நாம் உலகத்தில் பிறக்கவில்லை; உலகம்தான் நமக்காக பிறந்திருக்கிறது!
இரு நாடுகளுக்கு இடையில் போர் மூள்கிறது. 74 நாட்கள் நடைபெற்ற இப்போரின் முடிவில் ஒரு நாடு தோற்கிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பின் இராணுவ ரீதியாக சண்டையிட்ட அதே இரு நாடுகள் கால்பந்தாட்டப் போட்டியில் மோதுகின்றன. இப்போது போரில் தோல்வி யடைந்த நாட்டைச் சேர்ந்த ஒரு கால்பந்தாட்ட வீரர், தன்னந்தனியாக இரு கோல்கள் போடுகிறார். இராணுவ யுத்தத்தில் வெற்றி பெற்ற நாட்டை கால்பந்தாட்டத்தில் வீழ்த்துகிறார்.
இதன்பிறகு இராணுவ ரீதியான போரில் தோல்வி அடைந்த நாட்டின் மக்கள் என்ன செய்வார்கள்..? கால்பந்தாட்டப் போட்டியில் தங்கள் எதிரியை வீழ்த்திய அந்த வீரனுக்கு கோயில் கட்டித்தானே வணங்குவார்கள்?
அதுதான் நவம்பர் 25 அன்று தன் 60வது வயதில் காலமான கால்பந்தாட்ட வீரர் மாரடோனா விஷயத்திலும் நடந்தது. என்ன... அதற்கு மேலும் நிகழ்ந்தது. ஆம்... சொந்த நாட்டு மக்கள் வெளிப்படையாக கோயில் கட்டினார்கள்... மூன்றாம் உலக நாட்டு கால்பந்தாட்ட ரசிகர்களோ மனதுக்குள் மாரடோனாவுக்கு கோயில் கட்டினார்கள்!காரணம், கால்பந்தாட்டத்தில் தோல்வியுற்ற அணி இங்கிலாந்து அணி!
எந்த காலனியாதிக்கத்தால் மொத்த உலகையும் இங்கிலாந்து சுரண்டியதோ... அந்த நாட்டின் அணியை ஒரு ‘தம்மாத்துண்டு’ நாடு வீழ்த்துகிறது என்றால்... அதுவும் ஒரு ‘குள்ளன்’ அடுத்தடுத்து இரு கோல்கள் போட்டு தோல்வியடையச் செய்கிறான் என்றால்... சர்வதேச அளவில் கொண்டாடத்தானே செய்வார்கள்!
1982ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் போர் மூண்டது. போக்லண்ட் தீவுகளை அர்ஜென்டினா ஆக்கிரமித்த விவகாரம் தொடர்பாக நடந்த இராணுவப் போர் இது.74 நாட்கள் நடந்த போரின் முடிவில் இங்கிலாந்து வென்றது; அர்ஜென்டினா தோல்வியடைந்தது.
இந்நிலையில்தான் 1986ம் ஆண்டு நடந்த கால்பந்தாட்ட உலகப் போட்டியின் ஃபைனலில் இங்கிலாந்தை வீழ்த்தியது அர்ஜென்டினா.
பீரங்கி - டாங்கர் முன்னால் அடிபணிந்த தங்கள் நாட்டின் கவுரவத்தை... தன் கால்களால் ஒரு வீரன் மீட்டுக் கொடுத்திருக்கிறான் என அர்ஜென்டினாவே மாரடோனாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்தது.
எலும்பும் தோலுமாக... சவலைப் பிள்ளையாகப் பிறந்த மாரடோனா, ஏழ்மையான சூழலில் வளர்ந்தார். காரணம், அவரது அப்பா, கூலித் தொழிலாளி. மாரடோனாவையும் சேர்த்து எட்டு குழந்தைகள் மட்டுமே அவர்களது சொத்து.
மாரடோனா உயரம் குறைவானவர் என்பதால் ஏராளமான கேலி கிண்டல்களுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் 15வது வயதில் அர்ஜென்டினாவின் ஜூனியர் அணியில் இடம்பிடித்தார். தன் திறமையால் அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட அணிக்கு தலைமை ஏற்றார். ஆம்; 16 முறை தன் நாட்டின் அணிக்கு மாரடோனா தலைமை தாங்கியிருக்கிறார்! இது இப்படித்தான் என்று காலங்காலமாக கால் பந்தாட்டத்தில் வகுக்கப்பட்டிருக்கும் விதிகளை எல்லாம் மீறி மாரடோனா ருத்ரதாண்டவம் ஆடினார். அதனாலேயே உலகக் கால்பந்தாட்டத்தின் சர்வதேச வீரராக பீலே கொண்டாடப்பட்டாலும், மாரடோனாவையே இப்பிரபஞ்சம் சிறப்பிக்கிறது. 1986ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில்அர்ஜென்டினா போட்ட மொத்த கோல்கள் 14. இதில் மாரடோனா மட்டும் போட்ட கோல்கள் 10.
தனது தீவிர ரசிகையான கிளாடியா மீது காதல் வசப்பட்டார். இருவரின் அன்புக்கு அடையாளமாக டால்மா, ஜெனினா என இரு பெண் குழந்தைகள் பிறந்தார்கள். இதன் பிறகே - அதாவது 14 ஆண்டுகளுக்குப் பின்னரே - முறைப்படி கிளாடியாவை திருமணம் செய்து கொண்டார்!
எந்த அளவுக்கு மாரடோனா கொண்டாடப்படுகிறாரோ அதே அளவுக்கு அவர் மீது விமர்சனங்களும் உண்டு. திமிர் பிடித்தவர், கூட்டு முயற்சியில் நம்பிக்கை இல்லாதவர், போதைக்கு அடிமை, தப்பாட்டம் ஆடுபவர்... என்ற பட்டியலுக்கும் இவரே சொந்தக்காரர்.
என்றாலும் உலகக் கால்பந்தாட்ட ரசிகர்கள் இவரது மைனஸ்களைவிட ப்ளஸ்களையே அதிகம் முத்தமிடுகிறார்கள். கியூபா அதிபராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோவின் நண்பராக இருந்தபோதும் அந்த நட்பை தனிப்பட்ட முறையிலேயே வளர்த்தார். எந்தச் சூழலிலும் அரசிடம் சலுகைகள் பெற தன் நட்பை அவர் பயன்படுத்தவேயில்லை.
மின் வசதியோ, குடிநீர் வசதியோ இல்லாத ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர், தன் வாழ்நாள் முழுக்க ஏழை நாடுகளுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தார்.இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாலும் இராணுவத் தாக்குதல்களாலும் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் பாலஸ்தீன மக்களுக்காக மாரடோனாவின் குரல் இறுதி வரை ஒலித்தது. ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது, ‘அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்’ என்ற வாசகங்கள் பொறித்த டீ ஷர்ட்டுகளை அணிந்து வலம் வந்தார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து பயிற்சி எடுத்து வளர்த்தால் புகழும் பெருமையும் கிடைக்கும் என்பதற்கு மாரடோனா ஓர் உதாரணம். ஆம். நாம் உலகத்தில் பிறக்கவில்லை; உலகம்தான் நமக்காக பிறந்திருக்கிறது!
அன்னம் அரசு
|