வாட்சப் வதந்திகளை நம்பி சிகிச்சை எடுக்காதீர்கள்! அழுத்திச் சொல்கிறார் சித்த மருத்துவர்



‘‘இப்போது நிலவிக் கொண்டிருக்கும் பெருந்தொற்று காலத்தில் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். ‘இந்த மருத்துவர் இதைச் சொன்னார் அல்லது இந்த மருத்துவம் இதைச் சொல்கிறது...’ என்று சமூக வலைத்தளங்களில் அனுப்பப்படுகிற, பதிவு செய்யப்படுகிற நிறைய வதந்திகளை அப்படியே நம்பி சிகிச்சை எடுக்கக் கூடாது.
இப்படிப்பட்ட தகவல்களை அரசு உன்னிப்பாக கவனிக்க வேண்டும். எப்படி கொரோனா தடுப்பூசி பற்றி தவறான செய்திகள் பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்கிறதோ அதேபோல் சித்த மருத்துவம்; மருந்துகள் பற்றி இந்த நேரத்தில் தவறாக அனுப்பப்படும் செய்திகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...” என்கிறார் சித்த மருத்துவர் பிரியங்கா சேகரன்.

சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு பட்ட மேற்படிப்பு படித்து வரும் பிரியங்கா, தனது முதலாம் ஆண்டில் அதிக நேரத்தை கொரோனா ஆய்விற்கான குழுவோடு செலவிட்டுள்ளார்.“சித்த மருத்துவம் மீது பலர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள் சமூக வலைத்தளங்களில் யாரோ ஒருவர் பதிவிடும் சித்த மருத்துவ முறைகளை, மருந்துகளை ஏதோவொரு சித்த மருத்துவர்தான் சொல்லியுள்ளார் என நம்பி எடுத்துக் கொள்வது அவர்கள் உடலுக்குத் தேவையில்லாத உபாதைகளை ஏற்படுத்தும்.

இது எல்லா மருத்துவத்திற்கும் பொருந்தும். எனவே முறையாகப் பயின்ற  சித்த மருத்துவரை அணுகி அவர்கள் நம் உடலுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட அளவில் கொடுக்கும் மருந்தை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.தமிழகத்தில் சித்த மருத்துவத்திற்கான ஹெல்ப்லைன் இருக்கிறது. அதில் சந்தேகங்களைக் கேட்டுப் பெறலாம்...” என்று கூறும் மருத்துவர் பிரியங்கா, கபசுர குடிநீரினை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்... அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன... என்பது பற்றி விளக்கினார்.“400 ml நீரில், (நான்கு டம்ளர் நீர்) 5 கிராம் (ஒரு ஸ்பூன் அளவுக்கு) கபசுர குடிநீர் சூரணத்தைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து அதை 60 ml (அரை டம்ளர் அல்லது முக்கால் டம்ளர்) ஆக வற்ற வைத்து அருந்த வேண்டும்.

இது ஒரு தனி நபருக்கான ஒரு வேளைக்கான அளவு.  இதை முன்களப்பணியாளர்கள், தினமும் வார்டுக்குப் போகிற மருத்துவர்கள், செவிலியர்கள் அல்லது தினமும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களைச் சந்திப்போர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பவர்களோடு இருப்பவர்கள்  தினமும் ஒரு வேளை எடுத்துக் கொள்ளலாம்.
மற்றவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்தாலே போதும். அப்படி எடுத்துக் கொள்பவர்கள் சாப்பிடுவதற்கு முன்னர் அல்லது பின்னர் எடுக்கலாம். அது எந்த நேரமாக இருந்தாலும் பரவாயில்லை.

