திருவல்லிக்கேணி காசி விநாயகா உணவகம்லன்ச் மேப்

தமிழகத்திலேயே அதிகம் மெஸ்கள் உள்ள பகுதி என்றால் அது திருவல்லிக்கேணிதான். நூற்றுக்கும் மேற்பட்ட உணவகங்கள் இங்குள்ளன. காரணம், இங்கிருக்கும் மேன்ஷன்ஸ்.சென்னைக்கு வேலை தேடி வரும் ஆண்களின் சரணாலயமாக திருவல்லிக்கேணி பகுதியே பல ஆண்டுகளாகத் திகழ்ந்து வருகிறது. எனவேதான் திருவல்லிக்கேணி என்றதும் பார்த்தசாரதி கோயில், மகாகவி பாரதியார் நினைவகத்தை அடுத்து மெஸ்களே நினைவுக்கு வருகிறது.

அந்த வகையில் 48 வருடங்களாக அதே புகழுடனும் சுவையுடனும் பெருமை குன்றாமல் அக்பர் தெருவில் கம்பீரமாக நிற்கிறது காசி விநாயகா மெஸ்.
சுத்த சைவ உணவகம். எப்போதும் வாசலில் 50க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிடுவதற்காக காத்திருக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் சாப்பாட்டுக்கு டோக்கன் வாங்க நீண்ட வரிசை.

இந்த உணவகத்தில் 37 பேர் வரை மட்டுமே அமர்ந்து சாப்பிட முடியும். அந்த அளவுக்குத்தான் டேபிள் சேர் போட்டிருக்கிறார்கள். முதல் இரண்டு வரிசைகளுக்கு வெள்ளை டோக்கன். மற்ற இரு வரிசைகளுக்கு மஞ்சள் டோக்கன். ஒரு வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் சாப்பிட்டு முடித்து முழுமையாக சுத்தம் செய்தபிறகே அவ்வரிசையில் அடுத்த செட்டை அமர வைக்கிறார்கள்.

இது தெரிந்தும் மக்கள் பொறுமையாகக் காத்திருந்து சாப்பிடுகிறார்கள். காரணம், சுவை, தரம், ஆரோக்கியம். இந்த உணவகத்தில் டிபன் கிடையாது. சாப்பாடு மட்டும்தான். மதியம் 12 மணிக்குத் தொடங்கி 3 மணி வரை கூட்டு, பொரியல், அவியல், அப்பளம், சாதம், சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர், தயிர்... என சகலத்தையும் சாப்பிடலாம்.

பச்சரிசி உணவை சுடச்சுட ஒரு கிண்ணத்தில் அச்சு போல் வைக்கிறார்கள். சின்ன கிண்ணம் அல்ல. ஒரு நபர் வயிறார சாப்பிடக்கூடிய அளவு. பருப்பும் நெய்யும் கட்டாயம் உண்டு. முதல் தரமான பருப்பை விறகுஅடுப்பில் வேகவைத்து கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துத் தருகிறார்கள்.

சாப்பிட்டபிறகும் பருப்பு மற்றும் நெய்யின் மணம் நம்மைச் சுற்றிச் சுற்றி வருகிறது. சின்னச் சின்ன கிண்ணங்களில் தரப்படும் வத்தக்குழம்பையும் சாம்பாரையும் ஊற்றிச் சாப்பிடுவதற்காகவே கணிசமானவர்கள் வருகிறார்கள். மிளகாய், மல்லி, மஞ்சள்தூள், கரம் மசாலா... என அனைத்தையும் தனித்த பதத்தில் வறுத்து அரைத்து சேர்க்கின்றனர். அதனாலேயே எங்கும் கிடைக்காத சுவையில் உள்ளது.

