தல! sixers story - 28



இந்திய கிரிக்கெட்டின் ராக்ஸ்டார்!

2006ம் ஆண்டு புத்தாண்டை மகிழ்ச்சியோடு எதிர்கொண்ட இந்திய அணிக்கு, அவ்வாண்டு எதிர்கொண்ட முதல் டெஸ்ட் போட்டி கடுமையான அதிர்ச்சியை அளித்தது.

அவ்வப்போது மழை குறுக்கிட்டுக் கொண்டிருந்தாலும் முதல் இன்னிங்ஸில் ரன்மழை பொழிந்துகொண்டிருந்தனர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்.நான்கு பேர் செஞ்சுரி, ஒருவர் அரை செஞ்சுரி என்று விளாச 679 ரன்கள் எடுத்து இந்தியாவை மலைக்க வைத்தது பாகிஸ்தான்.7 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் போட்டியின் இரண்டாம் நாள் இறுதியில்தான் இந்தியாவுக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைத்தது.வீரேந்தர் சேவாக்கும், கேப்டன் திராவிட்டும் களமிறங்கினர்.

ஒருநாள் போட்டி கணக்காக ஒரு முனையில் சேவாக் விளாச, மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சி இந்தியப் பெருஞ்சுவராக நின்றார் திராவிட்.மூன்றாவது நாள் போட்டியில் 15 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழையால் போட்டி நின்றது.\


நான்காம் நாளும் அவர்களது விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் தடுமாற விக்கெட் இழப்பின்றி 400 ரன்களைக் கடந்து சாதனை படைத்தது இந்தியா.

கடைசி நாளில் 254 ரன்களில் வீரேந்தர் சேவாக்கின் விக்கெட் வீழ, மழையின் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு, டிரா ஆனது.

தோனிக்கு ஆடும் வாய்ப்பே கிடைக்கவில்லை.அடுத்து பைசலாபாத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி, இன்றுவரை தோனி ரசிகர்கள் மறக்க முடியாத மகத்தான போட்டியாக அமைந்தது.டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

இன்சமாம், அப்ரிதி ஆளுக்கு ஒரு சதம் விளாச, யூனிஸ்கான் மற்றும் முகம்மது யூசுப்பின் அரை செஞ்சுரிகளோடு 588 ரன்கள் எடுத்து மலைக்க வைத்தது பாகிஸ்தான்.விக்கெட் கீப்பராக நான்கு கேட்ச் பிடித்தார் தோனி.இன்னிங்ஸைத் தொடங்கிய சற்று நேரத்திலேயே இந்தியாவின் நம்பிக்கையான வீரேந்தர் சேவாக் 31 ரன்களில் வீழ்ந்தார்.ஃபாலோ-ஆனைத் தவிர்க்க தோனியும், லட்சுமணனும் போராடிக் கொண்டிருந்தார்கள்.செஞ்சுரி அடித்த கையோடு திராவிட், செஞ்சுரியை நெருங்கிய நிலையில் லட்சுமணன் வீழ்ந்தார்கள்.

இப்போட்டியில் விளையாட கங்குலிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.தெண்டுல்கரும், யுவராஜ்சிங்கும் விரைவாக விக்கெட்டுகளை இழக்க, இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக தோனி களத்தில் நின்றார்.மறுமுனையில் இர்ஃபான் பதான் கை கொடுக்க, தோனி வழக்கம்போல ஒருநாள் போட்டி பாணியிலேயே பவுண்டரிகளை விளாசத் தொடங்கினார்.அவ்வப்போது அதி உயர சிக்ஸர்களை விளாசி, பாகிஸ்தான் பவுலர்களை மிரட்சியடைய வைக்கவும் தவறவில்லை.

