கெத்து தாரா!



வேறென்ன தலைப்பு வைக்க?

ஒரு சொல்... ஒரேயொரு சொல் கூட புதியதாக நயன்தாரா குறித்து சொல்லிவிட முடியாது. எல்லாருக்கும் எல்லாமும் தெரியும். அவரது மொத்த வாழ்க்கையும். முழு பயாகிரஃபியும். சகல காதல்களும். அனைத்து காதல் தோல்விகளும்.ஒருவேளை நினைவின் இடுக்கில் சிக்கி வெளிவராமல் அவை தவித்தாலும் இருக்கவே இருக்கிறது கூகுள் சர்ச் இன்ஜின். ‘நயன்தாரா’ என சர்ச் பட்டனில் இட்டால் செய்திகள் கொட்டுகின்றன. இமேஜசில் படங்கள் குவிகின்றன.

படச் செய்திகள் மட்டுமல்ல... பர்சனல் விவரங்களும்தான். அந்தரங்க புகைப்படங்களும்தான்.ஆம். நயன்தாராவின் வாழ்க்கையில் ஒளிவு மறைவே இல்லை.கடந்த காலத்தில் இவரைப் போல் யாராவது இருந்திருக்கலாம். எதிர்காலத்தில் இன்னொருவரும் வரக் கூடும். ஆனால், இப்போது? இன்று? நிகழ்காலத்தில்..?

ம்ஹும். நயன்தாரா தவிர யாருமே இல்லை.அதனால்தான் அவர் கெத்து தாரா!சும்மாவா..? 16 ஆண்டுகளாக டாப் மோஸ்ட் ஹீரோயினாக மட்டுமே அல்லவா ஜொலித்து வருகிறார்?!யெஸ். நடிகையாக அவர் அறிமுகமானது 2003ம் ஆண்டு. அந்தஆண்டு கிறிஸ்துமஸ் அன்றுதான் சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் ‘மனசினக்கரே’ மலையாளப் படம் வெளியானது. நயன்தாரா என்ற நடிகைக்கு அதுதான் முதல் படம்.

இரண்டாண்டுகள் கழித்து 2005ல் தமிழில் ‘ஐயா’ வழியாகவும், அடுத்த ஆண்டே ‘லக்ஷ்மி’ மூலமாக தெலுங்கிலும், 2010ல் ‘சூப்பர்’ வழியாக கன்னடத்திலும் கால் பதித்தார்.இதோ இந்த நிமிடம் வரை இந்த நான்கு மொழிகளிலும் இவர்தான் ஸ்டார்; ஒன்லி லேடி சூப்பர் ஸ்டார்.

வியப்பாகத்தான் இருக்கிறது.

தென்னிந்தியாவில் இணையப் பயன்பாடு அதிகரித்த காலமும் நயன்தாரா நடிக்கத் தொடங்கிய கட்டமும் ஏறக்குறைய ஒன்றுதான். போலவே ஆண்ட்ராய்ட் போன் புழக்கத்துக்கு வந்ததும் கடைநிலை மக்களும் அந்த போனை பயன்படுத்தத் தொடங்கியதும் நயன்தாராவின் காதல் செய்திகள் கசிய ஆரம்பித்ததும் கூடஇக்காலம்தான்.

ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம், வாட்ஸ்அப்... என தளங்கள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்ததும் கூட இதே நேரம்தான்.விளைவு, பர்சனல் என்பதே பிரபலங்களுக்கு இல்லாமல் போனது. அவர்கள் சாப்பிடும் ஒரு பருக்கை முதல் உடுத்திய ஆடை காற்றில் பறந்த தருணம் வரை எல்லாமே புகைப்படங்களாகப் பதிவு செய்யப்பட்டு சுற்றுக்கு விடப்பட்டன. மைக்ரோ நொடியில் கோடிக்கணக்கான கண்கள் அவற்றை எல்லாம் மொய்த்து இன்பம் கண்டன; காண்கின்றன.

