Family Tree-40 தலைமுறைகள்... 1400 ஆண்டுகள்...உலகின் முதல் கட்டுமான குடும்ப நிறுவனம்!பெரும்பாலும் சொத்து, அதிகாரம், பணம், பதவி எல்லாம் மூன்று தலைமுறைகளைத் தாண்டி தாக்குப்பிடிக்காது என்று சொல்வார்கள். ஆனால், 40 தலைமுறைகளாக, தொடர்ந்து 1400 வருடங்களாக இயங்கியது ஒரு நிறுவனம். அதன் பெயர் ‘கொங்கோ குமி’. இது ஒரு அக்மார்க் ஜப்பானிய குடும்ப நிறுவனம். புத்த விஹாரைகளை (கோயில்) கட்டுவதுதான் இதன் முக்கிய தொழில்.

பாரம்பரிய மரக் கட்டடக் கலையையும் கான்கிரீட்டையும் இணைத்த ஜப்பானின் முதல் நிறுவனம்; முதல் முறையாக நவீன கட்டடங்களை வடிவமைக்கும் சிஏடி மென்பொருளைப் பயன்படுத்தி விஹாரைகளை டிசைன் செய்த நிறுவனம் என இதன் பெருமைகள் ஏராளம்.புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும் குடும்பத் தொழிலை நீண்ட காலத்துக்கு எடுத்துச் செல்ல நினைப்பவர்களுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டி யாக மிளிர்கிறது கொங்கோ குமியின் வரலாறு.

எப்படி இவ்வளவு வருடங்களாக ஒரு குடும்ப நிறுவனம் தொடர்ச்சியாக ஒரே பிசினஸில் இயங்கியது என்பது பொருளாதார நிபுணர்களுக்கே ஆச்சர்யம்.ஜப்பானின் கலாசார, பொருளாதார, அரசியலில் நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றங்களுக்கு மத்தியில் நிலைத்து நின்றதும், குடும்ப அமைப்பின் மீதான மதிப்பையும் ஜப்பானின் பாரம்பரிய கட்டடக்கலை நுட்பங்களைப் பாதுகாத்ததும் இதன் முக்கிய சிறப்பு.

*தோற்றம்

கிபி 6ம் நூற்றாண்டு. ஜப்பானுக்குள் புத்த மதம் அமைதியாக நுழைகிறது. ஆனால், அதன் வீச்சு சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பெரிதாக இல்லை.  புத்த மதத்தைப் பற்றிய செய்திகள் அப்போதைய இளவரசர் சொட்டோகுவின் காதில் விழ, புத்தம் பற்றித் தேடித் தேடிப் படிக்கிறார்.
16 வயதே ஆன இளவரசரை புத்த மதக் கொள்கைகளும் அதில் இருக்கும் அம்சங்களும் வெகுவாகக் கவர்ந்திழுக்கிறது. புத்த மதத்தில் தீவிர ஈடுபாடுடையவராக மாறும் அவர், 20 வயதில் ஒரு புத்த விஹாரையைக் கட்ட நினைக்கிறார்.

ஆனால், ஜப்பானில் புத்த விஹாரை கட்டுவதற்கான முன்மாதிரிகள் எதுவும் இல்லை. விஹாரையை எப்படி கட்டுவது என்றுகூட யாருக்குமே தெரியாது. அத்துடன் தேர்ந்த தச்சர்களும் இல்லை. அதனால் புத்த விஹாரையைக் கட்டுவதில் நன்கு பயிற்சி பெற்ற மூன்று கொரிய தச்சர்களை ஜப்பானுக்கு அழைக்கிறார் சொட்டோகு. அதில் ஒருவர் சிகேமிட்சு கொங்கோ. இவர் கிபி 578ல் ஆரம்பித்த நிறுவனம்தான் ‘கொங்கோ குமி’.
சிகேமிட்சு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 593ல் ஜப்பானின் முதல் புத்த விஹாரையான சிட்டென்னோ-ஜியைக் கட்டி எழுப்புகிறார்.

பிறகு சொட்டோகு, சிகேமிட்சுவுடன் சேர்ந்து ‘கொங்கோ குமி’ என்ற குடும்ப நிறுவனப் பெயரும் வரலாற்றில் அழுத்தமாக பதிவாகிறது. புயல், மழை,  வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களாலும் தீவிபத்து, போரினாலும் இந்த விஹாரை பலமுறை பாதிக்கப்பட்டாலும், பழுதுபார்க்கப்பட்டும் மறுகட்டமைப்பு செய்யப்பட்டும் இன்று ஒசாகா நகரில் கம்பீரமாகக் காட்சிதருகிறது. ஜப்பானின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்று.
சிகேமிட்சுவின் தொழில் திறமைக்குக் கிடைத்த வரவேற்பு, அவரை ஜப்பானிலேயே தங்க வைக்கிறது. புத்த மதம் பரவலாக வளர, விஹாரைகளுக்கான தேவையும் பரவலாகியது. கொங்கோ குமிக்கு விஹாரைகள் கட்ட ஆர்டர்கள் குவிந்தன. வருமானமும் அள்ளியது.

