சினிமா பண்டி



‘நெட்பிளிக்ஸி’ல் டிரெண்ட் அடித்து, சமூக வலைத் தளங்களைக் கலக்கிக்கொண்டிருக்கும் தெலுங்குப் படம், ‘சினிமா பண்டி’. ஆந்திரா  கர்நாடகா எல்லையில் உள்ள ஒரு குக்கிராமம். அங்கே வசித்து வரும் வீரபாபு ஆட்டோ ஓட்டி பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கிறார். ஒரு நாள்  வாடிக்கையாளர் ஒருவர் ஆட்டோவில் விலை உயர்ந்த கேமராவைத் தவறவிட்டு விடுகிறார். கேமராவைத் தவறவிட்டவர் வரும்வரை, அதை வாடகைக்கு விட்டு ஆட்டோவின் கடனை அடைக்கலாம் என்று நினைக்கிறான் வீரபாபு.

ஆனால், நடப்பது வேறு. தொலைக்காட்சியில் குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபத்தை சம்பாதித்த படங்களைப் பற்றிய நிகழ்ச்சியைப் பார்க்கிறான் வீரா. கையில் கேமரா இருப்பதால் அவனுக்குள் சினிமா ஆசை துளிர்விடுகிறது. சினிமா எடுப்பதற்காக வீரா மேற்கொண்ட முயற்சிகளை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவையுடன் சித்தரிக்கிறது திரைக்கதை.  சினிமா எடுக்க வேண்டும் என்ற கனவும் ஆசையும் உள்ள ஒவ்வொருவரும் தவறாமல் காண வேண்டிய படம் இது.

கொரோனா மாதிரியான நெருக்கடி சூழலை மறக்கடித்து மனதை ஆசுவாசப்படுத்துகிறது இந்தப் படம். படத்தில் நடித்தவர்களில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள். அதனாலேயே வெகு இயல்பாக இருந்தது நடிப்பு. இயக்குநர் பிரவீன் கண்ட்ரேகுலாவிற்கு இது முதல் படம்.