அரசாங்கம் கொடுப்பது, சித்த மருத்துவர்களிடம் இருந்து வாங்குவது ஏற்புடையது. இவர்களைத் தவிர மற்ற இடங்களில் கபசுர குடிநீர் வாங்கும்போது GMP சான்றிதழோடு இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.கபசுர குடிநீரில் பதினைந்து மருந்து மூலப்பொருட்கள் இருக்கின்றன. அதில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தன்மையுள்ளது. அதற்கேற்றாற் போலவே நம் உடலில் வேலை செய்கிறது.உதாரணமாக, வைரஸுக்கு எதிராக வேலைசெய்யும் antiviral,  உடலில் நோய் வந்தபின் எதிர்த்துச் செயல்படுகிற anti inflammatory, காய்ச்சலைக் கட்டுப்படுத்தக்கூடிய antipyretic… எனப் பல செயல்பாடுகள் கபசுர குடிநீரில் இருக்கும் மூலப்பொருட்களில் இருக்கிறது.

பொதுவாக சித்த மருத்துவம் எடுக்கும்போது உடல் உறுப்புகள் பாதிக்கப்படும், குறிப்பாக சிறுநீரகம், கல்லீரல் போன்றவை செயலிழந்து போகும் என்கிற அச்சம் பரப்பப்பட்டுள்ளது.
இது தவறானது. மாறாக கபசுர குடிநீரில் உள்ள மூலப்பொருட்களில் கல்லீரலை  பாதுகாக்கக் கூடிய (Hepatoprotective) பொருட்கள் இருக்கின்றன.  இதை அழுத்தமாகச் சொல்வதற்கான காரணம் ஒரு சித்த மருத்துவராக இந்த மூலக்கூறுகளைத் தனித்தனியே படித்ததோடு, இவை உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்தான ஆய்வின் முடிவுகளும் நேர்மறையாகவே இருப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

கபசுர குடிநீர் பற்றி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சித்த மருத்துவர்கள் குழு கடந்த ஆண்டு ஆய்வு (open randomised clinical trial) செய்தனர். இந்த ஆய்வில் 100 பேர் கொண்ட சிறு மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்ட கொரோனா நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் ஒரு பிரிவினருக்கு தமிழக அரசு பரிந்துரைத்த ஆங்கில மருந்துகளும் இன்னொரு பிரிவினருக்கு ஆங்கில மருந்துகளுடன் சித்த மருந்துகளும் வழங்கப்பட்டன.

ஆய்வின் முடிவில், சித்த மருத்துவம் கொடுக்கப்பட்ட நோயாளிகள் அதிவேகமாக குணமாகி உள்ளது அறியப்பட்டது. அதாவது, சித்த மருத்துவம் எடுத்துக்கொண்ட 60 நோயாளிகளை, 11  14 நாட்களில் RTPCR பரிசோதனை செய்ததில் 78.33 சதவீதம் பேர் நெகடிவ் ஆகினர். ஆனால், ஆங்கில மருத்துவம் மட்டுமே மேற்கொண்ட 30 பேரில் 33.3 சதவீதத்தினருக்கே நெகடிவ் ரிசல்ட் கிடைத்தது.

அதுபோலவே நுரையீரல் பாதிப்பை அறியக் கூடிய CT chest ஆய்வில் நுரையீரல் தொற்று அதிகரித்து காணப்பட்டோருக்கும் ஆய்வின் முடிவில் தொற்று குறைந்து காணப்பட்டது. அதுபோலவே நோய் தீவிரத்தைக் காட்டும் NLR ratioவும் பெருமளவு குறைந்தது தெரிந்தது.  இந்நோயாளிகள் யாருக்கும் உயிர்க்காற்று (02) அளவு குறையவில்லை. ஆக்ஸிஜன் தேவை ஏற்படாமலேயே குணமடைந்தனர்.

