ரத்த மகுடம்-127



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘என்ன...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் அதிர்ந்தார். ‘‘பொக்கிஷங்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு மேல்தான் வெள்ளெருக்கு வளருமா..?’’
சாளுக்கிய மன்னரின் அந்தரங்க மருத்துவர் சில கணங்கள் அமைதியாக இருந்தார். வாழையிலைப் பொட்டலத்தில் இருந்த சாம்பலைப் பார்த்துவிட்டு நிமிர்ந்து சாளுக்கிய போர் அமைச்சரின் நயனங்களை நேருக்கு நேர் சந்தித்தார். ‘‘தேவ மூலிகை வளர்ந்த இடத்தைத் தோண்டினால் தங்கம், வைரம், வைடூரியங்கள், நவரத்தினங்கள் உள்ளிட்டவைகளில் ஏதாவது ஒன்றோ அல்லது அனைத்துமோ கிடைக்கும்!’’

ஸ்ரீராமபுண்ய வல்லபரின் புருவங்கள் உயர்ந்தன. அவர் வதனத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்தன. குறுக்கும் நெடுக்குமாக காஞ்சி ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவருக்கான அறையில் நடந்தவர், சட்டென நின்றார். ‘‘நங்கை...’’சிலைக்கு உயிர் வந்ததுபோல் நங்கை நிமிர்ந்து சாளுக்கிய போர் அமைச்சரைப் பார்த்தாள்.

‘‘உனக்கு ஏதாவது புரிகிறதா..?’’ நங்கை அமைதியாக நின்றாள்.‘‘கச்சையை உன்னிடம் கொடுத்து புலவர் தண்டியிடம் ஒப்படைக்கச் சொன்னவள் சிவகாமி... சரிதானா? சரிதான்... கரிகாலன் அனைத்தையும் எங்களிடம் சொல்லிவிட்டான்!’’ சுண்டி விட்டதுபோல் நங்கையின் மூளை அதிர்ந்தது. விழித்துக் கொண்டாள். தன்னிடம் கச்சையை ஒப்படைத்தது கரிகாலர். ஆனால், சாளுக்கிய போர் அமைச்சரிடம் சிவகாமி என்று அவர் சொல்லியிருக்கிறார். அப்படியானால்...

‘‘உன் வழியாக வந்த கச்சையை புலவர் எரித்து சாம்பலாக்கி அதை காஞ்சி ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவரிடம் கொடுக்கும்படி கூறியிருக்கிறார்... எதற்காக..? தேவமூலிகையால் நெய்யப்பட்ட கச்சையா என்று பரிசோதிக்கவா..?’’யாருக்கும் தெரியாதபடி நங்கை உதட்டைக் கடித்தாள்.

 எச்சொல்லும் உதிராதபடி பார்த்துக் கொண்டாள்.‘‘கரிகாலனுக்கு இந்த விஷயம் தெரியுமா தெரியாதா..?’’ சாளுக்கிய போர் அமைச்சர் தன் கண்களை உருட்டினார். ‘‘புலவரிடம் இருந்து ‘ஒரு பிரசாதத்தை நீ... அதாவது நங்கை... கொண்டு வருவாய்... அதை சோதித்துப் பாருங்கள்...’ என்று மட்டுமே சொன்னான். இதை வைத்துப் பார்த்தால் கரிகாலனுக்கே எதுவும் தெரியாது என்பது புலனாகிறது... இல்லை... ஒரேயடியாக அப்படியொரு தீர்மானத்துக்கு வர முடியாது.

ஒருவேளை... ஆம்... அப்படித்தான் இருக்க வேண்டும்... புலவரிடம் இருந்து வரும் பிரசாதம் தேவ மூலிகை என்பதை கரிகாலன் அறிந்திருக்கிறான்... அதை சாளுக்கியர்களாகிய எங்களுக்கும் அறிவிக்கவே சோதித்துப் பார்க்கச் சொல்லியிருக்கிறான்...’’தன் முகமெங்கும் படர்ந்த மகிழ்ச்சியை மறைக்க நங்கை தலைகுனிந்தாள். ‘‘சரி... நீ செல்லலாம்...’’ ராமபுண்ய வல்லபர் கட்டளையிட்டார்.

