Family Tree-வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் முதன்மை நிறுவனம்



கடந்த 100 வருடங்களில் புதுப்புது பொருட்களை அதிகளவில் அறிமுகம் செய்த நிறுவனங்களில் ஒன்று, ‘எஸ்.சி.ஜான்சன் அண்ட் சன்’.

135 வருடங்களாக இயங்கி வரும் குடும்ப நிறுவனம் இது. அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இதன்  ஒரு தயாரிப்பாவது நிச்சயம் இருக்கும்.கொசு, கரப்பான் பூச்சியைக் கொல்லும் ஸ்பிரே, ஏர் ஃபிரஷ்னர், டாய்லெட் கிளீனர்... என வீட்டைப் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கப் பயன்படும் பொருட்களைத் தயாரிப்பதில் முன்னோடி நிறுவனம் இது. ‘பேகான்’, ‘கிவி’, ‘கிளேட்’, ‘ரெய்ட்’, ‘ஆஃப்’... என  முப்பதுக்கும் மேலான பிராண்டுகளில் இதன் தயாரிப்புகள் விற்கப்படுகின்றன.

îசாமுவேல் கர்ட்டிஸ் ஜான்சன்

அமெரிக்காவின் பழமையான குடும்ப நிறுவனங்களில் ஒன்றான ‘எஸ்.சி.ஜான்சன்  அண்ட் சன்’னுக்கு அடித்தளம் இட்டவர் சாமுவேல் கர்ட்டிஸ் ஜான்சன்.
மற்ற பிசினஸ் சாம்ராஜத்தை உருவாக்கியவர்களின் கதையைப் போல சாமுவேலின் கதையும் சுவாரஸ்யமானது; பல திருப்பங்களைக் கொண்டது. ஆனால், மற்ற பிசினஸ் ஜாம்பவான்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுகிறார் சாமுவேல். ஆம்; மற்றவர்கள் எல்லாம் 20 வயதிலேயே பிசினஸைத் தொடங்க சாமுவேலோ ஐம்பது வயதில்தான் பிசினஸில் நுழைகிறார். பிசினஸ் ஆரம்பிக்க வயது ஒரு தடையில்லை என்பதற்கு சாட்சியாகத் திகழ்கிறார்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள எலிரியா என்ற இடத்தில் 1833ம் வருடம் பிறந்தார் சாமுவேல். எளிமையான குடும்பம். தன்னுடைய வாழ்க்கையை, தானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற சூழல். 15 வயதில் வேலை தேடும் பயணம் ஆரம்பமானது. வேலை தேடி அமெரிக்காவின் மத்திய, மேற்குப் பகுதிகள் முழுவதும் அலைந்தார். கடைசியில் ஆபீஸ் பாய் வேலைதான் அவருக்குக் கிடைத்தது. இந்த வேலை அவருக்குப் பிடிக்கவில்லை. அடுத்து ரயில் பாதை அமைத்தல் முதல் சில்லறை வணிகம்  வரை ஏராளமான வேலைகளைச் செய்தார்.
எந்த வேலையிலும் பெரிய இடத்தை அவரால் அடையமுடியவில்லை. எதுவும் அவரைத் திருப்திப்படுத்தவில்லை. இதற்கிடையில் திருமணம் முடிந்து மகனும் பிறந்துவிட்டான்.இப்போது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஓட வேண்டியிருந்தது.

தனது 49வது வயதில் ரேசின் நகரத்துக்கு வந்து, அங்குள்ள ‘ரேசின் ஹார்டுவேர் மனுஃபேக்சரிங் கோ’ என்ற நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக வேலைக்குச் சேர்ந்தார். இது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. மொசைக் மற்றும் மரங்களைக் கொண்டு தரையை அலங்கரிக்கும் (ஃப்ளோரிங்) பிரிவில் சாமுவேலுக்கு வேலை. சேல்ஸ்மேனாக இருப்பதால் மார்க்கெட்டிங்கும் இவரே செய்ய வேண்டும்.

ஃப்ளோரிங்குக்காக வாடிக்கையாளர்களைத் தேடும் வேலை சாமுவேலை வெகுவாகக் கவர்ந்தது. வேலை நேரத்தைத் தாண்டி  முழு ஈடுபாட்டுடன் இயங்கினார். அடுத்த நான்கு வருடங்களில், அதாவது 1886ம் வருடம், தான் வேலை செய்த நிறுவனத்திடமிருந்து ஃப்ளோரிங் பிரிவை சொந்தமாக வாங்கிவிட்டார். புதிய நிறுவனத்துக்கு ‘எஸ்.சி.ஜான்சன்’ என்று பெயரிட்டு ஃப்ளோரிங் பிசினஸை தனி ஒருவனாகத் தொடங்கினார். நிறுவனத்தின் சேல்ஸ்மேன், புக் கீப்பர், பிசினஸ் மேனேஜர் என சகலமும் சாமுவேல்தான்.

