என் உருவத்தை கேலி செஞ்சவங்களே இப்ப என்னை ரசிக்கறாங்க!



தேவ் விக்னேஷ் காந்த்தின் சக்சஸ் ஸ்டோரி

‘‘அழகை விட திறமைதான் முக்கியம்...’’ என ஐஸ்வர்யா ராய் சொன்னால் புன்னகைப்போம். அதுவே விக்னேஷ் காந்த் கூறினால் ‘அட’ என நிமிர்ந்து உட்காருவோம். ஏனெனில் எந்த உருவம் காரணமாக ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை தொகுக்கக் கூட மறுக்கப்பட்டாரோ அதே உருவம் காரணமாகத்தான் இன்று நகைச்சுவை நடிகராக பட்டையைக் கிளப்ப ஆரம்பித்திருக்கிறார்!

யூ டியூப் இணையதளத்தை ரெகுலராக பார்ப்பவர்களுக்கு விக்னேஷ்காந்த்தை நன்றாகவே தெரியும். அரசியல், சினிமா விமர்சனம்... என அனைத்தையும் சகட்டுமேனிக்கு கலாய்த்து, பார்ப்பவர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவர். “சொந்த ஊர் திருச்சி பாஸ். மீடியா மேல அம்புட்டு காதல்.

அதனால சென்னைக்கு வந்தேன். டிவி சேனல்ல வேலைக்கு டிரை பண்ணினப்ப என் தோற்றத்துக்கு ரேடியோதான் செட் ஆகும்னு சொன்னாங்க!’’
கண்சிமிட்டும் விக்னேஷ் காந்த், அதை பாசிடிவ் ஆக ஏற்று ரேடியோவில் வேலைக்குச் சேர முயற்சித்திருக்கிறார்.

‘‘வேலையும் கிடைச்சுது. கூடவே உருப்படாத என்ஜினியரிங் படிச்ச ஒரு டீமோட அறிமுகமும் கிடைச்சது! ‘வெப்’ ரேடியோ, யூ டியூப் சேனல்னு ஏதேதோ காத்துல கம்பி சுத்தினாங்க. ஒண்ணும் புரியலை.

ஆனா, ஏதோ புரிஞ்சுது! களத்துல இறங்கி மத்தவங்களை ஆசை தீர கலாய்க்க ஆரம்பிச்சோம்! கூடவே ரேடியோலயும் அதகளம் பண்ணினேன். ஓரளவு என் வாய்ஸ் பாப்புலராச்சு. இதைப் பார்த்து ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனுக்கு தொகுப்பாளரா போன்ல புக் பண்ணுவாங்க. ஆனா, நேர்ல என் உருவத்தைப் பார்த்துட்டு ‘வேண்டாம்’னு சொல்லிடுவாங்க...’’

‘இப்பதான் சாப்பிட்டு முடிச்சேன்...’ என்பது போல் கேஷுவலாக இதைச் சொல்கிறார் விக்னேஷ்காந்த்.‘‘பின்ன... ஃபீலாகி நெஞ்சை பிசையற மாதிரி நெகிழ்ச்சியா பேசணுமா! அட போங்க பாஸ்... நம்ம ப்ளஸ்ஸும் மைனஸும் தெரிஞ்சுட்டா மலையைக் கூட புரட்டிடலாம்!
எனக்கு என் மைனஸ் தெரிஞ்ச மாதிரி ப்ளஸ்ஸும் தெரியும். அதனாலயே ஒருமுறை ஆர்.ஜே.பாலாஜி சொன்ன யோசனை சரினு பட்டது. அதை கப்புனு பிடிச்சுகிட்டேன்!

வேற ஒண்ணுமில்ல... ‘டிவி சேனல் இல்லைன்னா என்ன... நீயே சேனலா மாறு’னு சொல்லி என்னை யூடியூப் பக்கம் திருப்பினது ஆர்.ஜே.பாலாஜிதான். ‘ஸ்மைல் சேட்டை’, ‘ப்ளாக்‌ஷீப்’னு யூடியூப் சேனல்கள்ல என் திறமையைக் காட்ட ஆரம்பிச்சேன்!லட்சக்கணக்கானவர்கள் இப்ப என் சேட்டையை ரசிக்கறாங்க. என்னோட கலாய் ஹிப்ஹாப் ஆதிக்கு பிடிச்சிருந்தது. தான், எழுதி இயக்கி ஹீரோவாவும் நடிச்ச ‘மீசைய முறுக்கு’படத்துல ஒரு நல்ல ரோல் கொடுத்தார்.

