சிறுகதை-ரமாவின் காதல்...‘‘இதோ பார் ஆதிலட்சுமி! நான் ஒவ்வொரு தடவையும் தீர விசாரித்துப் பொருத்தம் பார்த்து மாப்பிள்ளை வீட்டாரை பெண் பார்க்க அழைத்து வருகிறேன். அவர்கள் சென்றவுடன் உப்புச்சப்பில்லாத ஒன்றைக் கூறி அம்மாவும் மகளும் தட்டிக் கழித்து விடுகிறீர்கள். இந்தத் தடவையும் அப்படி நடந்தால் நான் பொல்லாதவனாகி விடுவேன்...’’ பொரிந்து தள்ளினார் தொழிலதிபர் தனசேகரன்.

‘‘கோவிச்சுக்காதிங்க, கடைசியாப் பார்த்த திண்டுக்கல் மாப்பிள்ளை வீடும், வீடு இருக்கிற தெருவும் ரொம்ப கேவலமா இருந்தது. என் தம்பி பார்த்து விட்டுச் சொன்னான் அதான்...’’‘‘ஏண்டி! நம்ம பொண்ணு அங்கேயேவா வாழப்போகிறாள்? மாப்பிள்ளைப் பையன் பெங்களூரிலே வேலையாய் இருக்கிறான். நான் நினைத்தால் பெங்களூரிலே நல்ல வீடு வாங்கித் தர மாட்டேனா? சரி இதை விடு. இதற்கு முன் பார்த்த காரைக்குடி மாப்பிள்ளை நல்ல நிறம். கொள்ளை அழகு. எல்லாவகையிலும் நம்ம ரமாமணிக்குப் பொருத்தமானவன்.

மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பார்த்து ஓகே சொல்லி படியிறங்கி டாக்ஸி ஏறிப் போனபின், மாப்பிள்ளை முகமெல்லாம் கொத்துக் கொத்தாக பருக்கள்; பார்க்கச் சகிக்கவில்லை என்று மறுத்து விட்டீர்கள். அன்று நான் பட்ட வேதனை யாருக்குத் தெரியும்?’’கோபத்துடன் தன் மகள் ரமாவின் பக்கம் திரும்பினார் தனசேகரன். ‘‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று எங்களுக்கு நீ ஒருத்திதான். அதனால்தான் உன் படிப்பிற்கு தடை போடவில்லை. உன் விருப்பப்படியே படிக்க வைத்தேன். உன் இஷ்டப்படி கல்லூரி சென்று வர கார் வாங்கி, என் டிரைவரையே உனக்கும் வண்டி ஓட்ட அனுப்பினேன். நீ கேட்ட எதையும் இல்லையென்று சொன்னதில்லை.

இப்பொழுது இந்த அப்பன் உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன். நான் உனக்கு பார்த்திருக்கும் சென்னை மாப்பிள்ளை எனக்கு தூரத்து சொந்தம். பையன் பிரபல ஐடி கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருக்கிறான். பையனுடைய ஜாதகம் உனக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக ஜோசியர் சொன்னார். இன்று உன் ஜாதகத்தையும் போட்டோவையும் மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்புகிறேன். அவர்களும் ஜாதகம் பார்த்து திருப்தியானால் போட்டோ அனுப்பி வைப்பார்கள். பின்னர் மற்றவற்றை பார்க்கலாம்...’’ சொல்லிவிட்டு நேரே தன் ரூமிற்கு விரைந்தார்.

படுத்து வெகுநேரமாகியும் தனசேகரனுக்கு உறக்கம் வரவில்லை. அவரது எண்ணங்கள் பின்னோக்கிப் பாய்ந்தன.ஆறு மாதத்திற்கு முன் ஒரு நாள். காலையில் ரமாவை கல்லூரியில் விட்டுவிட்டு கார் சர்வீசுக்குச் செல்ல நேர்ந்தது. ரமாவின் தோழி சுபத்ராதான் இந்த சமயங்களில் ரமாவை வீட்டில் ‘ட்ராப்’ செய்வது வழக்கம். இந்த முறை ‘‘ரமா! ஒரு முறையாவது என் வீட்டிற்கு வந்தால் என்ன? இன்று கண்டிப்பாக
வருகிறாய்’’ என்று சொல்லி வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் சுபத்ரா.