கொஞ்சம் கூட ஓய்வில்லாமல் உழைத்தார். வாரத்தில்  திங்கள் முதல் வெள்ளி வரை அருகிலிருக்கும் ஊர்களுக்கு பிசினஸ் சுற்றுலா செல்வார். புதிதாக கட்டப்படும் வீடு, தேவாலயம், ஹோட்டல், பொதுக் கட்டடங்கள் என ஃப்ளோரிங் வேலைக்கான ஆர்டர்களைப் பெறுவார். சனிக்கிழமை நிறுவனத்துக்குத் திரும்பி ஆர்டர்களை செயல்படுத்துவதற்கான
திட்டங்களைத் தீட்டுவார். தாமதிக்காமல் வேலையை முடித்துவிடுவது இவரது தனித்துவம். அதனால் நிறுவனத்துக்கு நல்ல பெயர் கிடைக்க, கொலராடோ, நியூ இங்கிலாந்து, மிஸிஸிபியிலிருந்து எல்லாம் ஆர்டர்கள் தேடி வந்தன.

முதல் வருட நிகர லாபம் மட்டுமே 268.27 டாலர்கள். அன்றைய நாட்களில் இது பெரும் தொகை. நாலாப்பக்கமும் பிசினஸ் விரிவாக, வாடிக்கையாளர்களிடமிருந்து கடிதங்கள் வர ஆரம்பித்தன. ஃப்ளோரிங்கை எப்படி பாதுகாப்பாக, பளபளப்பாக வைத்திருப்பது... ஃப்ளோரிங்கைச் சுத்தப்படுத்த பிரத்யேகமான பொருட்கள் ஏதாவது இருக்கின்றவா... என்று பல வாடிக்கையாளர்கள் கேட்டிருந்தார்கள்.

சில நாட்களுக்கு பிசினஸை நிறுத்திவிட்டு வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வேலையில் இறங்கினார் சாமுவேல். இதற்காக பல நாடுகளுக்குச் சென்றார். கடைசியில் பிரான்ஸில் உள்ள கோட்டைகளில் இருக்கும் தரைத்தளங்கள் 100 வருடங்களுக்கு மேல் பளபளப்பாக புதிது போல பராமரிக்கப்படுவதை அறிந்தார். இந்தப் பராமரிப்புக்குப் பின்னணியில் இருக்கும் விஷயங்களையும் தேடலின் மூலம் கண்டடைந்தார் சாமுவேல். தான் கண்டுகொண்ட விஷயங்களைப் பல நாட்கள் பரிசோதனை செய்து, ஃப்ளோரிங்கை பாதுகாக்கும் மெழுகைத் தயாரித்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க, மற்ற நிறுவனங்களிடம் ஃப்ளோரிங்  செய்தவர்கள் கூட, அதை பாரமரிக்க சாமுவேலை நாடி வந்தனர்.

ஃப்ளோரிங்கில் விதவிதமான டிசைன்களும் மாற்றங்களும் வர, அதற்குத் தகுந்த மாதிரி நிறுவனத்தைத் தகவமைத்துக்கொண்டார் சாமுவேல்.  அமெரிக்காவின் மத்தியப் பகுதி முழுவதும் வியாபாரம் விரிவடைந்தது. அடுத்து தேசிய அளவில் விளம்பரம் கொடுக்க, அமெரிக்காவின் முன்னணி ஃப்ளோரிங் நிறுவனமாக வளர்ந்தது ‘எஸ்.சி.ஜான்சன்’.
ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் வருமானத்தில் 10 சதவீதத்தை சமூக வளர்ச்சிக்குக் கொடுப்பதை ஒரு கடமை போல செய்தார் சாமுவேல். இதை அவரது சந்ததியினரும் பின்பற்றி வருகின்றனர். ‘‘நிறுவனத்தின் வளர்ச்சியில் சுற்றியிருக்கும் சமூகம்தான் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் சமூகத்தின் வளர்ச்சிக்கு நிறுவனமும் தனது பங்கைக் கொடுக்க வேண்டும்...’’ என்பது அவரது பிசினஸ் கொள்கை.

சாமுவேலுக்குப் பின் அவரது மகன் ஹெர்பர்ட் ஃபிஸ்க் ஜான்சன் நிர்வாகப் பொறுப்புக்கு வந்தார். நிறுவனம்  உலக அளவில் விரிவடைவதற்கு அடித்தளமிட்டவர் ஹெர்பர்ட்தான். 1914ல் முதல் கிளையை இங்கிலாந்தில் திறந்தார். அத்துடன் நிறுவனத்தின் பெயரை ‘எஸ்.சி.ஜான்சன் அண்ட் சன்’ என்று மாற்றியமைத்தார். அதுவே இன்றும் நிலைத்துவிட்டது.  

