இந்தியாவின் முதல் பாசிக் காடு!



இதோ உருவாகிவிட்டது இந்தியாவின் முதல் பாசிக் காடு. கடந்த வாரம் உத்தரகாண்டின் பிரபல மலைப்பகுதியான நைனிடாலில் பாசிக் காட்டைத் திறந்து வைத்திருக்கிறார் ‘தண்ணீர் மனிதன்’ என்று அழைக்கப்படும் சுற்றுச்சூழல் போராளி ராஜேந்திர பிரசாத்.

டைனோசர் வாழ்ந்த காலத்திலிருந்து பாசி இனத் தாவரம் இருந்து வருகிறது. பாறைகளின் இடுக்குகளிலும் கற்கள் நிரம்பிய பகுதிகளிலும் எளிதாக வளரக்கூடிய முதல் தாவர இனம் இதுதான். கற்களைக் குடைந்து மணலாக மாற்றி மற்ற தாவரங்கள் வளர்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவது இதன் சிறப்பு.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பாசி எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்தக் காட்டை அமைத்துள்ளனர்.

உத்தரகாண்டின் வனத்துறை இதற்கு அங்கீகாரம் கொடுத்து வழிகாட்டியாகவும் உதவியுள்ளது. சுமார் 30 வகையான பாசி இன செடிகள் இந்தக் காட்டில் வளர்க்கப்படும். இதை ஒரு சுற்றுலாத்தலமாகவும் மாற்றப்போகிறார்கள்.

த.சக்திவேல்