நங்கை நிமிர்ந்தாள்.
‘‘என்ன அப்படிப் பார்க்கிறாய்..? உன்னை ஏன் சிறை செய்யவில்லை என்றா..? அவசியமானது வந்து சேர்ந்துவிட்டது...’’ கண்களால் சாளுக்கிய மன்னரின் அந்தரங்க மருத்துவர் ஏந்தியிருந்த வாழையிலைப் பொட்டலத்தைக் காண்பித்தார். ‘‘இதற்கு மேல் உன்னை சிறை வைத்து பராமரிப்பதால் சாளுக்கியர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. செலவுதான். எனவே...’’ கைகளை உயர்த்தி அறையின் வாயிலைக் காண்பித்தார்.நங்கை மவுனமாக காஞ்சி தலைமை மருத்துவரின் அறையை விட்டு வெளியேறினாள்.

‘‘போர் அமைச்சரே...’’ அதுவரை அமைதியாக இருந்த விக்கிரமாதித்தரின் அந்தரங்க மருத்துவர் தன் வாயைத் திறந்தார். ‘‘எதற்காக நீங்கள் மனதில் நினைத்ததை எல்லாம் அந்தப் பெண்ணிடம் சொன்னீர்கள்..? குறிப்பாக கரிகாலன் உங்களுக்கு செய்தி அறிவித்த விஷயத்தை..?’’

‘‘காரணமாகத்தான் மருத்துவரே...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் நகைத்தார். ‘‘நிற்கும் மானை விட ஓடும் மானைத் துரத்தி வேட்டையாடவே சிறுத்தைகள் விரும்பும். ஏன் தெரியுமா..? அப்பொழுதுதான் உணவு ருசிக்கும்! நங்கை அல்ல... புலவர் தண்டிதான் எனக்கு முக்கியம். அவரைக் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டுமென்றால் நங்கை சுதந்திரமாக நடமாட வேண்டும்... யாரங்கே...’’ குரல் கொடுத்தார்.

சாளுக்கிய வீரன் ஒருவன் உள்ளே நுழைந்து தலை வணங்கினான். ‘‘நங்கையைப் பின்தொடரு... அவளது ஒவ்வொரு நடமாட்டத்தையும் கவனி...’’  
மீண்டும் ஸ்ரீராமபுண்ய வல்லபரை வணங்கி விட்டு அந்த சாளுக்கிய வீரன் அகன்றான்.காஞ்சி ஆதுரச் சாலையை விட்டு வெளியே வந்த நங்கையின் புருவங்கள் உயர்ந்தன.வெள்ளை நிறத்தில் ஒரு புரவியும் சற்றுத் தள்ளி சாம்பல் நிறத்தில் ஒரு புரவியும் தனித்தனியே மரங்களில் கட்டப்பட்டு நின்றிருந்தன.

சாம்பல் நிற புரவியை நெருங்கிய நங்கை அதைத் தட்டிக் கொடுத்தாள். கட்டை அவிழ்த்து அணைத்தாள். முத்தமிட்டாள். குதிரையின் மீது தாவி ஏறினாள். புரவி பறந்தது.‘புலவர் பலே பேர்வழிதான்... தன் பணியாளர்கள் வழியாக வெள்ளை மற்றும் சாம்பல் நிறப் புரவிகளை இங்கு அவர் நிறுத்தியதற்குக் காரணம், தான் சென்ற காரியம் காயா பழமா என்று அறியத்தான். வெள்ளை நிறம் காரிய வெற்றியை உணர்த்தும். சாம்பல் நிறம் சென்ற காரியம் பிசகி விட்டது என்பதை தெரியப்படுத்தும். சாம்பல் நிறப் புரவியை, தான் தேர்வு செய்ததன் வழியாக புலவருக்கு ஆதுரச் சாலைக்குள் நடந்ததைத் தெரியப்படுத்திவிட்டாள்.

