சீக்கிரமே ஆக்ஸிஜன் நிலைமை சீராகும்..!



உறுதியாகச் சொல்கிறார் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நேரத்தில், அதாவது 20 நாட்களுக்கு முன் தமிழக தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவை சந்தித்தோம். அன்று ஒருநாள் பாதிப்பு 36 ஆயிரத்தைத் தாண்டிச் செல்வதும், உயிரிழப்பு 450 வரை எட்டியிருப்பதுமாக இருந்தன. 
ரெம்டெசிவிர் மருந்துக்கும், ஆக்ஸிஜனுக்கும் மக்கள் மருத்துவமனைகளில் தவியாகத் தவித்தனர். இதனையடுத்து ரெம்டெசிவிர் மருந்தை சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளே அந்தந்த அரசு விற்பனை மையங்களில் வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்து, அதற்காக கூடும் மக்களை ஆசுவாசப்படுத்தி இருந்தது.

அப்போதைய சூழலில் தமிழக அரசு ஆக்ஸிஜனுக்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க எடுக்கப்பட்ட பேட்டி இது.இன்று கொரோனா தொற்றும், உயிரிழப்பும் கணிசமாகக் குறைந்துள்ள நிலையில் அன்று எடுத்த பேட்டி இப்போது முக்கியமற்று தெரியலாம்.ஆனாலும் அப்போது அமைச்சரிடம் எடுத்த நேர்காணலை இப்போது வெளியிடுகிறோம்.

காரணம், இது வெறும் பேட்டி அல்ல. ஆவணம். பெருந்தொற்று காலத்தில் ஒரு மாநில அரசு எப்படி துரிதமாக செயல்பட்டிருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க அன்று எடுத்த இப்பேட்டி பயன்படும்.இத்தனைக்கும் திமுக அரசு அப்போதுதான் பதவியேற்றிருந்தது. கஜானா காலி. இதற்கு மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைச்சர்கள் மேற்கொண்ட பணி மெச்சக்கத்தக்கது.

அதை வெளிச்சமிட்டுக் காட்டும் ஒரு சோறு பதம்தான் இந்த நேர்காணல்.20 நாட்களுக்கு முந்தைய சூழலை கணக்கில் கொண்டு இப்பேட்டியைப் படித்தால் இதை ஏன் ஆவணம் என்று குறிப்பிடுகிறோம் என்பது புரியும்.

இனி...அன்று எடுத்த நேர் காணல்...

‘‘இன்னைக்கு ஆக்ஸிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பணிகளை வேகப்படுத்தணும்னு சொல்லியிருக்காங்க. முதல்ல மத்திய தொகுப்பில் உள்ள ஆக்ஸிஜனை அதிகப்படியாக தமிழகத்திற்கு வழங்கச் செய்யணும்னு சொன்னாங்க. முன்பு நமக்கு 210 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கிடைச்சது. இப்ப முதலமைச்சர் முயற்சியின் காரணமா மத்திய தொகுப்பில் இருந்து 519 மெட்ரிக் டன் கிடைச்சிருக்கு.

ஆனா, நமக்கு ஒருநாள் தேவை 650 மெட்ரிக் டன். இப்போது, 470 மெட்ரிக் டன் அளவே கிடைக்குது. அதனால, ஒருநாளைக்கு கூடுதலாக 180 மெட்ரிக் டன் தேவைப்படுது. இதை உடனடியாக வேணும்னு மத்திய அரசு கிட்ட கேட்டிருக்கோம். மத்திய அரசும் திமுக எம்பி டி.ஆர்.பாலுவிடம் ஐந்து நாளுக்குள் 900 மெட்ரிக் டன் அனுப்பி வைப்பதாகச் சொல்லியிருக்கிறாங்க. ஆனாலும், அது வந்து சேர்கிற வரை நாம் இங்கே ஆக்ஸிஜன் தேவையை சமாளிக்கணும்.

