நயன் புடவை... நயன் ஜுவல்லரி... நயன் மூக்குத்தி!‘‘ஹை! நயன்தாரா புடவை...’’

‘‘அட நீ வேற... அவங்க போட்டிருக்கிற நகைகளை எல்லாம் திரும்பத் திரும்ப ரீவைண்ட் பண்ணிப் பார்த்தேன்...’’

‘மூக்குத்தி அம்மன்’ படம் பார்த்த அத்தனை பெண்களின் அங்கலாய்ப்பும் இதுதான். அம்மனின் காஸ்டியூம்ஸ்!‘‘எனக்கும் நயன்தாராவுக்கும் இடைல என்ன கெமிஸ்ட்ரினு பலரும் கேட்பாங்க, எங்களுக்கே தெரியலை. ‘பில்லா’ல ஆரம்பிச்ச உறவு இப்ப வரை தொடருது...’’ உற்சாகமாக பேசத் தொடங்குகிறார் நயன்தாராவின் காஸ்டியூம் டிசைனரான அனுவர்தன்.  

‘‘நயன்தாராவுக்கு டிசைன் செய்யணும்னா டபுள் சந்தோஷமாக வேலை செய்வேன். அவங்க சிறப்பே ஸ்கிரீன் லுக்தான். கேமரா முன் தன்னை எப்படிக் காட்டிக்கணும்னு அவங்களுக்குத் தெரியும். அவங்களே கூப்பிட்டு ‘மூக்குத்தி அம்மன்’ பத்தி பேசினாங்க. இதுல என்ன பியூட்டினா ஒண்ணு ரெண்டு சீன்கள்ல மட்டுமே நயன்தாராவுக்கு அம்மன் கெட்அப். மற்ற சீன்ஸ்ல எல்லாம் தென்னிந்திய கிராண்ட்  விழாக்கால  லுக்தான். ஆனாலும் அவங்க அம்மனா, தெய்வீக லட்சணமா தெரியணும். இதுதான் எனக்கு கொடுக்கப்பட்ட சவால்.

முதல்ல பட்டுச் சேலைகள்னு முடிவு செய்தோம். ஆனா, பட்டுப் புடவைகள் நீளமான ஷாட்களுக்கு செட் ஆகாது. மெயின்டெயின் செய்றதும் கஷ்டம். அதேசமயம் பட்டுப் புடவைகள் கேமரா லுக்குல கொஞ்சம் கலர் சேஞ்ச் ஆகும். இதெல்லாம் டெஸ்ட் செய்யறப்ப கிடைச்ச ரிசல்ட்.
அதனால நூல் புடவைகள் பக்கம் போனோம். நூல் புடவைகள்ல என்ன கலர் கொடுக்கிறோமோ அது அப்படியே கேமரால பதிவாகும். ஸோ, சில்க் காட்டன்னு முடிவு செய்து, தெரிந்த காஞ்சிபுரம் நெசவாளர்கள் கிட்ட டிசைன்ஸ், கலர்ஸ் எல்லாம் சொல்லி வாங்கினோம்.  

அத்தனையும் தென்னிந்தியர்களுக்கு பிடித்த நீலம், பச்சை, சிவப்பு... இப்படியான பிரைட் நிறங்கள். நிறைய பேர் இந்தப் புடவை எங்க கிடைக்கும்னு கேட்கறாங்க. ரூ.10 ஆயிரத்துல தொடங்கி இந்தப் புடவைகள் கிடைக்கும். அத்தனையும் காஞ்சிபுர நெசவாளர்கள்கிட்ட டிசைன்ஸ் கொடுத்து செய்யச் சொன்னது. பழைய ரவிவர்மா ஓவியங்கள், சிலைகள், சாமி புகைப்படங்களை மாடல்களா எடுத்துக்கிட்டோம்.

சொன்னால் நம்ப மாட்டீங்க... க்ளைமாக்ஸ்ல நயன்தாரா அணிந்திருக்கிற கருப்புப் புடவை, காதி கத்வால் புடவைல பட்டு ஸரி ஒர்க் செய்தது!’’ கண்சிமிட்டிய அனுவர்தனிடம், படத்தில் நயன்தாரா அணிந்த நகைகள் குறித்து கேட்டோம். ‘‘கவரிங், ஆன்டிக், குந்தன், டெம்பிள், ஃபேன்சி நகைகள்னு எல்லாம் டிரை செய்தோம். ஏதோ ஒண்ணு மிஸ் ஆச்சு. அப்பதான் ‘உத்தரிகா ஜுவல்லர்ஸ்’ எங்க கூட இணைஞ்சாங்க. படத்துல நயன் அணிந்த நகைகள் எல்லாமே சுத்தமான வெள்ளி நகைகள்!’’ என அனுவர்தன் முடிக்க, ‘உத்தரிகா ஜுவல்லர்ஸ்’ தாரிணி தொடர்ந்தார்.

‘‘பாரம்பரிய தென்னிந்திய டெம்பிள் நகைகளை ‘நக்ஷி கலெக்ஷன்ஸ்’னு சொல்வோம். அந்த டிசைன்களைத்தான் படத்துல பயன்படுத்தியிருக்கோம். தரமான வெள்ளில 22 கேரட் தங்க முலாம் பூசின நகைகள். மயில், கும்பம், கஜலட்சுமினு தொடங்கி கிளாசிக் ஸ்டைல் நகைகள் வரை டிசைன் செய்தோம்.

இப்ப மூக்குத்திக்கு ஏக டிமாண்ட். இது ரூ.500ல இருந்து கிடைக்குது. மெஷின் கட் எல்லாம் கிடையாது. அத்தனையும் ஹேண்ட்மேட் நகைகள். பார்த்துப் பார்த்து டிசைன் செய்த நகைகள் என்கிறதால தனித்துவமா தெரியும்...’’ என்கிறார் தாரிணி.

ஷாலினி நியூட்டன்