இனி புலவர் பார்த்துக் கொள்வார்...’நிம்மதியுடன் புரவியில் சென்ற நங்கையின் உள்ளம் கரிகாலனை நினைத்துக் குழம்பியது. ‘கத்தி மேல் கரிகாலர் நடக்கிறார்... பல்லவர்களிடமும் சாளுக்கியர்களிடமும் உண்மையும் பொய்யும் கலந்து பேசுகிறார்... அவர் மனதில் என்னதான் இருக்கிறது..? உண்மையில் அவர் யார் பக்கம்..?’ பெருமூச்சு விட்டவள் சட்டென தன்னைத்தானே உதறிக் கொண்டாள்... இரு சொற்கள் அவளைச் சுற்றிச் சுற்றி வந்தன. ‘தேவ மூலிகையால் நெய்யப்பட்ட கச்சை... பொக்கிஷங்கள்...’ இதற்கு என்ன அர்த்தம்..?‘‘என்ன...’’ கோச்சடையன் இரணதீரன் அதிர்ந்தான்.

‘‘பொக்கிஷங்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு மேல்தான் வெள்ளெருக்கு வளருமா..?’’மதுரை ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவர் சில கணங்கள் அமைதியாக இருந்தார். வாழையிலைப்  பொட்டலத்தில் இருந்த சாம்பலைப் பார்த்துவிட்டு நிமிர்ந்து பாண்டிய இளவரசனின் நயனங்களை நேருக்கு நேர் சந்தித்தார்.

‘‘தேவ மூலிகை வளர்ந்த  இடத்தைத் தோண்டினால் தங்கம், வைரம், வைடூரியங்கள், நவரத்தினங்கள்  உள்ளிட்டவைகளில் ஏதாவது ஒன்றோ அல்லது அனைத்துமோ கிடைக்கும்!’’இரணதீரனின் புருவங்கள் உயர்ந்தன. அவன் வதனத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்தன.  குறுக்கும் நெடுக்குமாக மதுரை ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவருக்கான  அறையில் நடந்தவன், சட்டென நின்றான். ‘‘சாளுக்கிய வீரனே...’’சிலைக்கு உயிர் வந்ததுபோல் அந்த வீரன் நிமிர்ந்து கோச்சடையன் இரணதீரனைப் பார்த்தான்.

‘‘உனக்கு ஏதாவது புரிகிறதா..?’’
சாளுக்கிய வீரன் அமைதியாக நின்றான்.‘‘கச்சையை  சீனனிடம் கொடுத்து வீரபாண்டிய பெருந்தச்சரிடம் ஒப்படைக்கச் சொன்னவன் கரிகாலன்...  சரிதானா? சரிதான்... சிவகாமி அனைத்தையும் எங்களிடம் சொல்லிவிட்டாள்! அதைக் கைப்பற்றிய சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் அக்கச்சையை எரித்து சாம்பலாக்கி அதை இங்கு கொடுக்கும்படி கூறியிருக்கிறார்... எதற்காக..? தேவமூலிகையால்  நெய்யப்பட்ட கச்சையா என்று பரிசோதிக்கவா..?’’‘‘...’’‘‘சிவகாமிக்கு  இந்த விஷயம் தெரியுமா தெரியாதா..?’’ இரணதீரன் தன் கண்களை  உருட்டினான். ‘‘விக்கிரமாதித்தரிடம் இருந்து ‘ஒரு பிரசாதத்தை நீ...

அதாவது சாளுக்கிய வீரனான நீ...  கொண்டு வருவாய்... அதை சோதித்துப் பாருங்கள்...’ என்று மட்டுமே சொன்னாள்.  இதை வைத்துப் பார்த்தால் சிவகாமிக்கே எதுவும் தெரியாது என்பது  புலனாகிறது... இல்லை... ஒரேயடியாக அப்படியொரு தீர்மானத்துக்கு வரமுடியாது.  ஒருவேளை... ஆம்... அப்படித்தான் இருக்க வேண்டும்... சாளுக்கிய மன்னரிடம் இருந்து  வரும் பிரசாதம் தேவமூலிகை என்பதை சிவகாமி அறிந்திருக்கிறாள்... அதை பாண்டியர்களாகிய எங்களுக்கும் அறிவிக்கவே சோதித்துப் பார்க்கச்  சொல்லியிருக்கிறாள்...’’
‘‘...’’

