கொரோனா 3ம் அலை வருமா? விளக்குகிறார் தென்கொரிய பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்



இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கோர தண்டவம் ஆடி ஓய்ந்து கொண்டிருக்கும் வேளையில், மூன்றாம் அலையும் வரப் போகிறது என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது உச்ச நீதி மன்றம். அப்படி வருகையில் குழந்தைகளுக்குத்தான் பாதிப்பு அதிகம் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறது.
இந்நிலையில், மூன்றாம் அலை வந்தால் எப்படி சமாளிக்க வேண்டும் என்று விளக்குகிறார் தென்கொரிய பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் செல்வராஜ் ஆரோக்கியராஜ்.கொரோனா, பயப்பட வேண்டிய, பதற்றப்பட வேண்டிய நோயா?

கொரோனா தொற்றைக் கண்டு பயப்படவோ, பதற்றப்படவோ தேவையில்லை. Mild & moderate infection உடையோர்தான் 94% இருக்கின்றனர். அவர்கள் வீட்டிலேயே தனிமைப்
படுத்திக் கொண்டு மருத்துவர்கள் ஆலோசனைப்படி நடந்தாலே கொரோனா பாதிப்பிலிருந்து மீளலாம். மீதமுள்ள 6% பேர்தான் மருத்துவ மனைக்குச் செல்ல நேரிடும். அதனால் தேவையில்லாத மன உளைச்சல் வேண்டாம். இந்த இரண்டாம் அலையில் கொரோனா தொற்றைவிட மன பதற்றத்தில்தான் அதிக இழப்பு நடந்திருக்கிறது.

தடுப்பூசிகள் பற்றி மக்களுக்கு இருக்கும் அச்சம் நியாயமானதா? தடுப்பூசிகள் பற்றி மக்களுக்கு அச்சம் இருக்கிறது என்று சொல்வதை விட, மக்கள் தடுப்பூசி பற்றி கேள்வி எழுப்புகிறார்கள் என்று சொல்வதே சரி. அவர்களின் கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு பதில் அளிப்பது அரசு, மருத்துவர்கள், ஆராச்சியாளர்களின் கடமை.

நான் 80களில் பிறந்தவன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்பொழுது குழந்தைகளை இடுப்பில் சுமந்தபடி பெற்றோர் மருத்துவமனைக்குச் செல்வார்கள். தடுப்பூசி போட வைப்பார்கள். இப்படிச் செய்ததால்தான் இந்தியாவில் போலியோ ஒழிந்தது. அம்மை போன்ற தொற்றுகளில் இருந்து குழந்தைகளைக் காக்க முடிந்தது.

இது எப்படி நடந்தது? மக்கள் தடுப்பூசி மீது எப்படி நம்பிக்கை வைத்தார்கள்? அரசு ஏற்படுத்திய தொடர் விழிப்புணர்வுதான். இந்தியாவில் சிறந்த மருத்துவக் கட்டமைப்பு உள்ள மாநிலம் தமிழ்நாடு. முக்கியமாக ஆரம்ப சுகாதார மையம் இங்கு சிறப்பாகச் செயல்படுகிறது. இந்தக் கட்டமைப்பை வைத்துக் கொண்டு மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பெருந்தொற்று காலங்களில் அரசு எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகள் என்னென்ன?

அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்களின் ஆலோசனைகளை அரசு கேட்க வேண்டும். அறிவியலும்  அரசியலும் இணைந்து செயல் பட வேண்டும். ஏற்கனவே இது போன்று தொற்று (கொரோனா) பாதித்த நாடுகள் எப்படி தொற்றை கட்டுப்படுத்தினர்? எங்கு  தொற்றை கட்டுப்படுத்தத் தவறினர்? என்னென்ன உடனடி மருத்துவக் கட்டமைப்புகள் தேவையாக இருந்தது...  என்று ஆராய்ந்து நாமும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  இப்போது பொறுப்பேற்றிருக்கும் தமிழ்நாடு அரசு நன்கு செயல்படுகிறது.

நான் சொல்ல வருவது இதுதான். கொரோனா இரண்டாம் அலையில் நாம் பெற்ற தோல்விகள், வெற்றிகளை ஆராய்ந்து எதிர்காலத்தில் கொரோனா போன்று வேறு தொற்றை எதிர்கொள்ள நாம் மருத்துவக் கட்டமைப்பை மேலும் பலப் படுத்த வேண்டும். Basic Science Research & Developmentக்கு அதிக நிதி ஒதுக்குவதோடு, அறிவியல் மாணவர்களை ஊக்கப்படுத்த
வேண்டும்.   

கொரோனா மூன்றாம் அலை வரும் என்றும், அப்படி வந்தால் குழந்தைகளுக்குத்தான் பாதிப்பு அதிகம் என்றும் எச்சரிக்கிறார்களே?

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, கோவிட் 19 நோய்க் காரணியான SARS  COV2 வைரஸ் நம் செல்களுக்குள் நுழைய Angiotension converting Enzyme 2 (ACE 2) என்ற ரிசப்டார்கள் (ஏற்பிகள்) தேவை. குழந்தைகளுக்கு இந்த ACE 2 ரிசப்டார்கள் முழுமையாக முதிர்ச்சி அடையாத நிலையில் இருக்கும் என்பதால் குழந்தைகள் பெரியவர்களை விட பாதுகாப்பானவர்கள். இருந்தாலும், நாம் முன்னெச்சரிக்கையாக குழந்தைகளுக்கான  ஐசியூ படுக்கை, மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற ஆக்ஸிஜன் வசதிகளை அதிகப் படுத்த வேண்டும். இதுகுறித்தான தரவு களைக் கொண்ட ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும்.

கொரோனா தொற்று ஒரு பேரிடர். இது ஒரு வைரஸ் கிருமி. அந்த வைரசுக்கு பணக்காரன்  ஏழை, சாதிப் பாகுபாடு, மதம், நாடு என்றெல்லாம் தெரியாது. வைரசுக்கு தெரிந்ததெல்லாம் மனித உடல்தான். நாம் கண்ணுக்குத் தெரியாத எதிரி யிடம் போராடுகிறோம். இது போன்ற காலங்களில் நம் விருப்பு, வெறுப்புகளை மறந்து ஒற்றுமையுடன், வெளிப்படையான அணுகுமுறையுடன், விரைவான தடுப்பூசி, தகவல் பரிமாற்றம், சமமான உதவி விநியோகம், படுக்கைகளுடன் கூடிய கொரோனா வசதிகள், ஆக்ஸிஜன் பொருட்கள், நோய் எதிர்ப்பு மருந்துகள், மக்கள் விழிப்புணர்வு… ஆகியவைதுணைக் கொண்டு கொரோனா  சவாலை எதிர்கொள்வோம்.

அன்னம் அரசு