சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர் கண்டுகொண்டிருப்பார். அடுத்ததாக நீங்கள் செல்லும் இடம் காஞ்சி சிறைச்சாலையாகவே இருக்கும் என்பதையும் ஊகித்திருப்பார். அவர் செயலில் இறங்குவதற்கு முன் அடைபட்டிருக்கும் உங்கள் தந்தையை நாம் மீட்டாக வேண்டும். வாருங்கள்!’’

‘‘இந்த விஷயம்...’’ என்று ஆரம்பித்த கரிகாலனை இடைவெட்டினாள். ‘‘பல்லவ இளவரசரைச் சந்திக்கச் சென்ற நாம் காஞ்சிக்கு வந்ததே அதற்குத்தானே! சங்கேத மொழியில் காபாலிகர் உங்களிடம் தெரியப்படுத்தும்போது அருகில்தானே நான் இருந்தேன்!’’
கரிகாலன் புன்னகைத்தான். ‘‘அளவுக்கு மீறி அறிவாளியாக இருக்கிறாய்!’’

‘‘அதனால்தான் ஆபத்தானவளாகவும் உங்கள் கண்களுக்குத் தெரிகிறேன்!’’
‘‘அறிவிருக்கும் இடத்தில் ஆபத்து இருக்காது என்கிறாயா..?’’‘‘அந்த ஆபத்து எந்தத் தரப்புக்கு என்று கூட உணர முடியாத அறிவாளி இதற்கான விடையை அறிந்து என்ன செய்யப் போகிறார்..?!’’ காபாலிகன் தொண்டையை கனைத்தான். பூர்த்தியாகாத எரிச்சலில் இருவரும் வார்த்தை விளையாட்டு ஆடுவதைக் காண அவனுக்கு சங்கடமாக இருந்தது.

கரிகாலன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. சிவகாமியும் உரையாடலைத் தொடரவில்லை.‘‘ம்...’’ என கரிகாலன் கட்டளையிட, காபாலிகன் முன்னால் சென்றான். அவனுக்குப் பின்னால் சிவகாமி. கடைசியாக கரிகாலன்.மூவருக்குமே இருளின் ஒளி வழிகாட்டியதால் தடுமாறாமல் சுரங்கப் பாதையில் நடந்தார்கள். என்றாலும் சிவகாமிக்கு எங்கே கால் இடறிவிடுமோ என்று அஞ்சி அவ்வப்போது கரிகாலன் அவளைப் பிடித்தான்! தோளில். பிறகு இடுப்பில்.

பதிந்த கரம் இடுப்பிலிருந்து கீழ்நோக்கி நகர முற்பட்டதும், ‘‘வீரர்கள் எங்கே?’’ என காபாலிகனிடம் கேட்டாள். இதன் மூலம் ‘சும்மா இருங்கள்!’ என கரிகாலனை எச்சரித்தாள்!‘‘அவர்களை அனுப்பிவிட்டேன்...’’ திரும்பிப் பார்க்காமல்
காபாலிகன் பதிலளித்தான்.
‘‘காஞ்சிக்கா..?’’

‘‘ஆம். நமக்காகக் காத்திருக்கும்படி கட்டளையிட்டிருக்கிறேன்...’’
‘‘காஞ்சி சிறைக்கு வெளியிலா..?’’
‘‘இல்லை. சிறைச்சாலையில்!’’

‘‘பிரமாதமான திட்டம். ராமபுண்ய வல்லபர் அதை உடைப்பதற்கான வேலையில் இறங்காவிட்டால் கண்டிப்பாக சோழ மன்னரை மீட்டு விடலாம்!’’
‘‘எதிர் நடவடிக்கைகளில் அவர் இறங்கினாலும் என் தந்தையை மீட்கலாம்...’’ கரிகாலனின் குரல் உரையாடலில் கலந்தது.
சிவகாமி புன்னகைத்தாள்.