சுபத்ராவின் தந்தை ரத்தினவேல் ஊரிலேயே பெரிய டெக்ஸ்டைல் ஷோரூமிற்கு சொந்தக்காரர். கல்லூரியில் படிக்கும் பெண் தவிர, படித்து முடித்து ஷோரூம் நிர்வாகம் செய்யும் பையன் செல்வகுமார் என இரண்டே குழந்தைகள். ஷோரூம் நிர்வாகம் முழுமையும் குமாரின் கையில்தான். ரத்தினவேல் எப்போதாவதுதான் கடைக்கு விசிட் அடிப்பார்.‘‘உள்ளே வா. ஏன் அங்கேயே நின்னுட்டே?’’ சுபத்ரா வினவினாள். கடைக்குச் செல்ல ரெடியான குமார், புதிதாக யாரோ வருகிறார்கள் என்றவுடன் சோபாவில் நிமிர்ந்து உட்காரவும், ரமா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டனர்.

‘‘அண்ணா! நான் அடிக்கடி சொல்வேன் பார் என் ஆருயிர்த் தோழி ரமா என்று... அவள்தான் இவள்...’’
தலையை ஆட்டி மெதுவாக முறுவலித்துவிட்டு இருகரம் கூப்பி வணங்கினான். வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை. பதிலுக்கு ரமாவும் வணங்கினாள். ரமாவிடம் இரண்டொரு வார்த்தை பேச முற்பட்டான். ‘‘உங்கப்பா பத்தி கேள்விப்பட்டிருக்கிறேன். வீடு எங்கே?’’
‘‘தில்லை நகர்...’’ என்றாள் ரமா.

இதற்குள் ரமாவை முழுவதுமாகப் பார்த்து ரசித்து விட்டான். ஆஹா! தங்கப் பதுமை போன்று இருக்கிறாள். இவளைத்தான் மணக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக்கொண்டு விடை பெற்று மிதமிஞ்சிய சந்தோஷத்துடன் காரைக் கிளப்பி கடைக்குச் சென்றான்.அதுவரை யாரையும் மனதால் கூட நினைக்காத ரமாவும் ‘இவன்தான் தனக்கு’ என்று முடிவெடுத்துவிட்டாள். அதன்பின் ரமா அடிக்கடி குமார் வீட்டிற்கு வர ஆரம்பித்தாள். இருவரும் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒருநாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தன் அம்மாவிடம், தான் ரமாவை விரும்புவதாகச் சொன்னான். அதற்கு முன்பே குமாருக்கு ரமாவின் ‘கிரீன் சிக்னல்’ கிடைத்து விட்டது.

குமாரின் அம்மா  பூங்கோதை, கணவனிடம் இப்படி ஆரம்பித்தாள். ‘‘ஏங்க! உங்க கடைக்குதான் எத்தனை பெண்கள் வருகிறார்கள். எந்த பெண்ணையும் நம் மகன் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. நல்ல சமயம் பார்த்து கல்யாணப் பேச்சு எடுத்தாலே காததூரம் ஓடுகிறான். நான் நித்தமும் கும்பிடும் மாரியாத்தா தான் அவன் மனசை மாத்திப்புட்டா. முதன் முறையாக இந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டான்.

இனியும் என்ன யோசனை? உடனே பேசுங்கள்...’’ செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த ரத்தினவேல், ‘‘இது நடக்கிற காரியமா? என்னை விட எல்லாவகையிலும் பல மடங்கு பெரியவர். அவர் ஒரு பழமைவாதி. தன்னுடைய கௌரவத்தை விட்டுக் கொடுக்கமாட்டார். ஆசாரமானவர். சுத்த சைவம். நாமோ பூரண அசைவம். இது நடக்காது. மறந்து விடு...’’ என்று கூறி படுக்கச் சென்று விட்டார்.   

சில நாள் கழித்து கோயிலில் ரமாவின் தாயாரைச் சந்தித்த பூங்கோதை சுவாரஸ்யமாகத் தனது குடும்பத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி, ரமாவும் குமாரும் ஒருவரை ஒருவர் விரும்புவதாகவும், நல்ல முடிவாகச் சொல்லும்படியும் கூறி விடை பெற்றாள்.

