லவ் ஸ்டோரி - பால சரவணன்மழையில் சொல்லப்பட்ட காதல் நிராகரிக்கப்பட்டதேயில்லை…

ஸ்கூலில் படிக்கும்போது காதலை சினிமாவில்தான் பார்த்தோம். அப்பாவும், அம்மாவும் ஃப்ரண்ட்ஸ் கணக்கா இருப்பாங்க. அப்பாவுக்கு நான் எஞ்சினியர் ஆகணும்னு ஆசை. ‘ஆகிட்டாப் போச்சு’ன்னு காலேஜ்ல சேர்ந்தேன். பார்த்தால் எதைத் தொட்டாலும் கணக்கா இருக்கு. ஆனால், கிரிக்கெட் நல்லா வந்தது.

ஸ்கூல்ல இருந்தே கோ எஜுகேஷன்தான். அப்ப எல்லாத்தையும்விட முக்கியமானது நட்புதான். அந்த ரிலேஷன்ஷிப்ல இருக்கிற அழகு வேறு எதுலயும் இல்லை. எந்த எல்லைகளும் இல்லாத, ஆனால், எல்லாச் சுதந்திரமும் உள்ள உறவு அது. அப்படித்தான் ஸ்கூலில் பழகுவோம்.
சோகமோ, சந்தோஷமோ பகிர்ந்தும், ஆறுதலாகவும், உதவி யாகவும் இருந்துக்குவோம். நினைச்சபோது சண்டை போட்டுக்கிறதும், இரண்டு நாள் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்காமல் சிலிப்பிக்கிறதும், அடுத்தடுத்த நாட்களில் சிரிச்சுக்கிட்டு ஸாரி சொல்லிக்கிறதும் நடக்கும். இதில் காதல் இல்லவே இல்லை… பதிலாக கரிசனம் இருந்தது.

அப்படி ஸ்கூலில் படிக்கிறபோது சூர்யா எனக்கு நல்ல சிநேகிதியாக இருந்தாங்க. எங்க வீடு வரைக்கும் வந்து குடும்பத்தில் அத்தனை பேருக்கும் அறிமுகம். பிளஸ் டூ முடிச்சிட்டு மதுரை யாதவா காலேஜில் அவங்க சேர, நான் எஞ்சினியரிங் படிக்கச் சேர்ந்தேன். அப்ப சின்ன சைஸில் செல்போன் அறிமுகமாக... வாங்கிக்கொண்டேன். சூர்யாவும் போன் வாங்க, இரண்டு பேரும் பேசிக்கிட்டேயிருப்போம்.

ஒரு நாள் அப்படியே நான் போன் போட, இன்னொருத்தர் எடுக்கிறாங்க. ‘சொல்லுங்க’ன்னு பேசுறாங்க. ‘என்ன சொல்லுங்க, நீங்க யாரு’ன்னு கேட்கிறேன். ‘ஏன்… நீங்க யாருன்னு சொல்ல மாட்டீங்களா’ன்னு கேட்க, நான் விடாமல், ‘நீங்க யாரு’ன்னு மறுபடியும் கேட்டேன். ‘போன் செய்தவங்கதான் யாருன்னு அறிமுகப்படுத்திக்கணும்’னு சொல்றாங்க.

‘ஏங்க, இது என் ஃப்ரண்ட் சூர்யா போனு. அதை எடுத்து பேசிக்கிட்டு யாரு யாருன்னா என்ன சொல்றது’னு கேட்க, வார்த்தை மீறிப்போய், ‘போடி வாடி’ன்னு போய், அவங்க ‘போடா வாடா’ன்னு சொல்லி கட்டாகி விட்டது.

அப்புறம் சூர்யாவே லைனுக்கு வராங்க… ‘ஏம்பா, நீ பாட்டுக்கு திட்டிட்டே. அந்தப் பொண்ணு அழுதிட்டு இருக்கு’ன்னு சொல்றாங்க. ‘நீ எங்கே போயிருக்கேன்னு முதலில் சொல்லியிருக்கலாமே… சூர்யா ஃப்ரண்டு நானு. அதுக்காக எடுத்துப் பேசினேன்னு இரண்டு வார்த்தையில் வணக்கம் போட்டு இருக்கலாமே’னு சொன்னேன்.

சூர்யா விடாமல், ‘அவகிட்டே மன்னிப்பு கேளு. ஸ்கூலில் உன்னை மாதிரி, காலேஜ்ல இவதான் எனக்கு பெஸ்ட் ஃப்ரண்ட். ரொம்ப சின்ஸியர். அருமையான பொண்ணு. நீ எனக்கு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அவளும்’னு சொல்லிட்டு சூர்யா, ஹேமாவதி கிட்டே போனை கொடுத்துட்டாங்க.

மன்னிப்பு கேட்ட அந்தக் குறிப்பிட்ட பேச்சுவார்த்தையே முக்கால் மணி நேரத்திற்கு மேலே போச்சு. அழுத பிள்ளை சிரிச்சு சிரிச்சு இப்ப சிரிப்பால்
கண்ணீர் வருது. ‘டேய், என்னடா இது அநியாயம்… அவகிட்ட என்னடா சொன்னே… சிரிச்சே மேற்கொண்டு அழகாயிட்டா’ என சூர்யா சொல்ல… அடுத்த சில நாட்களிலேயே சூர்யா இடையில் வராமல் நானும் ஹேமாவதியும் பேசிக் கொண்டோம்.