‘‘கரிகாலரின் துணிவை நேரில் கண்ட பிறகும் நீங்கள் புன்னகைப்பது சரியல்ல...’’ காபாலிகன் எதிர்ப்பு தெரிவித்தான்.
சிவகாமி எதுவும் சொல்லவில்லை. பின்னால் வந்தபடியே என் பின்னெழுச்சியில் அவர் கரங்களைப் பதிக்கிறார்... அதனால்தான் வெட்கத்தில் சிரித்து நெளிந்தேன்... என்பதை அவளால் எப்படிச் சொல்ல முடியும்?! ‘‘துணிவெல்லாம் சூழலைப் பொறுத்தது...’’ கரிகாலன் முற்றுப்புள்ளி வைத்தான்.
‘‘எந்தச் சூழலையும் சாதகமாக்கும் வித்தைதான் உங்களுக்குத் தெரியுமே!’’ இதைச் சொன்னபோது ஏனோ காபாலிகன் புன்னகைத்தான்.
சிவகாமி நெளிந்தாள்.

‘‘சரி சரி... போதும். திருப்பத்தை நெருங்குகிறோம். திரும்பியதும் நீ வலப்பக்கம் செல்...’’ கரிகாலன் கட்டளையிட்டான்.
‘‘நீங்கள்..?’’
‘‘நாங்கள் இருவரும் நேராகச் சென்று இடப்பக்கம் திரும்பு
கிறோம்...’’
‘‘அப்படியானால்..?’’
‘‘வலப்பக்கம் செல்லும் பாதை எங்கு முடிகிறதோ அங்கிருக்கும் ரகசியக் கதவைத் திறந்து காத்திரு. அங்கு உன்னைச் சந்திக்கிறோம்...’’
கரிகாலனின் கட்டளையை மறுக்காமல் ஏற்று காபாலிகன் விடைபெற்றான்.

‘‘இந்தாருங்கள்...’’ முன்னால் நடந்தபடியே சிவகாமி தன் கரங்களை பின்னால் நீட்டினாள்.
‘‘உன்னிடமே இருக்கட்டும்...’’
‘‘என்ன கொடுக்க வருகிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா..?’’
‘‘ம்... கடிகையிலிருந்து நான் எடுத்து வந்த ஓலைச்சுவடிகள்! உன்னைப் பற்றிய ரகசியங்கள்!’’
சட்டென சிவகாமி நின்று திரும்பினாள். நின்றபடியே அவளை அணைத்து கரிகாலன் முத்தமிட்டான். ‘‘தரையில் விழுந்ததை எடுத்து நீ வைத்துக் கொண்டதை கவனித்தேன்!’’

‘‘இது உங்களுக்கு வேண்டாமா..?’’
‘‘தேவைப்படும்போது கேட்டு வாங்கிக் கொள்கிறேன்...’’
‘‘அதற்குள் இதை நான் மறைக்கலாம்...’’

‘‘எரிக்கவும் செய்யலாம்...’’ வாக்கியத்தை கரிகாலன் பூர்த்தி செய்தான். ‘‘படித்துத்தான் அறிய வேண்டும் என்பதில்லை...’’
‘‘அதாவது அர்த்த சாஸ்திரத்தைக் கரைத்துக் குடித்திருப்பதால் அதில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் உங்களுக்கு அத்துப்படி என்கிறீர்கள்!’’
‘‘ம்...’’‘‘இந்த விஷயம் சாளுக்கிய மன்னருக்கும்தானே தெரியும்? அதாவது காஞ்சிக் கடிகையின் சிறந்த மாணவர்களில் நீங்களும் ஒருவர் என்பது...’’
கரிகாலன் பதிலேதும் சொல்லாமல் அவள் நயனங்களை உற்றுப் பார்த்தான்.

‘‘அப்படியிருந்தும் உங்களை ஏன் அர்த்த சாஸ்திரத்திலிருக்கும் குறிப்பிட்ட பகுதி சுவடிகளை மட்டும் எடுக்கச் சொன்னார்..? எடுத்தும் கொடுத்தார்..? என்னைப் பற்றிய ரகசியம் இதில் குறிப்பால் உணர்த்தப்பட்டிருக்கிறது என்றா..?’’கரிகாலன் அவள் கீழுதட்டை தன் ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் ஒன்றுகுவித்து தன் அதரத்தால் கவ்வினான்.