நாள் பார்த்து நேரம் பார்த்து கணவர் நல்ல ‘மூடில்’ இருக்கும் போது ஆதிலட்சுமி கணவரிடம் பெண்ணின் காதல் பற்றி தெரிவித்தாள்.
துடித்துப் போனார் தனசேகரன். ‘‘ஆசாரமான நம் குடும்பம் எங்கே... அவர்கள் எங்கே? இது நடக்காது என்று உன் மகளிடம் சொல். இனி அங்கு போவதை அடியோடு விட்டுவிடச் சொல்...’’ மறுநாள் தரகரிடம் சொல்லி வரன் பார்க்க ஆரம்பித்தபின், வருகின்ற ஒவ்வொரு வரனையும் ஏதாவதொரு காரணம் சொல்லி தாயும் மகளும் தட்டிக் கழிப்பது வாடிக்கையாகிவிட்டது.

தபாலில் வந்த பெண் ஜாதகத்தை ஜோசியரிடம் காண்பித்தார் சிவசங்கரன். ‘நன்னாப் பொருந்திருக்கு. இதுவரை வந்த எல்லா ஜாதகங்களிலும் இதுவே உத்தமமானது. இப்போ சித்திரை. ஆவணி மாதம் கல்யாணத்தை வைத்துக்கொண்டால் எதிர்காலம் அமோகமா இருக்கும்...’’ என்றார். ஜோஸ்யர். ஜாதகத்தோடு வந்த பெண்ணின் போட்டோவை கண் இமைக்காமல் பார்த்தான் பிரசாத். ‘‘அப்பா, பெண்ணை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...’’
என்றான். இதை ஏற்கனவே எதிர்பார்த்த சிவசங்கரன், ஒரு நல்ல நாளில் பெண்ணைப் பார்க்க வருவதாக தனசேகரனுக்கு தகவல் அனுப்பினார்.

தனசேகரன் மனைவியிடம் மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வர இருப்பதைத் தெரிவித்தார். பெண் பார்ப்பதற்காக சிவசங்கரன் குடும்பத்தினர் வந்தனர்.தனசேகரன் அவர்களை வரவேற்று அமர வைத்தார்.கனகாம்பரப் பட்டுடுத்தி அழகுச் சிலையாக வந்து நின்ற ரமாவை எல்லோருக்கும் பிடித்து விட்டது. ‘‘கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம்...’’ ஆவலுடன் கேட்டார் தனசேகரன்.‘‘ஜோசியர் ஆவணி மாதம் நல்லது என்கிறார்...’’ என்ற சிவசங்கரனை இடைமறித்த பிரசாத், ‘‘அவ்வளவு நாள் தள்ள வேண்டாம். ஆக்ஸ்ட் மாதமே புது பிராஜெக்டுக்காக சிகாகோ போறேன். அதுக்கு முன்னாடி கல்யாணம் நடந்தா பெட்டர்...’’ என்றான்.

இதை எதிர்பாராத சிவசங்கரன் திகைத்து நிற்க, தனசேகரன் ‘‘நானும் அப்படித்தான் நினைக்கிறேன். வைகாசி மாதம் ஆறாம் தேதி நல்ல முகூர்த்த நாள்...’’ என்றார். எல்லோரும் சம்மதித்ததும் டைனிங் ஹாலுக்குச் சென்று சாப்பிட அமர்ந்தனர். அன்றிரவு உறக்கம் வராமல் புரண்ட ரமாவுக்கு சட்டென ஒரு ஐடியா தோன்றியது. நிம்மதியாக உறங்கியவள் மறுநாள் பிரசாத்தை அழைத்தாள்.தனசேகர் இதை எதிர்பார்க்கவில்லை. சோர்ந்துபோனார். இனி, தான் எந்த மாப்பிள்ளை யைப் பார்த்தாலும் இப்படித்தான் ரமா செய்வாள் என்பது அவருக்குப் புரிந்தது.

மனைவியை அழைத்தார். ‘‘வர்ற முகூர்த்தத்துல உன் மகளுக்கும் அந்த ஜவுளிக்கடை ஓனர் மகனுக்கும் கோயில்ல திருமணம். ஊரைக் கூட்ட வேண்டாம். இருவீட்டார் மட்டும் இருந்தால்போதும். கல்யாணமானதும் இனி ரமா இந்த வீட்டுக்கு வரக் கூடாது... இது நான் சேர்த்த சொத்து... உன் பெண்ணுக்கு பைசா தரமாட்டேன்... சம்மதமானு ரமாகிட்ட கேட்டுச் சொல்லு...’’ரமா சம்மதித்தாள்.

