ரத்த மகுடம்-126



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

நங்கை கவனித்துக் கொண்டேயிருந்தாள். வாழையிலைப் பொட்டலத்தை தன் வலது உள்ளங்கையில் சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர் ஏந்தியதையும், அதன் எடையைப் பார்ப்பதுபோல் சைகை செய்ததையும். அடுத்து அவரது நடவடிக்கை என்னவாக இருக்கும் என கணித்தாளோ அதையேதான் செய்தார். கனைத்தார்.அடுத்த கணம், மறைந்திருந்த சாளுக்கிய வீரர்கள் வெளிப்பட்டார்கள்.
‘‘அழைத்து வாருங்கள்...’’ கட்டளையிட்டார்.

தலைவணங்கி அகன்றவர்கள் சில கணங்களுக்குப் பின் தலைமை மருத்துவருடன் வந்தார்கள்.வந்தவர் காஞ்சியின் தலைமை மருத்துவர் அல்ல. சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் அந்தரங்க மருத்துவர்.

காஞ்சியில் சாளுக்கிய மன்னர் நகர் உலா வந்தபோதெல்லாம் இவரும் உடன் வந்ததை நங்கை பார்த்திருக்கிறாள்.‘‘இந்தாருங்கள்...’’ தன் கரத்தில் இருந்த வாழையிலைப் பொட்டலத்தை  ஸ்ரீராமபுண்ய வல்லபர் அவரிடம் வழங்கினார்.பெற்றுக் கொண்ட விக்கிரமாதித்தரின் அந்தரங்க மருத்துவர் எச்சரிக்கையுடன் வாழையிலைப் பொட்டலத்தைப் பிரித்தார்.

தன்னை ஏன் கைது செய்து சிறையில் அடைக்கும்படி சாளுக்கிய போர் அமைச்சர் கட்டளையிடவில்லை என்ற வினாவே நங்கைக்குள் எழவில்லை. நடப்பதற்கு சாட்சியாக, தான் இருக்க வேண்டும் என்று ஸ்ரீ ராமபுண்ய வல்லபர் தீர்மானித்திருக்கிறார் என்பதை அந்த அறைக்குள் நுழைந்த கணமே புரிந்துகொண்டாள். அதற்கு ஏற்பவே அவரது நடவடிக்கைகள் இருந்தன; இருக்கின்றன. புலவர் தண்டியை விட, தான் சிறந்த ராஜதந்திரி என்பதை நிரூபிக்க சாளுக்கிய போர் அமைச்சர் முற்படுகிறார்.

ஆனால், ராமபுண்ய வல்லபர் எட்டடி பாய்ந்தால் புலவர் தண்டி பதினாறடி அல்லவா பாய்கிறார்..? ‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ’ என்ற அடையாளச் சொல் மீண்டும் சில தினங்களுக்கு புழக்கத்தில் இருக்கும் என புலவரின் அந்தரங்க ஊழியன் அவளிடம் சொன்னபோதே இந்தப் பாய்ச்சலை உணர்ந்துவிட்டாள்.

ஏனெனில் ‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ’ என்ற அடையாளச் சொல்லின் மர்மம், சாளுக்கியர்களுக்குத் தெரிந்து விட்டது... எனவே இனி அதைப் பயன்படுத்த வேண்டாம் என சில திங்களுக்கு முன் அறிவித்ததே புலவர் தண்டிதான். அப்படியிருக்க மீண்டும் அதை புழக்கத்தில் விடுகிறார் என்றால்... வலையை விரித்திருக்கிறார் என்று பொருள். இப்போது ஸ்ரீ ராமபுண்ய வல்லபர் அதில் சிக்கியிருக்கிறார். ஆனால், சாளுக்கிய போர் அமைச்சருக்காக விரிக்கப்பட்ட வலை அல்ல இது... எனில், யாருக்காக விரிக்கப்பட்ட வலை..?படர்ந்த சிந்தனையை அறுத்துவிட்டு நடப்பதை நங்கை கவனிக்கத் தொடங்கினாள்.