தான், சந்தித்த 34வது பந்திலேயே அரை செஞ்சுரியைத் தாண்டினார். 93வது பந்தில் தன்னுடைய முதல் டெஸ்ட் செஞ்சுரியை எடுத்தார்.
இந்தியா, 281 ரன்னுக்கு 5 விக்கெட்டுகள் என்கிற தத்தளிப்பான நிலையில் தோனி உள்ளே வந்தார்.தினேஷ் கனேரியாவின் பந்தை இறங்கி வந்து சிக்ஸருக்கு விரட்டும் முயற்சியில் அவர் ஸ்டம்பிங் ஆனபோது, இந்தியாவின் ஸ்கோர் 491.

அப்போது உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்த ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் சோயப் அக்தரையும், சுழலில் மிரட்டிக் கொண்டிருந்த தினேஷ் கனேரியாவையும் தோனி எதிர்கொண்ட விதம் அத்தனை கிரிக்கெட் வல்லுநர்களையும் கவர்ந்தது.

தோல்வி நிலையிலிருந்த அணியை தோனி மீட்ட விதத்தை கிரிக்கெட்டின் பைபிள் என்று போற்றப்படும் ‘விஸ்டன்’ பத்திரிகை வியந்துபோய் விவரித்தது. ‘இந்தியாவின் கிரிக்கெட் ராக்ஸ்டார்’ என்றும் அவரைப் புகழ்ந்தது.“தோனிக்கு நான் எதுவுமே சொல்லவில்லை. உன்னுடைய விளையாட்டை விளையாடு என்று மட்டுமே கேட்டுக் கொண்டேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் நான் கண்ட மிகச்சிறந்த கவுண்டர்-அட்டாக்குகளில் ஒன்று, தோனி பாகிஸ்தானை எதிர்கொண்ட அந்தப் போட்டி...” என்று இந்தியாவின் கிரிக்கெட் பெருஞ்சுவர் திராவிட், தோனியின் முதல் செஞ்சுரியைப் போற்றினார்.

அந்தப் போட்டியில் தோனிக்கு பந்து வீசவும் வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விக்கெட் கீப்பரான தோனி, சர்வதேசப் போட்டிகளில் வீசிய முதல் ஓவர் அதுதான்.மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தானை விரைவிலேயே கட்டுப்படுத்த முடிந்துவிட்டாலும், இந்தியாவால் பெரிய ஸ்கோர் செய்ய முடியவில்லை.

சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் தொடரை வென்றே ஆகவேண்டும் என்கிற வெறியோடு இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய பாகிஸ்தான் 599 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது.இந்தியாவில் முந்தைய போட்டிகளைப் போல பதிலடி தரமுடியவில்லை.தோனி மேஜிக்கும் இப்போட்டியில் நிகழவில்லை.விளைவாக 341 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது இந்தியா.டெஸ்ட்டில் விட்டதை ஒருநாள் தொடரில் கைப்பற்ற இந்தியா சபதம் செய்திருந்தது.

அதற்கேற்ப பெஷாவரில் நடந்த முதல் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் விஸ்வரூபம் எடுத்தார்கள்.சேவாக், 5 ரன்களிலேயே வீழ்ந்துவிட்டாலும்கூட மற்றொரு ஓப்பனரான சச்சின் நிலைத்து நின்று ஆடினார்.ஒன்டவுனுக்கு அனுப்பப்பட்ட பதானும் அரை செஞ்சுரி எடுத்தார்.வழக்கத்துக்கு மாறாக நான்காவது வீரராக களமிறக்கப்பட்ட தோனியும், ஏமாற்றாமல் 68 ரன்களை எடுத்து அவுட் ஆனார்.சச்சின் செஞ்சுரியை எட்டிவிட்டு, அவுட் ஆனபோது இந்தியா 300 ரன்களை எட்டியிருந்தது.

மேலும் 5 ஓவர்கள் மிச்சமிருக்க இந்தியா சுலபமாக 350 ரன்களைக் கடக்குமென்றே தோன்றியது. களத்தில் அதிரடி வீரர் முகம்மது கைஃபும், இந்திய அணியின் கேப்டன் ராகுல் திராவிட்டும் இருந்தனர்.ஆனால் -(அடித்து ஆடுவோம்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்