உலக அரசியலை வளைக்கிறதா ஃபேஸ்புக்..?FaceB(JP)ook - மினி தொடர் 13

இந்தியாவில் மட்டும் அரசியலைத் தீர்மானிக்கும் நவீன ஊடக சக்தியாக ஃபேஸ்புக் உருவெடுத் திருக்கவில்லை. இன்று உலகம் முழுதுமே அது ஜனநாயகம் என்ற கருத்தாக்கத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. அதுவும் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் என்ற பெயர்களிலேயே அதனைச் செய்துகொண்டிருக்கிறது என்பதுதான் மாபெரும் முரண்நகை.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் எப்படி ஒரு தீர்மானகரமான சக்தியாக செயல்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிய கட்டுரைகள் உலக மீடியாக்களில் அலசப்படுகின்றன. இந்த அதிபர் தேர்தல் மட்டு மல்ல, இதற்கு முன் நடந்த அதிபர் தேர்தல்களிலும் ஃபேஸ்புக்கின் கைங்கர்யம் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். ஒபாமாவை உலகின் முதல் ஃபேஸ்புக் அதிபர் என்று மார்க் வர்ணித்ததை இங்கு நினைவுகூர்வது நல்லது.

கடந்த தேர்தலில் டிரம்ப்பை அதிபராக்க, ஃபேஸ்புக் மூலமாக, தனிநபர் இலக்கு சார்ந்த பிரசாரங்கள் எப்படி நடந்தன என்பதைப் பற்றிய கட்டுரைகள் நிறைய வந்துவிட்டன. அமெரிக்க ஜனநாயகத்தை ஃபேஸ்புக் என்ன செய்திருக்கிறது என்றொரு கட்டுரை சில வருடங்கள் முன் வந்து அதிரடித்தது.

‘எக்கனாமிஸ்ட்’ இதழ், அதிபர் தேர்தலில் தொழில்நுட்பத்தின் பங்கு என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. இவை எல்லாம் ஃபேஸ்புக்குக்கும் அரசியல் கட்சிகளுக்குமான கள்ள உறவென்பது வெறும் சதிக் கோட்பாடுகள் அல்ல. அவை திரைமறைவு அரசியலின் அபத்தமான ஜனநாயகப் படுகொலைகள் என்பதை நிரூபித்திருக்கின்றன.

பிஜேபி, இந்தியாவில் ஃபேஸ்புக்கோடு கைகோர்த்த முதன்மையான அரசியல் கட்சி. படித்த, மேல்தட்டு மக்களிடையே இவர்களின் வலதுசாரி சித்தாந்தத்தை கொண்டு செல்ல சிறந்ததொரு வாகனமாக இவர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினார்கள்.

இந்திய வாக்காளர்களின் தகவல்களை எடுத்துக்கொண்டு போய் விஞ்ஞானரீதியாக அதைப் பகுப்பாய்வு செய்து, ஒவ்வொருவரையும் எப்படித் தனித்தனியாக மூளையைக் கழுவுவது, முட்டாளாக்குவது என்று திட்டமிட்டார்கள்.

அதற்கு பிஜேபிக்கு மிகப் பெரிய பிரசார வாகனம் தேவைப்பட்டது. அதுதான் ஃபேஸ்புக்கும் டுவிட்டரும். இந்த இரண்டும் இவர்களின் பொய்களுக்கும் புளுகுகளுக்கும் களம் அமைத்துக் கொடுத்தன. உண்மையின் கண்களைக் கூசச் செய்யும் பொய்களைத் தொடர்ந்து கட்டவிழ்த்துக்கொண்டே இருந்தார்கள்.

குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரத்தை அடக்க இயலாமல் பரிதாபமாகத் தோற்றுப் போன ஒரு முதல்வரை இந்தியாவையே காக்க வந்த ஆபத்பாந்தவன், நவீன மெஸையா என்ற ரேஞ்சுக்குப் புகழ்ந்தார்கள். குஜராத்தின் வளர்ச்சி பற்றி இல்லாத, ஜோடனையான போலித் தகவல்களை வாட்ஸ்அப்பில் கசியவிட்டார்கள். இவற்றை உண்மை என்று நம்பி ஒரு கூட்டமும், கிண்டல் செய்வதாக நினைத்து ஒரு கூட்டமும் அதனை மேலும் மேலும் பலருக்கு ஃபார்வேர்டு செய்துகொண்டே இருந்தது.

அவர்கள் நினைத்ததும் அதுதான். விளம்பரத்துறையில் ஒரு பொன்மொழி உண்டு. ‘விளம்பரத்தில் கெட்ட விளம்பரம் என்று ஒன்றில்லை’ என்பார்கள். அதாவது, ஒரு விளம்பரம் நல்லவிதமாக இருந்தாலும் மோசமானதாக இருந்தாலும் அதனால் அந்த விளம்பரப் பொருள் பிரபலமானால் சரிதான் என்பது இது சுட்டும் பொருள். இந்த சித்தாந்தப்படிதான் மோடியை இந்தியாவின் பிதாமகன் ஆக்கினார்கள்.