சாளுக்கிய வீரன் கவனித்துக் கொண்டேயிருந்தான். வாழையிலைப் பொட்டலத்தை தன் வலது  உள்ளங்கையில் பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரன் ஏந்தியதையும்,  அதன் எடையைப் பார்ப்பதுபோல் சைகை செய்ததையும். அடுத்து அவனது நடவடிக்கை என்னவாக இருக்கும் என கணித்தானோ அதையேதான் இரணதீரன் செய்தான். கனைத்தான்.அடுத்த கணம், மறைந்திருந்த பாண்டிய வீரர்கள் வெளிப்பட்டார்கள்.
‘‘அழைத்து வாருங்கள்...’’ கட்டளையிட்டான்.தலைவணங்கி அகன்றவர்கள் சில கணங்களுக்குப் பின் தலைமை மருத்துவருடன் வந்தார்கள்.

வந்தவர் சாளுக்கிய மன்னரின் அந்தரங்க மருத்துவர் அல்ல. மதுரை ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவர். பாண்டிய மன்னர் நகர் உலா வந்தபோதெல்லாம்  இவரும் உடன் வந்ததை அந்த சாளுக்கிய வீரன் பார்த்திருக்கிறான்.‘‘இந்தாருங்கள்...’’ தன் கரத்தில் இருந்த வாழையிலைப் பொட்டலத்தை இரணதீரன் அவரிடம் வழங்கினான்.

பெற்றுக் கொண்ட மதுரை ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவர் எச்சரிக்கையுடன் வாழையிலைப் பொட்டலத்தைப் பிரித்தார்.தன்னை  ஏன் கைது செய்து சிறையில் அடைக்கும்படி பாண்டிய இளவல்  கட்டளையிடவில்லை என்ற வினாவே சாளுக்கிய வீரனுக்குள் எழவில்லை. நடப்பதற்கு சாட்சியாக,  தான் இருக்க வேண்டும் என்று இரணதீரன் தீர்மானித்திருக்கிறான்  என்பதை அந்த அறைக்குள் நுழைந்த கணமே புரிந்துகொண்டான். அதற்கு ஏற்பவே  அவனது நடவடிக்கைகள் இருந்தன; இருக்கின்றன. சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரைவிட, தான் சிறந்த  ராஜதந்திரி என்பதை நிரூபிக்க இரணதீரன் முற்படுகிறான்.

ஆனால், பாண்டிய இளவல் எட்டடி பாய்ந்தால் சாளுக்கிய மன்னர் பதினாறடி அல்லவா  பாய்கிறார்..? ‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ’ என்ற அடையாளச் சொல்  மீண்டும் சில தினங்களுக்கு புழக்கத்தில் இருக்கும் என மன்னரின் அந்தரங்க  ஊழியன் தன்னிடம் சொன்னபோதே இந்தப் பாய்ச்சலை உணர்ந்துவிட்டான்.

ஏனெனில்  ‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ’ என்ற அடையாளச் சொல்லின் மர்மம்,  சாளுக்கியர்களான தங்களுக்குத் தெரிந்து விட்டது... எனவே இனி அதைப் பயன்படுத்த  வேண்டாம் என சில திங்களுக்கு முன் பல்லவ ஒற்றர் படையினர் முடிவு செய்து விட்டார்கள் என்பதை அறிவித்ததே சாளுக்கிய  அப்படியிருக்க மீண்டும் அதை புழக்கத்தில் விடுகிறார் என்றால்... வலையை  விரித்திருக்கிறார் என்று பொருள். இப்போது பாண்டிய இளவரசன் அதில்  சிக்கியிருக்கிறான். ஆனால், இரணதீரனுக்காக விரிக்கப்பட்ட  வலை அல்ல இது... எனில், யாருக்காக விரிக்கப்பட்ட வலை..?

படர்ந்த சிந்தனையை அறுத்துவிட்டு நடப்பதை அந்த சாளுக்கிய வீரன் கவனிக்கத் தொடங்கினான். நங்கை கவனித்துக் கொண்டேயிருந்தாள்.
வாழையிலைப் பொட்டலத்தைப் பிரித்த சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் அந்தரங்க மருத்துவர், தன் கண்களுக்கு அருகில் அந்தச் சாம்பலைக் கொண்டு சென்றார். சாம்பல் பறக்காத வகையில் தள்ளி வைத்து ஆழ்ந்து அவரது புருவங்கள் உயர்ந்தன.