* சாமுவேல் கர்ட்டிஸ் ஜான்சன் ஜூனியர்

இருபதாம் நூற்றாண்டின் முக்கிய பிசினஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுபவர் சாமுவேல் கர்ட்டிஸ் ஜான்சன் ஜூனியர்.  நான்காம் தலைமுறையைச் சேர்ந்த ஜூனியரின் நிர்வாகத்தின் கீழ்தான் புதுப்புது பொருட்களைத் தயாரிக்க ஆரம்பித்தது ‘எஸ்.சி.ஜான்சன் அண்ட் சன்’.  மில்லியனில் வருமானம் ஈட்டி வந்த நிறுவனத்தை பில்லியனுக்கு உயர்த்தியவரும் இவரே.

ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் பிசினஸ் நிர்வாகம் படித்துவிட்டு, 1954ல் குடும்ப நிறுவனத்துக்குள் நுழைந்தார். நிறுவனத்தின் பிரசிடெண்ட்டுக்கு உதவியாளராக பணிக்குச் சேர்ந்த ஒரு வருடத்தில் புதுப் பொருட்கள் அறிமுகத்துக்கான துறையை ஆரம்பித்து அதன் இயக்குனரானார்.

ஜூனியர் நிறுவனத்துக்குள் காலடி எடுத்து வைக்கும் வரை ஃப்ளோரிங் சார்ந்த பொருட்களை மட்டுமே தயாரித்து வந்தது ‘எஸ்.சி.ஜான்சன் அண்ட் சன்’. ஜூனியரின் வருகைக்குப்பின்தான் பலதரப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமாக உயர்ந்தது. நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே ஏர் ஃபிரஷ்னர், பர்னிச்சர் பாலிஷ், பூச்சிகளை விரட்டும் ஸ்பிரேவை அறிமுகம் செய்தார். இவையெல்லாம் நிறுவனத்தின் அடையாளமாகவே இன்று மாறிவிட்டது.

1960ல் லண்டனுக்குச் சென்று அங்குள்ள கிளையைத் தலைமை ஏற்று நடத்தினார்.  ஒரு நாள் இத்தாலியிலுள்ள ஸ்டோர்களுக்கு  விசிட் அடித்தார். அங்கே நிறைய அமெரிக்கப் பொருட்கள் விற்பனைக்கு இருப்பதைக் கண்டார். ஆனால், ‘எஸ்.சி.ஜான்சன் அண்ட் சன்'னுடைய ஒரு தயாரிப்பும் இல்லை. அதிலிருந்து உலகளாவிய வர்த்தகத்தில் தனிக்கவனம் செலுத்தி ஐரோப்பா முழுவதும் குடும்ப நிறுவனத்தின் தயாரிப்புகள் கிடைக்க வழிவகை செய்தார்.  1967ல் ரேசினுக்குத் திரும்பி சேர்மனாகப் பொறுப்பேற்று, அசைக்க முடியாத நிறுவனமாக ‘எஸ்.சி. ஜான்சன் அண்ட் சன்'னை வளர்த்தெடுத்தார் ஜூனியர்.

‘‘ஒரு நிறுவனத்தோட தலைவரின் முக்கிய குறிக்கோளே நிறுவனத்தை சாகவிடாமல் தடுப்பதும், நிறுவனம் தொடர்ந்து இயங்குவதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதும்தான். நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் சென்றால் மட்டுமே அதனால் தொடர்ந்து இயங்க முடியும்.

வளர்ச்சிப் பாதைகளில் செல்ல வேண்டுமானால் ஒரு பிசினஸில் மட்டுமே கவனம் செலுத்தாமல் பல துறைகளிலும் கால்பதிக்க வேண்டும். அப்படி செலுத்தும்போது ஒரு துறையில் நஷ்டம் ஏற்பட்டாலும் இன்னொரு துறை லாபம் கொடுத்து பிசினஸ் நிலைக்க உதவும்...’’ என்பதே ஜூனியரின் பிசினஸ் கொள்கை. இதை பைபிள் வாசகம் போல நிறுவனம் கடைப்பிடித்து வருகிறது.

* இன்று

உலகெங்கும் இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இதன் தயாரிப்புகளை பயன்டுத்தி வருகின்றன.  ரேசின் நகரில் பிரமாண்டமாக இதன் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தின் கிளைகள் 70 நாடுகளில் இயங்கிவருகின்றன. 13 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் 110 நாடுகளில் கிடைக்கின்றன. ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த மூன்றாம் ஹெர்பர்ட்  ஃபிஸ்க் ஜான்சன் சேர்மன் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி யாகப் பொறுப்பு வகித்து நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.
2020ம் ஆண்டின் வருமானம் 76,825 கோடி ரூபாய்.              

த.சக்திவேல்