“சொந்த ஊர் துறையூர் பக்கத்துல இருக்கிற கிராமம். பத்தாவது முடிச்சுட்டு சென்னைக்கு ஓடி வந்தேன். செய்யாத வேலையே இல்ல. எல்லா வேலையும் செஞ்சி பார்த்தேன். எதுவுமே திருப்தியா வரலை.அப்பதான் மாநிலக்கல்லூரில இருக்கிற விக்டோரியா ஹாஸ்டல் மெஸ்ல சமையல் வேலைக்கு சேர்ந்தேன். சொன்னா நம்ப மாட்டீங்க. அவ்வளவு சந்தோஷமா இருந்தது. வேலை பார்த்த திருப்தியும் கிடைச்சது.

அந்த நொடிலதான் ‘சமையல்தான் நமக்கான வேலை’னு புரிஞ்சுது. எல்லா சமையல் நுணுக்கங்களையும் கத்துக்கிட்டேன். அஞ்சு வருஷங்கள் கழிச்சு இந்த மெஸ்ஸை ஆரம்பிச்சேன்...’’ புன்னகையுடன் சொல்கிறார் உணவகத்தின் உரிமையாளரான வாசுதேவன்.

இந்த உணவகத்துக்கு எப்போது சென்றாலும் நான்கைந்து ஆங்கிலேயர்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். போலவே அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், சினிமாக்காரர்கள்... என சகலரும் தட்டுப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்; இருக்கிறார்கள்.

“45 பைசாவுக்கு சாப்பாடு போட ஆரம்பிச்சேன். இப்ப 75 ரூபா. அப்ப விலைவாசி குறைவு. தரமான பொருட்களும் குறைந்த விலைல கிடைச்சது. இப்ப எவ்வளவு பணம் கொடுத்தாலும் தரமான பொருள் கிடைக்கிறது குதிரைக் கொம்பா இருக்கு.

நல்லா ரசிச்சு ருசிச்சு சாப்பிடற யார் உணவகம் ஆரம்பிச்சாலும், நடத்தினாலும் அந்த ஹோட்டல் அல்லது மெஸ் பேரும் புகழும் பெறும். சமைச்சதுமே சுடச்சுட சாப்பிடணும். அதுதான் உணவுக்கு நாம செலுத்தற மரியாதை. ஆறினதை திரும்ப சூடுபடுத்தக் கூடாது. அப்படி செஞ்சா உணவுல இருக்கிற சத்தும் சுவையும் போயிடும்...’’ என்று சொல்லும் வாசுதேவன், சமையல் பொருட்களிலேயே வாசம் இல்லாதw பொருள் என்றால் அது புளிதான் என்கிறார்.

‘‘இப்ப பலரும் குக்கர்ல சமைக்கிறாங்க. உண்மைல அது உடலுக்கு கேடு. எந்த உணவையும் மூடாம சமைக்கணும். ஏன்னா வேகறப்பதான் நச்சுப் பொருட்கள் ஆவியா வெளியேறும். இதுவே ஒரு கட்டத்துல வாசமா பக்கத்து வீடு வரை வீசும்!இதுதான் ஆரோக்கியமான சமையல். இப்படி செஞ்சு சாப்பிட்டா நல்லா செரிக்கும்...’’ என்கிறார் வாசுதேவன்.

எலுமிச்சை ரசம்

எலுமிச்சம் பழச் சாறு - 2 தேக்கரண்டி
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
வறுத்துப் பொடிக்க:
சீரகம் - 1 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித் தழை - சிறிது

பக்குவம்: பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்யவும்.200 கிராம் பருப்புத் தண்ணீரில் தக்காளி, பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கையால் நன்கு கரைத்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும், பொடித்த பொடியைச் சேர்த்து இறக்கவும்.

இறக்கிய பின் எலுமிச்சம் பழச் சாற்றைச் சேர்த்து கலக்கவும். எப்போது ரசம் வைத்தாலும் பருப்புத் தண்ணீரில்தான் வைக்க வேண்டும். அதுதான் சுவையே. கடைசியாக எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவவும்.

திலீபன் புகழ்

ஆ.வின்சென்ட் பால், தமிழ்வாணன்