நியூஸ் சாண்ட்விச்



5 கோடி உயிரினங்கள் இறப்பு?

தெற்கு ஆஸ்திரேலியா முழுவதும் காட்டுத் தீயில் பல பாலூட்டிகள், ஊர்வன வகை உயிரினங்கள், பறவைகள் மற்றும் பிற இனங்கள் இறந்துள்ளன. சுமார் 5 கோடி உயிரினங்களை நாம் இழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் தீயணைப்பு வீரர்களும், தொண்டர்களும் இரவு பகல் பாராமல் மிஞ்சி இருக்கும் உயிரினங்களைப் போராடி மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால், அவை அதிக தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளதால், கால்நடை மருத்துவர்கள் அந்த விலங்குகளையும் கருணைக் கொலை செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

காமிக்ஸ் கஃபே

பொதுவாக மக்கள் சுற்றுலா இடங்களுக்கு தேடிச் சென்று பொழுதைக்கழிப்பார்கள். இப்போது தீம் ரெஸ்டாரண்ட்களுக்கு அதிகம் செல்கின்றனர்.
எனவே உணவகங்களும் உணவைத் தாண்டி, பல பொழுதுபோக்கு சாதனங்களுக்கும், வடிவமைப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
மலேசியாவில் இதே போல ஒரு கஃபே கோலாலம்பூரில் அமைந்திருக்கிறது. காமிக்ஸ் பிரியர்களின் கனவை நனவாக்கும் இந்த 2டி கஃபே முழுக்க முழுக்க காமிக்ஸ் உலகைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சுமார் இரண்டு மாதங்களில் கைகளிலேயே வரைந்து, பெயிண்ட் செய்து, காமிக்ஸ் உலகை உருவாக்கியிருக்கின்றனர்!

சென்னை புத்தகக் கண்காட்சி

43வது சென்னை புத்தகத் திருவிழா, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. ஜனவரி 8 முதல் 21ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த கண்காட்சியில், மாலை நேரங்களில் எழுத்தாளர்கள் அறிஞர்களின் உரை நிகழ்ச்சிக்கும் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 800 அரங்கங்களில் பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டிருக்கும் இக்கண்காட்சியில் அனைத்து விதமான புத்தகங்களும் சலுகை விலையில் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

ஒருவரின் இரத்த தானம், 864 உயிரைக் காப்பாற்றியது.

அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாநிலத்தில் வசிக்கும் ஜேம்ஸ் மிச்செலினி என்பவருக்கு 73 வயதாகிறது. 43 வருடங்களாக தொடர்ந்து ரத்த தானம் செய்து வந்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் இதுவரை 864 பேர், இவரால் பயன்பெற்று உயிர்பிழைத்துள்ளனர்.

ஒரு பாட்டில் ரத்தம் மூலம், மூன்று பேர் பயனடைய வாய்ப்புள்ளது. அவை ப்ளேட்லெட்ஸ்களாக பிரிக்கப்பட்டும் நோயாளிகளுக்கு புகுத்தப்படும். இப்படி பல பேரின் உயிரைக் காக்க உதவியாய் இருந்து, அவர்கள் குடும்பத்தில் ஒருவராக மாறியிருக்கிறார் ஜேம்ஸ்.

இந்தியாவின் இளம் நீதிபதி

ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாயங்க் பிரதாப் சிங் 21 வயதில் ஐந்தாண்டு சட்டப்படிப்பை முடித்தார். முடித்ததுமே ராஜஸ்தானின் நீதிபதிக்கான தேர்வு எழுதி அதில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார்.

இந்தியாவிலேயே 21 வயதான இளம் நீதிபதி என்ற பெருமையும் இவரையே சேரும். இதற்குக் காரணம், தினம் 6 - 7 மணி நேரப் படிப்பும், தேர்வு நேரங்களில் 12 மணி நேரம் வரை கூட எடுத்துக்கொண்ட பயிற்சியும்தான் என்கிறார்.
இதுவரை இவர் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயன்படுத்தியதே கிடையாதாம்!

மூன்று காலுடன் உலகைச் சுற்றும் நாய்

இந்தியாவிற்கு சுற்றுலா வந்த அமெரிக்கப் பெண் ஜெசிகா ஹால்ட்ஸ்மேன், தில்லியில் ஒரு நாயைக் கண்டுபிடித்தார். அந்த நாய் காலில் அடிபட்டு வலியில் துடித்துக் கொண்டிருந்தது. உடனே அதற்கு சிகிச்சை செய்து, தன்னுடன் அழைத்துச் செல்ல திட்டமிட்டார். அந்த நாய்க்கு, அது பிறந்த இடமான தில்லியையே பெயராகவும் வைத்தார்.

தில்லியை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லும் போது, காயம் காரணமாக காலை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காலை இழந்தாலும், மனம் தளராத தில்லி, ஜெசிக்காவின் அன்பான கவனிப்பால் சீக்கிரமே குணமாகி இப்போது அவருடன் உலகம் எங்கும் காடு, மலைகள் என சுற்றி வருகிறது. இதையடுத்து, ஜெசிகா தான் கண்டெடுத்த தில்லியின் பெயரிலேயே ஓர் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் மூலம் தெரு நாய்களுக்கு நிதி திரட்டி நிரந்தர இல்லம் அவைகளுக்கு கிடைக்க உதவி செய்து வருகிறார்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்