மோடியைப் பிரதமராக்குவது என்பது ஏதோ ஓர் அரசியல் சக்தியின் நலன் மட்டுமில்லை; அது அதிகாரத்தரப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் லாபம். இந்தப் புரிதல் அரசியல் தரப்பில், அதிகாரத்தரப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் புரிந்திருந்தது. உலகம் முழுதுமே வலதுசாரி சக்திகள் பெரும் எழுச்சியோடு உருவாகிக் கொண்டிருக்கும் நாட்கள் இவை. உண்மையில் இந்த வலதுசாரி சக்திகள் தன்னெழுச்சியாக உருவாகின்ற
னவா... இல்லை, இந்த ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற நவீன ஊடகத் திருவிளையாடல்களால் அப்படிச் சித்தரிக்கப்படுகின்றனவா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

மக்கள் நல அரசுகள் என்ற நிலையிலிருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு அரசுகள் என்ற நிலைக்கு நவீன அரசுகள் மவுனமாக்கப்பட்ட பின்பு பெருநிறுவனங்களின் வேட்டைக்காடாக தேசியங்கள் இன்று மாறியிருக்கின்றன. இவர்களின் வணிக நலன்களுக்கு ஒத்து ஊதும் அரசுகளே இன்றைக்கு இவர்கள் தேவை. அதைச் செய்ய சாத்தியமான அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், சித்தாந்தங்களே மக்களுக்கானவை என்ற மனநிலை அதிகாரத்தரப்புகளுக்கு உண்டு.

எனவேதான், உலகம் முழுதும் வலதுசாரி சக்திகள் பெரும் எழுச்சியோடு முன்வைக்கப்படுகின்றன. பண்பாடு, பாரம்பரியம் என்ற சொல்லாடல்கள் முதல் விஞ்ஞானம், மெய்ஞானம் என்பது வரை பல்வேறு வகையான கூற்றுகளை இதற்காகப் பயன்படுத்த இந்த அரசியல் சக்திகள் தயங்குவதில்லை.
போன நூற்றாண்டுகளின் மாபெரும் மனிதக் கண்டுபிடிப்பான ஜனநாயகம் போன்ற கருத்தியலுக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கைக் கண்டு ஒருபுறம் அச்சமும் மறுபுறம் பொறாமையும் கொண்டுள்ள பழம்பஞ்சாங்க ஆளும்தரப்புகள் இதனை உள்ளுக்குள் இருந்து நீர்த்துப்
போகச் செய்யும் வேலையைச் செய்ய ஆட்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன.

இதற்குத் தோதாகச் சிக்கியது தான் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற நவீன சமூக வலைத்தளங்கள். இங்கு, இந்த வலைத்தளங்களில் எல்லாமுமே ஜனநாயகம்தான் என்ற சித்திரம் உள்ளது. ஒவ்வொருவரும் அவரவர் கருத்துகளை ஜனநாயகபூர்வமாகப் பதிவு செய்யவும் உரையாடவுமான வெளி இது என்ற தோற்றம் உள்ளது. இது உண்மைதான்.

ஆனால், இங்கு நடப்பது இது மட்டுமே அல்ல. நுட்பமான கருத்தியல் பிரசாரமும் இங்குதான் நடந்து கொண்டிருக்கிறது. நவீன பிரசார யுக்திகள், தாங்கள் காட்சிப்படுத்தும் நவீன அல்காரிதம்கள் ஆகிய வற்றைப் பயன்படுத்தி இந்த சமூக வலைத்தளங்கள் தாங்கள் பிரசாரம் செய்ய வேண்டிய கருத்தியலை, கட்சியை, தலைவரை மிக நுட்பமாக முன்வைக்கின்றன.

கருத்தற்ற நிலையில் உள்ளே நுழையும் சாமானியன்தான் இவர்கள் இலக்கு. அவனைக் குறிவைத்து தங்கள் பொய்யான வெறுப்புப் பிரசாரத்தையும் புளுகு மூட்டைகளையும் உண்மையின் தொனியில் அவிழ்த்துவிடுகின்றன.

நியூட்ரலாக கருத்தற்று நுழையும் ஒருவரை அதேபோல நடுநிலை போன்று தோற்றமளிக்கும் ஒருவரைக் கொண்டு மண்டையைக் கழுவுகிறார்கள். இதுதான் இந்த ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பிஜேபி போன்ற அரசியல் கட்சிகளோடு சேர்ந்துகொண்டு செய்யும் நூதன கருத்தியல் பிரசாரம்.

இன்று, பல்வேறு ஊடகங்களால் இவை திரும்பத் திரும்ப அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், இந்தக் கூட்டணி முன்னிலும் தீவிரமாக களமாடிக் கொண்டிருக்கிறது. பத்து முறை அழுந்தச் சொன்னால் பொய்க்கு உண்மையின் சாயல் வந்துவிடுகிறது என்ற நம்பிக்கையில்தான் இந்த சுயநல அரசியல்வாதிகளும், சமூக வலைத்தளங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்திய ஜனநாயகத்தின் பன்முகத் தன்மைக்கு இன்று விடப்பட்டிருக்கும் உண்மையான சவால் மோடியும் பிஜேபியும் மட்டுமல்ல; தங்களது வருமானத்துக்காக சமூகத்துக்கு எத்தகையதோர் கீழ்மை நிகழ்ந்தாலும் கண்டுகொள்ள மாட்டோம் என்ற கருத்தியல் போருக்குத் துணை போகும் இதுபோன்ற ஊடகங்களும்தான்.

இதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டியது மக்களாகிய நம் கடமை. ஜனநாயகம் என்ற உயர்ந்த விழுமியத்தின் கனிகளை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொடுக்க வேண்டிய கடமையாகவும் இது நம் முன் உள்ளது!

- இளங்கோ கிருஷ்ணன்