நீரின்றி அமையாது உலகு...



6. கண்ணீர் விடும் தண்ணீர்

‘பணத்தை தண்ணி மாதிரி செலவழிக்கிறார்...’ என்று பலரும் சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த சொலவடை இனிவரும் காலங்களில் ‘தண்ணீரை பணம் மாதிரி செலவழிக்கிறார்...’ என்று மாறினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனெனில் தண்ணீரின் தேவை இந்த பூவுலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பெருகிவரும் மக்கள் தொகை. இப்போது 787 கோடியாக இருக்கக்கூடிய இந்த உலக மக்கள் கூட்டம், 2050ம் ஆண்டில் கிட்டத்தட்ட 974 கோடியை தொடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இப்பொழுதே, தண்ணீருக்கான தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் உலகில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை தொடர்ந்து இருந்து வருகிறது. இருக்கக்கூடிய 3 சதவீத நன்னீரில் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கு தொடர்ந்து தண்ணீர் செலவழிக்கப்படுகிறது.

இப்படியே போனால் என்ன ஆகும்..?

அள்ள, அள்ள குறையாது அள்ளித் தரும் அட்சய பாத்திரம் அல்ல இந்த பூமி என்பதை நாம் உணர வேண்டும். 60 அடி 80 அடி என்பதெல்லாம் போய் 600 அடி 900 அடி என்று பூமியை ஆங்காங்கே துளையிட்டு, இருக்கக்கூடிய தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறோம். இதனால், இயற்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதுடன் தண்ணீர் சேமிப்பு என்பது பெரும் கனவாக மாறி வருகிறது. இந்த போக்கை மாற்ற  பலரும் பல்வேறு விதங்களில் தொடர்ந்து போராட முன் வர வேண்டும்.பூமியில் கிடைக்கும் 3% தூய்மையான தண்ணீரில் 0.5%தான் நமது குடிநீர் தேவைக்கு கிடைக்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது.

உலகின் மொத்த மக்கள் தொகையில், 18% பேர் இந்தியாவில் வசிக்கும் நிலையில், இங்கு புதுப்பிக்கத்தக்க தண்ணீர் வளம் 4 சதவீதம் மட்டுமே உள்ளது.உலகில் சுமார்  2.2 பில்லியன் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை, சுமார் 4.2 பில்லியன்  மக்கள் அல்லது உலகின் மொத்த மக்கள் தொகையில் 55 % பேர், பாதுகாப்பான சுகாதார வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.இவையெல்லாம் மிகைப்படுத்தல் அல்ல; முகத்தில் அறையும் நிஜம். ஒரு புள்ளி விவரப்படி, ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே 50 லட்சம் குழந்தைகள் இறப்பதற்கு பாதுகாப்பற்ற குடிநீரே முதல் காரணமாக அமைகிறது. இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் வேறு மாதிரியான பிரச்னைகள் தொடர்கின்றன.

தொலைதூரங்களுக்குச் சென்று தண்ணீர் பிடிப்பதற்காக பெண்கள் தினந்தோறும் 200 மில்லியன் மணிக்கும் அதிகமான நேரத்தை செலவிட்டு வருகின்றனர். பெண்களுடன் அவர்களது குழந்தைகளும் செல்கின்றனர். இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது அதீத அழுத்தத்தை தருகிறது.ஐநாவின் அறிக்கை ஒன்று, உலகில் சுமார் 2.1 பில்லியன் மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக தெரிவிக்கிறது. இதில் 80% பேர் பாதுகாப்பற்ற நீரை பயன்படுத்தி வருகிறார்களாம்.

ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சுகாதாரமற்ற குடிநீரை அருந்துவதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். இது, ஒரு நாளைக்கு ஐந்து வயதுக்குட்பட்ட 700 குழந்தைகளின் உயிரை காவு வாங்குகிறது. பத்து வீடுகளை எடுத்துக்கொண்டால் அதில் 8 வீடுகளில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் தண்ணீருக்காக கண்ணீருடன் அலைய வேண்டியுள்ளது.  
வரும் 2030ம் ஆண்டில் 700 மில்லியன் மக்கள் தண்ணீர் தேவைக்காக இடம்பெயரக் கூடும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது. நீரின் தேவையானது ஒவ்வொரு 20 வருடங்களுக்கும் இரண்டு மடங்காக அதிகரித்து வருவதை மனதில் கல்வெட்டாக பதிப்பது நல்லது.

வேகமான நகரமயமாதல், மக்கள் தொகை அதிகரிப்பு, தொழிற்சாலைகள் விரிவாக்கம் மற்றும் விரிவடைந்து செல்லும் வேளாண் சாகுபடி பணிகள்,  சட்டவிரோத ஆழ்குழாய் கிணறுகள், பருவநிலை மாற்றம் மற்றும் தண்ணீரின் அவசியத்தை உணராமல் வீணடிப்பது போன்ற காரணங்களால்தான் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.பொருளாதார ரீதியாக சாத்தியமான பாசன முறைகளை விவசாயிகள் பின்பற்றுவது அவசியம்.