சில கணங்கள் அதை ஏற்று அப்படியே நின்றவள், பின் விலகினாள். ‘‘சொல்லுங்கள்...’’
‘‘ஏன் இவ்வளவு புத்திசாலியாக இருக்கிறாய்..?’’
‘‘கேட்டதற்கு இதுவல்ல பதில்...’’
‘‘விடையை சொல்வதை விட காண்பிப்பது மேலானதல்லவா..?
‘‘அரங்கேற்றக் காதையை எந்த இடத்தில் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்..?’’

‘‘சிறைச்சாலையில்!’’
‘‘அங்கு சென்றால் இந்த சுவடிக்கான மர்மம் விலகுமா..?’’
‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் என்மீது காட்டிய அன்புக்கான காரணமும் தெரிய வரும்..!’’
சிவகாமி தன் பாதங்களை உயர்த்தி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
கரிகாலன் அவளை இறுக்கினான்.

‘‘போதும்...’’ விலகி நின்ற சிவகாமி, ஏதோ சொல்ல  முற்பட்டாள். தன் கையால் அவள் உதட்டை மூடினான். ‘‘வா...’’
தோளைக் குலுக்கிவிட்டு முன்னால் நடந்தாள். நிறுத்தி அவள் கரங்களில் இருந்த சுவடிக் கட்டுகளை வாங்கினான். அவள் இடுப்பில் அதை முடிச்சிட்டான்.
தன் கண்களால் அவனிடம் ஏதோ சொல்ல முற்பட்டாள்.

அவள் கன்னத்தைக் கிள்ளினான். ‘‘தூண்டாதே! நட...’’ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கால் நாழிகைக்குப் பின் திருப்பம் வந்தது. இடப்பக்கம் சிவகாமி திரும்பினாள். பதினைந்தடி சென்றதும் நின்று திரும்பினாள்.பக்கவாட்டில் கை வைத்தபடி நின்ற கரிகாலன் தன் தலையை ஆமோதிக்கும் விதமாக அசைத்தான்.

புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக சிவகாமி வழியை விட்டு அகன்றாள்.அவள் இருந்த இடத்துக்கு வந்த கரிகாலன் தன் முன்னால் கையை நீட்டி சற்றே உள்ளடங்கிய நிலையில் இருந்த சிலையைத் தொட்டான். தடவினான். அளவெடுத்தான்.‘‘என்ன..?’’ சிவகாமி கேட்டாள்.

‘‘உன்னைப் பார்த்துதான் சிற்பி இச்சிலையைச் செதுக்கியிருக்க வேண்டும்...’’
‘‘அப்படியா..?’’‘‘ஆம். அங்கங்கள் எல்லாம் அப்படியே அளவெடுத்ததுபோல் உன் தேகத்தைப் பிரதிபலிக்கின்றன!’’‘‘ஆண்களின் புத்தி... வந்த வேலையைப் பாருங்கள்...’’ பற்களைக் கடித்தாள்.

வாய்விட்டுச் சிரித்தபடியே அச்சிலையின் தலையைத் தொட்டான்.
பார்த்துக் கொண்டிருந்த சிவகாமிக்கு தன் சிரசில் அவன் கை வைப்பதுபோல் இருந்தது.
அங்கிருந்து அவன் கரங்கள் நெற்றியைத் தொட்டன. பிறகு புருவங்கள். கண்கள். இமைகள். நாசி. கன்னங்கள். உதடு. கழுத்து... பார்க்கப் பார்க்க சிவகாமிக்கு சிலிர்த்தது.

சிலையின் கழுத்திலிருந்த அவன் கரங்கள் அப்படியே மெல்ல மெல்ல கீழே இறங்கின. அவளுக்கு மூச்சு முட்டியது! சரியாக ஸ்தனங்கள் மேல்...சிவகாமிக்கு சுவாசம் தடைப்பட்டது....இல்லை. ஸ்தனங்களைத் தொடாமல் தாவி இடுப்பில் கை வைத்தான்! அப்பாடா என அவளுக்கு இருந்தது. அது நிம்மதியா அல்லது ஏமாற்றமா என அவளால் உணர முடியவில்லை.