வாரிசுகளுக்குத் தொழில் கற்றுக்கொடுத்ததோடு, மரணிக்கும் வரை ஆத்மார்த்தமாக வேலை செய்தார் சிகேமிட்சு.அவருக்குப் பிறகு வந்த தலைமுறைகள் புத்த விஹாரைகளைக் கட்டுவதோடு அதைப் பழுதுபார்த்து பராமரிக்கும் வேலையையும் செய்தனர். புத்த விஹாரை கட்டுவதில் யாராலும் நெருங்க முடியாதபடி அசாதாரண நிறுவனமாக உயர்ந்தது ‘கொங்கோ குமி’. புதிதாக போட்டி நிறுவனம் உருவாகாததும், நாலாப்பக்கமும் பரவிய புத்த மதமும் இந்நிறுவனம் தொடர்ந்து இயங்கியதற்கும் வளர்ச்சிக்கும் மூல காரணம்.

உலகின் மிகப் பழமையான மரக்கட்டடம் மற்றும் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமான ஹோர்யூ ஜி விஹாரை, புகழ்பெற்ற கோயாசான் விஹாரை, ஒசாகா கோட்டையைக் கட்டியதிலும் பழுதுபார்த்ததிலும் ‘கொங்கோ குமி’ முக்கியப்பங்கு வகிக்கிறது. இதுபோக ஆயிரக்
கணக்கான புத்த விஹாரைகளைக் கட்டியிருக்கின்றனர்.

*இடோ

ஜப்பானிய வரலாற்றில் 1603 முதல் 1868 வரையிலான காலத்தை இடோ என்கின்றனர். இக்காலத்தில் இராணுவ சர்வாதி காரிகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட நிலப்பிரபுக்களின் கையில் ஜப்பான் இருந்தது. இடோ காலத்தில் கடுமையான சமூகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தாலும் பொருளாதாரம், கலை, கலாசாரம் சார்ந்த விசயங்கள் செழிப்பாக இருந்தன. குறிப்பாக புத்த விஹாரைகளுக்குக் கணிசமாக நிதியுதவி கிடைத்தது. பெரும்பாலான விஹாரைகள் பழுதுபார்க்கப்பட்டன; புதிதாக எழுப்பப்பட்டன. இது ஆயிரம் ஆண்டுகளாக இயங்கிவந்த ‘கொங்கோ குமி’யை சிகரத்தை நோக்கி வீறு நடைபோட வைத்தது.

*யோஷிசதா கொங்கோ

‘கொங்கோ குமி’ குடும்பத்தின் 32வது தலைமுறையைச் சேர்ந்தவர் யோஷிசதா கொங்கோ. மிகச் சிறந்த நிர்வாகி. எந்த ஒருவரையும் உரையாடல் மூலம் தன் வழிக்குக் கொண்டு வருவதில் வல்லவர். 1868ல் பேரரசர் மெய்ஜி ஆட்சிக்கு வருகிறார். இடோ காலம் முடிவு பெறுகிறது. ஷிண்டோ மதத்தைச் சேர்ந்த மெய்ஜி புத்த மதத்தை ஜப்பானை விட்டு விரட்ட நினைக்கிறார். நூற்றுக்கணக்கான புத்த விஹாரைகள் தரைமட்டமாக்கப்படுகின்றன.

ஆயிரம் ஆண்டுகளாக புத்த விஹாரைகளை மட்டுமே கட்டி வந்த ‘கொங்கோ குமி’க்கு பலத்த அடி விழுகிறது. மெய்ஜியின் காலத்தில் புதிதாக புத்த விஹாரை கட்டவும் முடியாது; பழைய விஹாரைகளைப் பழுது பார்க்கவும் முடியாது. அதனால் ‘கொங்கோ குமி’யை வீடு மற்றும் அலுவலகம் கட்டுவதில் ஈடுபடுத்துகிறார் யோஷிசதா. மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கத்தால் ஜப்பானில் நவீன கட்டடங்களுக்கான தேவை அதிகரித்தது. காலத்துக்கும் சூழலுக்கும் உகந்த மாதிரி பிசினஸை மாற்றி நிறுவனத்தை தக்கவைத்துக் கொண்டார் யோஷிசதா. மெய்ஜியின் காலம் முடிவடைந்ததும் மீண்டும் புத்த விஹாரை வேலைகளைத் தொடங்கியது ‘கொங்கோ குமி’.