இப்பதாங்க எதிர்பாலின ஈர்ப்புன்னா என்னனு புரியது. ஹேமாகிட்டே பேசுறதே அனுபவமாக இருக்கு. திடீர்னு இந்த உலகமே அழகாயிட்ட மாதிரியிருக்கு. வீட்டில இருக்கிற கன்னுக்குட்டி, காலேஜ்ல இருக்கிற அரச மரம், இளையராஜா மியூசிக், வானம், தார் ரோடு கூட அழகாயிருக்கு.
அவகிட்டே இருந்து வர்ற ஒரு போன், இந்த உலகத்தையே கலர்ஃபுல் ஆக்குது.

நாளடைவில் இதுவே காதல்னு புரிஞ்சது. நான் எப்படியிருக்கேன்னு கண்ணாடியில் பார்த்தால் பக்னு இருக்கு. வெயிலில் அனுதினமும் கிரிக்கெட் விளையாடி, கருத்துப் போய், தலை செம்பட்டையாயிருக்கு.அவங்ககிட்டே இந்தக் காதலை சொல்லிடணும். இதை நட்புன்னு நினைச்சுக்கிட்டு காலம் கடத்திடக் கூடாதுன்னு ‘எப்ப சந்திக்கலாம்’னு கேட்டேன்.

இந்தப் பேச்சுவார்த்தையெல்லாம் எட்டு மாதங்களாக போய்க்கிட்டு இருக்கு. அப்புறம் எங்க இன்னொரு ஃப்ரண்ட் அகஸ்தியா வீட்டுல கூடிப் பேசினோம். மதியம் சாப்பாடு எல்லாம் முடிச்சு வந்து ‘என்னவோ பேசணும்னு சொன்னியே’னு யதார்த்தமாக ஹேமா கேட்டாங்க.

‘நான் உன்னோட கடைசி வரை இருக்கணும். இப்ப போல எப்பவும் பேசுறமாதிரி இருக்கணும். அதுக்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாது’னு சொன்னேன். ‘இப்ப அப்படித்தானே இருக்கோம்’னு ஹேமா சொல்ல, நான் என் காதலைச் சொன்னேன். ஹேமா எதிர்பார்க்கலை. ‘நாலு நாள் எடுத்துக் கொள்ளட்டுமா’னு கேட்டவள் அடுத்த நாளே, ‘கல்யாணம் செய்துக்கலாம். இப்ப படிக்கலாம்’ என்றாள்.

அம்மாவிடம் காதலைச் சொல்ல அவங்க உடனே வெள்ளைக் கொடி காட்டினாங்க. ஆனாலும் ‘முதல் வருஷம் படிக்கும்போதே அவசரப்படணு
மா’ன்னு கேட்டாங்க. ‘பிளஸ் டூவில் காதலிக்காமல் போனானே. அதுக்கு சந்தோஷப்படு’னு அப்பா சொன்னார். அவங்க வீட்டில் எதிர்ப்பு இருந்தது. எங்க அக்கா வீட்டுக்காரர் சிவகுமார் மச்சான் அதிரடியாக ஹேமாவை கொண்டு வந்து, அப்பா, அம்மா சம்மதத்தோட 60 பேர் சூழ எங்க கல்யாணம் நடந்தது.

அப்புறம் ஹேமாவதி அப்பா வெளிநாட்டிலிருந்து வர, நாங்கள் பார்க்கப் போனோம். மகளைக் கட்டிப்பிடிச்சு அழுதிட்டு, ‘என் மகளுக்கு ஊரும் உலகமும் பார்க்க கல்யாணம் செய்வேன்’னு அவர் பிரமாதமாக மறுபடியும் கல்யாணம் செய்து வைத்தார். நான் இதுக்கிடையில் ‘கனாக்காணும் காலங்கள்’ சீரியல்ல கண்டுபிடிக்கப்பட்டு அடுத்தடுத்து வெளியே தெரிய வந்திட்டேன். யாழினி, கயலினினு அடுத்தடுத்து இரண்டு பெண் செல்வங்கள் பிறந்ததும் ஹேமா வேலைக்குப் போகாமல் இருந்திட்டாங்க.

என்னோட வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதுனு நினைக்கிறேன். யாருக்கோ போன் செய்து, எவரோ எடுத்து, அந்த நேரமே மணமாலைக்கான நேரமாக இருந்திருக்கே… அது ஆச்சர்யம் இல்லையா? கடவுளின் பரிசு இல்லாமல் இது வேறென்ன? என்னை முழுதாக ஆற்றுப்படுத்தியது ஹேமாதான். திடீரென்று மனசு கஷ்டமாயிட்டா, அதையும் ஹேமாகிட்டே சொல்லிட்டா, ‘உனக்காக நான் இருக்கேன்’ங்கிற மாதிரி அவகிட்டேயிருந்து வருகிற வார்த்தைகள் அப்படியே நம்மைக் காப்பாத்திடும்.

நினைச்சுப் பார்த்தா யாரும் பண்ணக்கூடிய மிகச் சாதாரண விஷயங்களாகக் கூட இருக்கலாம். ஆனால், நீங்க நேசிக்கிற ஒருத்தர் உங்களுக்குன்னு பண்ற ஒவ்வொரு விஷயமும் அந்த உறவை அழகாக்கும். இத்தனை வருஷமாச்சு. அவளை காதலியாகவே நினைச்சுக்கிட்டு இருக்கேன். இப்பவும் திடீர்னு போனில் பேசிக்கிட்ட அந்த அழகான காலங்களுக்கு போயிடுவோம். இப்ப பேசும்போதும் பாருங்க மழை பெய்யுது… மழையில் சொல்லப்பட்ட காதல் நிராகரிக்கப்பட்டதேயில்லை. இப்படித்தான் அன்றைக்கும் மழை பெய்தது!

- பால சரவணன்

நா.கதிர்வேலன்