அதுவரை நடிக்கிற ஆசை இல்லாம இருந்தது. ஹிப்ஹாப் ஆதிக்காக ஓகே சொல்லி நடிச்சேன். இப்ப நடிகனுக்கு நிறைய பணம் தர்றாங்கனு தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்சிட்டேன்...” வாய்விட்டுச் சிரிக்கும் விக்னேஷ்காந்த், அரசியல் நையாண்டி மேடை நாடகங்களிலும் நடிக்கிறார். நண்பர்களுடன் இணைந்து இவர் நடித்த ‘நவயுக ரத்தக்கண்ணீர்’ நாடகம் தமிழகம் முழுக்க மேடை ஏறியிருக்கிறது. விஜய் மல்லையாவில் தொடங்கி தமிழக அரசியல்வாதிகள் வரை சகலரையும் இதில் கலாய்த்திருக்கின்றனர்.

‘‘என் ரெண்டாவது படம், ‘தேவ்’. படம் முழுக்க கார்த்தி சார் கூட வர்ற கேரக்டர். காமெடியைத் தாண்டி குணச்சித்திர நடிப்பையும் என்னால வெளிப்படுத்த முடியும்னு நம்பி இந்த கேரக்டரை இயக்குநரும் கார்த்தி சாரும் கொடுத்திருக்காங்க! முதல் பாதி முழுக்க காமெடி, கலாய். செகண்ட் ஆஃப் காமெடி + லவ் சென்டிமென்ட். எடிட்டிங்  கட்டை மைண்ட்ல வைச்சு எப்படி ரியாக்‌ஷன் கொடுக்கணும்னு கார்த்தி சார் கத்துக் கொடுத்தார். ஆக்சுவலா ரொம்ப கூச்சமாகவும் சங்கடமாகவும் இருந்தது. ஏன்னா, நடிகர் சங்க தேர்தல் அப்ப யூடியூப்ல செமையா கலாய்ச்சிருந்தேன்!

அதையெல்லாம் கார்த்தி சார் மைண்ட்ல வைச்சுக்காம ஃப்ரெண்ட்லியா பழகினார். உக்ரைன்ல ஷூட் நடந்தப்ப அவர்கூட நெருங்கிப் பழகற வாய்ப்பு கிடைச்சது. பிரில்லியன்ட் அண்ட் நைஸ் பர்சன். விஷுவலாகவும் இயக்குநர் ரஜத் ரவிசங்கர் மிரட்டியிருக்கார். ‘தேவ்’ கண்டிப்பா பேசப்
படும்!’’ என்று சொல்லும் விக்னேஷ் காந்த், இப்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சீரியல் நடிகர் ரீயோவை வைத்து ‘பிளாக்‌ஷீப்’ டீம் எடுக்கும் படம், சற்குணத்தின் ‘களவாணி 2’, ‘மெஹந்தி சர்க்கஸ்’, ஹிப் ஹாப் ஆதி எழுதி இயக்கி நடிக்கும் ‘நட்பே துணை’, சித்தார்த்துடன் ஒரு படம்... என பிசியாக நடித்து வருகிறார்.

‘‘யூடியூப்ல என் உருவத்தை கேலி செஞ்சு சிலர் கமெண்ட் போட்டாங்க. அப்பதான் என்னையே கலாய்ச்சா என்னனு ஸ்பார்க் ஆச்சு. உடனே அதையே ஒரு ப்ரோக்ராமா பண்ணி அப்லோட் செஞ்சோம்! ‘இவனைப்போய் என்னத்த கலாய்க்கிறது’னு தண்ணி தெளிச்சு விட்டுட்டு எல்லாரும் ரசிக்க ஆரம்பிச்சுட்டாங்க! மொட்டை ராஜேந்திரன், யோகி பாபுனு எல்லாரும் இதைத்தான் அவங்கவங்க பாணில செய்யறாங்க.இன்னைக்கு சினிமாவுக்கு அழகு தேவையில்ல. திறமை இருந்தா போதும், ஜெயிக்கலாம்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் விக்னேஷ்காந்த்.
 
திலீபன் புகழ்