வேளாண் சாகுபடி பணிகளுக்கு, சொட்டுநீர், தெளிப்புநீர் போன்ற நுண்ணீர் பாசன முறைகள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட வேண்டும். பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும், தண்ணீரை சேமிக்க உறுதியேற்பதோடு, பயன்படுத்தி முடித்த பிறகு குழாய்களை உடனடியாக மூடுவது மிக அவசியம்.1950 களில் இந்தியாவில் 3000 முதல் 4 ஆயிரம் கன மீட்டர் தண்ணீர் ஒரு நபருக்கு கிடைத்து வந்த நிலையில் அது இப்போது ஆயிரம் கன மீட்டராக குறைந்துள்ளது. இதற்கு மக்கள் தொகை அதிகரிப்புதான் முக்கிய காரணம்.

தண்ணீர் சேமிப்புக்காக, ‘மக்கள் இயக்கம்’ இந்தியா முழுவதும் உடனடியாக தொடங்க வேண்டும்.ஏனெனில் வரும் 2025ம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகையில் 75 சதவீதம் பேருக்கு தூய்மையான நீர் கிடைப்பது பெரும் சவாலாகவே இருக்கும் என்று ஐநா தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஒருவருக்கு ஆயிரத்து 850 மில்லியன் கியூப் நீர்தான் தற்போது உள்ளது. இது உலக சராசரியை விட குறைவு.தண்ணீர் தேவையை இப்படி நாம் கணக்கிடலாம். பல் தேய்த்து கொப்பளிப்பதற்கு சில லிட்டர்களும், குளிப்பதற்கு 80 லிட்டர் தண்ணீரும், பூஞ்சாரல் குளியலுக்கு 35 லிட்டரும், வேளாண் பணிகளுக்காக நம்முடைய நீர் தேவையில் 70 சதவீதமும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக தொழிற்சாலைகளில் 22 சதவீதம் பயன்படுகிறது. வீடுகளுக்கு 8 சதவீத நீர் பயன்படுத்தப்படுவதாக நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.

இப்படி செலவாகும் தண்ணீரை புதிய தொழில்நுட்பம் கொண்டு மேலும் குறைக்க முடியும். இதை விஞ்ஞானிகள் செய்தும் காட்டியுள்ளனர்.உலகிலுள்ள அனைத்து ஆறுகளிலும்  ஓடக்கூடிய தண்ணீரின் அளவில் ஆறு மடங்கு தண்ணீர் வீணடிக்கப்படுகிறது அல்லது கழிவு நீராக மாற்றப்படுகிறது என்கிறது ஐநாவின் அறிக்கை. இது ஒரு பக்கம் என்றால் நீர் தேவையான அளவு கிடைக்காததால் உலகில் 250 கோடிப் பேர் சுத்தமான சுகாதார நிலையை பேண முடியவில்லை என்று அறிவிக்கும் யுனிசெஃப் - உலக சுகாதார மைய ஆய்வு அறிக்கை மறுபக்கம்.

இவ்விரு முரண்களையும் படிக்கும்போதே பகீர் என்று இருக்கிறதல்லவா..? இதுதான் நிஜம்.ஒருபக்கம் தண்ணீரின் தேவை குறித்து நாம் கவலை தெரிவித்தாலும் மறுபக்கம் பெய்யக்கூடிய மழைநீரில் பெருமளவு நமது அஜாக்கிரதையால் கடலில் கலப்பதைக் குறித்து நாம் சிந்திப்பது கூட இல்லை. குறிப்பாக கிருஷ்ணா மற்றும் காவிரி நதிகளில் ஓடக்கூடிய தண்ணீர் ஆண்டொன்றுக்கு 1500000 மில்லியன் கன அடி, அதாவது 15 லட்சம் டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது என்பது அனைவருக்கும் திகைப்பைத் தரும்.

 நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து அந்த நீர் வளத்தை சூறையாடி வரும் நாம்தான் பெய்யக் கூடிய மழை பூமிக்கு அடியில் சென்று புத்துயிர் பெறுவதற்கு அனுமதிக்காமல் இருக்கிறோம்.
இதற்கு வேகமாக மாறிவரும் நகர்மயமாதல் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இருக்கக்கூடிய ஏரி, குளம், கண்மாய் ஆகியவற்றை  தூர்வாரி நன்கு  சுத்தப்படுத்தினால் பல்லாயிரக்கணக்கான டிஎம்சி தண்ணீர் சேமிக்கப்படும்.

தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கிடைக்கக்கூடிய தண்ணீரை சேமிக்க முடியாமல், பாதுகாக்காமல் கடலை நோக்கி திருப்பி அனுப்புவதும் பின்னர் நீருக்காக  ஓடி அலைவதும் தவறான அணுகுமுறை. இதனை மாற்றி அமைக்க நல்ல திட்டமிடல் தேவை. மேலும் அதனை செயல் படுத்திக்காட்டும் வகையில் துரிதமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது அவசியம். இப்படிச் செய்தால் ஓரளவிற்கு தண்ணீரை நாம் சேமித்து பயன்படுத்த முடியும்.

(தொடரும்)

- பா.ஸ்ரீகுமார்