சித்த மருந்து எடுத்துக்கொள்வோர்க்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என்ற பொய்யான பகிர்வுகள் சமூக வலைத்தளத்தில் காணப்படுகிறது. அத்தகவல் பொய்யானது என்பதும் இவ்வாய்வில் நிரூபணமாகியுள்ளது.இந்த வேறுபாடுகள் கண்டிப்பாக சித்த மருந்துகள் வழங்கியதன் விளைவாகத்தான் ஏற்பட்டவை என்பதை உறுதிப்படுத்துமாறு ஆய்வுக் குறியீடான P value < 0.01 என்றும் நிரூபனம் ஆகியுள்ளது...” என்று கூறும் மருத்துவர் பிரியங்கா, தீவிர கொரோனா தொற்றுள்ளவர்களையும் சித்த மருத்துவத்தினால் குணப்படுத்த முடியும் என்கிறார்.
‘‘அலோபதி  சித்த மருத்துவம் சேர்த்து எடுப்பதால் எந்த பிரச்னையும் இல்லை. சித்த மருந்துவம் எடுத்தால் தாமதமாகத்தான் குணப்படுத்த முடியும் என்பது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளும் கொரோனாவில் உடைந்திருக்கிறது.

இந்த ஓர் ஆய்வு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வுகள் நடந்து முடிந்தும், நடந்து கொண்டும் இருக்கின்றன.
திருப்பதி, திருப்பத்தூர், தேனி, வேலூர் போன்ற பல ஊர்களில் உள்ள சித்த மருத்துவ மையங்களிலும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,  ராமச்சந்திரா மருத்துவமனை, கோவை மருத்துவக்கல்லூரி  ஈஎஸ்ஐ மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை... என பல்வேறு மருத்துவமனைகளிலும் வேறுபட்ட இலக்குகளுடன் கொரோனா நோயாளிகளிடத்தில்  சித்த மருந்துகளின் செயல்திறனை அறியும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இவை தவிர தனி மருந்துகளையும், கொரோனா  நுண்கிருமிக்கு எதிரான செயல்திறன், இரத்த உறைதலைத் தடுக்கும் செய்கை (thrombolytic activity) ஆகியவை பற்றியும் ஆய்வுகள் நடத்தப்பெற்றுள்ளன. இவற்றுள்   தீவிர நோய் அறிகுறிகள் உள்ள நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வும் நேர்மறையாகவே இருக்கிறது.மேலும், தீவிர நிலையில் இருந்த (அதாவது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 89க்கும் கீழ் இருந்த நோயாளிகள்) கொரோனா நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவத்துடன் சித்த மருத்துவமும் வழங்கி நடத்தப்பட்ட மற்றுமொரு ஆய்வில் நோயாளிகளின் இறப்பு விகிதம் பலமடங்கு குறைந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

இப்போதும் லேசான அறிகுறி உள்ளவர்களுக்கும், ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்களுக்கும் மட்டும் சித்த மருத்துவம் மேற்கொள்ளலாம் என்கிறார்கள். இதுவும் தவறான தகவல் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.தீவிர நிலை கொரோனா நோயாளிகளுக்கும் சித்த மருந்துகள் வழங்கப்பட வேண்டும்...” என்று கூறும் பிரியங்கா, பல வாரங்கள் கொரோனா வார்டுக்குச் சென்று சிகிச்சை அளித்த காரணத்திற்காகவும், கொரோனா ஆய்வில் கலந்து கொண்டு சிறப்பான பங்களித்தமைக்காகவும் ‘ஆயுஷ் எக்ஸலண்ட்’ விருதினைப் பெற்றுள்ளார்.

“தடுப்பூசிக்கு எதிராக சித்த மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதும் தவறான குற்றச்சாட்டு.  சித்த மருத்துவர்கள் யாரும் தடுப்பூசி போட வேண்டாம் என்று சொல்லவில்லை.
மக்கள் பெருந்தொற்றுக்கு ஆளாகி இருக்கும் இந்த நேரத்தில் மருத்துவ அரசியல் செய்யாமல் ஒருங்கிணைந்த கூட்டு மருத்துவத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பதே சித்த மருத்துவர்களின் கோரிக்கை. ஏனெனில், அலோபதி மற்றும் சித்தா போன்ற மரபு மருத்துவம் இரண்டிலும் நேர்மறையான விஷயங்கள் இருக்கின்றன...” என்கிறார் சித்த மருத்துவர் பிரியங்கா சேகரன்.

அன்னம் அரசு