அதுக்காக நாம் இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி பண்ண முயற்சி செய்கிறோம். உதாரணத்துக்கு ஸ்டெர்லைட்ல இருந்து 30 மெட்ரிக் டன் கிடைக்கும். அதன் பணி இப்ப தொடங்கியிருக்கு. அப்புறம், சேலம் ஜேஎஸ்டபிள்யூ இரும்பு ஆலையில் இருந்து பத்து மெட்ரிக் டன் வரும்.

இப்படி நமக்கு இருக்கக்கூடிய வாய்ப்புள்ள இடங்கள்ல இருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி பண்ண முயற்சி எடுக்குறோம். அப்புறம், சென்னை பெட்ரோ கெமிக்கல் லிமிட்டெட்ல கிடைக்கிற ஆக்ஸிஜன் உற்பத்தியை வச்சு அங்க 500 படுக்கை வசதிகள் கொண்ட மையத்தை தயார் செய்திருக்கோம். நெய்வேலி லிக்னைட் நிறுவனம் சில இடங்கள்ல ஆக்ஸிஜன் பிளான்ட் போட்டுத் தர்றோம்னு முதலமைச்சரிடம் சொல்லியிருக்காங்க.

அடுத்ததாக, முன்னாடி ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு இப்போது ஓடாமல் இருக்கிற பிளான்ட்களை ஓட வைக்கவும் முயற்சி எடுக்குறோம். தவிர, புதிதாக போட வருகிறவர்களை ஊக்கப்படுத்துறோம். அதாவது, மருத்துவமனையிலும் மருத்துவமனைக்கு வெளியிலும் பிளான்ட்கள் போட விருப்பம் உள்ளவங்களை வரவேற்கிறோம்.

அப்படி வருகிற தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கிற திட்டத்தைத்தான் கடந்த வாரம் முதலமைச்சர் அறிவிச்சாங்க. அதாவது, 50 கோடி முதலீட்டில் தடுப்பூசி, ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன் கான்சென்ட்ரேட்டர்ஸ் தயாரிக்கிறவங்க தொழில் தொடங்க முன்வந்தால் டிட்கோ மூலம் இணை பங்கேற்புடன் செய்ய விண்ணப்பங்களை வரவேற்று அறிக்கை வெளியிட்டு இருக்கோம்.

இப்படியான தொழிற்சாலைகள் துவங்க வருகிற முதலீட்டாளர்களுக்கு அவர்களின் முதலீடுகளில் 30 சதவீதம் மூலதன மானியம் வழங்கப்படும்னு சொல்லியிருக்கோம். சிப்காட் அல்லது சிட்கோ நிறுவனங்கள் இத்தகைய தொழில்நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிலம் ஒதுக்கீடு செய்யும்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் 6 சதவீத வட்டி மானியத்துடன் உடனடி கடன்களை வழங்கிடும். இதில் புதிய நிறுவனங்கள் தவிர இப்போது இயங்கி வரும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத் திட்டமாக இருந்தாலும் இந்த மூலதன மானியத்திற்கு தகுதியுடையதுனு அறிவிச்சிருக்கோம்...’’ என்கிற தங்கம் தென்னரசு உடனடி நடவடிக்கைகள் பற்றித் தொடர்ந்தார்.   

‘‘இது ஒருபுறம் இருக்க, இப்போது நமக்கு ஆக்ஸிஜன் அதிகளவில் தேவை. அதனால், புதிய நிறுவனங்கள் உற்பத்தி பண்றவரை காத்திருக்க முடியாது. அதுக்காக வெளியிலிருந்து ஆக்ஸிஜன் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் எடுத்திருக்கோம். ரூர்கேலா, ஜாம்ஷெட்பூர் போன்ற வெளிமாநிலங்கள்ல உள்ள இரும்பு ஆலைகளில் இருந்து 400 மெட்ரிக் டன் வரை ஆக்ஸிஜனை ரயில் மூலம் கொண்டு வந்திருக்கோம். அடுத்து, நெதர்லாந்தில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உடனடி தேவைக்காக வாங்கியிருக்கோம்...’’ என்கிறவரிடம், ஆக்ஸிஜன் தவிர்த்து ஆக்ஸிஜன் எடுத்துச் செல்ல சிலிண்டர்களின் தேவையும் அதிகமாக உள்ளதே என்றோம்.   

