தன்னையே மாடலாக்கி தெறிக்க விடும் மேக்கப் கலைஞர்!



‘‘ஒல்லியா வெள்ளையா இருக்கிறவங்க மட்டும்தான் நயன்தாரா மாதிரி மேக்கப் போட்டுக்க முடியுமா?! ஏன், பப்ளியா இருக்கறவங்களை மேக்கப் வழியா நயன்தாரா மாதிரி மாத்த முடியாதா என்ன..? செய்யலாம். கண்டிப்பா மேக்கப் வழியா கொண்டு வரலாம்.
ஏன்னா இருப்பதை அழகாகக் காட்டுவது தான் மேக்கப். அதோடு இல்லாத ஒரு விஷயத்தையும் உருவாக்குறதுதான்! இதன் விளைவுதான் இவ்வளவு லுக்ஸ்... இது எல்லாத்துக்கும் மாடல் நானேதான்!’’ புன்னகைக்கிறார் மேக்கப்கலைஞரான இலங்கேஸ்வரி. 

ஊரடங்கு காலத்தில் பலரும் ஓய்வு நேரத்தை கிரியேட்டிவ்வாக பயன்படுத்தி டிரெண்ட் செய்கிறார்கள். அந்த வகையில் இலங்கேஸ்வரி தனது மேக்கப் கலையை வைத்து முந்தைய கால பிரபலமானவர்கள் போல மேக்கப் போட்டு சமூக வலைத்தளங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

‘திருவருட் செல்வர்’ சிவாஜி கணேசன், யோகி பாபு, விஜய் சேதுபதி, நம்பியார்... என மேக்கப் அத்தாரிட்டியான உலக நாயகனுக்கே டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  ‘‘பூர்வீகம் திருநெல்வேலி. பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னைலதான். 20 வருடங்களா மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டா இருக்கேன். கடந்த ஆறு வருடங்களா ஃபேஷன் துறையிலயும் இருக்கேன்.

கொரோனா, பொது ஊரடங்குனு ஏகப்பட்ட பிரச்னைகள் தலை தூக்க... மேக்கப் வேலைகள் குறைவா வர ஆரம்பிச்சது. இந்த ஓய்வு நேரத்துல ஏதாவது ஸ்பெஷலா செய்யலாமேன்னு ஐடியா வந்தது. இதுக்கு முன்னாடி நிறைய கான்செப்ட் மேக்கப் பண்ணிருக்கேன். ‘மகளிர் தினம்’, ‘அன்னையர் தினம்’னு ஸ்பெஷல் தினங்கள்ல மாடல்களை வைச்சு தீம் போட்டோ ஷூட்ஸ் செய்திருக்கேன்.

இந்த ஊரடங்கு காலத்துல நம்மையே ஏன் மாடலாக்கக் கூடாதுனு தோணுச்சு...’’ என்னும் இலங்கேஸ்வரி மேலை நாடுகளின் கான்செப்ட் எக்ஸ்பரிமென்டை கையில் எடுத்திருக்கிறார்.

‘‘அங்க இது ரொம்ப பிரபலம். ஆண் பிரபலங்கள் மாதிரி ஒரு பொண்ணு மேக்கப் போட்டுக்கறது... பெண் பிரபலம் மாதிரி ஆண்கள் மேக்கப் போட்டுக்கறது எல்லாம் அங்க சகஜம். ஆனா, இந்தியாவுல மேக்கப் இன்னும் பேசிக் லெவல்லதான் இருக்கு. குறிப்பா பெண்கள், ஆண்கள் மாதிரியும்; ஆண்கள், பெண்கள் மாதிரியும் மேக்கப் போடுகிற எக்ஸ்பரிமென்ட்டை ஒண்ணு ரெண்டு பேர்தான் இங்க செய்யறாங்க. அதை நான் செய்து இங்கயும் பிரபலமாக்கணும்னு நினைச்சேன்.

முதல்ல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாதிரி எனக்கு நானே மேக்கப் போட்டுக்கிட்டேன். முதல் சோதனையே வெற்றி. அப்புறம் என்ன... டிரெண்டில் இருந்த அத்தனை பேரையும் மேக்கப் மூலம் முகத்தை மாத்தினேன்.நம்ம மனசுல நீங்காம இருக்கற நம்பியார்,  சிவாஜி கணேசன் மாதிரியானவங்க தோற்றத்தை கொண்டுவரக் கூடாதுனு மல்லாந்து படுத்திருந்தப்ப தோணுச்சு.

அப்படி உருவானதுதான் இங்க இருக்கற அத்தனை லுக்ஸும்! பலரும் இதை போட்டோ எடிட்டானு கேட்டாங்க. அவங்களுக்கு பதில் சொல்லும் விதமா அடுத்தடுத்து செய்த மேக்கப்களை வீடியோக்களா பகிர ஆரம்பிச்சேன்.

அதாவது எந்த லுக் போட்டுக்கிறேனோ... அந்த மாதிரியே நடிப்பது... முக பாவனைகள் செய்வது!இதுல நயன்தாராதான் எனக்கு கொஞ்சம் சவாலா இருந்துச்சு. ஆனா, பல வருஷங்களா ரொம்ப ஃபேமஸா இருப்பது நயன்தாரா லுக்தான். குறிப்பா சிவப்பா ஒல்லியா இருக்கிற பொண்ணுங்களுக்கு மட்டும்தான் இந்த நயன்தாரா லுக் செட்டாகும்னு ஓர் எண்ணம் இருக்கு.இதையே மாத்தி ஏன் பப்ளியா டஸ்க்கி டோன் இருக்கிறவங்களுக்கு இந்த லுக்க கொண்டுவர முடியாதுன்னு  யோசிச்சேன்.

மேக்கப்பில் என்ன வேணாலும் செய்யலாம். நம்ம முகத்துல யாருடைய முகவெட்டையும் கொண்டு வரலாம். அப்படித்தான் சவாலா நயன்தாரா லுக்கை கொண்டு வந்தேன். நிறைய பாராட்டுகள் வந்துச்சு. இன்னும் நிறைய எக்ஸ்பரிமென்ட் இருக்கு. செய்யணும். இந்த ஊரடங்கு காலத்துல எனக்கும் ஒருமுறை கொரோனா வந்துட்டு போயிடுச்சு. அதுக்கு இடையே என்னை நானே உற்சாகமாக வச்சுக்க என் மேக்கப் கலைதான் எனக்கு மிகப் பெரிய உதவியா இருக்கு.  

நாம குண்டா இருக்கோமே... டஸ்க்கியா இருக்கோமே... நமக்கு இது செட்டாகுமானு எல்லாம் யாருமே யோசிக்கத் தேவையில்லை. யாருக்கும் எந்த மேக்கப்பும் செட் ஆகும்.
இதுக்கு யாரை எந்த ஆங்கிள்ல எப்படி காட்டினா குறிப்பிட்ட லுக் கிடைக்கும் என்கிற ஃபார்முலாவை தெரிஞ்சிக்கிட்டாலே போதும். கலக்கிடலாம்.சொல்லப் போனா டஸ்க்கி டோனைத்தான் உலகமே கொண்டாடுது... நானும் கொண்டாடுறேன்...’’ என்கி றார் இலங்கேஸ்வரி.

ஷாலினி நியூட்டன்