தமிழக மாணவர்களின் போராட்ட குணம் எங்கே போனது..?



உலகளவில் ஜனநாயகம் மற்றும் நீதிக்காக முதல் கொடியைத் தூக்கியவர்கள் மாணவர்கள்தான். இந்தி எதிர்ப்பு போராட்டமா… ஈழத் தமிழர்கள் பிரச்னையா… ஜல்லிக்கட்டா… எல்லாவற்றுக்கும் முன்னணியில் நின்றவர்கள் தமிழக மாணவர்கள்.
ஆனால், இன்று குடியுரிமை திருத்தச் சட்டம் முதல் பல சமூக கேடுகளுக்காக வடநாட்டு மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராடி, மண்டை உடைந்து கிடக்கும் நேரத்தில் தமிழக மாணவர்கள் ஆழ்ந்த மெளனம் காப்பது ஆச்சரியம். உண்மையில் தமிழக மாணவச் சிங்கங்களுக்கு என்ன ஆனது?

‘‘ஒரு காலத்தில் தமிழக கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் மயமாகத்தான் இருந்தார்கள். ஆனால், அரசியல் கட்சிகளின் ஆட்சியால் அவர்களும் கட்சி அரசியலுக்குத் தள்ளப்பட்டார்கள். ஆரம்பத்தில் அரசியல் கட்சிகள்கூட மாணவர்களால்தான் முன்னுக்கு வந்தன.

பிறகு மாணவர்களின் கட்சி சாராத அரசியல் போக்கால் அவர்களுக்குள் அரசியல் சிந்தனை புகுந்துவிடக்கூடாது என்பதை கருத்தாகக் கொண்டே அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்தின…’’ என்று இன்ட்ரோ கொடுக்கும் சென்னையில் இயங்கும் வளர்ச்சிக்கான ஆய்வு நிறுவனமான எம்ஐடிஎஸ்-ஸின் இணை பேராசிரியர் லட்சுமணனிடம், ‘மாணவர்களிடையே இந்த அரசியல் நீக்கம்  எப்படி படிப்படியாக நிகழ்ந்தது..?’ என்றோம்.

‘‘அந்தக் காலத்தில் ஒவ்வொரு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திலும் மாணவர் மன்றங்கள் இருக்கும். தேர்தல் மூலம் இந்த மன்றங்களுக்குத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது இதன் முதன்மையான கடமை.
இதில் சில கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மன்றங்கள் கட்சிஅரசியல் சார்புடையதாக இருந்தன. பிறகு மாணவர் மன்றங்கள் பொதுப்பிரச்னைக்காக போராட ஆரம்பித்தன. அதனால் அரசு அவற்றை ஒடுக்கத் தொடங்கியது.

பல்வேறு கால கட்டங்களில் நடந்த போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களை அரசு கொலை , துன்புறுத்தல், ஒடுக்குதலுக்கு உட்படுத்தியது.
இந்தச் சம்பங்களுக்குப் பிறகு தமிழக கல்வி நிறுவனங்களில் மாணவர் அமைப்பு என்பதே ஒழிந்துபோனது. இன்று மாணவர் மன்றங்களுக்குத் தேர்தல் எல்லாம் நடைபெறுவதில்லை. ஒருசில பதவிக்கு மாணவர்களை நியமனம் மட்டுமே செய்கின்றனர். இன்று கல்வி நிறுவனத்தின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப வளைந்துகொடுக்கும் வேலையைத்தான் இந்த மாணவர் அமைப்புகள் செய்கின்றன...’’ என்றவரிடம் ‘வடநாட்டு பல்கலைக்கழகங்களைப் போல கட்சிகளைத் தாண்டிய அரசியலைத் தமிழ்நாட்டு மாணவர்களால் எடுத்துச் செல்லமுடியாதா..?’ என்றோம்.

‘‘கட்சி அரசியலை விட்டால் தமிழ் தேசியம், தமிழ்ப் பண்பாடு, மொழிப் பற்றோடு இந்த மாணவர்கள் நின்று விடுகிறார்கள். தமிழக மாணவர்கள் மைய நீரோட்ட அரசியலைப் புரிந்து செயல்படுவதில் முனைப்பு காட்டுவதில்லை. இதற்கும் அரசியல் நீக்கம்தான் காரணம். உண்மையில் ஒரு பல்கலைக்கழக ஆசிரியர் என்பவர் அரசு அதிகாரியைவிட சுதந்திரமானவர். அவர் அரசு ஊழியராகவே கருதப்படமாட்டார். தன்னை சுய ஆட்சி செய்யக்கூடியவர் என்றுதான் அவரை இங்கே வரையறுக்கிறார்கள்.

ஆனால், அரசு அதிகாரம் இந்த ஆசிரியர்களைக் கூட சுய சிந்தனையுடையவர்களாக இருக்க விடுவதில்லை. இதனால்தான் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு அரசியல் சிந்தனைகளை ஊக்குவிப்பதில்லை. இது சமூக மாற்றத்துக்கு இல்லாமல் வெறும் வாழ்க்கைக்குத் தேவையான கல்வியை மட்டுமே வழங்கக்கூடிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளிவிடுகிறது...’’ என்று சொல்லும் லட்சுமணன் இந்தக் குறைக்கான மேலதிக காரணங்களையும் பட்டியலிட்டார்.