அனைத்து அந்தரங்கங்களும் எல்லா மூலையிலும் டவுன்லோட் ஆகிக்கொண்டேயிருக்கின்றன. தனிப்பட்ட வாழ்க்கை எல்லாம் பொதுத்தளத்தில் அலசப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.இதனால் பாதிக்கப்பட்ட பலர் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஒருசிலர்
தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.ஆனால், நயன்தாரா?

கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறார்.‘வல்லவன்’ பட போட்டோ ஷூட்டில் சிம்பு அவரது உதட்டைக் கடிப்பது போல் எடுக்கப்பட்ட புகைப்படம் முதல் சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் அவர் விரும்பி எடுத்துக்கொண்ட போட்டோ வரை எல்லாமே கையடக்க கைபேசியில் ஒரு ‘டச்’சில் பார்வைக்கு கிடைக்கின்றன.போலவே சிம்புவுக்கும் அவருக்குமான காதல் - பிரிவு; பிரபுதேவாவுக்கும் அவருக்கும் இடையிலான உறவு... இப்போது விக்னேஷ் சிவனுடன் லிவிங் டு கெதராக அவர் வாழும் வாழ்வு... என எதையும் விட்டு வைக்காமல் எல்லாவற்றையும் செய்திகளாக மீடியாக்கள் பதிவு செய்துள்ளன. கருமமே கண்ணாக கூகுளும் அவற்றை எல்லாம் சேகரித்து வைத்துள்ளன.

இவற்றில் எது பொய் - எது நிஜம்? தெரியாது. எவ்வளவு சதவிகிதம் உண்மை? தெரியாது. ஆனாலும் எல்லாமும் தெரிந்ததுபோல்தான் நயன்தாரா குறித்து சகலரும் பேசிக்கொண்டிருக்கிறோம். அவரது கேரக்டரை அலசிக் கொண்டிருக்கிறோம்.யோசித்துப் பாருங்கள். நயன்தாராவின் நிலையில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் என்னவாகி இருப்பார்..? தன்னைப் பற்றி தப்புத் தப்பாக ஒவ்வொருவரும் புரிந்துகொண்டிருப்பதை எண்ணி எண்ணி குமைந்திருப்பார். உள்ளுக்குள் ஒடுங்கியிருப்பார். காணாமல் போயிருப்பார்.

ஆனால், நயன்தாரா? தன்னைக் குறித்த எந்தச் செய்தியையும் ஏற்கவும் இல்லை; மறுக்கவுமில்லை. என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள்... எப்படி வேண்டுமானாலும் கேரக்டர் அசாசினேஷன் செய்யுங்கள்... நான் இப்படித்தான் என கெத்தாக இருக்கிறார்; நடமாடுகிறார். அதேநேரம் தொழிலிலும் கவனம் செலுத்துகிறார். முன்னணி ஹீரோயினாக வலமும் வருகிறார்.இந்த இயல்புதான் நம் அனைவருக்குமே பாடம். குறிப்பாக பெண்களுக்கு.

இன்று தொழில்நுட்ப சாதனங்கள் பிரமாண்டமாக வளர்ந்திருக்கின்றன. யாரைக் குறித்தும் எப்படி வேண்டுமானாலும் கதை கட்ட முடியும். அதையெல்லாம் பொருட்படுத்தத் தொடங்கினால் மகிழ்ச்சியாக வாழ முடியாது. யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. செயல்தான் எல்லா அவதூறுகளுக்குமான பதில். தவறாகப் பேசுபவர்களே நாம் சாதிக்கும்போது நம்மைப் பாராட்டுவார்கள். அப்போது அவதூறுகளும் கேரக்டர் அசாசினேஷனும் மறைந்துவிடும்.நயன்தாராவின் நான் ஸ்டாப் ஹீரோயின் கரியர் இதைத்தான் உணர்த்துகிறது.ஆம். அவர் கெத்து தாராதான்!

கே.என். சிவராமன்