‘‘ஆமாம். அதுக்கான பணிகளும் நடந்திட்டு இருக்கு. திரவ நிலையில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து வர இரண்டு வழிகள் இருக்கு. ஒண்ணு, உறை வெப்பநிலையில் இருக்கக்கூடிய கொள்கலன்கள். அதாவது, கிரையோஜெனிக் கன்டெய்னர்ஸ். இதில், ஆக்ஸிஜனை நிரப்பி கொண்டு வரலாம்.

அடுத்து, சிலிண்டர்களில் அடைத்து எடுத்திட்டு வரலாம். அதனால, நமக்கு இந்த கிரையோஜெனிக் கன்டெய்னர்களும், சிலிண்டர்களும் அதிகம் தேவை. ஏற்கனவே, நமக்கு நெதர்லாந்தில் இருந்து ஐந்து கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் வந்தது. அப்புறம், நான்கு கன்டெய்னர்களை மத்திய அரசு நமக்குக் கொடுத்திருக்கு. இதுதவிர, 12 கிரையோஜெனிக் கன்டெய்னர்களை நாம் சீனாவில் இருந்து வாங்குறோம்.

இப்ப முதற்கட்டமா 2 ஆயிரம் சிலிண்டர்களை சிங்கப்பூர்ல இருந்து இறக்குமதி செய்திருக்கோம். ஏற்கனவே, சிப்காட் மூலம் 1922 சிலிண்டர்கள் நம் கையிருப்பில் இருக்கு. இதுதவிர, சிப்காட் மூலம் எந்தெந்த தொழில்நிறுவனங்கள் சிலிண்டர்கள் வச்சிருக்காங்களோ அந்த சிலிண்டர் களை ஒரு தொகைக்கோ அல்லது ஒத்திக்கோ கொடுங்கனு கேட்டிருக்கோம்.சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படும். அதனால, அவங்ககிட்ட இந்தச் சூழ்நிலைக்கு வாங்கிக்கலாம்னு ‘எக்ஸ்பிரசன் ஆஃப் இன்ட்ரஸ்ட்’னு, அதாவது விருப்பம் உள்ளவங்க தெரிவிங்கனு கேட்டிருக்கோம்.

 ஏறக்குறைய 10 ஆயிரம் சிலிண்டர்கள் வரை வாங்க நடவடிக்கை எடுத்திட்டு வர்றோம். வருங்கால சூழல் எப்படியிருக்குனு நமக்குத் தெரியாது. அதனால, எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கிற மாதிரி இருக்கணும்னு பணியாற்றிட்டு வர்றோம்...’’ என்கிறவர் தடுப்பூசி உற்பத்தி பற்றித் தொடர்ந்தார்.   

‘‘இதைப்போல, தடுப்பூசி உற்பத்தி பண்ற தொழிற்சாலைகளை ஊக்குவிப்போம்னு முதலமைச்சர் சொல்லியிருக்காங்க. ஏற்கனவே தமிழகத்துல செங்கல்பட்டு, குன்னூர், சென்னை கிண்டி ஆகிய மூன்று இடங்கள்ல தடுப்பூசி தயாரிக்கிற நிறுவனங்கள் இருக்குது. அதுவும் பரிசீலனையில் இருக்கு. அத்துடன் புதிதாக உற்பத்தி பண்ற நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கோம். இப்போதைக்கு நோய்த்தொற்று குறைந்தால் மட்டுமே நமக்கான தேவைகள் குறையும்.

ஒருவேளை தேவைகள் அதிகரித்தால் நாம் அதற்குத் தயாராக இருக்கணும். அதற்கான நடவடிக்கைகளே இவை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்கள், ‘இது கடினமான காலம். ஆனால், கடக்க முடியாத காலம் அல்ல’னு சொல்லியிருக்காங்க. அதனால், சீக்கிரமே நிலைமை சீராகும்...’’ நம்பிக்கை யாகச் சொல்கிறார் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.

பேராச்சி கண்ணன்