ஆபரேஷன் ஜாவா



மலையாள சினிமாவுக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டியிருக்கிறது, ‘ஆபரேஷன் ஜாவா’. கடந்த வாரம் ‘ஜீ5’ல் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் கொச்சியின் சைபர் செல் போலீஸ் ஸ்டேஷன். இதில் தற்காலிகமாக வேலைக்குச் சேர்கிறார்கள் இரண்டு இளைஞர்கள்.
பொறியியல் பட்டதாரிகளான அவர்கள் இணையம் சம்பந்தமான விஷயத்தில் கில்லாடிகள்.

அனுபவம் வாய்ந்த அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியாத கேஸ்களைக் கூட கண்டுபிடித்து அசத்துகின்றனர். தங்களின் திறமைக்கு உண்டான அங்கீகாரமும், வேலை நிரந்தர நியமனமும், கைநிறைய சம்பளமும் கிடைக்கும் என்று நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கை என்னவாகிறது என்பதே அதிர்ச்சியான திரைக்கதை.  

கேரளாவில் வேலை சம்பந்தமாக ஆன்லைனில் நடக்கும் மோசடி, திருட்டு டிவிடி போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க சைபர் செல்லுக்கு உதவிய இரண்டு எஞ்சினியர்களின் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது. சைபர் க்ரைம் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக இரண்டு இளைஞர்களும் அமைக்கும் வியூகங்கள் திரில்லிங். கதாபாத்திரங்களின் தேர்வு கச்சிதம். இணைய மோசடி களையும் தற்காலிகமாக பணிக்குச் சேரும் இளைஞர்களின் துயரங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்யும் இந்தப் படத்தின் இயக்குநர் தருண் மூர்த்திக்கு இது முதல் படம்.