இதற்குள் அவன் கரங்கள் அச்சிலையின் இரு கால்களும் ஒன்றிணையும் இடத்துக்கு நகர்ந்தது.‘‘என்ன இது... கைகளை எடுங்கள்!’’ தன் கால்களைக்  குறுக்கியபடி சத்தம் வராமல் சப்தமிட்டாள்!‘‘ஷ்... பேசாமல் இரு. முக்கியமான இடத்தை இனிதான் அடையப் போகிறேன்!’’ சொன்னவன் சட்டென்று சிலையின் இரு கால்களும் இணையும் இடத்தில் தன் வலக் கையை வைத்தான்!சிவகாமிக்கு உயிரே போய்விடும்போல் இருந்தது.

கண நேரம்தான். அதற்குள் தன் கரங்களை மெல்ல மெல்ல பின்னோக்கி இழுத்தான்.கையோடு, தேங்காய் நாரினால் தயாரான கயிறு ஒன்று சுருட்டப்பட்ட நிலையில் வந்தது. சிவகாமிக்குள் இனம் புரியாத உணர்வுகள் தாண்டவமாடின. சமாளித்துக்கொண்டு அக்கயிற்றைப் பார்த்தாள். மெல்லியதாக இருந்தாலும் வலுவானது என்பது பார்த்ததுமே புரிந்தது.

‘‘ஆபத்துக் காலத்தில் பயன்படும் என சிற்பி செய்த ஏற்பாடு இது. ஆமாம்... நான் சிலை மீது என் கைகளை வைத்துத் தடவியபோது ஏன் தடுக்க முற்பட்டாய்..?’’கண்களால் சிரித்தபடி கேட்டவனைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது! தன் பலத்தை எல்லாம் திரட்டி அவன் தலையில் குட்டினாள்!

‘‘அம்மா...’’ அலறியபடி தன் தலையைத் தடவிக் கொண்டான். ‘‘ராட்சஷி... இப்படியா குட்டுவார்கள்..?’’‘‘நியாயமாகப் பார்த்தால் கூறு கூறாக வெட்டிப் போட வேண்டும்! போனால் போகிறது என குட்டுவதுடன் நிறுத்தியிருக்கிறேன்! சரி சரி... திரும்பி சிலையை நகர்த்துங்கள்...’’ உதட்டைக் குவித்து அவனுக்கு பழிப்புக் காட்டிவிட்டு அவனிடமிருந்து கயிற்றைப் பெற்றாள்.

இரு உள்ளங்கைகளையும் தட்டிவிட்டு தரையில் அமர்ந்த கரிகாலன், சிலையின் அடிப்பகுதியை இறுக்கிப் பிடித்தான். பிறகு மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு அச்சிலையை முன்னோக்கி இழுத்தான்!எந்தவித சப்தத்தையும் எழுப்பாமல் அச்சிலை அசைந்து அசைந்து அவனை நோக்கி வந்தது.

அவன் இடுப்பை அச்சிலை இடித்ததும் சட்டென்று அதை வலப்பக்கம் திருப்பினான்.சிலை இருந்த இடத்தில் இப்போது மெல்லியதாக வெளிச்சம் வந்தது.கரிகாலனும் சிவகாமியும் எதுவும் பேசாமல் அந்த வெளிச்சத்தையே பார்த்தார்கள்.வெளிச்சத்தை ஊடுருவிய தூசிகள் அகன்றதும் அவர்கள் கண்களுக்குக்  கீழேயிருந்த அறை தட்டுப்பட்டது. ஒரு மனிதர் பாறையாலான திண்ணை மீது அமர்ந்திருந்தார். அவருக்கு வயது ஐம்பதிருக்கும். ராஜ உடைகளை அணிந்திருந்தார்.பார்வையாலேயே சிவகாமி ‘உங்கள் தந்தையா?’ என்று கேட்டாள்.

கரிகாலன் தலையசைத்தான்.தன்னிடமிருந்த கயிற்றால் சிலையைச் சுற்றிலும் முடிச்சிட்டாள். கரிகாலனிடம் கண்களால் செய்தி சொல்லிவிட்டு அக்கயிற்றைப் பிடித்தபடி அந்தத்  துவாரத்தின் வழியாக அறைக்குள் இறங்கினாள்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்