*கொள்கைகள்

உயர்ந்த தரம், வாடிக்கையாளர் திருப்தி, நன்றியுணர்வு ஆகிய மூன்றும் முக்கிய கொள்கைகள். உயர்ந்த தரத்தைக் கொடுப்பதற்காக தச்சர் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் சில விதிகளைக் கடைப்பிடித்தனர். அதில் முக்கியமானது புதிதாக வேலைக்குச் சேர்பவர் பத்து ஆண்டுகள் பயிற்சி எடுக்க வேண்டும். பயிற்சி முடிந்த பிறகுதான் விஹாரை கட்டும் பணியில் ஈடுபட முடியும்.

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் 15ம் நாளும் ‘கொங்கோ குமி’யின் தச்சர்களும் மற்ற வேலையாட்களும் ஓர் இடத்தில் ஒன்றுகூடுவார்கள். நிறுவன உருவாக்கத்திற்குக் காரணமான இளவரசர் சொட்டோகுவை நினைவுகூர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்து பிரார்த்தனை செய்வார்கள்.

*தனித்துவம்

தச்சு வேலைகளில் ஆணி, ஸ்க்ரூ, க்ளூ போன்ற பொருட்களைப் பயன்படுத்துவது கிடையாது. 1400 ஆண்டுகளுக்கு முன்பு சிகேமிட்சு கொங்கோ பயன்படுத்திய உபகரணங்களையும் அவரது நுட்பங்களையுமே இப்போதும் பயன்படுத்துகின்றனர். இதனால் வேலை நேரம் கொஞ்சம் அதிகமாகும்.  ஆனால், வேலை மிகத்தரமாக இருக்கும்.

*யோஷி மற்றும் டோஷிடகா கொங்கோ

37வது தலைமுறையைச் சேர்ந்த நிர்வாகி ஹரூஷி கொங்கோவின் மனைவிதான் யோஷி. தன்னால் சரியாக நிர்வாகம் செய்ய முடியவில்லை என்று தற்கொலை செய்துகொண்டார் ஹரூஷி. கணவனின் இடத்திலிருந்து யோஷி நிறுவனத்தை நடத்தத் தொடங்கினார். ‘கொங்கோ குமி’யின் முதல் மற்றும் ஒரே பெண் நிர்வாகி இவரே. 20ம் நூற்றாண்டில் விஹாரை கட்டுமானத் தொழிலுக்குத் தேவை அதிகமாக இல்லை. போர்ச்சூழல் வேறு.
அரசிடம் மரத்தில் சவப்பெட்டி செய்வதற்கான அனுமதி வாங்கி கொங்கோ குமியைச் சாயாமல் தடுத்து நிறுத்தினார். அத்துடன் நவீன கட்டுமானப் பணிகளில் நிறுவனத்தை ஈடுபடுத்தி வருமானத்தை அள்ளினார்.

ஜப்பானிய மரபில் ஆண் வாரிசு இல்லாத குடும்பங்களில் மருமகன், ஆண் வாரிசாக கருதப்படுவார். அப்படி மருமகனாக ‘கொங்கோ குமி’ குடும்பத்துக்குள் நுழைந்து நிர்வாகியானவர் டோஷிடகா கொங்கோ. 86 வயது வரை சிட்டென்னோ ஜி கோயிலின் பிரத்யேக தச்சராக இருந்தார்.

*வீழ்ச்சி...

போர், அணுகுண்டுகளுக்கு அசையாத ‘கொங்கோ குமி’ கடனால் வீழ்ந்தது. 1980களில் ஜப்பானில் நிகழ்ந்த பொருளாதாரப் பின்னடைவால் நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் முதலீடுகள் நஷ்டமடைந்தன. 2005ல் 100க்கும் மேலான ஊழியர்களுடன் இயங்கிய ‘கொங்கோ குமி’யின் ஆண்டு வருமானம் சுமார் 500 கோடி ரூபாய். ஆனால், 2006ல் வருமானத்தைவிட கடன் அதிகம். நிறுவனத்தைக் கலைக்க வேண்டிய நிலை. அப்போதைய நிர்வாகி மசகாசு கொங்கோ.

*இன்று...

‘டகாமட்சு கன்ஸ்ட்ரக்‌ஷன் குரூப்’ என்ற நிறுவனம் 2006ல் ‘கொங்கோ குமி’யை வாங்கிவிட்டது. இதன் துணை நிறுவனமாக ‘கொங்கோ குமி’ என்ற பெயரிலே இயங்கிவரு கிறது. இன்றும் ஜப்பானில் புத்த விஹாரைகளில் ஏதாவது கட்டுமானப் பிரச்னை என்றால் அதை சரிசெய்வது ‘கொங்கோ குமி’யின் வாரிசுகள்தான்.

த.சக்திவேல்