அடுத்த முகூர்த்தத்திலேயே ரமாவுக்கும் குமாருக்கும் கோயிலில் திருமணம் நடந்து முடிந்தது. முதலிரவில் ஆசையாக ரமாவை அணைத்தபடி குமார் கேட்டான். ‘‘எப்படி இதை சாதிச்ச..?’’‘‘பெண் பார்த்துட்டுப் போன மறுநாள் பிரசாத்துக்கு போன் செய்தேன்...’’ என்றபடி, தான் பேசிய விவரங்களை ரமா சொல்லத் தொடங்கினாள்... ‘‘வாட் எ சர்ப்ரைஸ்... நானே உன்னைக் கூப்பிடலாம்னு இருந்தேன்...’’ தன் செல்போனை காதில் வைத்தபடியே பிரசாத் வழிந்தான்.

‘‘லுக்  பிரசாத்... மெடிக்கலி எனக்கு ப்ராப்ளம்... தாம்பத்ய வாழ்க்கைக்கு சரிப்படமாட்டேன்... ஒரே வீட்ல தனித்தனியாதான் நாம வாழணும்... இந்த உண்மையை  உங்ககிட்ட மறைக்க வேண்டாம்னுதான் போன் செய்தேன்...’’ பட்டென்று சொன்னாள் ரமா.
அதிர்ந்த பிரசாத், உடனே தன் தந்தை சிவசங்கரனிடம் அனைத்து விவரங்களையும் சொன்னான்.

பதறிய  சிவசங்கரன், தாமதிக்காமல் தனசேகரை அழைத்தார். ‘‘பொய் சொல்லி உங்கள் மகளை  என் பையன் தலையில் கட்டலாம் என்று பார்த்தீர்களா..? இந்தக் கல்யாணம்  நடக்காது...’’ படபடத்தவர், ரமா கூறிய அனைத்தையும் சொல்லிவிட்டு போனை  வைத்தார்.
‘‘இதுதான் நடந்தது... நான் சொன்ன பொய்தான் நம்மைச் சேர்த்து வைத்தது...’’ என்று ரமா சொல்ல... ஆசையுடன் தன் மனைவியை அணைத்தான் குமார்!

ரகுல் சென்டரில் அமலா பால்!

ரகுல் ப்ரீத்சிங் ஹைதராபாத்தில் நடத்தி வரும் ஃபிட்னஸ் ஸ்டூடியோ ‘எஃப்.45’. வெளிநாட்டு ஜிம் நிறுவனமான இதன் கிளையை இப்போது கொச்சி யில் திறந்திருக்கிறார்கள். அங்கே தான் அமலாபாலின் ஃபிட்னஸ் ஒர்க் அவுட் பரபரக்கிறது. ‘‘என் ஹோம் டவுனிலேயே இப்படி ஒரு டிரெயினிங் ஸ்டூடியோ ஓப்பன் ஆகியிருக்கறது சந்தோஷமா இருக்கு...’’ என கையில் வெயிட் லிஃப்ட்டிங் செய்தபடி சொல்கிறார் அமலாபால்.

சமையல்ல ஆர்வம் இல்ல!

ஹார்ஸ் ரைடிங் கற்று வரும் த்ரிஷாவிடம், ‘‘லாக்டவுனில் பொழுது எப்படி போச்சு?’’ என கேட்டால், சிரிக்கிறார். ‘‘வீட்லதான் இருந்தேன். சமையல்ல ஆர்வம் இல்ல. ஆனா, மத்த ஒர்க் எல்லாம் பார்த்தேன். என்னோட ரூம், ஹால்னு எல்லாத்தையும் நானே சுத்தம் பண்ணினேன்...’’ என சொல்லும் த்ரிஷா, இப்போது வீட்டில் ஐந்து தெருநாய்களை பாசமும் நேசமுமாக வளர்த்து வருகிறார்.

கரணை குளிர வைத்த அலியாபட்!

பாலிவுட் இயக்குநர் கரண்ஜோகர் எழுதிய ‘த பிக் தாட்ஸ் ஆஃப் லிட்டில் லவ்’ புத்தகத்திற்கு இந்தி நட்சத்திரங்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் அந்தப் புத்தகத்தை படித்த அலியாபட், கரண்ஜோகரை ஆஹா ஓஹோவென புகழ்ந்திருக்கிறார். பாலிவுட்டில் கரண்ஜோகர் போன்றவர்களால் நெபோடிசம் தலைதூக்கியுள்ளது என்ற குரல்கள் ஒலித்து ஓய்ந்த நிலையில் அலியாபட்டின் இந்த பாராட்டு கரணை குளிர்வித்துள்ளது.

எஸ்.பி.கங்காதரன்