‘‘சரி... நீ செல்லலாம்...’’ இரணதீரன் கட்டளையிட்டான். ‘‘என்ன  அப்படிப் பார்க்கிறாய்..? உன்னை ஏன் சிறை செய்யவில்லை என்றா..? அவசியமானது  வந்து சேர்ந்துவிட்டது...’’ கண்களால் பாண்டிய மன்னரின் அந்தரங்க  மருத்துவர் ஏந்தியிருந்த வாழையிலைப் பொட்டலத்தைக் காண்பித்தான். ‘‘இதற்குமேல் உன்னை சிறை வைத்து பராமரிப்பதால் பாண்டியர்களுக்கு எந்தப் பலனும்  இல்லை. செலவுதான். எனவே...’’ கைகளை உயர்த்தி அறையின் வாயிலைக்  காண்பித்தான்.

அந்த சாளுக்கிய வீரன் மவுனமாக மதுரை தலைமை மருத்துவரின் அறையை விட்டு வெளியேறினான். ‘‘இளவரசரே...’’ அதுவரை அமைதியாக இருந்த மதுரை ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவரும் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மரின் அந்தரங்க  மருத்துவருமான பெரியவர் தன் வாயைத் திறந்தார். ‘‘எதற்காக நீங்கள் மனதில் நினைத்ததை  எல்லாம் அந்த சாளுக்கிய வீரனிடம் சொன்னீர்கள்..? குறிப்பாக சிவகாமி உங்களுக்கு  செய்தி அறிவித்த விஷயத்தை..?’’‘‘காரணமாகத்தான் மருத்துவரே...’’ இரணதீரன் நகைத்தான்.

அந்த நகைப்பைக் கேட்டபடியே மதுரை ஆதுரச் சாலையை விட்டு வெளியேறிய சாளுக்கிய வீரன், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு வேகமாக நடந்து தச்சர் வீதியை அடைந்தான்.நல்லவேளையாக அந்தப் பக்கம் பாண்டிய வீரர்கள் காவலுக்கு நிற்கவில்லை.விரைந்து வீரபாண்டிய தச்சரின் இல்லத்தை அடைந்தவன், திகைத்தான். அதிர்ந்தான். சிலையென நின்றான்.காரணம், சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் அங்கில்லை.

மாறாக, அங்கிருந்த ஆசனத்தில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தவர் தன் வாயைத் திறந்தார்!‘‘என்ன தச்சர் வேடத்தில் சென்ற சாளுக்கிய வீரனே! மதுரை ஆதுரச் சாலையில் பாண்டிய இளவரசரை சந்தித்தாயா..? கச்சையின் சாம்பல், தேவ மூலிகையான வெள்ளெருக்கு என்பதை கோச்சடையன் இரணதீரன் அறிந்துகொண்டாரா..?’’கேட்டவர் வேறு யாருமல்ல... பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்தான்!

தன் மாளிகையில் வந்து நின்ற வெள்ளை நிறப் புரவியைக் கண்டதும் புலவர் தண்டியின் முகம் மலர்ந்தது. ‘இப்படித்தான் நடக்கும் என்று நினைத்தேன்... கரிகாலா... ராஜதந்திரங்களை உனக்கு கற்றுக்கொடுத்த என்னிடமே உன் ஆட்டத்தை நடத்துகிறாயா... குருவை மிஞ்சிய சீடன் இல்லை என்பதை விரைவில் உனக்கு உணர்த்துகிறேன்...’நிதானமாக தன் பணியாளனை நோக்கி கண்சிமிட்டினார்.

அடுத்த கணம், காஞ்சியின் மீது ஐந்து புறாக்கள் பறந்தன!ஒரே அளவில் கட்டப்பட்ட நான்கு மூட்டைகளுடன் அந்தப் புரவி சீறிப் பாய்ந்தது.
அதன் மீது கம்பீரமாக அமர்ந்திருந்தாள் சிவகாமி!

(தொடரும்)


செய்தி:கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்