பிரித்த வாழையிலையை எச்சரிக்கையுடன் தன்னருகில் இருந்த மர நாற்காலியில் வைத்தவர், தன் இடுப்பில் இருந்து விரலளவு கொண்ட சுரைக்காய் குடுவையை எடுத்தார். சில கணங்கள் அதை நன்றாகக் குலுக்கியவர், குடுவையின் நுனியில் அழுத்தமாகப் புதைக்கப்பட்டிருந்த மரத் துணுக்கை எடுத்தார். லேசாகச் சாய்த்தார்.

குடுவையிலிருந்த பச்சிலைச் சாற்றின் துளிகள் வாழையிலையில் இருந்த சாம்பலில் விழுந்தன.ஐந்து துளிகள் விழுந்ததும் பழையபடி குடுவையை மூடி தன் இடுப்பில் வைத்துவிட்டு வலது கை ஆள்காட்டி விரலினால் சாம்பலைக் குழைத்தார்.சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் அந்தரங்க மருத்துவரின் முகம் மலர்ந்தது.

நிமிர்ந்து ராமபுண்ய வல்லபரைப் பார்த்துப் புன்னகைத்தார்.சாளுக்கிய வீரன் கவனித்துக் கொண்டேயிருந்தான். வாழையிலைப் பொட்டலத்தைப் பிரித்த மதுரை ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவர், தன் கண்களுக்கு  அருகில் அந்தச் சாம்பலைக் கொண்டு சென்றார். சாம்பல் பறக்காத வகையில் தள்ளி  வைத்து ஆழ்ந்து நுகர்ந்தார்.

அவரது புருவங்கள் உயர்ந்தன.பிரித்த  வாழையிலையை எச்சரிக்கையுடன் தன்னருகில் இருந்த மர நாற்காலியில் வைத்தவர்,  தன் இடுப்பில் இருந்து விரலளவு கொண்ட சுரைக்காய் குடுவையை எடுத்தார். சில  கணங்கள் அதை நன்றாகக் குலுக்கியவர், குடுவையின் நுனியில் அழுத்தமாகப்  புதைக்கப்பட்டிருந்த மரத் துணுக்கை எடுத்தார். லேசாகச் சாய்த்தார்.குடுவையிலிருந்த பச்சிலைச் சாற்றின் துளிகள் வாழையிலையில் இருந்த சாம்பலில் விழுந்தன.

ஐந்து துளிகள் விழுந்ததும் பழையபடி குடுவையை மூடி தன் இடுப்பில் வைத்துவிட்டு வலது கை ஆள்காட்டி விரலினால் சாம்பலைக் குழைத்தார்.
மதுரை ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவரின் முகம் மலர்ந்தது.நிமிர்ந்து பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனைப் பார்த்துப் புன்னகைத்தார். ‘‘தேவ மூலிகை...’’ நிதானமாகச் சொன்னார் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் அந்தரங்க மருத்துவர்.

‘‘அப்படியென்றால்..?’’ நங்கைக்குள் கேள்வி எழுந்தது.
அதை ராமபுண்ய வல்லபர் வாய்விட்டு கேட்டார்.
‘‘வெள்ளெருக்கை  இந்தப் பெயரில்தான் மருத்துவம் அழைக்கிறது...’’ பட்டென்று சொன்னார் அந்தரங்க மருத்துவர்.

‘‘எருக்கன் செடியைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறீர்களா..?’’‘‘இல்லை போர் அமைச்சரே...’’ பச்சிலைத் துளியில் குழைத்த சாம்பலை சில கணங்கள் பார்த்துவிட்டு ராமபுண்ய வல்லபரை நேருக்கு நேர் பார்த்தார் விக்கிரமாதித்தரின் அந்தரங்க மருத்துவர்.‘‘அப்படியென்றால் வெள்ளெருக்கு என்பது வேறா..?’’‘‘வேறு மட்டுமல்ல... அபூர்வமான அரிதான மூலிகை. ஒருவகையில் குப்பை மேடுகளிலும் தரிசு நிலங்களிலும் விளையும் எருக்கன் செடியின் குடும்பத்தைச் சார்ந்ததுதான் இந்த வெள்ளெருக்கு.

ஆனால், எல்லா இடங்களிலும் இந்த மூலிகை விளையாது...’’ஸ்ரீராமபுண்ய வல்லபரின் கருவிழிகளில் சிந்தனை படர்ந்தது. ‘‘அப்படிப்பட்ட தேவ மூலிகையால்தான் கச்சை நெய்யப்பட்டிருக்கிறதா..?’’‘‘தேவ மூலிகையை நூலாக்க முடியும் என்பதே அடியேனுக்கு வியப்பாக இருக்கிறது... அப்படிப்பட்ட நூலில் இருந்து எதற்காக கச்சையை நெய்தார்கள்..?’’