‘‘இன்று புதிய கல்விக்கொள்கை போன்ற பிற்போக்கான கல்விச்சட்டங்கள் கல்வியை தனியார் மயமாவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. பணம் படைத்தவன் மட்டுமே இனி கல்வியை கற்றுக்கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை எதிர்த்துதான் ஜே.என்.யூ போன்ற பிரபல பல்கலைக்கழகங்கள் போராடுகின்றன. இந்தப் புதிய கல்விக் கொள்கைகளால் தமிழகத்தில் மாணவர்களின் மன அழுத்தம் அதிகமாகிக்கொண்டே போகிறது. கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடையே தற்கொலை அதிகரித்துள்ளது.

தேசிய அரசியல் இல்லாவிட்டாலும் சொந்த மாநில மக்களுக்காகவாவது முதற்கட்டத்தில் இந்த மாணவர்கள் போராடத் துணியலாமே. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொலை செய்யப்பட்டதற்காக எந்த மாணவர் அமைப்பாவது போராடியதா? மெரினா புரட்சி எல்லாம் ஒரு திருவிழா தேரோட்டம்தான். கல்வியைச் சமூக சீர்திருத்தத்துக்கான வழிமுறையாக மாணவர்கள் பார்க்கும்போதுதான் தமிழக மாணவர்களிடையே ஒரு மாற்றம் வரும்...’’ என்று லட்சுமணன் முடிக்க, சென்னை ஐஐடியின் பிரபல மாணவர் அமைப்பான அம்பேத்கார் ஸ்டடி சர்க்கிளின் முன்னாள் உறுப்பினரும், தனது புகைப்படத்தை வெளியிட விரும்பாதவருமான ரமேஷ் தன் கருத்துகளைப் பகிர்ந்தார்:

‘‘மற்ற போராட்டங்களைவிட மாணவர் போராட்டம் தீவிரமானது என்பதால் ஆட்சியாளர்கள் மாணவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தியது உண்மை. கல்வி வளாகம் என்பது ஒன்று சேர்வதற்கும், கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதற்கும் வாய்ப்பான இடம். இதனால்தான் அது நிகழ்ந்துவிடாத வகைக்கு மாணவர் மன்றங்களை ஒழித்துக் கட்டினார்கள்.

ஒரு கல்வி நிறுவனத்தில் ஒரு மாணவனோ அல்லது மாணவர்களோ போர்க்குணமிக்கவர்களாக இருந்தால் அல்லது ஒன்று சேர்கிறார்கள் என்றால்  இன்று அதைக் கண்காணிப்பதற்கு அந்தக் கல்வி நிறுவனத்திலேயே ஆட்கள் உண்டு. அத்தோடு காவல்துறையும் அரசு அதிகாரிகளும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு மாணவர்களைப் பின்தொடர்வதையும் தகவல் சேர்ப்பதையும் நாம் கேள்விப்படுகிறோம்.

இன்று சென்னையில்கூட ஒரு கல்லூரி வாசலிலோ அல்லது பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளோ காவல்துறை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை கண்கூடாகப்பார்க்கமுடியும்.

இது எல்லாம் கல்வி நிறுவனங்கள் ஒரு தீவிரவாத அமைப்பைப்போல கண்காணிக்கப்படுகிற அவலத்தைத்தான் காட்டுகிறது.
போராட்ட குணமுள்ள மாணவர்களைத் தண்டிப்பது, பழிவாங்குவது அல்லது நிறுவனத்திலிருந்து அப்புறப்படுத்துவது போன்ற அடாவடியான காரியங்கள் எல்லாம் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. உதாரணமாக சமீபத்தில் இங்கே சில கல்லூரிகள் பஸ் டே கொண்டாடின. இது தொடர்பாக சென்னை காவல்துறை கமிஷனர் கல்லூரி முதல்வர்களை அழைத்துப் பேசினார்.

பஸ் டேயில் சாதக பாதகங்கள் உண்டு என்றாலும் அதை மாணவர்களிடையே கல்லூரி நிர்வாகமே பேசலாமே... அதைத் தவிர்த்து ஒரு மிரட்டல் தொனியில் காவல்துறை மூக்கை நுழைப்பது என்பது ஒவ்வொரு மாணவரையும் குறிவைத்துத் தாக்குவதற்கு ஈடானது. இன்று நாட்டில் ஒரு பிரச்னை புதிதாகக் கிளம்புகிறது என்றால் முதலில் ஆட்சியாளர்கள் செய்வது கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் நீண்டகால விடுப்பு விடுவதுதான்.

அண்மையில்கூட குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வடநாட்டு மாணவர்களிடையே போராட்டம் வெடித்தபோது தமிழகத்தில் இந்தப் போராட்டம் மாணவர்களிடையே பரவிவிடக்கூடாது என்பதற்காக உள்ளாட்சித் தேர்தலை சாக்காக வைத்துக்கொண்டு கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு 10 நாட்களுக்கு நீண்ட விடுப்பை கல்வி நிறுவனங்கள் அறிவித்தன.

இவையெல்லாம் கல்வி நிறுவனங்களும் அரசும் சேர்ந்துகொண்டு எப்படி மாணவர் போராட்டங்களைத் தடுக்கின்றன என்பதற்கான உதாரணங்கள்.
கல்வி நிறுவனங்களில் ஆட்சி அதிகாரத்தின் செல்வாக்குகளை விடுவிக்கும்போதுதான் மாணவர்களும் மாறுவார்கள்; இந்தச் சமூகமும் உருப்படும்...’’ என்றார் காட்டமாக.

டி.ரஞ்சித்