‘‘உங்கள் வினாவுக்கான விடை விரைவில் கிடைக்கும். அதற்கு முன்...’’ நிறுத்திய ஸ்ரீ ராமபுண்ய வல்லபர், நங்கையைப் பார்த்தபடியே சாளுக்கிய மன்னரின் அந்தரங்க மருத்துவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார். ‘‘தேவ மூலிகை அபூர்வமானது அல்லவா..?’’
‘‘அரிய வகையும் கூட...’’‘‘எல்லா இடங்களிலும் விளையுமா..?’’‘‘இல்லை... குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தேவ மூலிகை விளையும்...’’
‘‘எந்தெந்த இடங்கள்..?’’

பயபக்தியுடன் விக்கிரமாதித்தரின் அந்தரங்க மருத்துவர் சொன்னார்... ‘‘பொக்கிஷங்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு மேல்!’’
‘‘தேவ மூலிகை...’’ நிதானமாகச் சொன்னார் மதுரை ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவர்.‘‘அப்படியென்றால்..?’’ சாளுக்கிய வீரனுக்குள் கேள்வி எழுந்தது.

அதை இரணதீரன் வாய்விட்டுக் கேட்டான்.‘‘வெள்ளெருக்கை இந்தப் பெயரில்தான் மருத்துவம் அழைக்கிறது...’’ பட்டென்று சொன்னார் தலைமை மருத்துவர்.‘‘எருக்கன் செடியைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறீர்களா..?’’‘‘இல்லை இளவரசே...’’ பச்சிலைத் துளியில் குழைத்த சாம்பலை சில கணங்கள்  பார்த்துவிட்டு இரணதீரனை நேருக்கு நேர் பார்த்தார் தலைமை மருத்துவர்.

‘‘அப்படியென்றால் வெள்ளெருக்கு என்பது வேறா..?’’
‘‘வேறு  மட்டுமல்ல... அபூர்வமான அரிதான மூலிகை. ஒருவகையில் குப்பை மேடுகளிலும்  தரிசு நிலங்களிலும் விளையும் எருக்கன் செடியின் குடும்பத்தைச்  சார்ந்ததுதான் இந்த வெள்ளெருக்கு. ஆனால், எல்லா இடங்களிலும் இந்த மூலிகை  விளையாது...’’

இரணதீரனின் கருவிழிகளில் சிந்தனை படர்ந்தது. ‘‘அப்படிப்பட்ட தேவ மூலிகையால்தான் கச்சை நெய்யப்பட்டிருக்கிறதா..?’’
‘‘தேவ  மூலிகையை நூலாக்க முடியும் என்பதே அடியேனுக்கு வியப்பாக இருக்கிறது...  அப்படிப்பட்ட நூலில் இருந்து எதற்காக கச்சையை நெய்தார்கள்..?’’

‘‘உங்கள்  வினாவுக்கான விடை விரைவில் கிடைக்கும். அதற்கு முன்...’’ நிறுத்திய இரணதீரன், சாளுக்கிய வீரனைப் பார்த்தபடியே தலைமை  மருத்துவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டான். ‘‘தேவ மூலிகை அபூர்வமானது  அல்லவா..?’’
‘‘அரிய வகையும் கூட...’’‘‘எல்லா இடங்களிலும் விளையுமா..?’’‘‘இல்லை... குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தேவமூலிகை விளையும்...’’
‘‘எந்தெந்த இடங்கள்..?’’

பயபக்தியுடன் மதுரை ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவர் சொன்னார்... ‘‘ பொக்கிஷங்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு மேல்!’’
கோட்டைக்குள் சிவகாமி நுழைந்ததுமே வீரர்கள் சுற்றி வளைத்தார்கள்.தன் கால்களையும் கைகளையுமே ஆயுதமாக்கி அவர்களை சிவகாமி பந்தாட ஆரம்பித்தாள்.கோட்டைக்குள் விளைந்திருந்த வெள்ளெருக்குச் செடிகள் அவளைப் பார்த்துப் புன்னகைத்தன!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்